அன்புள்ள மகனே, இது தான் டி.என்.ஏ!!
-ஏ.கே.கான்
நமது செல்களில் இருக்கும் ஏணிப்படிகள் தான் நமது தோற்றத்தை, குணத்தை, சந்ததியை நிர்ணயிக்கின்றன. இந்த ஏணிப்படி தான் டிஎன்ஏ.

நம் வாழ்வின் ரகசியமே ATGC தான்:
அடினைன் (A), குவானைன் (G), சைட்டோசின் (C), தையமின் (T), என்ற நான்கு அமினோ அமிலங்கள் தான் (புரதங்கள்) இந்த ஏணிப்படியை உருவாக்குகின்றன. நியூக்ளியோடைட்ஸ் எனப்படும் இந்த ATGC எந்த வரிசையில் அமைந்துள்ளது என்பதைப் பொறுத்தே 'நாம்' உருவாகிறோம், வாழ்கிறோம். நம் வாழ்வின் ரகசியமே இந்த ATGC ஏணிப்படி தான்.

பிரான்சிஸ் கிரிக், ஜேம்ஸ் வாட்சன்:
இந்த டிஎன்ஏவின் வடிவத்தை முதல் முதலில் கண்டுபிடித்தவர்கள் இங்கிலாந்தைச் சேர்ந்த பிரான்சிஸ் கிரிக் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஜேம்ஸ் வாட்சன் ஆகிய உயிரியல் ஆராய்ச்சியாளர்கள். 1953ம் ஆண்டு இவர்கள் டிஎன்ஏவின் வடிவத்தை கண்டுபிடித்தனர்.

மகனுக்குக் கடிதம்:
இந்த கண்டுபிடிப்பு குறித்து தனது மகன் மைக்கேலுக்கு டிஎன்ஏவின் (முதல்) ஸ்கெட்ச் படங்களுடன் கடிதம் எழுதினார் கிரிக். அப்போது மைக்கேலுக்கு வயது 12. ஒரு சிறுவனுக்குப் புரியும் வகையில் தனது கடிதத்தில் டிஎன்ஏவின் வடிவம், அதன் முக்கியத்துவம் குறித்து அழகான படங்களையும் வரைந்து அனுப்பி வைத்தார் கிரிக்.

ரூ. 30 கோடிக்கு ஏலம்:
இப்போது அந்தக் கடிதம் 6 மில்லியன் டாலர்களுக்கு, அதாவது ரூ. 30 கோடிக்கு ஏலம் போயுள்ளது. நியூயார்க் நகரில் இந்தக் கடிதத்தை மைக்கேல் ஏலம் விட்டபோது அதை வெளியில் பெயர் சொல்ல விரும்பாத ஒருவர் ரூ. 30 கோடி தந்து வாங்கிச் சென்றுள்ளார்.

அழகிய கடிதம்:
அந்தக் கடிதத்தில் கிரிக் எழுதியிருப்பதாவது: ''அன்புள்ள மகன் மைக்கேல்,
நானும் வாட்சனும் இணைந்து ஒரு மிக முக்கியமான கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளோம் என்று நினைக்கிறோம். de-oxy-ribose-nucleic-acid என்ற டிஎன்ஏவின் வடிவத்தை கண்டுபிடித்துள்ளோம். டிஎன்ஏ மிக அழகாக இருக்கிறது மைக்கேல், சுற்றிச் சுழன்ற ஒரு ஏணிப்படி மாதிரி!.
டிஎன்ஏ என்பது ஒரு குறியீடாக (code) இருக்கலாம் என்று நானும் வாட்சனும் நினைக்கிறோம். அதில் தான் ஒரு மனிதனின் எல்லா ரகசியங்களும் பொதிந்து கிடக்கின்றன. நீ பள்ளி விடுமுறையில் ஹாஸ்டலில் இருந்து வீட்டுக்கு வரும்போது, சோதனைச் சாலையில் டிஎன்ஏவை நேரில் காட்டுகிறேன்... (என்று விரிகிறது அந்தக் கடிதம்)
இப்படிக்கு,
அன்புள்ள அப்பா''

கடிதங்களின் வாழ்நாள் டிஎன்ஏ மாதிரியே:
ஒரு டிஎன்ஏ ஆராய்ச்சியாளர் தனது கடும் ஆய்வுப் பணிகளுக்கு மத்தியிலும் 12 வயதே ஆன மகனுக்கு தனது கண்டுபிடிப்பு குறித்து ஆர்வமும் ஆனந்தமும் கலந்து எழுதிய இந்தக் கடிதம் தான் ரூ. 30 கோடிக்கு ஏலம் போயுள்ளது.
நாம் எஸ்எம்எஸ் யுகத்துக்காரர்கள்.. பிள்ளைக்கோ, பெற்றோருக்கோ ஒரு கடிதமோ, மெயிலோ எழுதக் கூட நம்மிடம் நேரமும் பொறுமையும் இல்லையே.
கடிதங்கள் டிஎன்ஏ மாதிரியே மிக அழகனாவை, அதன் வாழ்நாள் டிஎன்ஏ மாதிரியே மிக நீண்டது!