For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பார்ப்பனர் - பிராமணர்.. என்ன வித்தியாசம்? ... கறுப்பும் காவியும் (9)

By Mathi
Google Oneindia Tamil News

-சுப. வீரபாண்டியன்

பார்ப்பனர், பிராமணர் என்னும் சொற்கள் குறித்த பார்வை இன்றைய சூழலில் மிகத் தேவையானதாகவே உள்ளது. எந்த விவாதமும் யாரையும் காயப்படுத்துவதற்காக இல்லை என்பது தெளிவானால்தான், எல்லோருக்குமானதாக இந்தத் தொடர் அமையும்.

பார்ப்பனர் என்பது வசைச்சொல்லும் இல்லை, பிராமணர் என்பது நாகரிகச் சொல்லும் இல்லை என்று கூறியிருந்தேன். பார்ப்பனர் என்பது வசைச் சொல்லாக இருக்குமானால், சங்க இலக்கியம் தொடங்கி, பாரதியார் வரையில் அதனைப் பயன்படுத்த்தியிருக்க மாட்டார்கள்.

 Subavees new series Karuppum Kaaviyum Part-9

சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் 156 ஆவது பாடல்

"பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
செம்பூ முருக்கின் நல்நார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்து
படிவ உண்டிப் பார்ப்பன மகனே"

என்று அமைந்துள்ளது. மூன்று வரிகளில் நான்கு முறை பார்ப்பான் என்ற சொல் இடம்பெற்றுள்ளதைப் பார்க்க முடிகிறது.

அகநானூற்றுப் பாடல் ஒன்றில், பாலை பாடிய பெருங்கடுங்கோ,

"தூதுஓய் பார்ப்பான் மடிவெள் ஓலை
படையுடைக் கையர் வருந்திறம் நோக்கி"

என்று எழுதுகின்றார். திருவள்ளுவர் ஒரு குறளை,

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்"

என வடித்துள்ளார். இப்படிப் பல மேற்கோள்களைக் காட்ட முடியும். கொஞ்சம் கடுமையாகப் பாரதியார், "தண்டச் சோறுண்ணும் பார்ப்பான்" என்று எழுதுகின்றார்.

 Subavees new series Karuppum Kaaviyum Part-9

எனவே பாப்பான் என்பது வசைச் சொல் அன்று. அது தொழிலைக் குறிக்கும் சொல்.மறைந்த தமிழறிஞர் பெருஞ்சித்திரனார், "குறி பார்ப்பார், கணி (சோதிடம்) பார்ப்பார் என்பதால் அவர்களுக்குப் பார்ப்பார் என்று பெயர் வந்தது தம்பி" என்று ஒருமுறை என்னிடம் சொன்னது இன்றும் என் நினைவில் உள்ளது. தச்சு வேலை செய்வோர் தச்சர் என்பது போல, ஆசிரியப் பணி செய்வோர் ஆசிரியர் என்பது போல, குறியம், சோதிடமும் பார்ப்போர் பார்ப்பனர் என்று ஆயினர்.

இதில் என்ன வசை இருக்கிறது? மேலும் உயர்வாக இதற்குப் பொருள் சொல்வோரும் உண்டு. பார்ப்பு என்னும் சொல்லுக்குப் பறவையின் குஞ்சு என்று பொருள். இந்தப் பொருளில் அந்தச் சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதற்கும் இலக்கியச் சான்றுகள் உள்ளன.

"அள்ளற் பழனத்து அரக்காம்பல் வாயவிழ
வெள்ளம் தீப்பட்டதென வெரீஇப் - புள்ளினந்தம்
கைச்சிறகாற் பார்ப்பொடுக்கும் கவ்வை......."

எனவரும் முத்தொள்ளாயிரப் பாடல் பார்ப்பு என்னும் சொல்லை பறவையின் குஞ்சு என்னும் பொருளில்தான் ஆள்கிறது. சரி, இதற்கும் பார்ப்பனர்களுக்கும் என்ன தொடர்பு? வலிந்து ஒரு தொடர்பு சொல்லப்படுகிறது. முட்டைக்குள் இருக்கும் குஞ்சின் உயிர் வேறு, முட்டை உடைந்து வெளியில் வரும் குஞ்சின் உயிர் வேறு. எனவே அதற்கு இரு பிறப்பு. அதனைப் போலவே, உபநயனம் (பூணூல் அணிதல்) முடிந்தவுடன் அவர்கள் அடுத்த பிறப்பை எடுத்து விடுகின்றனர். அதனால்தான் அவர்களுக்கு இருபிறப்பாளர்கள்(துவிஜர்) என்று பெயர். அந்த அடிப்படையில்தான் பார்ப்பனர் என்று பெயர் வந்தது என்று பார்ப்பன ஆதரவாளர்கள் எழுதுகின்றனர்.

அப்படியே வைத்துக் கொண்டாலும் அதுவும் மிக உயர்வாகவே அவர்களைக் காட்டுகிறது. எழுத்தாளர் ஜெயமோகன் அவருடைய முகநூலில், எனக்கான விடையாக ஒரு செய்தியை எழுதுகின்றார். "சுபவீ இதனை வசைச் சொல் இல்லை என்கிறார். ஆனால் ஈ வே ரா வின் வெறுப்புஅரசியலால் இது வசைச் சொல் ஆகிவிட்டது. அதனை அந்தச் சமூகம் விரும்பவில்லை" என்று குறிப்பிடுகின்றார்.

இங்கும் ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். ஜெயமோகனும் அதனை வசைச் சொல் என்று கூறவில்லை. பெரியார் பயன்படுத்திய முறையில் அது அப்படி ஆகிவிட்டது என்கிறார். அது உண்மையானால், அது பெரியாரின் திறனுக்கே எடுத்துக்காட்டாக உள்ளது.

சரி, இது வசைச் சொல் இல்லை என்றாலும், ஐயர், அந்தணர், பிராமணர் என்ற சொற்களை ஏன் நீங்கள் பயன்படுத்தக்கூடாது என்று கேட்கின்றனர்.

ஐயர் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் உரியதில்லை. அது பொதுவாகத் 'தலைமை'யைக் குறிக்கும் சொல். "என்ஐ முன் நில்லன்மீர்" என வரும் திருக்குறள் அடிக்கு, என் தலைவன் முன் நில்லாதீர்கள் என்றுதான் பொருள். எனவே ஐயர் என்ற சொல்லைக் கையாண்டால். அவர்களை நாம் தலைவர்களாக ஏற்றுக் கொண்டுவிட்டோம் என்று பொருள். அவர்கள் எப்படி நமக்குத் தலைவர்கள் ஆவார்கள்?

அந்தணர் என்போர் அறவோர். ஆதலால், அச்சொல், எல்லாச் சமூகத்திலும் உள்ள சான்றோர்களைக் குறிக்கும். ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு உரிய சொல் இல்லை.

பிராமணர் என்னும் சொல்லையே பலரும் கையாள்கின்றனர். அதனைத்தான் அவர்களும் விரும்புகின்றனர். ஆனால் அந்தச் சொல்லுக்கு என்ன பொருள்? பிரம்மனிலிருந்து வந்தவர்கள் என்றாகும். பிரம்மனையே ஏற்காத என்போன்றோர் எப்படிப் பிரம்மனிலிருந்து வந்தவர்களாக அவர்களை ஏற்க முடியும்?

இன்னொரு முதன்மையான பார்வையும் இங்கு தேவைப்படுகிறது. அவர்கள் பார்ப்பனர் என்றால் நான் ஆசிரியராகவோ, சலவைத் தொழிலாளியாகவோ, வேறு எதோ ஒரு தொழில் சார்ந்த பெயருக்கு உரியவராகவோ இருக்கலாம். ஏனெனில் அது தொழில் சார்ந்த சொல்.

ஆனால் பிராமணர் என்பது வருணம் சார்ந்த சொல். ஆதலால் அவர் பிராமணர் என்றால் நான் சூத்திரனாக அல்லது பஞ்சமனாகத்தானே இருக்க முடியும். (சத்திரியரும், வைசியரும் தமிழ்நாட்டில் இல்லை).

அவர்களை உயர்த்தி என்னைத் தாழ்த்தும் அந்தப் பிராமணர் என்னும் சொல்லை சொல்லை நான் ஏன் பயன்படுத்த வேண்டும்?

இவையெல்லாம் ஒரு புறமிருக்க, நம் எதிர்ப்பு வெறும் சொல்லுக்கானது இல்லை. அவர்களின் செயல்களுக்கானது. கடவுள், மதம் ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்டு எவ்வளவு பிளவுகளை, மோதல்களை இணக்கமாக வாழ்ந்து கொண்டிருந்த மக்களிடம் அவர்கள் ஏற்படுத்தினார்கள் என்னும் அடிப்படையில்தான் நம் அறச்சீற்றம் எழுகிறது.

எடுத்துக்காட்டாக, மிகச் சாதாரணமாக இருந்த பிள்ளையார் வழிபாட்டை எப்படியெல்லாம் மோதல்களுக்குப் பயன்படுத்தினார்கள் என்பதை எண்ணிப் பார்த்தாலே பல உண்மைகள் புரியும்.

(தொடரும்)

(இத் தொடரில் இடம்பெற்றுள்ளவை அனைத்தும் எழுத்தாளரின் கருத்துகள் மட்டுமே. ஒன் இந்தியா தமிழ் இணையதளத்தின் கருத்து அல்ல.)

பகுதி [1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9]

English summary
Professor Subavee's new series Karuppum Kaaviyum in Oneindia Tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X