For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புலர்ந்தது உதயசூரியன் புத்தாண்டு... தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் மடல்..!

Google Oneindia Tamil News

சென்னை: புலர்ந்தது உதயசூரியன் புத்தாண்டு என்ற தலைப்பில் திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தின் முழு விவரம் பின்வருமாறு;

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகளுடன் உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

இதோ... வெற்றிப் புத்தாண்டு விடிந்திருக்கிறது. இருள் அகற்றும் இன்பக் கதிரொளியாக எழுந்திருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும், அந்த ஆண்டுக்கென தனிச்சிறப்பு என்று ஒன்றுண்டு. நம்மைப் பொறுத்தவரை - நற்றமிழ் நாட்டைப் பொறுத்தவரை, இது உதயசூரியனுக்கு உரிமை உள்ள ஆண்டு. எங்கெல்லாம் தமிழர்கள் உள்ளனரோ, அங்கெல்லாம் அனைத்துத் தமிழர்க்கும், நம்பிக்கை ஒளியைத் தரக்கூடிய வெற்றிகரமான ஆண்டு இது.

Dmk president Stalin wrote letter to dmk cadres

தமிழகத்தை அலைக்கழித்த பத்தாண்டுகால அலங்கோல ஆட்சியின் தடித்த இருட்டை எப்படியாவது பாதுகாத்து, மேலும் எடுத்துச் செல்ல வேண்டும் என, பல பிற்போக்கு சக்திகள் இறங்கியுள்ளன. மக்களின் நலன் காக்கும் சின்ன ஒளிக்கீற்று தென்பட்டாலும், அதனை ஊதி அணைப்பதற்கு, அதிகாரத்தின் அத்தனை வாய்களும் சூழ்ச்சி வியூகம் வகுத்துக் காத்திருக்கின்றன. இவற்றுக்கு நடுவேதான், ஒளியேற்றும் பணியை நாம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.

அரசியல் வானில் ஆதவன் உதிக்கின்ற நாளுக்காக, நம்மைவிட ஆர்வமாக மக்கள் இருப்பதை, நாம் மேற்கொண்டு வரும் ஒவ்வொரு பணியிலும் காண்கிறோம். சமூகநீதி எனும் இலட்சியப் பயணத்திற்குப் பாதை வகுக்கும் வகையில், நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள் முப்பெரும் விழாவினை நடத்துவது வழக்கம். தந்தை பெரியார் -பேரறிஞர் அண்ணா - அவர் உருவாக்கிய தி.மு.கழகம் பிறந்த செப்டம்பர் மாதத்தில் தலைவர் கலைஞர் காட்டிய வழியில், அண்ணா அறிவாலயத்தில் தொடங்கிய முப்பெரும் விழா, தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து நடத்தப்பட்டது.

கொரோனா பேரிடர் காரணமாக நேரடியாகப் பங்கேற்க இயலாவிட்டாலும் காணொலி வாயிலாக அதில் பங்கேற்றோரின் எண்ணிக்கை மிகமிக அதிகம். அக்டோபர் மாதம் வரை பல்வேறு மாவட்டங்களிலும் நடைபெற்ற முப்பெரும்விழாவினைத் தொடர்ந்து, நவம்பர் 1 - ஆம் நாள் முதல் 'தமிழகம் மீட்போம்' எனும் தலைப்பில், மாவட்டங்கள் தோறும், கழகப் பரப்புரைக் கூட்டங்களைத் தொடர்ந்து நடத்தினோம்.

'பகுத்தறிவுப் பகலவன்' தந்தை பெரியார் பிறந்த ஈரோடு மாவட்டத்தில், 'தமிழகம் மீட்போம்' நிகழ்வின் முதல் காணொலிப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினேன். ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்டக் கழகச் செயலாளர்கள் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள கழக நிர்வாக மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட கழகச் செயலாளர்கள் ஒருங்கிணைந்து, 'தமிழகம் மீட்போம்' பொதுக்கூட்டங்களை நடத்தினர். ஒவ்வொரு கூட்டமும், மாவட்டத்தின் பல அரங்குகளில், காணொலி வழியாகப் பங்கேற்கும் வாய்ப்பினைக் கழகத்தினருக்கும், கழக நிகழ்ச்சிகளில் ஆர்வம் கொண்ட பொதுமக்களுக்கும் வழங்கின. ஒவ்வொன்றும் ஒரு தனி மாநாடு போல நடைபெற்றது. டிசம்பர் 31-ஆம் நாள் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டக் கழகச் செயலாளர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்த 'தமிழகம் மீட்போம்'பொதுக்கூட்டம் நிறைவடைந்தது.

நவம்பரில் தொடங்கி டிசம்பரில் நிறைவடைந்த இந்தக் காணொலிக் கூட்டங்களை ஒன்றரைக் கோடிக்கும் மேற்பட்டோர் கண்டுள்ளனர். நேரடியாகப் பங்கேற்க வாய்ப்பில்லாவிட்டாலும், நேரலையில் அதைவிட அதிகமான அளவில் மக்கள் பங்கேற்றதற்கான காரணம், எப்போது விடியல் வரும் என்ற அவர்களின் ஏக்கமும் எதிர்பார்ப்புமே.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்.. சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத் தொடரை கூட்டுக -ஸ்டாலின் கடிதம்வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்.. சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத் தொடரை கூட்டுக -ஸ்டாலின் கடிதம்

கழக ஆட்சியில் தலைவர் கலைஞர் அவர்களால் ஒவ்வொரு மாவட்டத்திலும் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை, அதனால் அங்குள்ள மக்கள் பெற்ற பலன்களைப் பட்டியலிட்டுக் காட்டினேன். அதேநேரத்தில், அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் அல்லல்படுவதையும், முறையாக எந்தத் திட்டமும் நிறைவேற்றப்படாததையும், அரைகுறைத் திட்டங்கள் அனைத்திலும் முதலமைச்சரும், அமைச்சர்களும் அவர்தம் குடும்பத்தாரும் அடித்த கொள்ளைகளையும் ஆதாரப்பூர்வமாகப் பட்டியலிட்டுக் காட்டி, அ.தி.மு.க. ஆட்சி, குடும்பக் கமிஷன் ஆட்சியே என நிரூபித்தேன். தமிழ் மக்களின் பேராதரவுடன், தி.மு.க ஆட்சி விரைவில் அமைந்ததும், இந்தக் கொள்ளைகளில் ஈடுபட்டோர் யாராயினும், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, நீதியின் கண்டிப்பான கரங்களால் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்கிற உறுதியையும் மக்களிடம் வழங்கியுள்ளேன்.

நாளுக்கு நாள் கழகத்திற்குப் பொங்கிப் பெருகி வரும் ஆதரவு, நாடாளுமன்றத் தேர்தல் களம் போலவே, சட்டமன்றத் தேர்தல் களத்திலும் பெருவெற்றியைத் தரும் என்பதை, உளவுத்துறையினர் அளித்துள்ள அறிக்கைகள் வாயிலாகவும் - மக்களின் வெறுப்பு மற்றும் எதிர்ப்பலைகள் வாயிலாகவும் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் புரிந்துகொண்டு விட்டார்கள். கொள்ளையடித்தவற்றை மூட்டை கட்டிக்கொண்டு, கோட்டையைக் காலி செய்து, கிளம்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பது தெரிந்துவிட்டதால், புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டு, கழகத்திற்கு எதிரான அவதூறுகளைப் பரப்பும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள்.

புளுகு மூட்டையிலேயே மிகப்பெரிய புளுகு மூட்டையை வைத்திருப்பவர் முதலமைச்சர் பதவிக்குத் தத்தித் தவழ்ந்து வந்திருக்கும் எடப்பாடி பழனிசாமிதான். போராடும் விவசாயிகளை இடைத்தரகர்கள் எனக் கொச்சைப்படுத்திய 'போலி விவசாயி' யும், அரசியல் இடைத்தரகருமான அடிமை ஆட்சியின் முதலமைச்சர், என் மீது குற்றம் சுமத்தி, பொய்க்கு மேல் பொய்யாக அவிழ்த்து விடுகிறார்.

அ.தி.மு.க ஆட்சியில் தமிழகத்திற்குக் கிடைத்துள்ள முதலீடு எவ்வளவு, தொடங்கப்பட்ட நிறுவனங்கள் எத்தனை, வேலைவாய்ப்பு பெற்ற இளைஞர்கள் எத்தனை பேர், கொரோனா காலத்தில் வாங்கிய மருத்துவக் கருவிகளுக்கான கணக்கு என்ன? இவை எல்லாவற்றுக்கும் விரிவான வெள்ளை அறிக்கையினை வெளிப்படையாக அறிவிக்க முடியுமா எனக் கேட்டால், பதிலளிக்கும் திறனின்றி, என் மீதும் கழகத்தின் மீதும் பொய்களையும் அவதூறுகளையும் அள்ளி வீசுவதா?

தி.மு.கழக ஆட்சியின் மறக்க முடியாத மகத்தான சாதனைகள் எதனையும் அறியாத மண்புழுவாகக் காலம் கழித்த எடப்பாடி பழனிசாமி, காவிரி விவகாரம் தொடங்கி, கள நிலவரமோ வரலாறோ எதையும் அறியாமல், அனைத்திலும் காழ்ப்புணர்வினால், மலிவான - தரம்தாழ்ந்த பொய்களைக் கடை பரப்புகிறார். அவரது அரசியல் வியாபாரக் கடையில் நின்றுகொண்டு, தி.மு.க. குடும்பக் கட்சி என்று கூவுகிறார் - கூச்சலிடுகிறார். உடன்பிறப்புகள் அனைவரும் ஒரே குடும்பம் என்கிற உயர்ந்த பாசம் கொண்ட கட்சிதான் தி.மு.கழகம் என்பது மக்களுக்குத் தெரியும். அதே நேரத்தில், தன் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே டெண்டர்களை ஒதுக்கி - ஊழல் செய்து -கொள்ளையடிக்கும் எடப்பாடி பழனிசாமி எப்படிப்பட்டவர் என்பதைத் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். தி.மு.கவை கார்ப்பரேட் கட்சி என்கிறார் பழனிசாமி. கார்ப்பரேட்டுகளுக்காகவே செயல்படும் மத்திய பா.ஜ.க அரசின் கொத்தடிமையாக இருந்துகொண்டு, தி.மு.க.வை நோக்கிப் பொய்களை அள்ளிவீசும் எடப்பாடி பழனிசாமியை மக்கள் சிறிதும் மதிப்பதில்லை.

மக்கள் மட்டுமா? அவரது கட்சியைச் சார்ந்தவர்களே மதிப்பதில்லை. அவர்தான் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் என்று சொல்வதற்கு, அவரது ஆட்சியின் துணை முதலமைச்சருக்கு மனதும் வார்த்தைகளும் வர மறுக்கிறது. தேசிய கட்சிதான் முதலமைச்சர் வேட்பாளரை முடிவு செய்யும் என்கிறார் இன்னொரு அமைச்சர். ஆளுக்கொரு திசையில் அவரவர் கண்கண்ட எஜமானர்களின் உத்தரவுக்கேற்ப ஒவ்வொரு நாளும் உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். எதைப் பேசினாலும் எடப்பாடி பழனிசாமியிலிருந்து அத்தனை அமைச்சர்களும் தி.மு.க மீது பொய்க் குற்றச்சாட்டுகளைச் சொல்வது என்பது, தங்களின் சாதனையாகச் சொல்வதற்கு எதுவுமில்லை என்பதையே எடுத்துக் காட்டுகிறது.

அ.தி.மு.க.வின் பொய் 'வெல்லமூட்டை' வியாபாரம் மக்களிடம் போணி ஆகாது. 'கடைவிரித்தேன்.. கொள்வாரில்லை' எனப் புளுகு மூட்டைகளை முதுகில் சுமந்தபடி, நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிற்பதற்குத்தான் எடப்பாடி பழனிசாமியும் அவரது அமைச்சரவை சகாக்களான கொள்ளைக் கூட்டமும் வேகமாகத் தயாராக வேண்டும்.

அதற்கான செயல்திட்டத்தில் தி.மு.கழகத்தைவிடத் தமிழக மக்கள் தீவிரமாக இருக்கிறார்கள். தீர்ப்பு நாள் எப்போது என்று எதிர்பார்த்திருக்கிறார்கள். தமிழகம் தழுவிய அளவில் 12 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் 16,500-க்கும் மேற்பட்ட கிராம/வார்டு சபைக் கூட்டங்களை நடத்துவது எனக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் அடங்கிய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுச் செயல்படுத்தப்படும் நிலையில், பொதுமக்களின் பேராதரவினால், ஒவ்வொரு ஊராட்சியிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட கிராமங்களிலும், மாநகராட்சி - நகராட்சி -பேரூராட்சிகளில் பல வார்டுகளிலும், கூட்டங்களை நடத்தி வருகிறார்கள் கழக நிர்வாகிகள்.

டிசம்பர் 23-ஆம் நாள், தமிழகம் தழுவிய அளவில் தொடங்கிய கிராமசபைக் கூட்டங்களில் காஞ்சிபுரம் மாவட்டம் குண்ணம் ஊராட்சியிலும், அதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சியிலும், மூன்றாவதாக ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டைக்குட்பட்ட அனந்தலை கிராமத்திலும் நடந்த மக்கள் சபைக் கூட்டங்களில் பங்கேற்றேன். எல்லா இடங்களிலும் பெண்கள் பெருமளவில் ஆர்வமுடன் பங்கேற்று, ஆட்சியின் அவலங்களைத் தோலுரித்துக் காட்டினார்கள்.

'அ.தி.மு.கவை நிராகரிப்போம்' என்ற தீர்மானத்தை ஒருமனதாக உறுதியான குரலில் நிறைவேற்றினார்கள். இணையதளத்தின் வாயிலாக 51,30,556 பேரும், மக்கள் சபைகளின் வாயிலாகத் தீர்மானத்தில் கையெழுத்திட்டுப் பல லட்சம் பேரும் இதுவரை அ.தி.மு.க.வை நிராகரித்துள்ளனர். இது தொடர்கிறது.. பரவுகிறது என்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல்தான், கிராமசபைக் கூட்டங்களை தி.மு.க. நடத்தக்கூடாது என்று தொடை நடுங்கி எடப்பாடி பழனிசாமி அரசு, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி வாயிலாக உத்தரவிடுகிறது. அதிகார மிரட்டலுக்கு அஞ்சி நடுங்கிட நாம் என்ன அடிமை ஆட்சியாளர்களா? தலைவர் கலைஞரின் தகுதிமிக்க உடன்பிறப்புகள்; தி.மு.கழகத்தை உயிரினும் மேலாகக் கருதும் உயர்வான தொண்டர்கள். ஜனநாயகத்தைக் காக்கும் போரில் மிசா, தடா எல்லாவற்றையும் எதிர்கொண்டு, நெருப்பாற்றில் எதிர்நீச்சலிட்டு இயக்கம் காத்து வருபவர்கள்.

கிராமசபைக் கூட்டங்கள் இப்போது 'மக்கள் கிராம சபை' என மகத்தான மறு வடிவத்தைப் பெற்றிருக்கிறது. நாம் நடத்தி, மக்கள் பங்கேற்பது என்ற நிலை மாறி, மக்கள் அழைக்க நாம் பங்கேற்கும் நிலையை எட்டியுள்ளது. அதன் அடுத்தகட்டமாக நாளை (ஜனவரி 2), கிராமசபைக் கூட்டங்களைத் தடுக்க நினைத்து, கழக நிர்வாகிகளை, காவல்துறையினரை ஏவிக் கைது செய்த உள்ளாட்சித் துறை அமைச்சர் - முதலமைச்சரை மிஞ்சி செயல்படும் சூப்பர் முதலமைச்சராக நினைத்துக்கொண்டிருக்கும் ஊழல் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தொண்டாமுத்தூரில் நடைபெறும் மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்கிறேன்.

அதனைத் தொடர்ந்து, ஈரோடு மேற்குத் தொகுதியிலும், அதனையடுத்து எதிர்கால ஒளிவிளக்காம் மாணவர்களின் வாழ்வை இருளாக்குவதையே தனது 24 மணி நேரச் செயல்பாடாகக் கொண்டிருக்கும் கல்வி அமைச்சர் செங்கோட்டையனின் கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் நடைபெறும் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்கிறேன்.

குட்கா விஜயபாஸ்கர் என்றால் குழந்தைகள்கூடச் சொல்லுமளவுக்கு, ஊழலே வாழ்வாகக் கொண்டிருக்கும் அமைச்சரின் விராலிமலைத் தொகுதியிலும், மக்களின் பசியைத் தீர்க்கும் உணவிலும்கூட ஊழல் செய்து ஏழைகளின் வயிற்றில் அடித்து, தன் வசதிகளைப் பன்மடங்கு பெருக்கியிருக்கும் அமைச்சர் 'கமிஷன் ராஜ்' ஆன காமராஜ் எனப்படுபவரின் நன்னிலம் தொகுதியிலும் நடைபெறவுள்ளன மக்கள் கிராமசபைக் கூட்டங்கள்.

ஊழலில் முதலிடம், கொள்ளையில் முதலிடம், கஜானாவை காலி செய்வதில் முதலிடம் என எல்லாவகையிலும் மக்களை வஞ்சிப்பதில் முதலிடம் பிடித்துள்ள அ.தி.மு.க ஆட்சியில், ஊழல் அமைச்சர்களில் யாருக்கு முதலிடம் என்பதில் அத்தனை பேருமே முதலமைச்சருடன் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்திடவும், மக்கள் விரோதிகளான இந்த அமைச்சர்களை தேர்தல் களத்தில் மக்களே தண்டித்துப் படுதோல்வி அடையச் செய்யும் வகையிலும் மக்கள் கிராமசபைக் கூட்டங்கள் எழுச்சியுடன் தொடர்கின்றன.

இருண்ட தமிழகத்திற்கு மீண்டும் வெளிச்சம் கொண்டுவர தி.மு.கழகத்தால் முடியும் என்பதை மக்கள் உறுதியுடன் நம்புகிறார்கள். வெளிச்ச விளக்குகளை ஊதி அணைத்துவிடலாம் என அதிகாரத்தில் இருப்பவர்கள் கைகோர்த்துச் செயல்படுகிறார்கள். அது அவர்களால் முடியவே முடியாது. ஏனென்றால், உதயசூரியன் என்ற உலகின் ஒளிவிளக்கை எவராலும் ஊதி அணைத்துவிட முடியாது.

புத்தாண்டில் புது விடியல் நிச்சயம். 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி என்கிற இலக்கை நாம் அடைந்தே தீருவோம்! நமது உழைப்பால், ஒற்றுமையால், தோழமைக் கட்சிகளுடனான ஒருங்கிணைப்பால், இந்தப் புத்தாண்டு உதயசூரியன் ஆண்டாக மலர்ந்திடு'மே'!

அன்புடன்

மு.க.ஸ்டாலின்.

English summary
Dmk president Stalin wrote letter to dmk cadres
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X