For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரு கனவும் இந்தக் கண்ணீரும்...

By Staff
Google Oneindia Tamil News

Obama
-ஏ.கே.கான்

''என் நண்பர்களே.. நான் கனவு காண்கிறேன்.. நம் உடலின் நிறத்தால் இன்று நாம் இத்தனை பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். நாளையும் இந்த பிரச்சனைகள் இருக்கத் தான் போகின்றன.

ஆனாலும், எனக்கு ஒரு கனவு இருக்கிறது.

நிற பேதங்களையெல்லாம் தாண்டி நாம் அனைவரும் சமம் தான் என்று ஒரு நாள் இந்த தேசம் சொல்லும்...

பல ஆண்டுகளாக அடிமைகளாக நடத்தப்பட்ட நம் மக்கள் வெள்ளை இனத்தினரோடு இதோ இந்த ஜார்ஜிய மலைப் பகுதியில் ஒன்றாக, சகோதரர்களாக நடமாடுவார்கள்...

ஆம், என்னிடம் ஒரு கனவு இருக்கிறது.

இதோ, அநீதி உச்சகட்டத்தில் நின்று பேயாட்டம் ஆடும் இந்த மிஸிஸிபி நதிக் கரையோரம் ஒரு நாள் சுதந்திரம்.. நியாயம் என்ற சோலை பூக்கும்.

என் நான்கு குழந்தைகளும் ஒரு நாள் இந்த நாட்டில் அவர்களது நிறத்தால் எடை போடப்படாமல், அவர்களின் செயல்களால், மனதால் எடைபோடப்படுவார்கள்..

ஆம், என்னிடம் ஒரு கனவு இருக்கிறது"

கருப்பின மக்களின் உரிமைகளுக்காகப் போராடி அதற்காக துப்பாக்கிக் குண்டுக்குப் பலியான வீரன் மார்ட்டின் லூதர் கிங்கின் இந்த உரை கருப்பின மக்களை மட்டுமல்ல, வெள்ளையின மக்களின் இதயங்களையும் கண்ணீ்ர் விடச் செய்தது.

அவர் பேசியது 1963ம் ஆண்டில்... லட்சக்கணக்கான கருப்பின மக்களைத் திரட்டி வாஷிங்டன் நோக்கி பேரணியாகச் சென்று அந்த இன மக்களுக்கு ஓட்டு போடும் உரிமை உள்ளிட்ட சம உரிமைகளும், வேலைகளும் வேண்டும் என்று கோரி கிங் ஆற்றிய உரை இது.

இது வெள்ளையின மக்களின் இதயங்களைத் துளைத்த உரை, கருப்பின மக்களின் போராட்டத்தில் வெள்ளையர்களையும் பங்கேற்கச் செய்த உரை.

ஆயுதமே இல்லாமல் போரை நடத்தி வெள்ளையர்களின் மனசாட்சியை தட்டி எழுப்பிய மகான் மார்ட்டின் லூதர் கிங்.

கிங்கை இப்படி அகிம்சைப் போராட்டக்காரராக மாற்றியது இந்தியா தான். தனது அகிம்சையால் இந்தியா சுதந்திரம் வாங்கிக் காட்டியதில் ஆச்சரியமும் ஆனந்தமும் கொண்ட கிங் 1959ம் ஆண்டில் இந்தியா வந்தார்.

மகாத்மா காந்தி உயிருடன் இல்லாத நிலையில் அவரது குடும்பத்தைச் சந்தித்து காந்தி குறித்துப் பேசிவிட்டு இப்படிச் சொன்னார்..

இந்த இந்திய மண்ணில் நின்று சொல்கிறேன்.., ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உலகிலேயே ஒரு மாபெரும் ஆயுதம் உண்டென்றால் அது அகிம்சை தான். எந்த சக்தியாலும் தப்ப முடியாத புவியீர்ப்பு விசை மாதிரி என்னை காந்தி ஈர்த்திருக்கிறார்.. இதோ அவர் சொன்ன ஆயுதத்தோடு நான் நாடு திரும்புகிறேன்.. என்றார்.

இப்படி மார்ட்டின் லூதர் கிங் ஒரு புறம் மக்களைத் திரட்ட, இன்னொரு புறம் வேறு பல சாதாரண கருப்பின மக்களும் தங்களது சுய மரியாதைக்காக உரிமைக்காக ஆங்காங்கே அகிம்சை முறையில் போராடிக் கொண்டிருந்தனர்.

1955ம் ஆண்டில் 15 வயதே ஆன கிளாடெட் கோல்வின் என்ற பள்ளிச் சிறுமி வெள்ளைக்காரருக்கு தனது இருக்கையைத் தர மறுத்தாள்.

அதே ஆண்டில் ரோஸா பார்க்ஸ் என்ற கருப்பினப் பெண் மோண்ட்கோமெரி என்ற இடத்தில் பஸ்சில் வெள்ளையினப் பெண்ணுக்கு இடம் தர மறுத்து சிறை போனார்.. இதையடுத்து அந்த ஊரில் பேருந்துகளை புறக்கணிக்குமாறு கருப்பின மக்களுக்கு உத்தரவிட்டார் மார்ட்டின் லூதர் கிங்.

பஸ்களை புறக்கணித்து நடக்க ஆரம்பித்தனர் கருப்பின மக்கள். ஒரு நாள் இரண்டு நாள் அல்ல.. 385 நாட்கள்.. யாரும் பேருந்தில் ஏறவில்லை.. கிங் வீடு மீது குண்டு வீசப்பட்டது, அவர் அசரவில்லை.

இதையடுத்து பஸ்களில் அனைவரும் சமமே, யாரும் அமரலாம், யாரும் யாருக்கும் இடம் தர வேண்டியதில்லை, எழுந்து நிற்க வேண்டியதில்லை என்று முதல் வெற்றி கிடைத்தது கருப்பின மக்களுக்கு.

ஆம்.. பேருந்தில் தான் கிடைத்தது முதல் சுதந்திரம்!

அடுத்தடுத்து வந்தன இன வேறுபாடு தடை சட்டம், கருப்பினருக்கு அரசுத் துறைகளில் வேலை தரும் சட்டம், அடிப்படை மனித உரிமைகள் தரும் சட்டம், கருப்பின மக்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் தரும் சட்டம்...

கடைசியாக 1965ல் வந்தது கருப்பர்களுக்கும் ஓட்டுரிமை அளிக்கும் சட்டம்.

இந்த சட்டங்கள் அடிமைத்தனத்தை அதிகாரப்பூர்வமாக ஒழித்தாலும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் கருப்பின மக்களுக்கு முழு அதிகாரமும் கிடைத்ததா என்றால் இல்லை.

இதனால் அவ்வப்போது நாட்டின் பல பகுதிகளிலும் வன்முறைகளும் மூண்டன.

கருப்பின மக்களால் செனட், காங்கிரஸ் என நுழைய முடிந்ததே தவிர அமைச்சர்கள் அந்தஸ்துக்கோ ஆட்சியில் முக்கிய பதவிகளைப் பிடிக்கவோ அவர்கள் எளிதில் அனுமதிக்கப்படவில்லை.

அவர்களது தலைக்கு மேல் ஒரு கண்ணுக்குத் தெரியாத Glass ceiling மிக உறுதியாகவே கட்டப்பட்டிருந்தது.

இந்தத் தடையை உடைக்கும் ஒரு சக்திக்காகத் தான் ஏங்கிக் கொண்டிருந்தது அமெரிக்கா.

மார்ட்டின் லூதர் கிங்குக்குப் பி்ன் அந்த இடத்தை நிரப்பக் கூடிய மாபெரும் போராளி கருப்பர் இனத்தில் இருந்து வரவில்லை.

லூதர் கிங்கால் அடையாளம் காணப்பட்ட ஜெஸ்ஸி ஜேக்சனால் கூட இந்த உரிமைப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு முழுமையாக எடுத்துச் செல்ல முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஆனாலும் அவர் தனது பங்குக்கு போராடித்தான் பார்த்தார். இதனால் அவரை ஜனநாயகக் கட்சி 1984லும் 1988லும் அதிபர் வேட்பாளராக நிறுத்தும் அளவுக்கு அமெரிக்காவில் நிலைமை மாறியதும் உண்மை.

இவருக்கு முன் சிரிலி சிஸ்ஹோல்ம் என்ற கருப்பருக்கு அதிபர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டது.

ஆனால், இருவராலுமே லூதர் கி்ங் மாதிரி வெள்ளையின மக்களின் மனசாட்சியையும் கருப்பர் இன மனசாட்சியையும் ஒரு சேர தொட முடியவில்லை. இதனால் கருப்பர் இன அதிபர் என்பது ஒரு பகல் கனவாகவே தொடர்ந்தது.

இந்த நிலையில் தான் சிகாகோவில் ஒரு நட்சத்திரம் தோன்றியது...

தொடரும்...

(கட்டுரையாளர் தட்ஸ்தமிழ் ஆசிரியர்)

இரண்டாம் பகுதி

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X