For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் சூழ்நிலை உருவாகி உள்ளது.. மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் சூழ்நிலை உருவாகி உள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தி இந்து நாளிதழுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி:

கேள்வி: நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் 200 தொகுதிளைக் கைப்பற்றி, வெற்றி பெறுவோம் என்று அறிவித்திருக்கிறீர்கள். அத்துடன் ஆளும் அ.தி.மு.க. எதிர்க்கட்சிக்கான இடத்தைக் கூட கைப்பற்ற முடியாது என்கிறீர்கள். உங்கள் நம்பிக்கையின் அடிப்படை என்ன?

DMK President MK Stalin confidents over Sweep in Assembly Election

மு.க.ஸ்டாலின்: 200 தொகுதிகள் என்று முதலில் சொன்னேன். இப்போது 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தின் அனைத்துக் கிராமங்களுக்கும் சென்று தி.மு.க. முன்னணியினர் நடத்தி வரும் மக்கள் கிராம சபைகளில் ஆண்களும் பெண்களும் மிகுந்த ஆர்வத்துடனும், எதிர்பார்ப்புடனும், நம்பிக்கையுடனும், திரளாக வந்து கலந்து கொள்வதன் மூலமாகவும், பெருகிவரும் எழுச்சி மற்றும் ஆதரவை அடிப்படையாகக் கொண்டும், ஆளும் அ.தி.மு.க.வின் மீது பொதுமக்கள் வெளிப்படையாகவே காட்டும் கோபம் - வெறுப்பு இவற்றை வைத்தும், இதனைச் சொல்ல முடிகிறது!

பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் அனைத்து முனைகளிலும் தாழ்ந்து, பின்தங்கிவிட்டது. குறிப்பாக திரு. பழனிசாமி முதலமைச்சர் பொறுப்பேற்றதிலிருந்து, தமிழ்நாட்டிற்கு புதிய முதலீடுகள் வரவில்லை. புதிய வேலை வாய்ப்புகள் உருவாகவில்லை. நிதி நிர்வாகம் வரலாறு காணாத வகையில் பின்னுக்குச் சென்று 5 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடனில் தமிழ்நாடு தத்தளித்து நிற்கிறது. ஆட்சி நிர்வாகத்தில் அமைச்சர்களின் ஊழல் தலைவிரித்தாடுகிறது. தொடர்ந்து கடன் வாங்கி கடன்வாங்கி எல்லாவற்றையும் சுரண்டி, கொள்ளை அடித்துவிட்டார்கள். முதலமைச்சரே சிபிஐ விசாரணைக்கு உள்ளானவர் தான். உச்சநீதிமன்றத் தடையின் மூலமாக பதவியில் நீடிக்கிறாரே தவிர தார்மீக அடிப்படையில் அல்ல!

இது "எம்.ஓ.யூ" என்கிற வெறும் ஏட்டளவில் உள்ள புரிந்துணர்வு புள்ளிவிவரக்கணக்கு ஆட்சியே தவிர, நிதி ஆதாரத்தைப் பெருக்கும் "முதலீடுகளைப் பெற்ற" ஆட்சியல்ல. 10 ஆண்டுகளில் புதிதாக ஒரு மின்சாரத் திட்டத்தைக் கூட நிறைவேற்ற முடியாமல், புதிதாக ஒரு யூனிட் மின்சாரம் கூட உற்பத்தி செய்யாமல், விடைபெறும் ஆட்சி.

பதவியைத் தக்க வைத்துக் கொள்வதே பெரும்பாடு என்கிற நிலையுடன் தினமும் நெருக்கடியுடன் போராடிக் கொண்டிருப்பதால் - முதலமைச்சரால் நிர்வாகத்தை வழிநடத்த இயலவில்லை. மாநில உரிமைகளைப் பாதுகாக்க இயலவில்லை. தமிழ் கலாச்சாரத்திற்கு வரும் ஆபத்தைத் தட்டிக் கேட்க இயலவில்லை. பொருளாதார முன்னேற்றம் அ.தி.மு.க. ஆட்சியில் கானல் நீராகி விட்டது. ஆளுமை இல்லாத ஒரு முதலமைச்சரால் - விவசாயிகள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், வணிகர்கள், மாணவர்கள், ஏழை- எளிய நடுத்தர மக்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த ஆட்சி எப்போது முடியும் என்ற மனப்பான்மையில் - அ.தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப தமிழக மக்கள் தயாராகி விட்டதை கிராம சபைக் கூட்டங்களில் என்னால் காண முடிகிறது.

எதிர்க்கட்சி இல்லாத சட்டமன்றத்தை ஜனநாயக இயக்கமான தி.மு.கழகம் ஒருபோதும் விரும்பியதில்லை. ஆனாலும், மக்களின் எழுச்சியினை- அ.தி.மு.க. ஆட்சியின் மீது இருக்கும் வெறுப்பினை பார்த்தே அக்கட்சி எதிர்கட்சியாகக் கூட வர இயலாது என்று கூறுகிறேன். தகுதியற்ற மனிதரிடம் கோட்டை சிக்கி இருக்கிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்துவிட்டார்கள். இந்த கோபம், இந்த ஆட்சியை மட்டுமல்ல அ.தி.மு.க.வையும் முற்றிலுமாக வீழ்த்தும்! மொத்தத்தில் அ.தி.மு.க. ஆட்சியை மாலுமி இல்லாத கப்பல் போலவும், அ.தி.மு.க. அமைச்சர்களை கடல் கொள்ளைககாரர்கள் போலவும், தமிழக மக்கள் கருதுகிறார்கள்.

கேள்வி: திராவிட முன்னேற்றக் கழகம் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை. அந்த வகையில் நடைபெறவிருக்கும் தேர்தல் உங்கள் கட்சிக்கு மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. உங்கள் வியூகம் என்ன?

மு.க.ஸ்டாலின்: ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களே நமக்கு எஜமானர்கள் என்று கொண்டு மக்களோடு இணைந்து கலந்து இருப்பது தி.மு.க.! ஆட்சியில் இல்லாவிட்டாலும் - இந்த பத்தாண்டு காலத்தில் மக்கள் பிரச்சினைகளை, அவற்றின் தீர்வுகளுக்காக முன்னிறுத்துவதில், தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக ஓங்கிக் குரல் கொடுப்பதில், திராவிட முன்னேற்றக் கழகம் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் சட்டமன்றத்திலும் - பொது வெளியிலும் மக்கள் பிரச்சினைகளுக்காக தேவைப்படும் போதெல்லாம் போராடியிருக்கிறேன். காவிரி மேலாண்மை வாரியம், காவிரி வரைவுத் திட்டம், நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு, சேலம் எட்டுவழிச்சாலைத் திட்டம்- ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிர்ப்பு, அஞ்சல் துறையின் தேர்வு உள்பட அகில இந்தியத் தேர்வுகளை தமிழில் நடத்துவது, கொரோனா காலத்தில் 'ஒன்றிணைவோம் வா' மூலம் கோடிக்கணக்கான மக்களை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கியது என அனைத்திலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்பாடும், போராட்டங்களும்தான் வெற்றிக்கு வித்திட்டுள்ளன. திராவிட முன்னேற்றக் கழகத்தினால்தான் தமிழகத்தின் உரிமைகள் ஓரளவுக்காவது இப்போது காப்பாற்றப்பட்டுள்ளது என்று மக்கள் எண்ணுகிறார்கள். ஆகவே இந்தத் தேர்தலில் எங்களுக்கு ஆதரவாக, எங்கள் பக்கம் மக்கள் இருப்பதே முதன்மையாக அமைந்திருக்கும் வியூகம். மற்ற வியூகங்களை தேர்தல் அறிவிக்கட்டும்; செயல் வடிவத்தில் காணுங்கள்.

கேள்வி: மக்கள் கிராம சபைக் கூட்டங்களில் தொடர்ந்து பங்கெடுத்து வருகிறீர்கள். மக்களின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கிறது?

மு.க.ஸ்டாலின்: மக்கள் கிராம சபை கூட்டங்களில் மக்கள் எழுப்பும் கோரிக்கைகள் கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சி செயல்படவே இல்லை என்பதற்கு சான்றுகளாக இருக்கின்றன. அடிப்படைப் பிரச்சனைகள், அன்றாடப் பிரச்னைகளைக் கூட இவர்கள் தீர்க்கவில்லை என்பதும், கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்பதையும் மக்கள் கோபமாக வெளிப்படுத்துகிறார்கள்.

பத்து ஆண்டுகள் ஒரு கட்சிக்கு ஆட்சி செய்ய வாய்ப்பு கிடைத்ததை அ.தி.மு.க.வின் முதலமைச்சரும் அமைச்சர்களும் மக்களுக்காக பயன்படுத்தவில்லை. தங்களின் சுயநலத்திற்காக, பினாமிகளின் வளர்ச்சிக்காக, சொந்தக் காரர்களின் வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தி, தமிழகத்தின் முன்னேற்றத்தை 50 ஆண்டு காலம் பின்னுக்குத் தள்ளி விட்டார்கள் என்பதை மக்கள் கிராம சபை கூட்டங்களில் உணர முடிந்தது.

ஊழலற்ற - நல்லாட்சி தரும் வெளிப்படையான ஜனநாயக அரசு உருவாக வேண்டும்; அதை திராவிட முன்னேற்றக் கழகத்தால்தான் தர முடியும் என்று மக்கள் நம்பிக்கையுடன் உணருவதை - மக்கள் கிராமசபைக் கூட்டங்களில் எதிரொலிப்பதை என்னால் நேரில் காண முடிந்தது.

முதலமைச்சர் பழனிசாமியே தனது எடப்பாடி தொகுதிக்கான தேவைகளை தீர்த்து வைக்கவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அமைச்சர்களும் அப்படித்தான் தங்கள் தொகுதிகளை வைத்துள்ளார்கள். இவையே இப்படித்தான் இருக்கிறது என்றால் மற்ற தொகுதிகளைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.

English summary
DMK President MK Stalin expressed confident over his party will win with Sweep in Assembly Election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X