India
  • search
keyboard_backspace

ஜனாதிபதி வருகை: மோடி-ஸ்டாலின் இணக்கம்?புதிய கூட்டணிக்கான அச்சாரம்?புதிர் போடும் டாக்டர் கிருஷ்ணசாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழகம் வருகை என்பது பிரதமர் மோடி- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இடையேயான உறவில் இணக்கத்தை ஏற்படுத்துவதற்கா? அல்லது புதிய கூட்டணிக்கான அச்சாரமா? என கேள்வி எழுப்பியுள்ளார் புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.

இது தொடர்பாக டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்ட அறிக்கை:

Dr Krishnasamy raises questions over President Ram Nath Kovinds TN Visit

Legislative Assembly என்பதை 'சட்டமன்ற பேரவை' என்றும், Legislative Council என்பதை 'சட்டமன்ற மேலவை' என்றும் தமிழகத்தில் அழைக்கிறோம். மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களை - Member Of Legislative Assembly(MLA) கொண்ட அவை சட்டமன்ற பேரவை (Legislative Assembly) எனவும்; சட்டமன்ற உறுப்பினர்களாலும், உள்ளாட்சி பிரதிநிதிகள், பட்டதாரி தொகுதிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களாலும், ஆளுநர் நியமனங்கள் மூலமாகவும் நியமிக்கப்படும் உறுப்பினர்களை-Member Of Legislative Council (MLC) கொண்ட அவையை மேலவை (Legislative Council) எனவும் அழைக்கப்படுகிறது.

இரு அவைகளையும் கொண்டு ஒரு மாநில அரசு செயல்பட்டால் அதை bicameral system என்றும், ஒரு அவை மட்டும் செயல்பட்டால் unicameral system என்றும் பெயர். தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் 234 சட்டமன்ற உறுப்பினர்களுடன் unicameral system கொண்ட தமிழக சட்டமன்ற பேரவையே கடந்த 35 ஆண்டுகளாக அமலில் உள்ளது.

எல்லா மாநிலங்களிலும் சட்டப்பேரவை (Assembly) இருக்க வேண்டும் என்பதி விதி. ஆனால் மேலவை (Council) இருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல.

1947 சுதந்திரத்திற்குப் பிறகு, 1952-ல் நடைபெற்ற முதல் தேர்தலிலிருந்தே தமிழகச் சட்டமன்றத்தின் உண்மை வரலாறு துவங்குகிறது. எனவே சுதந்திர இந்தியாவில் உருவாக்கப்பட்ட தமிழகச் சட்டமன்றத்திற்கான வயது 69 மட்டுமே. ஆனால் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் சட்டமன்ற பேரவை போன்ற அமைப்பு- கீழவை (Assembly) 1936-லிருந்து செயல்பட்டு வந்துள்ளது. அந்த 16 வருடத்தையும் கணக்கிலே சேர்த்துக் கொண்டால் கூட தமிழகச் சட்டமன்றத்திற்கு வயது 85 மட்டுமே. மேற்குறிப்பிட்டவற்றில் ஏதாவது ஒன்று மட்டுமே தமிழ்நாடு சட்டமன்ற பேரவை ஆண்டு விழாவிற்கான சரியான அளவு கோளாக எடுத்துக் கொள்ள முடியும்.

ஆனால், 2021-ஆகஸ்ட் 2-ம் தேதியை தமிழகச் சட்டமன்றத்திற்கான நூற்றாண்டு விழாவாக அறிவித்து, அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. அது என்ன கணக்கு என்றும் தெரியவில்லை. வேறு எங்கிருந்து தொடங்கினாலும் இவர்களின் நூற்றாண்டு கணக்கு தப்புக் கணக்காகவே இருக்கிறது.

Dr Krishnasamy raises questions over President Ram Nath Kovinds TN Visit

250 ஆண்டுகள் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த இந்திய மக்களிடத்தில் சுதந்திர எண்ணங்கள் தோன்றி 1857-ல் சிப்பாய்க் கலகமாக வெடித்து, அது இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்தது. அதனால் இனிமேலும் இந்தியர்களை ஆட்சியில் பங்குபெற வைக்காமல் இந்தியாவில் பிரிட்டிஷாரின் ஆட்சி தொடர்வது கடினம் என்ற நிலை வந்த பிறகு, 1861-ல் Indian Council Act என்ற சட்டத்தை இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி, அதன்படி முதன்முறையாக ஆங்கிலேய அதிகாரிகள் அல்லாத 4 இந்தியர்கள் ஆட்சி-அதிகாரத்தில் பங்கு பெறும் வண்ணம் சென்னை மாகாணத்திலும் Indian Legislative Council எனும் சட்டமன்ற மேலவை 1861-ல் உருவாக்கப்பட்டது.

அந்த கவுன்சில் 1892-ஆம் ஆண்டு 12 பேர் கொண்ட குழுவாக விரிவாக்கம் செய்யப்பட்டது. எனினும் இந்தியாவில் தோன்றிய சுதந்திர வேட்கையானது சுய ஆட்சியையும், முழு சுதந்திரத்தையும் நோக்கியே பயணித்தது. அதனால் திருப்தி அடையாத இந்தியர்களை மேலும் திருப்திப்படுத்த 1909 மற்றும் 1919-களில் மிண்டோ மார்லே மற்றும் மாண்டேகு செம்ஸ்போர்டு எனும் ஆங்கிலேயர்களின் சீர்திருத்தத் திட்டங்களின் படி நிலச்சுவான்தார்கள் மற்றும் வசதி படைத்தவர்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகளைக் கொண்ட மேம்படுத்தப்பட்ட கவுன்சில் செயல்பாட்டுக்கு வந்தது.

'பூரண சுதந்திரம்' என்ற முழக்கத்தை முன்வைத்து சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்ததாலும், ஒத்துழையாமை இயக்கத்தைத் தீவிரப்படுத்தியதாலும், 1920-ல் ஆங்கிலேயர்களின் சீர்திருத்தத் திட்டங்களின் படி கொண்டுவரப்பட்ட Legislative Council தேர்தலில் காங்கிரஸ் கட்சி பங்கேற்கவில்லை. அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, அப்போது தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகம் உள்ளடங்கிய சென்னை இராஜதானியத்தில் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட 'நீதிக்கட்சி' இந்திய சுதந்திரத்திற்கு எதிராகவும், ஆங்கிலேய அரசுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்ற அத்தேர்தல்களில் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி மூன்று முறை தொடர்ச்சியாகத் தனிப்பெரும்பான்மையுடனும், நான்கு மற்றும் ஐந்தாவது முறையாக கூட்டணி ஆட்சியையும் அமைத்தது.

இன்று ஆட்சியில் இருக்கும் திமுகவிற்கும் நீதிக்கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றாலும் கூட, நீதிக்கட்சியின் வழிவந்தவர்கள் தான் நாங்கள் என திமுகவினர் மார்தட்டி கொள்கிறார்கள். அந்த நீதிகட்சி முதன்முறையாக ஆட்சிக்கு வந்த ஆண்டுதான் 1921.

1920-களில் நடைபெற்ற தேர்தல்களிலும் அனைத்து மக்களுக்கும் வாக்குரிமை கிடையாது; அந்த அவையும் முழு சுதந்திரமான அவையாகவும் அல்ல. அந்த அவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எவையாயினும் அவற்றை இரத்து செய்யும் உரிமை அன்றைய இங்கிலாந்து அரசால் நியமிக்கப்பட்ட ஆங்கிலேய கவர்னர் ஜெனரலுக்கு இருந்தது.

1935ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் நேரடியாக இருந்த 14 பிராந்தியங்களை (provinces) உள்ளடக்கிய British India அமைப்பை ஆளுவதற்காக Government Of India Act 1935 என்ற சட்டத்தை பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் உருவாக்கினார்கள். அச்சட்டமே இந்தியாவின் உள்ள பெரும்பாலான சட்டங்களுக்கு இன்றுவரை மூலாதாரமாக உள்ளது. அச்சட்டத்தின்படி ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த Legislative Council உடன் கூடுதலாக Legislative Assembly என்று அழைக்கப்படக்கூடிய கீழவையும் 1936-ல் முதன் முதலில் உருவாக்கப்பட்டது. அந்த அவை 1946 வரை பத்தாண்டுகள் மட்டுமே செயல்பட்டது. 1947-ல் சுதந்திரம் பெற்ற பிறகு, முதல் முறையாக 370 உறுப்பினர்களை உள்ளடக்கிய சென்னை மாகாண சட்டமன்றம் 1952-ல் உருவாக்கப்பட்டது. மொழி வாரி பிரிவினைக்குப் பிறகு, 203 சட்டமன்ற உறுப்பினர்களையும், 1967-க்கு பிறகு இன்று வரை 234 உறுப்பினர்களையும் கொண்டு தமிழக சட்டமன்ற பேரவை செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி தமிழகச் சட்டமன்ற நூற்றாண்டு விழாவிற்கும், அவ்விழாவின் பொழுது சட்டமன்ற வளாகத்திற்குள் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி அவர்களுடைய உருவப்படத்தைத் திறந்து வைப்பதற்கும் இந்திய ஜனாதிபதி இராம்நாத் கோவிந்த் அவர்கள் கலந்து கொள்ள இருப்பதாகச் செய்திகள் வருகின்றன.

எனவே நாம் சுட்டிக்காட்டிய பல்வேறு ஆதாரங்களில் படி முதன்முறையாக சட்டமன்ற அவை அமைந்த 1861-ஆம் ஆண்டை கணக்கில் எடுத்துக் கொண்டால், 1961-லேயே நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். மேலும் அந்த மேலவையின் (Council) நீட்சி 1986, நவம்பர்-1ல் எம்.ஜி.ஆர் ஆட்சிகாலத்தில் அதன் 125வது ஆண்டோடு முடித்து வைக்கப்பட்டது. ஒருவேளை Indian Council Act கொண்டுவரப்பட 1861-லிருந்து கணக்கிட்டாலும் கூட 2021 ஆம் ஆண்டு 160 ஆண்டு விழாவாக இருக்குமே தவிர அது நூற்றாண்டு விழாவாக இருக்காது.

எனவே எந்த விதத்திலும் தமிழகச் சட்டமன்ற விழாவை நூற்றாண்டு விழாவாக கணக்கில் கொள்ள முடியாது. ஏற்கனவே இதேபோல கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சிக் காலங்களில் இருமுறை நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு விட்டது. அதுவும் எதற்கு என்றும் தெரியாது. எனவே ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பதவியேற்ற பிறகு நூற்றாண்டு விழா எனும் பெயரில் நடக்கும் கருணாநிதி உருவப்படத் திறப்பு விழாவை வேறு ஒரு கணக்கிற்கான விழாவாகவே நாம் கருத வேண்டியுள்ளது.

இது தமிழகச் சட்டமன்றத்திற்கான நூற்றாண்டு விழா எனில் ஒரு அரங்கத்திற்குள் மட்டும் நடத்தப்படக் கூடிய விழாவாக இருக்கக் கூடாது. அது மக்களின் விழாவாக இருக்க வேண்டும். அதில் அனைத்து தமிழக அரசியல் கட்சி தலைவர்களும், அனைத்து முன்னாள், இன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும் அழைக்கப்படவும் வேண்டும். ஏனெனில் நூறாண்டுக் கால சுதந்திர போராட்டத்திற்கு பிறகு, இந்திய மக்கள் அனைவருக்கும் கிடைத்த சுதந்திரம், ஜனநாயகத்தினுடைய முகவரியாகவும், அனைத்து மக்களுக்கான வாக்குரிமைக்கான அடையாளமாகவும் விளங்கக் கூடியது நாடாளுமன்றமும், மாநில சட்டமன்றங்களும் ஆகும். எனவே தமிழகச் சட்டமன்றத்திற்கான நூற்றாண்டு விழாவாக இருந்தால் தமிழக மக்கள் அனைவராலும் கொண்டாடப்பட வேண்டும். ஆனால் அப்படியும் அல்லாமல், இவர்களுக்கு வேண்டப்பட்ட ஒரு சில அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுத்து கொண்டாடப்படும் தமிழகச் சட்டமன்ற பேரவை நூற்றாண்டு விழா என்பது முழுக்க முழுக்க திராவிட அரசியல் சார்ந்த விழாவாகவே உள்ளது.

திராவிட ஸ்டாக்கிஸ்டுகளால் கொண்டாடப்படக்கூடிய இவ்விழா சென்னை மாகாணம் 'தமிழ்நாடு' என பெயர் மாற்றம் நடந்த 1969-லிருந்து கணக்கிடப்பட்டாலும் 52-வது ஆண்டு விழாவாக மட்டுமே கொண்டாட முடியும். ஆனால் 2021-ல் தமிழகச் சட்டமன்றத்திற்கான நூற்றாண்டு விழாவாக அறிவித்துக் கொண்டாடுவது தலையும் இல்லாமல், வாலும் இல்லாமல் மொட்டை தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போலத்தான் உள்ளது.

2021, மே மாதம் 2 ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின் தன்னை 'Dravidian stock' என்று டிவிட்டரில் அடையாளப்படுத்திய நிமிடம் முதல் இன்று வரையிலும் இறையாண்மை மிக்க இந்திய அரசைப் பெயர் சொல்லி அடையாளப்படுத்தக் கூட அவர் தயாராக இல்லை. அவர் மட்டுமல்ல, அவரது அமைச்சர் சகாக்களும்; சட்டமன்ற உறுப்பினர்களும், அரசு அறிக்கைகளிலும் 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியப் பாரத தேசத்தை இந்த நிமிடம் வரை 'ஒன்றிய அரசு' என அழைத்து, இந்திய அரசை ஊராட்சிக்கும், மாவட்டத்திற்கும் இடைப்பட்ட 'பிளாக்' என்றும், வட்டாரத்தை குறிக்கும் 'ஒன்றியம்' என்ற வார்த்தையைக் கொண்டும் சிறுமைப்படுத்தி வருகிறார்கள்.

திராவிட ஸ்டாக்கிஸ்டுகளின் இந்த செயல்களால் இந்தியத் தேசத்தை தன்னுடைய தேகத்தைக் காட்டிலும், உயிராக மதிக்கும் கோடான கோடி இந்தியத் தேச அபிமானிகள் கடந்த 3 மாத காலமாக உள்ளூர மனம் வெந்து புழுங்குகிறார்கள். தமிழகத்தில் வாழக்கூடிய 8 கோடி தமிழக மக்கள் அனைவருக்கும் அவர்கள் பயன்படுத்தும் 'ஒன்றியம்' என்ற வார்த்தையின் உள்ளார்ந்த அர்த்தம் தெரிய வருகின்ற போது அதற்கான எதிர் விளைவுகள் வேறு விதமாக இருக்கும். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமரை Prime Minister Of India எனக் குறிப்பிட கூட மறுப்பவர் மு.க.ஸ்டாலின் அவர்கள். அதிகார ஆசை, பதவி பசிக்காக இந்த தேசம் துண்டாடப்படுவதையோ, இந்த தேசத்தின் மாண்பு குறைக்கப்படுவதையோ எவராலும் ஏற்றுக் கொள்ள இயலாது.

இது நம்முடைய தாய்-தந்தையர்-மூதாதையர் பூமி. இந்த தேசத்தை அடையாளப்படுத்த மறுக்கக்கூடியவர்கள் இந்த தேசத்தில் வாழவே தகுதியற்றவர்களாக இருக்கும் போது, எப்படி ஆளத்தகுதியானவர்களாக இருக்க முடியும்?

அரசியலில் பதவிகள் வரும்; போகும், ஆனால் இந்த தேசம் அப்படிப்பட்டதல்ல. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் கோடான கோடி பேரை வாழ வைத்த மண் இது. இந்த தேசம் யாரையும் பிரித்துப் பார்ப்பதில்லை. ஆனால் இந்த தேசத்தால் வாழ்வு பெற்றவர்கள் இந்த தேசத்தை தெற்கு என்றும், வடக்கு என்றும், கிழக்கு என்றும், மேற்கு என்றும் பிரித்து; இன, சாதி, மொழி ரீதியாகப் பிரிவினை படுத்துகிறார்கள். இவர்களுடைய 'ஒன்றிய' கூப்பாடு இன்று வரையிலும் சிறிதும் கூட குறைந்தபாடில்லை. நமது தேசத்தை 'ஒன்றிய அரசு' எனக் குறிப்பிடும் மாநில அரசை மத்திய அரசின் உள்துறையோ, மாநில ஆளுநரோ அழைத்து கண்டிக்கவும், அறிவுறுத்தவும் இல்லையே என இந்த தேசத்தின் மீது அப்பழுக்கற்ற பற்று கொண்ட தேச அபிமானிகள் ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட ஒரு சூழலில் தமிழகச் சட்டமன்ற நூற்றாண்டு விழாவிற்கும், முதல்வரின் தந்தை முத்துவேல் கருணாநிதியின் உருவப்படத்தைத் திறந்து வைப்பதற்கும் இந்திய ஜனாதிபதி அவர்கள் வருவதாகச் சொல்லப்படும் செய்திகள் எண்ணற்ற தேச அபிமானிகளின் உள்ளங்களில் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதாகவே உள்ளது.

எனவே, ஆகஸ்ட் மாதம் இரண்டாம் தேதி ஜனாதிபதி அவர்கள் உறுதியாக அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இருந்தால் அழைப்பிதழில் அவரது பெயர் எப்படிப் பொறிக்கப்பட்டுள்ளது என்பதை நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். திரு ராம்நாத் கோவிந்த அவர்கள், இந்திய பாரத தேசத்தின் ஜனாதிபதியும், மிகப்பெரிய ஜனத்திரளின் அடையாளமும் ஆவார். அதன் நன்மதிப்பை குறைக்கக்கூடிய செயல் ஒரு கோடியில் ஒரு மிகச்சிறிய பகுதியாயினும் அதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளமாட்டோம். அவரை அழைத்து அவர் ஒன்றிய அரசின் ஜனாதிபதி எனச் சிறுமைப்படுத்தும் முயற்சியில் இன்றைய திமுக அரசு ஈடுபடுமேயானால் அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக சென்னை ஐ.ஐ.டி அரசு விழாவில் கலந்து கொள்ள வந்த பாரத பிரதமர் மோடி அவர்களுக்கு எதிராக விமான நிலையத்திலிருந்து ஐ.ஐ.டி வரை கருப்பு கொடிகளையும், விண்ணிலே கருப்பு பலூன்களையையும் பறக்கவிட்டு மோடி அவர்களை மனமுடையச் செய்த செயல்கள் தமிழக அரசியல் களத்தின் நீங்கா வடுவாகவே உள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த கடந்த 3 மாதத்தில் பிரதமர் மோடி அவர்கள் தமிழகத்திற்கு விஜயம் ஏதும் செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்றைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் 2017 ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டம் தோறும் மக்களின் வாழ்க்கை முறை, அரசு செயல்பாடுகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளச் சுற்றுப்பயணம் சென்ற போது, அன்றைய ஆளும் கட்சியான அதிமுக கூட எவ்வித எதிர்ப்பும் தெரிக்கவில்லை; திமுக, ஆளுநர் சென்ற இடமெல்லாம் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தது. அதிமுக ஆட்சியில் எல்லா மாவட்டங்களுக்கும் சென்ற ஆளுநர் இப்போது எங்கும் பயணிப்பதில்லை.

தமிழகச் சட்டமன்ற நூற்றாண்டு விழாவும், கருணாநிதி படத் திறப்பு விழாவும் ஒன்றல்ல; இரண்டும் வேறு வேறு நிகழ்வுகள். ஆனால் இரண்டையும் ஒன்றாகப் பொருத்த நினைக்கிறார்கள். இதில் பல விஷயங்களில் மர்மம் இருப்பதாகவே தெரிகிறது. நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்தது 1921 ஆண்டு. தமிழக அரசியல் வரலாற்றில் அதைக் கணக்கிட்டால் மட்டுமே 2021 ஆம் ஆண்டு 100ஆவது ஆண்டாகும். நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்த நூற்றாண்டு விழாவை கொண்டாட தான் ஜனாதிபதி தமிழகம் வருகிறாரா? அல்லது முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படத் திறப்பு விழாவிற்கா? அல்லது மத்திய அரசோடு ஏற்பட்ட பிணக்கைச் சரிசெய்து இணக்கத்தை உண்டாக்குவதற்கான புதிய முயற்சியா? அல்லது புதிய கூட்டணிக்கான அச்சாரமா? என்பதை போன்ற பல கேள்விகள் எழுகின்றன. எனவே வெவ்வேறு கணக்கீடுகளுக்கு வேறு வேறு கணக்குகளைப் போட்டுக் கொண்டு சட்டமன்றத்திற்கு இல்லாத நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி ஏமாற்ற வேண்டாம் என்பதே தமிழக மக்களின் கண்டனக் குரலாக உள்ளது.

எனவே, ஆகஸ்ட் மாதம் இரண்டாம் தேதி ஜனாதிபதி அவர்கள் உறுதியாக அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இருந்தால், அவரை ஒன்றிய அரசின் ஜனாதிபதி எனச் அழைத்து சிறுமைப்படுத்தும் முயற்சிகளை ஜனாதிபதி அலுவலகமும், மத்திய அரசின் உள்துறை அமைச்சகமும், தமிழக ஆளுநர் அலுவலகமும் அனுமதிக்குமா? என்பது குறித்து அவ்வலுவலகங்களும்; இந்த நூற்றாண்டு விழாவின் உண்மைத் தன்மை குறித்து தமிழக அரசும் இந்திய மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

சட்டமன்ற நூற்றாண்டு விழா எனும் பெயரில் ஆகஸ்ட் 2-ல், இந்திய ஜனாதிபதி திரு. ராம்நாத் கோவிந்த் அவர்கள் தமிழகம் வருகை!

நீதிக்கட்சி ஆட்சியின் நூற்றாண்டு விழாவிற்கா?

முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் உருவப்பட திறப்பு விழாவிற்கா?

மோடி-ஸ்டாலின் பிணக்கை போக்கி இணக்கமாக்கவா?

புதிய கூட்டணிக்கான அச்சாரமா? - என பொறுத்திருந்து பார்ப்போம்.

இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

English summary
Puthiya Tamilagam President Dr Krishnasamy has raised the questions over the President Ram Nath Kovind's Five Day Tamilnadu Visit from Aug.2.
Related News
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Just In