For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எழுதக் கூசும் கதைகள்- கறுப்பும் காவியும் (15)

Google Oneindia Tamil News

-சுப. வீரபாண்டியன்

கறுப்பு நிற மக்களைத் தங்கள் பக்கம் ஈர்க்க வேண்டும் என்பதற்காக, அவர்கள் நிறத்திலேயே ஒரு கடவுள் அவதாரத்தை உருவாக்கி, அந்த அவதாரத்திற்குக் கிருஷ்ணர் என்று பெயர் சூட்டினர். கிருஷ்ணன் என்றாலும், கண்ணன் என்றாலும் கருப்பன் என்றுதான் பொருள்.

Subavees new series Karuppum Kaaviyum Part-15

கடவுள் அவதாரத்தைக் கறுப்பாக உருவாக்க வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது?

புத்த மதம் பரவத் தொடங்கிய பின்னர், பார்ப்பன ரல்லாதார் (கறுப்பு மக்கள்) அம்மதத்தின்பால் ஈர்க்கப்பட்டனர். இவர்கள் நிலைநாட்ட விரும்பிய நால்வருண அமைப்பைப் புத்தமதம் தகர்க்கத் தொடங்கியது. இதனை, "பண்டைய இந்தியாவில் புரட்சியும், எதிர்ப்புரட்சியும்" (Revolution and counter revolution in ancient India) என்னும் தன் நூலில் அம்பேத்கர் தெளிவாக விளக்கியிருப்பார்.

"(புத்த மதக் கொள்கைகளால்) சதுர்வருணத்தின்
அடிப்படையே உடைக்கப்பட்டது. சதுர்வருணத்தின்
அமைப்புமுறை தலைகீழானது. சூத்திரர்களும்,
பெண்களும் சந்நியாசிகளாக ஏற்கப்பட்டனர்."

The frame work of Chaturvarnya had been broken. The order
of Chaturvarnya had been turned upside down. Shudras and
Women could become Sanyasis
(Part III - chapter - Krishna and his Gita)

இதுதான் காரணம். வெகு மக்கள் தங்களை விட்டுப் போய்விடுவார்களோ என்ற அச்சம். அப்படிப் போய்விட்டால் தங்களுக்கு யார் அடிமைகள்? அடிமைகள் இல்லாவிட்டால், தாங்கள் எப்படி எசமானர்களாக வாழ முடியும்? ஆதலால் அவர்களை எப்படியேனும் தங்கள் பக்கம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் பார்ப்பனர்களுக்கு ஏற்பட்டது.

அதே நேரம், அந்தக் கறுப்புக் கடவுளை மிகப் பெரியவராகவும் ஆக்கிவிடக் கூடாது அல்லவா! என்ன நடந்திருக்கிறது பாருங்கள். டாக்டர் ராதாகிருஷ்ணன் சொல்கிறார், கிருஷ்ணன் அவதாரம்தான். ஆனாலும் பார்ப்பனர்களிடம் மிகுந்த மரியாதையுடன் இருந்திருக்கிறான். மரியாதை என்றால் எப்படிப்பட்ட மரியாதை? இதோ அவர் வரிகள்:-

"எவ்வாறாயினும், ஆரியச் சிந்தனையாளர்களிடம்
கிருஷ்ணர் மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். தருமர்
நடத்திய ராஜசூய யாகத்திற்கு வந்திருந்த பார்ப்பன
விருந்தினர்களின் கால்களை அவர் கழுவினார் என்று
சொல்லப்படுகிறது."

(Krishna, however, had great respect for the Aryan thinkers
and it is said that he washed the feet of the Brahmin guests
at the Rajasuyayagna of King Yudhisthira)

எவ்வளவு தந்திரம். நம்மைப் போலவே ஒருவரைக் கடவுள் அவதாரம் என்று சொல்லிவிட்டு, அவர் பார்ப்பனரின் கால்களைக் கழுவுகின்றார் என்கின்றனர். உங்கள் கடவுள் நிலையே இதுதான் என்றால், உங்கள் நிலையை உணர்ந்து கொள்ளுங்கள் என்று இந்துக்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் மக்களை அவர்கள் எச்சரிக்கின்றனர்.

இது மட்டுமன்று. கண்ணன் அல்லது கிருஷ்ணன் என்னும் கடவுள் எப்படி எல்லாம், சாதாரண மனிதனை விடக் குறைவான ஒழுக்கம் கொண்டவராகக் காட்டப்படுகிறார் என்பதையும் நாம் பார்க்க வேண்டும். அவர் பற்றி விஷ்ணு புராணம், ஹரிவம்சம், பாகவதம் ஆகிய நூல்கள் விரிவாகக் கூறுகின்றன. அம்பேத்கர் இந்த மூன்று நூல்களைப் பற்றியும், அவை தரும் கதைகளை பற்றியும் எழுதியுள்ளார். அவர் சொல்லுவார், "விஷ்ணு புராணம் சற்று நாகரிகமாகப் பேசும். ஹரிவம்சம் கொஞ்சம் கீழே இறங்கும். பாகவதம் பற்றிச் சொல்லவே வேண்டாம். அனைத்தையும் ஆபாசத்தில் அள்ளி வீசும்."

"இந்துமதத்தின் புதிர்கள்" (Riddles in Hinduism) என்னும் அண்ணல் அம்பேத்கரின் நூல் ஒவ்வொருவராலும் படிக்கப்பட வேண்டிய ஒன்று. ராமாயணம், மகாபாரதம், பாகவதம் எனப் பல்வேறு புராண, இதிகாசங்களிலிருந்து சான்றுகளை அடுக்கி அதில் அவர் எழுதியிருப்பார்.

ஆனாலும் கிருஷ்ணன் பற்றிய கதைகளை எழுதும்போது, அவர் கைகள் நடுங்குகின்றன. சொல்லக் கூசும் கதைகளாக அவை உள்ளன. "எழுதுவதற்கே சங்கடமாக (feel delegate) உள்ளது. என்னால் இயன்றவரையில் நாகரிகமாக எழுத முயல்கிறேன்" என்கின்றார் (Riddles in Hinduism - Part 3 - appendix)

யமுனை ஆற்றில் குளிக்கப்போன கோபியர்களின் ஆடைகளைக் கவர்ந்து கொண்டு மரத்தில் ஏறி அமர்ந்தபடி, அந்தப் பெண்களை நிர்வாணமாகத் தன்னை நோக்கி வரச் சொன்ன அந்த 'ஆன்மிக' அனுபவத்தைத்தான் சொல்ல முடியாமல் அம்பேத்கர் தவிக்கிறார். இந்தக் காட்சி பாகவதத்தில் உள்ளது. இந்த "இறையனுபவம்" எதற்காக? யாருக்கு வழிகாட்டுவதற்காக?

வேறொன்றுமில்லை, கறுப்புக் கடவுள்களின் 'லட்சணம்' இதுதான் என்று சொல்வதற்காக! இன்னமும் பாருங்கள், கிருஷ்ணருக்கு எத்தனை மனைவியர், எத்தனை குழந்தைகள் என்று.....மொத்தம் 16,108 மனைவியர். இவர்களுள் ருக்மணி, சத்யபாமா உள்ளிட்ட எட்டுப் பேர் தலைமை மனைவியர்(?). மற்ற 16100 பேர் உடன்வாழும் மனைவியர். குழந்தைகள் எவ்வளவு தெரியுமா? மொத்தம் ஒரு லட்சத்து எண்பதினாயிரம் (1,80,000) பேர்.

ஐயோ, கடவுள் அவதாரம் வேறு எந்தப் பணிகளையும் செய்யவில்லையா? இப்படியெல்லாம் அவரைப் பற்றிச் சொல்வது நாம் இல்லை. அவாள், அவாளின் புராணங்கள்தாம் இவற்றை எல்லாம் சொல்கின்றன.

Subavees new series Karuppum Kaaviyum Part-15

இப்படியெல்லாம் ஒரு கடவுள் அவதாரத்தைக் கொச்சைப்படுத்தும் அதே வேளையில், அதே கிருஷ்ணரின் வாயால், நான்கு வருணங்களையும் நானே படைத்தேன் என்று கீதையில் சொல்ல வைத்துள்ளனர்.

கீதையில் எல்லாம் நானே என்று சொல்லும் கிருஷ்ணரின் நிலை, மகாபாரதத்தில் மிக மோசமாக உள்ளது. பாரதம், கீதை ஆகியனவற்றிற்குள்ளும் கொஞ்சம் போய்வர வேண்டியுள்ளது.

(இத் தொடரில் இடம்பெற்றுள்ளவை அனைத்தும் எழுத்தாளரின் கருத்துகள் மட்டுமே. ஒன் இந்தியா தமிழ் இணையதளத்தின் கருத்து அல்ல.)

பகுதி [1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16]

English summary
Professor Subavee's new series Karuppum Kaaviyum in Oneindia Tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X