• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கறுப்பும் காவியும் - இழிவுபடுத்தப்படும் "இந்துக்கள்" (13)

|

- சுப. வீரபாண்டியன்

டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் அவர்களின் நூல்களிலிருந்து நான் சான்று காட்ட விரும்புவதற்குத் தக்க காரணம் உண்டு.

தத்துவத் துறையிலும், இந்தியத் தத்துவம் குறித்தும், உள்நாட்டு, வெளிநாட்டு அறிஞர்கள் பலர் நூல்கள் பலவற்றை எழுதியுள்ளனர். தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, எஸ். என். தாஸ்குப்தா, ஜாதுநாத் சின்ஹா, எம். ஹிரியண்ணா, பி. டாய்சன், ராகுல் சாங்கிருத்தியாயன் ஆகியோர் இந்தியத் தத்துவ இயல் பற்றிய நூல்களை எழுதியுள்ளனர். மார்க்ஸ், ஏங்கல்ஸ், பெரியார், அம்பேத்கர் ஆகியோரும் தங்கள் பார்வையைப் பதிவு செய்துள்ளனர். எனினும், அன்று தொட்டு இன்று வரையில், இந்துத்துவ ஆதரவாளர்கள், வலதுசாரிச் சிந்தனையாளர்கள் பலர் உயர்த்திப் பிடிப்பதும், மேற்கோள்கள் காட்டுவதும், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் எழுதிய நூல்களைத்தான்!. எனவே நாமும், அவருடைய நூல்களிலிருந்தே சான்றுகளைக் காட்டுவது பொருத்தமாக இருக்கும்.

அவர் பல நூல்களை எழுதியுள்ளார் என்றாலும், இந்தியத் தத்துவ இயல், உபநிடதங்களின் தத்துவம், இந்துமதத் தத்துவம், மதமும் பண்பாடும், தத்துவங்கள் - மேற்கிலும் கிழக்கிலும் ஆகிய நூல்கள் மிகவும் புகழ் வாய்ந்தவை.

Subavees new series Karuppum Kaaviyum Part-13

இவற்றுள் இந்துமதத் தத்துவம் (The Philosophy of Hinduism) என்னும் நூல், இத் தொடருக்குத் தொடர்புடைய பல செய்திகள் குறித்துப் பேசுகின்றது. எனவே அந்நூலிலிருந்து விரிவாகச் சில மேற்கோள்களைக் காட்ட வேண்டியுள்ளது. நீண்ட மேற்கோள்களுக்காகவும், சில ஆங்கில வரிகளை அப்படியே எடுத்துக்காட்ட நேர்ந்தமைக்காகவும் இதனைப் படிப்பவர்கள் பொறுத்திட வேண்டும்.

டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன், திருத்தணியில், தெலுங்குப் பார்ப்பனக் குடும்பத்தில், 1888 ஆம் ஆண்டு பிறந்தவர். இந்தியா விடுதலை பெறும்வரையில் அரசியலுக்குள்ளேயே வராத கல்வியாளர். ஆங்கிலேயருக்கு எதிரான ஒரு கூட்டத்திலும், போராட்டத்திலும் அவர் பங்கேற்றதில்லை. ஒரு நாள் கூடச் சிறைக்குச் சென்றதில்லை. நம்முடைய வ.உ.சி.யைப் போலத் தன் தொழிலை எல்லாம் விட்டுவிட்டு, நாட்டுக்காகத் தன் சொத்து சுகம் எல்லாவற்றையும் இழந்தவர் இல்லை. நாடு விடுதலை அடையும்வரை, தான் உண்டு, தன் கல்வி உண்டு, தன் வேலை உண்டு என்று இருந்துவிட்டு, விடுதலை பெற்றவுடன், குடியரசுத் துணைத் தலைவராகப் பத்து ஆண்டுகளும், குடியரசுத் தலைவராக ஐந்து ஆண்டுகளும் பதவி வகித்த தேசப் பற்றாளர். (இங்கே இன்னொரு செய்தியும் உள்ளது. டாக்டர் ராதாகிருஷ்ணன், வ.உ.சி. இருவருமே ஒரே நாளில் - செப். 5 - பிறந்தவர்கள். அவரின் பிறந்தநாள், ஆசிரியர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகின்றது. ஆனால் நாட்டுக்காக அனைத்தையும் இழந்த வ.உ.சி பிறந்த நாளை யார் கொண்டாடுகின்றார்கள்?)

எனினும் சிறந்த கல்வியாளர் என்பதை மறுப்பதற்கில்லை. சென்னை, மாநிலக் கல்லூரி, மைசூர் பல்கலைக்கழகம், கல்கத்தா பல்கலைக்கழகம் ஆகியனவற்றில் பேராசிரியராகவும், ஆந்திரா பல்கலைக்கழகம், மதன் மோகன் மாளவியாவின் வேண்டுகோளுக்கிணங்க பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம் ஆகியனவற்றில் துணை வேந்தராகவும் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இங்கிலாந்து, ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் சிறப்பு உரையாளராக அவரை வரவேற்றுள்ளது.

அவருடைய இந்துமதத் தத்துவம் என்னும் நூலில், இந்து தருமம் (The Hindu Dharma) என்னும் ஓர் இயல் (பக். 22-46) உள்ளது. அவ்வியலில், இந்து மதத்தின் சாரமாக அவர் சொல்வது இதுதான்

"இந்துமதச் சிந்தனையாளர்கள், கோட்பாடுகளை விட, ஒழுக்க நெறிகளில்தான் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர்"

(The Hindu thinkers pay more attention to the discipline than to the doctrine)

இதனைப் படித்தவுடன் நமக்கே புல்லரித்துப் போகும். அடடா, கடவுள் கோட்பாடு என்பதையெல்லாம் விட, ஒழுக்கம்தான் சிறந்தது என்று சொல்கின்ற மதம் இந்துமதம் என்று தோன்றும். அடுத்த வரிகளில் அவர் மேலும் விளக்கமாகவே சொல்கிறார்.

"ஒருவர் வைதீக இந்துவா இல்லையா, கடவுள் பற்றிய இந்த அல்லது அந்தப் பார்வையை ஏற்கிறாரா இல்லையா என்பதெல்லாம் இல்லை, ஒருவர் 'தர்மத்தை' ஒப்புக்கொள்கிறாரா இல்லையா என்பதையே பொறுத்தது"

"Whether one is an orthodox Hindu or not depends, not on one whether believes this or that view of God, but on whether one accepts or rejects Dharma"

மறுபடியும் புல்லரிக்கிறது. சடங்கு, சாங்கியங்களைப் பின்பற்றும் ஆச்சாரமான இந்துவாக இருக்க வேண்டும் என்பதில்லை, குறிப்பிட்ட கடவுள் கோட்பாட்டைத்தான் ஏற்க வேண்டும் என்பதில்லை, தருமத்தைப் பின்பற்றினால் போதும் என்று சொல்லும் இந்து மதத்தை விடத் தாராளமான, பெரும் போக்குடைய, அறம்சார்ந்த மதம் உலகில் வேறு எங்கு இருக்க முடியும் என்று தோன்றுகிறது.

ஆனால் அந்த ஒழுக்க நெறி, தருமம் என்பதெல்லாம் எது என்று அவர் விளக்கும்போதுதான், பூனைக்குட்டி வெளியில் வருகிறது. அவர் சொல்கிறார்,

"மானுட இயல்பில், படிப்படியான முன்னேற்றத்திற்கு, வருணாசிரம தருமம் அல்லது வகுப்புகளின் ஒழுக்க நெறிதான் இந்துக்களின் வழிமுறையாகும்"

(The varnasrama Dharma or the discipline of the classes and stages of life is the Hindu's device for the gradual improvement of human nature)

ஆக மொத்தம், தருமம் என்பது வருணாசிரம தருமம்தான் என்பதைச் சுற்றி வளைத்துச் சொல்கின்றார். சரி, வருணாசிரம தருமம் என்றால் என்ன? ஒவ்வொரு வருணத்திற்கும் ஒவ்வொரு கடமை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி நடப்பதே வருண தருமம். ஆசிரமம் என்பது, பிரம்மச்சாரி முதல் சந்நியாசி வரையிலான நான்கு நிலைகளைக் குறிக்கும்.

அந்த நான்கு நிலைகளும் "இருபிறப்பாளர்களுக்கு" மட்டுமே உரியது. பார்ப்பனர், சத்திரியர், வைசியர் மூவருமே இருபிறப்பாளர்கள்தாம். (ராஜபுத்திரர்கள் (Rajputs) என அழைக்கப்படும் சத்திரியர்கள், பனியா, காயஸ்தர்கள் என்று அழைக்கப்படும் வைசியர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் இல்லை. அவை வடநாட்டுப் பிரிவுகள். அவர்கள் எல்லோரும் "பூணூல்" போட்டுக்கொள்ளும் உரிமையுடைய இருபிறப்பாளர்களாம் - இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் கூறுகின்றார்.

அப்படியானால் ஒரு பிறப்பாளன் யார்? நாமும், தம்மை இந்து என்று கருதிக்கொண்டிருக்கும் நம் அப்பாவி "இந்து"த் தோழர்களும்தாம். இதோ டாக்டர் ராதாகிருஷ்ணன் பேசுகிறார்-

"ஆரியர்கள் கலந்திட வேண்டியவர்களாக இருந்த வேத காலத்திற்கு முந்திய மக்கள், நாகரிகத்திலும், பண்பாட்டிலும் கீழ்நிலையில் இருந்தனர். அவர்களே இருபிறப்பற்ற நான்காம் நிலையினராக 'ஏகஜாதி' என்னும் ஒருபிறப்பினர் ஆவர். அவர்கள் அறிவில், உணர்வில், உறுதியில் தரமற்றவர்களாக விளங்கினர்"

"The pre-vedic peoples with whom the Aryans had to mingle were of a lower grade of civilization and culture.They were constituted into the fourth estate of the unregenerate the once- born the 'ekajati', in whom no quality of intellect, emotion or will.

ஆடு, மாடுகளை ஒட்டிக்கொண்டு நாடோடிகளாக இங்கு வந்த ஆரியர்களின் வேத காலத்திற்கு முந்திய, சிந்து சமவெளி நாகரிகத்திற்குச் சொந்தக்காரர்களான நாம் அறிவில், உணர்வில், உறுதியில் குறைந்தவர்களாம். தங்களை இந்துக்கள் என்று கருதிக்கொண்டிருக்கும் நண்பர்களே, உங்களை இந்துமதம் எந்த இடத்தில் வைத்திருக்கிறது என்று பாருங்கள்.

அறிவில், உணர்வில் எல்லாம் கூடியவர்கள் யார்? இதோ தத்துவப் பேராசிரியர் கூறுகின்றார், கேளுங்கள்-

"மற்றவர்களைக் காட்டிலும் மேம்பட்டிருந்த இரு பிறப்பாளர்களானவர்கள், அவர்களின் அறிவு, உணர்வு, உறுதி ஆகியனவற்றில் அடிப்படையில் மூவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்"

"The twice-born or regenerated are divided into three classes according as their intellect, emotion or will is more dominant than others"

அந்த மூவகையினர்தான் பார்ப்பனர், சத்திரியர், வைசியர் என்று அடுத்த வரியில் கூறுகின்றார்.

நான்காம் சாதியினர் அந்த நிலையை நெஞ்சார ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில், சூத்திரராக இருப்பது இழிவென்று கருத வேண்டாம் என்கிறார். அவரவர்க்கு உரிய 'தருமத்தை'ச் செய்வதன் முலமே கடவுள் பணி ஆற்ற முடியும் என்று கூறுகின்றார்.

"கொத்தனாரும், தச்சரும், அதே போலக் கொல்லரும் பால்காரரும், தங்களின் கடமையைச் சரியாகச் செய்வதன் மூலம், கடவுளைப் பெருமைப்படுத்தலாம்

என்று நம்புகின்றனர்."

The bricklayer and the carpenter, the blacksmith and the milkman believe that they glorify God by right performance of their work"

இங்கே இரண்டு செய்திகளை நினைவில் கொள்ள வேண்டும். தருமம் என்றால் வருண தருமம் என்பது போல, கடமை என்பதும் வருணத்திற்குரிய கடமை. உழவர் மகன் உழவராகவே, தச்சர் மகன் தச்சராகவே தங்கள் வாழ்வைத் தொடர வேண்டும். இன்னொன்று, இந்தப் பணிகளை செய்வதன் மூலம் கடவுளையே பெருமைப்படுத்துவதாக நம்ப வேண்டும். அப்படி நம்புவதன் மூலம், வாழ்வில் நிறைவடைந்து, வேறு நிலைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிட்டுவிட வேண்டும்.

(தொடரும்)

(இத் தொடரில் இடம்பெற்றுள்ளவை அனைத்தும் எழுத்தாளரின் கருத்துகள் மட்டுமே. ஒன் இந்தியா தமிழ் இணையதளத்தின் கருத்து அல்ல.)

பகுதி [1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12]

 
 
 
English summary
Professor Subavee's new series Karuppum Kaaviyum in Oneindia Tamil.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X