For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடுத்து வருவது 'ஏ-6': ஒரே ஏவுகணை, பல அணு குண்டுகள், ஒரே நேரத்தில் பல இலக்குகளை தாக்கும் திறன்!

By Chakra
Google Oneindia Tamil News

Agni-V
-ஏ.கே.கான்

அக்னி 5 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துவிட்ட நிலையில், அடுத்தபடியாக வரப் போவது 'ஏ-6' என்று பெயரிடப்பட்டுள்ள ஏவுகணை. இந்த ஏவுகணை ஒரே நேரத்தில் பல அணு குண்டுகளை ஏந்திக் கொண்டு 10,000 கி.மீ. வரை சென்று ஒரே நேரத்தில் பல இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என்று தெரிகிறது.

17.5 மீட்டர் உயரம் கொண்ட அக்னி 5 ஏவுகணை திட எரிபொருளால் இயக்கக் கூடியதாகும். இதனால், இதை மிக எளிதாக ராணுவ வாகனங்களில் எந்த இடத்துக்கும் கொண்டு சென்று ஏவ முடியும்.

சுமார் 1.5 டன் (1,500 கிலோ) எடை கொண்ட அணு குண்டையோ அல்லது வேறு ஆயுதங்களையோ இந்த ஏவுகணையால் ஏந்திக் கொண்டு 5,000 கி.மீ. வரை பயணிக்க முடியும்.

'இன்டர் காண்டினென்டல் பேலிஸ்டிக் மிஸைல்' (Inter-Continental Ballistic Missile-ICBM) எனப்படும் இந்த ஏவுகணை, ஏவப்பட்டவுடன் முதலில் பூமியிலிருந்து 40 கி.மீ. உயரத்தை அடையும். அத்தோடு அதன் முதல் ஸ்டேஜ் ராக்கெட் தனியே கழன்றுவிடும்.

இதையடுத்து அதன் இரண்டாவது ராக்கெட் செயல்பட்டு அதை மேலும் 150 கி.மீ. உயரத்துக்கு கொண்டு செல்லும். இதன் பின்னர் அதன் 3வது ராக்கெட் இயங்கி அதை மேலும் 800 கி.மீ. உயரத்துக்கு கொண்டு செல்லும்.

இந்த உயரத்தை அடைந்த பின்னர் ஏவுகணையில் உள்ள கம்ப்யூட்டர்கள், செயற்கைக் கோள் மற்றும் ரேடியோ சிக்னல்கள் உதவியோடு, அதை தாக்குதல் நடத்த வேண்டிய இடத்தை நோக்கித் திருப்பும்.

இதையடுத்து அடுத்த 18 நிமிடங்களில் இந்த ஏவுகணை 5,000 கி.மீ. தூரத்தைக் கடந்து குறிப்பிட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கும்.

3வது கட்ட ராக்கெட் செயல்பட ஆரம்பிக்கும்போது இந்த ஏவுகணையின் வேகம் ஒலியை விட 24 மடங்கு அதிகமானதாக இருக்கும். அதாவது, போர் விமானங்களை விட சுமார் 30 மடங்கு அதிக வேகத்தில் பயணிக்கும்.

இந்த ஏவுகணையால் பாகிஸ்தான், சீனாவின் எந்தப் பகுதியையும், கிழக்கு ஐரோப்பாவையும், வடக்கு-கிழக்கு ஆப்பிரிக்காவைத் தாக்க முடியும்.

நிகோபார் தீவுகளில் இருந்து இதை ஏவினால் ஆஸ்திரேலியாவைக் கூட தாக்கலாம்.

திபெத் பகுதியில் இந்தியாவுக்கு எதிராக ஏவுகணைகளை சீனா நிறுத்தி வைத்துள்ள நிலையில், இந்த அக்னி 5, சீனாவுக்கு எதிரான மிகப் பெரிய தற்காப்பாக இருக்கும்.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகளிடம் மட்டும் தான் இந்த வரை ஐசிபிஎம் ஏவுகணைகள் உள்ளன. இப்போது இந்தத் திறனைப் பெற்றுள்ள 5வது நாடு இந்தியாவாகும்.

இந்தியா முதலில் தயாரித்த அக்னி-1 ஏவுகணை 700 கி.மீ. தூரத்தைக் கடக்க வல்லதாக இருந்தது. இதையடுத்து தொடர்ந்து அடுத்தடுத்த ஆராய்ச்சிகளை நடத்தி அதன் தூரம் 5,000 வரை நீடிக்கப்பட்டுள்ளது (அக்னி-5 உண்மையில் 8,000 கி.மீ. தூரத்தை கடக்க வல்லது என்கிறது சீனா).

அக்னி ரகத்தைச் சேர்ந்த முந்தைய ஏவுகணைகளுக்கும் அக்னி- 5 ஏவுகணைக்கும் இடையே மிக மிக முக்கியமான வித்தியாசம் உண்டு. அது re-entry technology எனப்படும் பூமிக்கு வெளியே போய்விட்டு திரும்ப உள்ளே நுழையும் தொழில்நுட்பம்.

மற்ற ஏவுகணைகள் செலுத்தியவுடனே எதிரி நாட்டு திசை நோக்கி பயணித்து குறிப்பிட்ட இலக்கைத் தாக்கும். அவை 'க்ரூயிஸ்' (cruise missiles) ரக ஏவுகணைகள். ஆனால், அக்னி-5 பேலிஸ்டிக் மிஸைல் ரகத்தைச் சேர்ந்தது. அதாவது, ஏவப்பட்டவுடன் பூமிக்கு மேலே பல நூறு கிலோ மீட்டர்கள் பயணித்துவிட்டு, பின்னர் வானிலியிருந்து பூமி நோக்கித் திரும்பி, எதிரி நாட்டு இலக்கை நோக்கி பாயும் ஏவுகணை இது.

இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் ஏகப்பட்ட சிக்கல்கள். ஆனால், இந்த தொழில்நுட்ப உதவியை வெளிநாடுகளில் இருந்து பெற சர்வதேச சட்டமான Missile Technology Control Regime தடுக்கிறது. இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை என்றாலும், ரீ-எண்ட்ரி தொழில்நுட்பத்தை பிற நாடுகளிடமிருந்து இந்தியாவால் பெற முடியவில்லை.

இதனால் அந்தத் தொழில்நுட்பத்தை இந்தியாவே உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு, அதை செய்தும் காட்டிவிட்டனர் நமது DRDO எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் உற்பத்திப் பிரிவின் விஞ்ஞானிகள்.

இந்த ஏவுகணைத் தயாரிப்புக்கான பல தொழில்நுட்பங்கள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவிடமிருந்து வந்துள்ளதை மறுக்க முடியாது. அக்னி ஏவுகணையின் திட எரிபொருள் ராக்கெட்டுகள், செயற்கைக் கோள்களை ஏவ இஸ்ரோ தயாரித்த எஸ்.எல்.வி., பி.எஸ்.எல்.வி. ராக்கெட்களின் அடிப்படையில் அமைந்தவை தான் என்கிறது குளோபல் செக்யூரிட்டி என்ற சர்வதேச பாதுகாப்பு குறித்த ஆராய்ச்சி மையம்.

இப்போது உருவாக்கப்பட்டுள்ள அக்னி-5 ஒரே ஒரு அணு அல்லது வேறு குண்டை ஏந்திச் செல்ல வல்லது. அடுத்தகட்டமாக ஒரே ஏவுகணையில் பல குண்டுகளை ஏந்திச் செல்லும் தொழில்நுட்பத்தை (Multiple independently targetable reentry vehicle-MIRVed) இந்தியா உருவாக்கி வருவதாகத் தெரிகிறது. 'A6' என்று கோட் நேம் இடப்பட்டுள்ள இந்த ஆராய்ச்சி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த ஏவுகணையின் தூரமும் 6,000 முதல் 10,000 கி.மீயாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த ஏவுகணைக்கு 'சூர்யா' எனப் பெயரும் சூட்டப்பட்டுவிட்டது என்கிறார்கள்.

அடுத்த கட்டமாக இந்த ஏவுகணையை நீர் மூழ்கிக் கப்பல்களில் இருந்தும் செலுத்தக்கூடியாதவும் (Submarine-launched ballistic missile) மேம்படுத்தும் திட்டத்திலும் டிஆர்டிஓ உள்ளதாகத் தெரிகிறது.

இப்போது இந்தியாவிடம் தரையிலிருந்து தரையில் உள்ள இலக்கைத் தாக்கும் பிருத்வி குறைந்த தூர ஏவுகணை, தரையிலிருந்தும் கப்பல்களில் இருந்தும் கப்பல்களைத் தாக்கும் திரிசூல், தரையிலிருந்து விமானத்தையோ அல்லது விமானத்திலிருந்து விமானத்தையே தாக்கும் ஆகாஷ், இரவு-பகல் என எந்த நேரத்திலுந் கவச வாகனங்களைத் தாக்க உதவும் நாக் ஆகிய ஏவுகணைகளும், நீண்ட தூரம் சென்று தாக்கும் அக்னி வரிசையில் 1,2,3,4,5 ஆகிய ஏவுகணைகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அக்னி-5 ஏவுகணையை மேலும் கூர்மையாக்க மேலும் 5 முதல் 6 சோதனைகள் வரை தேவைப்படும் என்று தெரிகிறது. இதனால் வரும் காலங்களில் அடிக்கடி அக்னி-5 சோதனைகள் நடக்கலாம்.

English summary
It is widely believed that, DRDO is progressing on a program code named A6, which will be an ICBM with a range of 6,000-10,000 km and like some versions of its precursor Agni V, it will be capable of underwater launch with MIRV feature.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X