For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரு டீலுக்கு பின்னால் பல டீல்கள்!!

By Staff
Google Oneindia Tamil News

-ஏ.கே.கான்

மத்தியில் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவளிக்க சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சி்ங் சில முக்கிய நிபந்தனைகளைப் போட்டுள்ளார். இதில் இரு நிபந்தனைகள் அனில் அம்பானி தொடர்புடையவை.

பாஜக துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி, இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் மகா மோசமானது. நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு காங்கிரஸ் அரசு சாதகமாக நடக்க வேண்டும் என்று முலாயம் நிபந்தனை போட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லாமல் இல்லை என்றே தெரிகிறது.

காரணம், காங்கிரசுக்கு ஆதரவு அளித்தது தொடர்பாக முலாயம் சி்ங்கின் வலதுகரமான அமர்சிங் தொலைக்காட்சிகளுக்கு சிறப்புப் பேட்டி அளித்து வருகிறார்.

அதில், பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோராவை குறி வைத்து தாக்குதல் நடத்துகிறார். இதன் பின்னணியில் இருப்பது முகேஷ் அம்பானி-அனில் அம்பானி இடையிலான மோதல் எனத் தெரிகிறது.

மேலும் அமர் சிங் எழுப்பி வரும் இன்னொரு விஷயமும் அனில் அம்பானி சார்ந்தது.

பிரிந்து கிடக்கும் அம்பானிகள் இப்போது அடுத்த கட்ட மோதலுக்கு தயாராகி வருகின்றனர். தென் ஆப்பிரிக்காவின் முன்னணி செல்போன நிறுவனமான எம்டிஎன்னை வாங்க ரிலையன்ஸ் மொபைல் நிறுவனத்தை கையில் வைத்திருக்கும் அனில் அம்பானி முயன்று வருகிறார்.

இதைத் தடுக்க அண்ணன் முகேஷ் தீவிரம் காட்டி வருகிறார். இதனால் இந்த டீல் முடிவதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது.

இந் நிலையில் ரிலையன்ஸ் பெட்ரோலியத்தை கையில் வைத்திருக்கும் முகேஷ் அம்பானிக்கு தொல்லை தரும் வேலைகளை முலாயம் மூலமாக அனில் அம்பானி ஆரம்பித்துள்ளதாகத் தெரிகிறது.

இந்தியாவில் கடும் பெட்ரோலியத் தட்டுப்பாடு நிலவும் நிலையில் முகேஷின் ரிலையன்ஸ் பெட்ரோலியம் வெளிநாடுகளுக்கு பெட்ரோல்-டீசலை ஏற்றுமதி செய்வதைத் தடுக்க வேண்டும் என பிரதமரிடமும் காங்கிரஸ் தலைவர் சோனியாவிடமும் முலாயம் நிபந்தனை போட்டதாகத் தெரிகிறது.

ஆனால், முகேஷ் தீவிரமாக காங்கிரஸ் ஆதரவாளர் என்பதால் அவரை விட்டுக் கொடுக்க காங்கிரஸ் தயாராக இல்லை. ஆனாலும் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள முலாயமின் ஆதரவு தேவை என்ற நிலையில் முகேசுக்கு தொல்லைகளைத் தர வேண்டிய நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது.

இதை பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா (இவர் காங்கிரசின் money bag. காங்கிரஸ் கட்சிக்கு நிதி வசூல் செய்து தரும் முக்கிய பிரமுகர்களில் ஒருவர்) ஏற்க மறுப்பதால் தான் எல்லா பேட்டிகளிலும் அவரை தாக்கி வருகிறார் அமர் சிங் என்கின்றனர். கூடவே பெட்ரோலியத்துறை செயலாளரையும் தாக்குகிறது சமாஜ்வாடி.

முரளி தியோரா அமைச்சரைப் போல செயல்படவில்லை.. கார்பரேட் நிறுவனங்களின் கையாள் போல செயல்படுகிறார் என்று தாக்கி வருகிறார் அமர்சிங். அவரை மட்டும் தாக்கினால் துண்டாக தெரிந்துவிடும் என்பதால் விலைவாசி பிரச்சனையில் ப.சிதம்பரத்தையும் லேசாக தாக்குகிறார்.

அதே போல அமர்சிங் போட்டுள்ள இன்னொரு நிபந்தனை செல்போன் சேவையில் வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது என்பது. செல்போன் தொழில்நுட்பத்தில் அடுத்தகட்டமான 3ஜி ரக சேவையை (வீடியோ, மெயில் சேவைகளை அடக்கியது) அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதில் வெளிநாட்டு நிறுவனங்களையும் இறக்கிவிட்டு போட்டியை கடுமையாக்கினால் செல்போன் சேவைக் கட்டணம் ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என திமுகவைச் சேர்ந்த தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராஜா கருதுகிறார். இதில் பிரதமரும் ராஜாவின் கருத்துடன் ஒத்துப் போகிறார்.

இதையடுத்து 3ஜி சேவையில் இறங்க சர்வதேச அளவிலான டெண்டர்களை விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதி்ல் பாதிக்கப்படப் போகும் முக்கிய நிறுவனம் அனிலில் ரிலையன்ஸ் மொபைல். இதனால் வெளிநாட்டு நிறுவனங்களை செல்போன் சேவையில் இறங்க அனுமதிக்கக் கூடாது, இந்திய செல்போன் நிறுவனங்களில் அன்னிய முதலீட்டை அதிகரிக்க அனுமதிக்கக் கூடாது என்று மத்திய அரசிடம் அமர்சிங் நிபந்தனை போட்டுள்ளதாகத் தெரிகிறது.

இப்படியாக அம்பானிகளின் அண்ணன்-தம்பி மோதல் மத்திய அரசை காப்பாற்றுவது அல்லது கவிழ்ப்பது என்ற அளவுக்கு வந்துவிட்டது என்கின்றனர் டெல்லி விவகாரங்களை நன்கறிந்தவர்கள்.

ஆனால், முலாயம் போட்ட நிபந்தனைகளை எல்லாம் காங்கிரஸ் ஏற்றுக் கொண்டுள்ளதா இல்லையா என்று தெரியவில்லை. சமாஜ்வாடியின் ஆதரவைப் பெறுவதற்காக 3ஜி விஷயத்தை மத்திய அரசு ஆறப் போடலாம் எனக் கூறப்படுகிறது. இது திமுகவை வெறுப்பேற்றப் போவது நிச்சயம்.

(ஏற்கனவே இந்திய செல்போன் நிறுவனங்கள் தந்த நெருக்கடிகளை எல்லாம் மீறித் தான் 3ஜி சேவை விஷயத்தில் தெளிவான நிலையை எடுத்தார் அமைச்சர் ராஜா)

ஆனாலும் ஆட்சியைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ள காங்கிரஸ் திமுகவை சமாதானப்படுத்திவிடும் என்றே தெரிகிறது.

அடுத்ததாக ராஜிவ் மறைவுக்குப் பின் அமிதாப் குடும்பத்துக்கும் சோனியா குடும்பத்துக்கும் இடையே தொடர் மோதல்கள் நடந்து வருகின்றன. இன்கம்டாக்ஸ் ரெய்டில் ஆரம்பித்து பல சிக்கல்களை அமிதாப் சந்தித்து வருகிறார். அமிதாப்புக்கு தரப்படும் பிரச்சனைகள் எல்லாம் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அமர்சிங் கோரியுள்ளதாகத் தெரிகிறது.

பிக் பி நிறுவனத்தை ஆரம்பித்து அமிதாப் போண்டியான நிலையில் அவரை பொருளாதாரரீதியாக கை கொடுத்து தூக்கி நிறுத்தியது முலாயம்-அமர்சி்ங் நட்பு தான். அந்த வகையில் அனில் அம்பானியும் அமிதாப்புக்கு மிக நெருக்கமானார்.

அமர்சிங் போட்டுள்ள இன்னொரு நிபந்தனையாகக் கூறப்படுவது, மாயாவதிக்கு தர வேண்டிய சிக்கல்கள். உத்தரப் பிரதேசத்தில் முலாயமின் கண்களில் விரலை விட்டு ஆட்டி வரும் மாயாவதியை ஒடுக்க மத்திய அரசு சகல பலத்தையும் வழிகளையும் பயன்படுத்த வேண்டும் என சமாஜ்வாடி கூறியுள்ளதாகத் தெரிகிறது.

இந்த டீலின் மிக முக்கியமான பகுதி காங்கிரஸ்-முலாயம் கூட்டணி. வரும் மக்களவைத் தேர்தலில் எங்களுடன் கூட்டணி அமைக்க வேண்டும், எங்களுக்கு உத்தரப் பிரதேசத்தில 50 இடங்களை விட்டுத் தர வேண்டும் என்பது.

இப்படி பல்வேறு டீல்களின் பின்னணியில் தான் முலாயமின் ஆதரவு காங்கிரசுக்கு கிடைத்துள்ளது என்கிறார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X