For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்திய அணு உலைகள்- 'உலை வைக்கும்' ஜி-8!

By Staff
Google Oneindia Tamil News

Nuclear Plant
சென்னை: -ஏ.கே.கான்

சர்வதேச அணு ஆயுதப் பரவல் தடை சட்டத்தில் (Non-proliferation Treaty-NPT) கையெழுத்திடாத நாடுகளுக்கு அணு உலை எரிபொருளை 'ரீ-புராஸஸ்' செய்யும் தொழில்நுட்பத்தையோ, கருவிகளையோ வழங்கக் கூடாது என்று ஜி-8 நாடுகளி்ன் கூட்டததில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு மாபெரும் சறுக்கலாகும்.

அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்ததில் இந்தியா கையெழுத்திட்டதன் மூலம் அணு எரிபொருள் வழங்கும் நாடுகளிடமிருந்து (Nuclear suppy group-NSG) இந்திய உலைகளுக்குத் தேவையான எரிபொருள், அதை 'ரீ-புராஸஸ்' செய்யும் தொழில்நுட்பம், கருவிகள் கிடைக்கும் என்ற உத்தரவாதத்தையும் அமெரிக்கா வழங்கியது.

(எரிபொருளை 'ரீ-புராஸஸ்' செய்து அதை அணு ஆயுதங்களில் பயன்படுத்த முடியும்)

ஆனால், இப்போது இத்தாலியின் லா அகூலா நகரில் நடந்து முடிந்த ஜி-8 நாடுகளின் கூட்டத்தில் அணு ஆயுதப் பரவல் சட்டத்தில் கையெழுத்திடாத நாடுகளுக்கு இந்த உதவிகள் வழங்கப்படாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது இந்தியாவுக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. இது குறித்து இந்திய அணு சக்திக் கழகத்தின் தலைவரான ககோட்கர் பெரும் கவலை தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டத்தில் மனுகுரு ஹெவி வாட்டர் அணு உலையின் 'போரான்' தயாரிப்பு பிரிவை துவக்கி வைத்த அவர்,

நான் ஜி-8 தீர்மானத்தை முழுமையாக படிக்கவில்லை. அதில் என்ன கூறப்பட்டுள்ளது என்பது எனக்கு முழுதாகத் தெரியாது. ஆனாலும், அமெரிக்காவுடனான ஒப்பந்தம் மூலம் நமக்கு அணு ஆயுத பரவல் தடை சட்டத்தி்ல் கையெழுத்திட வேண்டிய அவசியம் எழவில்லை. இந் நிலையில் ஜி-8 நாடுகள் அதற்கு எதிரான நிலையை எடுத்திருப்பது கவலை தரும் விஷயம் என்றார்.

இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் ஜி-8 அமைப்பின் முக்கிய நாடு அமெரிக்கா என்பது தான்.

அதே போல அமெரிக்காவைத் தொடர்ந்து இந்தியாவுடன் பிரான்சும் அணு சக்தி ஒப்பந்தத்தில் கடந்த செப்டம்பரில் கையெழுத்திட்டது. ஜி-8 அமைப்பில் பிரான்சும் முக்கிய நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

(அது என்ன 'போரான்'?: போரிக் அமிலத்திலிருந்து பிரிக்கப்படும் 'போரான்', பாஸ்ட் ப்ரீடர் ரியாக்டர்ஸ் எனப்படும் அதிவேக அணு உலைகளில் அணுக்களின் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவுவது. கல்பாக்கத்தில் அமைக்கப்படும் அணு உலைக்கு இந்த போரான் மிக மிக அவசியம். அதைத் தான் இங்கே தயாரிக்கப் போகிறார்கள்).

ககோட்கர் இப்படி கவலை தெரிவித்தாலும் நம் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, 'மீசையில் மண் ஒட்டவில்லை' என்றரீதியில் பதில் தந்துள்ளார்.

அவர் கூறுகையில், ஜி-8 நாடுகள் என்ன நிலையை எடுத்தாலும் அதைப் பற்றி கவலையில்லை. நாம் என்.பி.டியில் கையெழுத்திட வேண்டாம் என அணு எரிபொருள் சப்ளை செய்யும் நாடுகள் கூறிவிட்டன. சர்வதேச அணு சக்திக் கழகமும் இந்த விஷயத்தில் நமக்கு விதிவிலக்கு தந்துவிட்டது.

நாம் பேச வேண்டிய இடம் என்.எஸ்.ஜி தான். ஜி-8 அல்ல என்றார்.

இதில் கொடுமை என்னவென்றால் ஜி-8 நாடுகள் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியபோது நமது பிரதமரும அந்தக் கூட்டத்தில் இருந்தது தான். மேலும் ஜி-8 நாடுகள் கூட்டத்தில் பங்கேற்ற, என்.பி.டியில் கையெழுத்திடாத ஒரே நாடும் இந்தியா தான்.

இதனால் இந்தத் தீர்மானமே இந்தியாவைத் தான் குறி வைத்து நிறைவேற்றப்பட்டது என்கிறார்கள்.

இந் நிலையில் பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சி்ங் அந் நாட்டுடன் அணு சக்தித்துறையில் இணைந்து செயல்படுவது குறித்த சில ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளார்.

பிரான்ஸில் இன்று நடைபெறும் அந் நாட்டு தேசிய தினத்தில் சிறப்பு விருந்தினராக மன்மோகன் சிங் கலந்து கொண்டார்.

இதைத் தொடர்ந்து எகிப்தில் உள்ள ஷரம்-எல்-ஷேக்கில் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நடைபெறும் அணிசாரா இயக்க உச்சி மாநாட்டிலும் பங்கேற்கும் பிரதமர் அங்கு பாகிஸ்தான் பிரதமர் யூசுப் கிலானி, இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவையும் சந்திக்கிறார் பிரதமர்.

கிலானியை பிரதமர் சந்திக்கும் முன் இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கர் மேனன், பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர் சல்மான் பஷீர்யா ஆகியோர் இன்று பேச்சு நடத்த உள்ளனர்.

மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்களுக்குப் பின் இரு நாட்டு வெளியுறவுச் செயலர்களும் சந்தித்துப் பேசுவது இதுவே முதல் முறையாகும்.

இதற்கிடையே மும்பை ‌தாக்குதல் குறித்த புலனாய்வு அறிக்கை ஒன்றை இந்தியாவிடம் இன்று தந்துள்ளது பாகிஸ்தான். அதில் மும்பை தாக்குதலில் தொடர்புடைய மேலும் 12 குற்றவாளிகளின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தொடர்பான செய்திகள்:

புத்தர் சிரித்தாலும் சிரித்தார்...புத்தர் சிரித்தாலும் சிரித்தார்...

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X