For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கறுப்பும் காவியும் இந்துக்களின் எதிரியா? ( 8)

By Mathi
Google Oneindia Tamil News

-சுப. வீரபாண்டியன்

திராவிட இயக்கத்தினரையும், தி.மு.கழகத்தையும் இந்துக்களின் எதிரிகள் என்று நிலைநிறுத்தி, அதன்மூலம், தேர்தல் அரசியலில் தி.மு.கவைத் தோற்கடித்து விடலாம் என்பது பாஜக உள்ளிட்ட சங் பரிவாரங்களின் திட்டம்.

கடவுள், மதம், பகுத்தறிவு போன்றவற்றில், திராவிடர் கழகம் உள்ளிட்ட பெரியாரிய இயக்கங்களுக்கும், தி.மு.கழகத்திற்கும் ஒரு சிறிய வேறுபாடு உண்டு. தி.மு.க. என்பது தேர்தலைச் சந்திக்கும் வெகுமக்கள் கட்சி. எனவே அதற்கு ஓர் எல்லை உண்டு. திராவிடர் கழகத்தைப் போல மிக வெளிப்படையாகத் தன் கருத்துகளைத் திமுக வைத்துவிட முடியாது. அதே நேரத்தில், சுயமரியாதைக் கருத்துகளை திமுக விட்டுக் கொடுத்ததும் இல்லை. திமுக வில், இறை நம்பிக்கையாளர்கள், பகுத்தறிவாளர்கள் இருவருமே உண்டு. இன்னொரு கோணத்திலும் நாம் பார்க்கலாம். இன்றைய நிலையில், திமுக பார்ப்பன எதிர்ப்புக் கட்சியன்று. ஆனால், நூற்றுக்கு நூறு பார்ப்பனர்களால் எதிர்க்கப்படும் கட்சி. ஆனால், பார்ப்பனர்களை மிகக் கடுமையாக எதிர்க்கும் திராவிட இயக்க அமைப்புகளை விடவும், திமுக வையே அவர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். என்ன காரணம்? பெரியாரிய அமைப்புகள் தேர்தலில் போட்டியிடுவதில்லை. போட்டியிட்டாலும், பெரும் வெற்றி வாய்ப்பைப் பெற்றுவிட முடியாது. தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சி செய்த, மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய ஒரே திராவிட இயக்கம் திமுக மட்டுமே.

Subavees new series Karuppum Kaaviyum Part-8

துணை நிற்கக் கூடிய கட்சி ம.தி.மு.க. மட்டுமே. பெயரளவில் திராவிடம் என்னும் பெயரைக் கொண்டிருந்தாலும், அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் திராவிட இயக்கக கட்சிகள் இல்லை. எனவேதான் திமுக வைப் பார்ப்பனர்கள் மிகக் கடுமையாக எதிர்க்கின்றனர்.

திமுக வை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதற்கான வழிகளில் ஒன்றாகவே, இந்தியாவிலும், தமிழகத்திலும் பெரும்பான்மையினராக உள்ள, தங்களை இந்துக்கள் என்று எண்ணிக் கொண்டுள்ள வெகு மக்களின் வாக்குகளைத் திமுக விற்கு எதிராகத் திருப்பிவிட 'இந்து எதிர்ப்புக் கட்சி' என்னும் பரப்புரையைச் செய்து வருகின்றனர்.

.அறிஞர் அண்ணாவின் ஆட்சியில்தான், சுயமரியாதைத் திருமணங்கள் சட்டமாக்கப்பட்டன, தமிழ்நாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது. மேலும், இந்தியைப் பள்ளிகளில் இருந்து அகற்றி, இரு மொழிக் கொள்கையைக் கொண்டுவந்ததும் அண்ணாவின் ஆட்சிதான். அதே போல, கலைஞர் ஆட்சியில்தான் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்னும், பார்ப்பனியத்திற்கு நேர் எதிரான சட்ட முன்வடிவு கொண்டுவரப்பட்டது. பெண்களுக்குச் சொத்துரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. நுழைவுத் தேர்வு நீக்கப்பட்டது.இவை எல்லாம்தான் திமுக எதிர்ப்பிற்குக் காரணம். ஆனால் வெளியில் சொல்லும் காரணம், அவர்கள் இந்து விரோதிகள் என்பது!

Subavees new series Karuppum Kaaviyum Part-8

சரி, பிற மதங்களை எதிர்ப்பதை விட, இந்து மத எதிர்ப்பு திராவிட இயக்கங்களிடம் கூடுதலாக இருக்கிறதா என்றால், ஆம் என்பதே விடை. அதனை நாம் மறைக்க வேண்டியதில்லை. ஆனால் அதற்கு என்ன அடிப்படை என்பதை நாம் பார்க்க வேண்டும்.

உலக அளவிலான ஓர் எளிய உண்மையை முதலில் பார்ப்போம். இங்கு மட்டுமில்லை, எந்த நாட்டிலும், பெரும்பான்மையினரின் மதம்தான் கூடுதல் விமர்சனத்திற்கு உள்ளாகும். ஐரோப்பாவில் யாரேனும் புத்த மதத்தை, இந்து மதத்தை, சீக்கிய மதத்தை மிகுதியாக விமர்சிக்கின்றனரா? பெரும்பான்மையினரின் மதமான கிறித்துவம்தான் அங்கே கூடுதல் விமர்சனத்துக்கு உள்ளாகிறது. 1927 ஆம் ஆண்டு, பெட்ரண்ட் ரஸ்ஸல் லண்டனில் ஆற்றிய உரைதானே, "நான் ஏன் கிறித்துவர் இல்லை?' (Why I am not a Christian?) என்னும் பெயரில் நூலாகி வெளிவந்து ஐரோப்பாவில் பல பதிப்புகளைக் கண்டது. கமால் பாட்ஷா துருக்கியில் இஸ்லாம் நடைமுறைகளை எதிர்த்துத்தானே பல எதிர்ப்புகளைச் சந்தித்தார்! இது இயற்கையான ஒன்று.

இதனைத் தாண்டி, குறிப்பாக இந்துமதம் இங்கே எதிர்க்கப்படுவதற்கு முதன்மையான காரணம் உண்டு. இந்துமதம் என்பது ஒரு வருணாசிரம மதம். அதாவது, பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வை (வருணத்தை) ஏற்றுக்கொண்டுள்ள மதம். பிற மாதங்களில் பிரிவுகளே இல்லையா என்றால். கண்டிப்பாக இருக்கிறது. ஆனால் அதற்கும் இதற்கும் இடையே பெரிய வேறுபாடு உண்டு. கத்தோலிக்கம், புரோட்டஸ்டன்ட், சுன்னி,ஷியா, மகாயானம், தேரவாதம் என்பதெல்லாம் பிரிவுகள். ஒன்றை அடுத்து இன்னொன்று என்பது போல! அனால், இந்து மதத்தில் உள்ள வருணாசிரம அடிப்படையிலான சாதி என்பதோ, பிரிவன்று - அடுக்கு. ஒன்றின் கீழ் இன்னொன்று என்பது போல!

Subavees new series Karuppum Kaaviyum Part-8

இன்னொன்றையும் நாம் பார்க்கலாம் - முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா, ஒரு நேர்காணலில் குறிப்பிட்டது போல, வேறு மாதங்களில் பிரிவுகள், வேறுபாடுகள் இருந்தாலும், அவை அந்த மதங்களின் புனித நூல்கள் என்று சொல்லப்படும் பைபிள், குரான் போன்றவைகளில் இடம்பெறவில்லை. இந்து மதத்தில் மட்டும்தான், ஆதி வேதமான ரிக் வேதத்திலேயே 10ஆவது இயலான புருஷ சூக்தத்தில், தலையில் பிறந்தவர்கள், காலில் பிறந்தவர்கள் என்பன போன்ற "பிதற்றல்கள்" இடம் பெற்றுள்ளன.

ஆக மொத்தம், இந்துமதம் இந்துக்கள் என்று தங்களை ஏற்றுக்கொள்கின்றவர்களைத்தான் மிகவும் இழிவு படுத்துகின்றது. அந்த இழிவிலிருந்து வெளியே வாருங்கள் என்றுதான் அண்ணல் அம்பேத்கர் கூறினார். 1956 ஆம் ஆண்டு புத்த மதத்திற்கு இலட்சக் கணக்கானவர்களுடன் மாறவும் செய்தார். உள்ளே இருந்தபடியே இந்த இழிவை எதிர்த்துப் போராடுங்கள் என்றார் பெரியார்.

கடவுள் மறுப்பு, மத மறுப்பு என்னும் கொள்கைகள், இந்து மதத்திற்கு மட்டுமின்றி அனைத்து மதங்களுக்கும் எதிரானவையே! கடவுள் இல்லை என்று சொல்லும்போது, அதற்கு அல்லா தவிர என்றோ, தேவதேவன் தவிர என்றோ ஒருநாளும் பொருளாகாது. எல்லாக் கடவுளரின் இருப்பையும் எதிர்த்தே குரல் கொடுக்கப்படுகின்றது. எல்லா மதங்களிலும் உள்ள மூட நம்பிக்கைகள், அறிவியலுக்குப் பொருந்தாத கதைகள், வெற்றுச் சடங்குகள் அனைத்தையும் சேர்த்தே திராவிட இயக்கம் எதிர்க்கின்றது, ஆனால் சாதியின் பெயரால் இழிவைக் கற்பிக்கும் இந்து மதத்தைக் கூடுதலாக எதிர்க்கின்றது. அதுநியாயமானதும் கூட!

திராவிட இயக்கத்தை ஏற்பதன் மூலம் மட்டுமே, இந்துக்கள் என்று தம்மைக் கருதிக் கொண்டிருப்போரும் சுயமரியாதையைப் பெற முடியும். இந்து மதத்தை ஏற்பதன் மூலம், சாகும் வரையில் சாதி இழிவைச் சுமக்க வேண்டியிருக்கும்.

இந்து மதம் என்பது, சாராம்சத்தில், பார்ப்பன மதமே! அதன் கோட்பாடுகளால் முழுப் பயனையும் பெறுவோர் பார்ப்பனர்கள் மட்டுமே! ஆதலால், திராவிட இயக்கம், இந்துக்களுக்கு எதிரானது என்பது கட்டமைக்கப்படும் ஒரு வடிவம். அது பார்ப்பனியம் என்னும் சமூக ஆதிக்கத்தைப் போற்றும் பார்ப்பனர்களுக்கு மட்டுமே எதிரான இயக்கம். உழைத்து வாழும் கோடிக்கணக்கான 'இந்து' மக்களுக்காகப் போராடும் இயக்கமே திராவிட இயக்கம்.

சுருக்கமாகச் சொன்னால், இந்துக்கள் என்று தம்மைக் கருதும் கோடிக்கணக்கான உழைக்கும் மக்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் நடக்கும் போரில், அன்று முதல் இன்று வரையில், திராவிட இயக்கம் அந்த 'இந்துக்களுக்கு' ஆதரவாக நிற்கும் இயக்கம் என்று சொல்ல வேண்டும். அவர்களின் மானம், மதிப்பைக் காக்கும் இயக்கம், அவர்களுக்காகக் களமிறங்கிப் போராடும் இயக்கம், அந்தச் சின்னஞ் சிறு குருவிகளை பார்ப்பனப் பருந்துகள் தூக்கிச் சென்று விடாமல் பாதுகாக்கும் இயக்கம்!

ஆம் இந்துக்களுக்கு ஆதரவான, இந்துக்களைக் காப்பாற்றும் இயக்கம் திராவிட இயக்கம்!

Subavees new series Karuppum Kaaviyum Part-8

இந்த இடத்தில் ஒரு விளக்கத்தைக் கூற வேண்டும். சிலர் ஏன் "பார்ப்பனர்" என்னும் சொல்லை பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட சமூகத்தைக் காயப்படுத்துகின்றீர்கள், பிராமணர் என்று நாகரிகமாகச் சொல்லக்கூடாதா என்று கேட்கின்றனர். யாரையும் எப்போதும் கொச்சைப்படுத்துவதோ, காயப்படுத்துவதோ, நம் இயல்பு அன்று. அப்படிச் செய்வதைக் கடுமையாக எதிர்ப்பவர்கள் நாம். எவர் ஒருவரையும் மதித்துப் போற்றும் பண்பே திராவிட இயக்கப் பண்பு! பிறகு ஏன் பார்ப்பனர் என்றே பேசவும், ஏழுதவும் செய்கின்றீர்கள் என்று கேட்பவர்களுக்கு ஓரு விளக்கம் -

பார்ப்பனர் என்பது வசைச் சொல்லும் இல்லை, பிராமணர் என்பது நாகரிகமான சொல்லும் இல்லை என்னும் உண்மையை உள்வாங்கிக் கொண்டால், இந்த வினாவே எழாது. இதுகுறித்துச் சற்று விரிவாகப் பார்க்க வேண்டியுள்ளது.

(தொடரும்)

(இத் தொடரில் இடம்பெற்றுள்ளவை அனைத்தும் எழுத்தாளரின் கருத்துகள் மட்டுமே. ஒன் இந்தியா தமிழ் இணையதளத்தின் கருத்து அல்ல.)

பகுதி [1, 2, 3, 4, 5, 6, 7, 8]

English summary
Professor Subavee's new series Karuppum Kaaviyum in Oneindia Tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X