For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெண்களுக்கும் பூணூல் உண்டாம்! (கறுப்பும் காவியும் - 19)

By Sudha
Google Oneindia Tamil News

-சுப. வீரபாண்டியன்

சாதி முறையை இந்து மதம் எப்படி ஏற்றிப் போற்றுகிறது என்பதைக் கீதையிலும், இந்துமதத் தத்துவாசிரியர் என்று அழைக்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் நூல்களிலும் பார்த்தோம். சாதி அடிப்படையில் மட்டுமின்றி, பாலின அடிப்படையிலும், இந்து மதத்தில் சமத்துவம் இல்லை. மதத்தின் அடிப்படை சாஸ்திர நூல்களே அதனை ஏற்கவில்லை. பிற மதங்களிலும், நடைமுறையில் சமத்துவம் பேணப்படவில்லை.

சென்ற பகுதியில், அனைத்துச் சாதியினருக்கும் பூணூல் உண்டா, பார்ப்பன வகுப்பிலேயே பெண்களுக்குப் பூணூல் உண்டா என்ற கேள்வியை எழுப்பியிருந்தேன். அதற்கு, "உண்டு என்று சங்கராச்சாரியார் கூறியுள்ளார். அதனை எல்லாம் படிக்காமல் நீங்கள் எழுத வந்துவிட்டீர்கள்" என்று ஒருவர் எனக்குச் செய்தி அனுப்பியிருந்தார்.

Subavees new series Karuppum Kaaviyum Part-19

உண்மைதான். மங்கள சூத்ரம் (தாலி) என்பது பெண்களுக்குப் பூணூல் மாதிரித்தான் என்று சங்கராச்சாரியார் தன் நூலில் எழுதியுள்ளார். தெய்வத்தின் குரல் என்னும் நூலின் மூன்றாம் பகுதியில் அந்தச் செய்தி இடம் பெற்றுள்ளது. "விவாஹமே பெண்டிருக்கு உபநயனம்" என்னும் பகுதியில் அவர் எழுதியுள்ள வரிகளைக் கீழே பாக்கலாம்:-

"அவளுக்கு (பெண்ணுக்கு) உபநயனமோ, பிரம்மஹசரிய ஆசிரமமோ இல்லையே. புருஷன் மனசு கட்டுப்பட்டிருக்கிற மாதிரி, அவளையும் கட்டுப்பாட்டில் கொண்டுவராமல் இருக்கலாமா? சீர்திருத்தக்காரர்கள் சொல்கிற மாதிரி ஸ்திரீகளுக்கு உபநயனமும், பிரம்மஹசரிய ஆசிரமமும் இல்லாமல் அநீதிதான் இழைத்திருக்கிறதா என்றால் - இல்லை.....

'ஸ்திரீனாம் உபநயன ஸ்தானே விவாஹம் மதுரப்ரவீத்' என்பது மநுஸ்மிருதி. இதற்கு ஒரு வெளி அடையாளம் காட்டு என்றால், சட்டென்று உபநயனத்திலே ஒரு பையனுக்குப் பூணூல் போடுகிற மாதிரி, விவாஹத்திலே பெண்ணுக்கு மங்கள சூத்ரம் கட்டப்படுகிறது என்று சொல்லிவிடலாம்.

உபநயனம் என்றால் கிட்டே அழைத்துப் போவது. அதாவது குருவினிடம் அழைத்துப் போய்க் குருகுல வாசத்தில் பிரம்மசரியம் அனுஷ்டிக்கும்படி பண்ணுவது என்று அர்த்தம் சொன்னேன். ஸ்த்ரீகளுக்குப் பதியே குரு. அவனிடம் கொண்டு சேர்க்கிற விவாஹம்தான் அவளுக்கு உபநயனம்"

மேலே உள்ள வரிகள் மூலம், ஒரு (பார்ப்பனப்) பையன் குருவிடம் சரணாகதி அடைவது போல, ஒரு பெண் தன் கணவனிடம் சரணாகதி அடைந்துவிட வேண்டும் என்கிறார். இதனை அவராகச் சொல்லவில்லை. மனுநீதியிலிருந்து சொல்கிறார். எனவே இந்துமதச் சட்டமே, பெண்ணை அடிமையாக்குகிறது. இன்னொன்றையும் சங்கராச்சாரியார் சொல்கிறார். ஒரு பெண்ணுக்குத் தானாகச் சிந்திக்கும் அறிவோ, காம உணர்வோ ஏற்படும் முன்னரே அவளுக்குத் திருமணம் செய்துவித்துவிட வேண்டும் என்கிறார். இதோ அந்த வரிகளையும் படியுங்கள்:-

"சாஸ்திரப்பிரகாரம் ஒரு பிள்ளைக்கு உபநயனம் செய்கிற ஏழாவது வயதில், பெண்ணுக்கு விவாஹம் செய்துவிட வேண்டும். காமம் மனசில் புகுமுன், காயத்ரி புகவேண்டும் என்பதுபோல், காமம் தெரிகிற முன்பே இவள் பதியைக் குருவாக வரித்துவிடும்படி செய்ய வேண்டும். காமம் தெரியாவிட்டால்தான் இப்படி (ஒருவனை) குருவாக ஏற்கவும் முடியும். குருவை ஒருத்தன் தெய்வமாகவே மதிக்க வேண்டும் என்பதும் சாஸ்திரம் அல்லவா?"

எந்தக் குழப்பமும் இல்லாமல், "பால்ய விவாகத்தை" அதாவது குழந்தை மணத்தைச் சங்கராச்சாரியார் பரிந்துரைக்கிறார். ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, குழந்தை மணம் நடைமுறையில் இருந்தபோது அவர் இதனை எழுதவில்லை. "சார்டா சட்டம்" (Habilal Sarda Act) நடைமுறைக்கு வந்து பல ஆண்டுகள் ஆனபின்னர், 1978 செப்டம்பரில் வெளியான நூலில்தான் இப்படி எழுதியுள்ளார்.

ஏழு வயது ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் இல்லையா என்ற கேள்வி எழும் என்பதால் அதற்கும் அவர் விடை சொல்கிறார். "மத விஷயங்களிலும், சாஸ்திர சம்பிரதாயங்களிலும் சட்டம் தலையிடக்கூடாது" என்கிறார். சரி, அது அவர் கருத்து. ஆனால் சட்டம் தலையிட்டு விட்டதே, என்ன செய்வது? எதிர்த்துப் போராடலாமா என்று கேட்டால், வேண்டாம் என்கிறார். மக்களிடம் இந்தக் கருத்தை உருவாக்குங்கள், அந்த எதிர்ப்பின் மூலம் சட்டத் திருத்தம் வரட்டும் என்பதே அவர் கருத்து.

என்ன சொல்கிறார் என்றால், அரசை எதிர்த்துப் போராடிப் பார்ப்பனர்கள் சிறை செல்ல வேண்டாம், மாறாக, மக்களைத் தூண்டி விடுங்கள் அவர்கள் போராடிச் சிறைக்குப் போகட்டும் என்பதே அவருடைய மறைமுகமான திட்டம். தங்களுக்குத் தொடர்பே இல்லாத ஒன்றுக்காக இந்துக்கள் என்று தம்மைக் கருதிக் கொண்டிருக்கும், கோடிக்கணக்கான எளிய மக்கள் போராட வேண்டும், அடி, உதை பட வேண்டும், சிறைக்குச் செல்ல வேண்டும். பயனைப் பார்ப்பனர்கள் அனுபவித்துக் கொள்வார்கள்.

பெண்கள் தங்களின் துணையைத் தாங்களே தேர்ந்தெடுக்கக்கூடாது, அவர்களுக்குக் காம உணர்வு வருமுன்பே திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்கிற ஆகப்பெரிய ஜனநாயகத் திட்டத்தை இங்கே சங்கராச்சாரியார் முன்வைக்கின்றார். இதுதான் சமத்துவமாம்.

அதே நூலின் இன்னொரு இடத்தில், பெண்கள் வேலைக்குப் போவது குறித்தும் தன் கருத்தை அவர் எழுதியுள்ளார். அது அந்நூலின் மூன்றாம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. பெண்களும் சிரமதானமும் என்னும் பகுதியில் அவர் எழுதியுள்ள செய்தியைப் படிக்கலாம் :-

"பெண்ணாகப் பிறந்தவர்கள் வீட்டு வேலைகளைக் குனிந்து நிமிர்ந்து பண்ணினால் போதுமானது. ஆபீஸ் வேலை அவர்களுக்குக் கூடாது என்பதே என் அபிப்பிராயம். என் அபிப்பிராயம் என்றால் என்ன? தர்ம சாஸ்திரத்தில் என்ன சொல்லியிருக்கிறதோ அதை அனுசரித்துத்தான் நான் சொல்கிறேன்.....சமைத்துப் போட்டு, குழந்தைகளைக் கவனித்து, புருஷனுக்குச் செய்ய வேண்டியவைகளைச் செய்வதென்றால், அதற்கே நாள் பூராவும் ஆகிவிடும்"

ஆக மொத்தம், படிக்காமல், வேலைக்குப் போகாமல், தனக்கென்று ஏதுமில்லாமல், எந்தவிதச் தற்சார்புமின்றி ஓர் ஆணைச் சார்ந்தே வாழவேண்டிய அந்தக் குடும்பத்தின் ஊதியமற்ற வேலைக்காரியாய்ப் பெண் இருக்க வேண்டும் என்பதுதான் அவருடைய கருத்து. மன்னிக்கவும்,அவருடைய கருத்தன்று, தர்ம சாஸ்திரங்களை அனுசரித்தே அவர் சொல்வதால், இந்து மதத் தர்ம சாஸ்த்திரங்களின் கருத்தே அதுதான்!

இதுபோன்ற பெண் அடிமைத்தனத்தைத்தான் காவி முன்மொழிகிறது. இதற்கு நேர் எதிரான பெண் விடுதலையை, பாலினச் சமத்துவத்தைக் கறுப்பு எடுத்துவைக்கிறது. அது என்ன?

(தொடரும்)

(இத் தொடரில் இடம்பெற்றுள்ளவை அனைத்தும் எழுத்தாளரின் கருத்துகள் மட்டுமே. ஒன் இந்தியா தமிழ் இணையதளத்தின் கருத்து அல்ல.)

பகுதி [1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 , 17, 18, 19, 20]

English summary
Professor Subavee's new series Karuppum Kaaviyum in Oneindia Tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X