For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் Vs கொரோனாவைரஸ்: உடலுக்குள் நடப்பது என்ன?

Google Oneindia Tamil News

-ஏ.கே. கான்

Recommended Video

    ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் Vs கொரோனாவைரஸ்: உடலுக்குள் நடப்பது என்ன?

    வட அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் இருந்து ஒரு கப்பல் அந்த நாட்டின் மேற்குப் பகுதிக்கு வர வேண்டுமானால் பல்லாயிரம் கி.மீ அட்லாண்டிக் கடலில் பயணம் செய்து, தென் அமெரிக்க கண்டம் முழுவதையும் சுற்றிக் கொண்டு பின்னர் அட்லாண்டிக் கடலில் பல ஆயிரம் கி.மீ. பயணித்து, கிட்டத்தட்ட அண்டார்டிகா வரை போய், அமெரிக்காவின் மேற்குப் பகுதியை அடையக் கூடிய நிலை இருந்தது.

    கொல்கத்தாவில் இருந்து ஒரு கப்பல் மும்பைக்கு வர வேண்டுமானால், எப்படி இலங்கையை சுற்றித் தான் வர வேண்டுமோ அப்படி!

    Panama canal

    ஆனால், இந்த இரு அமெரிக்க கண்டங்களுக்கு இடையே மத்திய அமெரிக்காவில் பனாமா நாட்டின் ஓரிடத்தில் ஒரு சிறிய நீர் வழிப்பாதை இந்த இரு கடல்களையும் இணைக்கிறது. மிகக் குறுகிய இந்த நீர் வழிப் பாதையில் சிறிய படகுகள் மட்டுமே செல்ல முடியும். இங்கே பெரும் கப்பல்கள் பயணிக்க வேண்டுமானால், 82 கி.மீ தூரத்துக்கு இந்த நீர் வழிப்பாதையை அகலப்படுத்தியாக வேண்டும்.

    இரு புறமும் அடர்ந்த காடுகள் கொண்ட இந்த நீர் வழிப்பாதையை அகலப்படுத்தும் வேலையில் முதலில் பிரான்ஸ் இறங்கியது. அப்போது பிரான்ஸ் கட்டுப்பாட்டில் பனாமா இருந்தது. 1881ல் ஆரம்பித்த வேலை மாதம் 200 பேர் என ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை பலி கொண்டது. இந்த உயிர் பலிகளுக்கு பணியின்போது ஏற்பட்ட விபத்துகள் காரணமல்ல.

    காரணம்.. கொசு!

    மரங்கள், நீர் நிலைகள், மலைகள், வருடத்தில் 8 மாதங்கள் மழை .. என மிகக் கரடுமுரடான இந்த காட்டுப் பகுதியின் கொசுக்களால் ஏற்பட்ட மலேரியா, மஞ்சள் காய்ச்சல் போன்ற நோய்களுக்கு பல்லாயிரம் தொழிலாளர்களின் உயிர்கள் பலியாயின. இதனால் 1889ல் இந்தப் பணியை அப்படியே விட்டுவிட்டு விலகிவிட்டது பிரான்ஸ்.

    ஏன் இந்த மலேரியா பரவுகிறது. அதற்கு கொசுக்கள் தான் காரணம் என்பது கூட அப்போது அறியப்படவில்லை.

    இதையடுத்து 1904ம் ஆண்டில் அமெரிக்கா இந்த வேலையை கையில் எடுத்தது. இந்த இடைவெளியில் கொசுக்களால் தான் மலேரியா பரவுகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இதனால், பனாமா கால்வாய் பணியை துவக்கியவுடனேயே அமெரிக்கா செய்த முதல் வேலை மலேரியாவுக்கு மருந்து கண்டுபிடித்தது தான்.

    தென் அமெரிக்க கண்டத்தின் பழங்குடி மக்கள் 'குளிர்' காய்ச்சலுக்கு (மலேரியா என்று தெரியாமல், கொசு மூலம் பரவுவதும் புரியாமல்) பயன்படுத்திய மருந்து தான் Quinine. இந்த கண்டத்தின் பல நாடுகளிலும் காணப்படும் சின்கோனா என்படும் மரத்தின் பட்டையில் இருந்து தான் இந்த மருந்தை பழங்குடி மக்கள் தயாரித்தனர். இப்போது தயாரிக்கப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் (Hydroxychloroquine) மருந்துக்கு இது தான் அடிப்படை.

    Cincona Tree in Peru

    பிளாஸ்மோடியம் எனப்படும் வைரசும் அல்லாத, பாக்டீரியாவும் அல்லாத ஒரு நுண்ணுயிரி தான் மலேரியா நோய்க்குக் காரணம். இதைப் பரப்புவது அனோபெலிஸ் எனப்படும் வகையைச் சேர்ந்த பெண் கொசுக்கள் தான். தங்களது முட்டைகளுக்கு உணவளிக்க மனிதர்களை கடித்து ரத்தத்தை உறிஞ்சும் போது இந்த கொசுக்களின் உடலில் இருந்து மனிதர்களுக்குள் ஊடுருகிறது பிளாஸ்மோடியம்.

    இந்த பிளாஸ்மோடியத்திலும் 4 வகை உண்டு. அதில் 90 சதவீத மலேரியாவைப் பரப்புபவை பிளாமோடியம் ஃபால்சிபாரம் (Plasmodium Falciparum) ரக நுண்ணியிரி தான்.

    Plasmodium falciparum

    மனித உடலுக்குள் நுழைந்தவுடன் இந்த நுண்ணியிரி கல்லீரலில் போய் தங்கி பல்கிப் பெருகி ரத்தத்தில் கலக்கும். (இந்த நேரத்தில் மனிதனைக் கடிக்கும் கொசுவுக்கும் இந்த நுண்ணியிரி பரவும்!. ஆக, கொசுவுக்கே மலேரியாவை நாம் தருகிறோம்!). மனித ரத்தத்தின் சிவப்பு அணுக்களில் நுழையும் இந்த பிளாஸ்மோடியும் அங்கு லட்சக்கணக்கில் பெருகி, சிவப்பு அணுக்களையே சிதறடித்துக் கொண்டு உடலின் பல பகுதிகளையும் பாதிக்கும். இது தான் மலேரியா.

    உலகமே கொரோனா பீதியில் ஆழ்ந்திருக்க... இப்போ எதுக்கு இந்த கொசு கடி?...

    காரணம் இருக்கிறது..

    இப்போது கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் பயன்படுத்த முயலும் முதல் மருந்து, மலேரியாவை கட்டுப்படுத்த உதவும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் தான். பிரான்சில் கொரோனோவைரஸ் தாக்குதலுக்கு உள்ளான 42 பேருக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மற்றும் Azithromycin இணைந்த சிகிச்சை தரப்பட்டதில் அவர்களில் 38 பேர் இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து வெளியே வந்தனர். 3 பேருக்கு நோய் மேலும் தீவிரமானது. ஒருவர் பலியானார். இந்த ஆய்வு முடிவுகளை கடந்த மாதம் 20ம் தேதி பிரான்ஸ் வெளியிட்டது. இதையடுத்து உலகம் முழுவதுமே இந்த மருந்துக்கு அடிதடியே நடக்க ஆரம்பித்துவிட்டது.

    இதற்குத்தான் இந்தியாவிடமும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது வேகத்தைக் காட்டினார். மருந்தை உடனே அனுப்பாவிட்டால் இந்தியா எதிர் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்று ஓபனாகவே மிரட்டினார் (கெஞ்சி கேட்டுக் கொண்டார் என்று படிக்கவும்!)

    உலக பாலிடிக்ஸ் ஒரு பக்கம் இருக்கட்டும்... இந்த மருந்து எப்படி வேலை செய்கிறது?

    கொரோனாவைரஸோ அல்லது மலேரியாவை ஏற்படுத்தும் பிளாஸ்மோடியமோ, எந்த நுண்ணியிரியாக இருந்தாலும் மூக்கு, காது, கண், கொசுக்கடி- ரத்தம் வழியாக மனித உடலுக்குள் வந்தவுடன் செய்யும் முதல் வேலை செல்களுக்குள் நுழைவது தான்.

    செல்களில் ஒரு வைரஸ் நுழைய வேண்டுமானால், முதலில் அந்த செல்களின் மேலே உள்ள ரிசப்டர்களில் வைரஸ் ஒட்டிக் கொள்ள வேண்டும். ஊசி இடம் குடுக்காம நூல் நுழையுமா என்று சொல்லக் கேட்டிருப்போம். கிட்டத்தட்ட அதே தான் இங்கேயும் நடக்கிறது.

    Covid ace2 interaction

    செல்களில் மேலே இருக்கும் ACE2 receptor எனப்படும் ஆண்டெனா மாதிரியான ஒரு அமைப்பில் தான் முதலில் இந்த கொரோனாவைரஸ் ஒட்டிக் கொள்கிறது. பின்னர் இந்த வைரஸ் சுரக்கும் திரவம் இந்த ஆண்டெனாவை உருக்குலைய வைத்து செல் சுவர்களை துளைத்துக் கொண்டு உள்ளே செல்கிறது. உள்ளே போனவுடன் பல மடங்காக பல்கிப் பெருகுகிறது இந்த வைரஸ். இந்த ACE2 receptor ஒன்றும் வெட்டியான ஐட்டம் அல்ல. உடலின் ரத்த அழுத்தத்தை பராமரிப்பதில் பெரும் பங்கு வகிக்கும் முக்கிய புள்ளி தான்.

    இப்படி உடலின் கோடிக்கணக்கான செல்களுக்குள் நுழையும் கொரோனாவைரஸ், அதே வேளையில் செல்களில் இருந்து பிற செல்களுக்கும் மிக வேகமாய் பரவுகிறது. அது எப்படி நடக்கிறது?

    செல்களுக்கு இடையே ஊட்டச் சத்தை சுமந்து செல்லும் வேலைகளை செய்வது என்டோசோம் (Endosomes) எனப்படும் கேரியர்கள். இந்த சுமை தூக்கும் கேரியர்களுக்குள் நுழைந்துவிட்டால் அடுத்தடுத்த செல்களுக்குள் எளிதாகவே நுழைந்துவிடலாம். அதற்கு முதலில் இந்த என்டோசோம்களின் சுவர்களை நுண்ணியிரி துளைக்க வேண்டும்.

    இந்த துளையை எப்படி போடுவது.. கெமிக்கல் தான். பிளாஸ்மோடியமோ அல்லது கொரோனாவைரஸோ அவை சுரக்கும் ரசாயனம் என்டோசோம்களின் சுவர்களை கரைய வைத்து உள்ளே நுழைகின்றன. அந்த ஓட்டை எப்படி போடப்படுகிறது. இந்த இடத்தில் கொஞ்சம் கெமிஸ்ட்ரி கிளாசுக்கு போவோம்.

    ஒரு திரவம் அல்லது ரசாயனம் என்று இருந்தால் அதற்கு pH என்று ஒரு மதிப்பு உண்டு. இந்த pH மதிப்பு 7 என்று இருந்தால் அது நடுநிலையான திரவம். உதாரணம்: நமது உடலின் ரத்தம். இந்த மதிப்பு 7க்கு கீழே போனால் அது அமிலத்தன்மை கொண்ட திரவம். உதாரணம்: பால் இதன் pH மதிப்பு 6. சரி.. pH மதிப்பு 7க்கு மேலே போனால் அந்த திரவம் காரத்தன்மை கொண்டது என்று பொருள். உதாரணம்: கடல் நீர். இதன் pH மதிப்பு 8.

    pH scale

    (பாம்பு கடித்து உடம்பில் விஷம் ஏறிவிட்டால் உடனே நடப்பது, நமது ரத்தத்தின் pH அளவில் ஏற்படும் மாற்றம் தான். ரத்தத்தின் pH அளவு 7ல் இருந்து முன்னே பின்னே தடுமாறினால் ரத்தம் கெட்டியாகி, ரத்தக் குழாய்கள் அடைத்து, இதயம் செயலற்று மரணம் ஏற்படுகிறது)

    இப்போது இந்த pH கதை புரிந்திருக்கும்.

    மீண்டும் என்டோசோம்களுக்கு வருவோம். இந்த என்டோசோம்கள் அடிப்படையில் கொஞ்சம் அமிலத்தன்மை கொண்டவை. இந்த சுவர்களில் ஓட்டை போட பிளாஸ்மோடியம் போன்ற நுண்ணியிரிகள் சுரக்கும் ரசாயனமும் அமிலம் தான். அமிலத்தன்மை கொண்ட சுவர்களை இன்னும் கொஞ்சம் அமிலத்தை சேர்த்தால் ஓட்டை போடுவது சுலபம் தானே.

    ஆனால், இந்த இடத்தில் தான் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு மிகவும் பிடித்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் ஒரு ஜேம்ஸ்பாண்ட் வேலையை செய்கிறது. இந்த மருந்து என்டோசோம்களின் காரத்தன்மையை அதிகரிக்கிறது. இதனால் பிளாஸ்மோடியம் நுண்ணியிரி அமிலத்தை சுரந்து சுரந்து என்டோசோம்களின் சுவர்களை ஓட்டை போட ஒரு பக்கம் தொடர்ந்து முயற்சிக்க, ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் அதே என்டோசோம்களின் சுவர்களில் காரத்தன்மையை சேர்த்துக் கொண்டே செல்ல, எவ்வளவு தான் அமிலத்தை பிளாஸ்மோடியம் சுரந்தாலும் என்டோசோம்களின் சுவர்களில் ஓட்டை விழுவது சாத்தியமில்லாமல் போகிறது.

    மேலும் செல்களின் காரத்தன்மை ஒரு அளவுக்கு மேல் அதிகரிக்கும்போது பிளாஸ்மோடியத்துக்கு அதுவே விஷயமாகி விடுகிறது. அந்த நுண்ணியிரி உயிரிழக்க நேரிடுகிறது.

    Is Hydroxychloroquine the Answer for Coronavirus Pandemic?

    Healthy Cell layer not damaged (L)- Cell layer Damaged by coronavirus (R)

    கொரோனாவைரசும் கிட்டத்தட்ட பிளாஸ்மோடியம் செய்யும் தில்லாலங்கடி வேலையைத் தான் செய்கிறது. செல்களில் நுழைய அதுவும் என்டோசோம்களுடன் மல்லுகட்டுகிறது. இதனால் தான் என்டோசோம்களின் சுவர்களை ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை பயன்படுத்தி காரத்தன்மையை அதிகரித்து கொரோனாவைரசையும் காலி பண்ண முடியும் என்று மருத்துவ உலகம் நம்புகிறது.

    ஆனால், பிளாஸ்மோடியமும் வைரசும் ஒன்றல்ல என்பது ஒரு பிரிவு ஆராய்ச்சியாளர்களின் எதிர் கருத்தாக உள்ளது. இருந்தாலும் பிரான்ஸ் நாட்டு ஆராய்ச்சியில் கொரோனாவைரசுக்கு எதிராக ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து சிறப்பாகவே செயல்பட்டதாக வெளிவரும் தகவலாலும் வேறு மருந்துகள் ஏதும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இல்லாததாலும், இந்த மருந்துக்கு தொடர்ந்து ஆதரவு பெருகி வருகிறது.

    Coronavirus

    இதற்கிடையே மூட்டுகளைத் தாக்கும் ஆர்த்ரிடிஸ் நோய்க்கு எதிரான மருந்துகளும் கூட கொரேனோவைரசால் தாக்கப்பட்டவர்களின் நுரையீரல்களை பாதுகாக்க உதவுவதாக சில ஆய்வுகள் வெளியாகியுள்ளன. கொரோனோவைரசின் சில உள்ளடி வேலைகளால் உடலின் நோய் எதிர்ப்பு செல்கள், வைரசுக்கு பதிலாக நுரையீரலின் ஆரோக்கியமான செல்களை தாக்குவதை இந்த மருந்துகள் தடுப்பதால், நுரையீரல் மேலும் மோசமாவதை தடுக்க முடியும் என்கின்றன ஆய்வுகள்.

    அதே போல அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக மருத்துவ ஆராச்சியாளர்கள் இன்னொரு மருந்தையும் சொல்கிறார்கள். அது, கொரோனாவைரசால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தில் இருந்து பிரித்து எடுக்கப்படும் நுண்ணியிரி எதிர்ப்பு Antibodies. இதையே கொரோனாவைரசுக்கு எதிராக மருந்தாக திருப்பி விடலாம் என்கிறார்கள். கிட்டத்தட்ட தடுப்பூசி மாதிரி.

    (கொரோனாவைரஸ் ஆர்என்ஏவின் வேதியல் கட்டமைப்பின் ஒரு பகுதி)

    எபோலா, மெர்ஸ் ஆகிய வைரஸ்களுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட Remdesivirதான் கொரோனாவுக்கு சிறப்பாக எதிர் மருந்து என்ற கருத்துக்களும் முன் வைக்கப்படுகின்றன. இந்த மருந்து வைரஸ்களின் ஜீன் எனப்படும் ஆர்என்ஏக்களையே குழப்பி, சேதப்படுத்தும் சக்தி கொண்டது. இதனால் வைரஸ்கள் பல்கி பெருகுவதை தடுக்கலாம் என்கிறார்கள்.

    மனிதனை வெல்ல கொரோனாவும், கொரோனாவை வெல்ல மனிதனுமாய்.. போராட்டங்கள் தொடர்கின்றன

    Vairamuthu quotes
    English summary
    A French study led by Didier Raoult,on the combination of hydroxychloroquine and azithromycin in patients with COVID-19 was published March 20. The investigators report a significant reduction in the viral load. Following which clash broke out for Hydroxychloroquine among Nations
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X