For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெட்ரோல் விலை சரிவின் பின்னணியில் சர்வதேச அரசியல் உள்குத்து!

By A K Khan
Google Oneindia Tamil News

-ஏ.கே.கான்

சில நாட்களுக்கு முன் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் ஆகியோர் சீனாத் தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த Asia-Pacific Economic Cooperation (APEC) Summit plenary session கூட்டத்தில் கலந்து கொண்டு கையைக் குலுக்கிக் கொண்டனர்.

ஆனால், அங்கு இந்த சந்திப்புகள் நடந்து கொண்டிருக்கும்போதே அமெரிக்காவும் ரஷ்யாவும் ஒருவரை ஒருவர் காலை வாரிவிடும் வேலைகளை திரைமறைவில் தீவிரமாக செய்து கொண்டிருந்தன. இதில் அமெரிக்காவுக்கு செளதி அரேபியா உதவி. ரஷ்யாவுக்கு சீனா உதவி.

உக்ரைனில் படைகளைக் குவித்துள்ள ரஷ்யாவில் பொருளாதாரம் ஸ்திரமாக இல்லை. உக்ரைனை ஆக்கிரமித்த காரணத்தால் ரஷ்யா மீது ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்ததோடு, ரஷ்யாவிலிருந்து வாங்கும் இயற்கை எரிவாயுவையும் குறைத்துவிட்டன. இதனால் ரஷ்ய பொருளாதாரம் ஸ்திரத்தன்மையை இழந்துள்ளதோடு டாலருக்கு எதிரான அந் நாட்டின் கரன்சியான ரூபிளின் மதிப்பும் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது.

அத்தோடு ரஷ்யாவை பொருளாதாரரீதியில் அப்படியே இன்னும் கொஞ்சம் அமுக்க இது தான் நல்ல நேரம் என்று நினைக்கும் அமெரிக்கா ஒரு வேலையைச் செய்தது. அதன்படி, சமீபத்தி அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி சமீபத்தில் செளதி அரேபியா சென்றார்.

செளதி மன்னர் அப்துல்லாவை ஜெட்டாவில் உள்ள அவரது கோடைகால மாளிகையில் வைத்து சந்தித்துவிட்டு வந்தார். வளைகுடாவில் அமைதி, தீவிரவாதத்தை முறியடிப்பது தான் இருவரும் பேசிய அஜெண்டா என்று டிவிக்களிலும் மீடியாவிலும் இரு தரப்பும் செய்தியைப் பரப்பின.

ஆனால், அவர்கள் பேசிய விவகாரமே வேறு..

ரஷ்யாவின் பெட்ரோலிய- இயற்கை எரிவாயு பலத்தை ஒடுக்குவதில் ஐரோப்பிய நாடுகள் விதித்த தடைகள் ஓரளவுக்கு பயனைக் கொடுத்து வருகிறது. இதை அடுத்த நிலைக்குக் கொண்டு சென்று ரஷ்யாவின் பொருளாதாரத்தை மேலும் சீர்குலைப்பது தான் இருவரின் சந்திப்பின் முக்கிய அஜெண்டாவே.

இதன்படி செளதியிடம் அமெரிக்கா வைத்த கோரிக்கைகள் இரண்டு.

1. பெட்ரோலிய உற்பத்தி அதிகரிக்க வேண்டும்

2. அமெரிக்காவுக்கான பெட்ரோலியத்தின் விலையைக் குறைக்க வேண்டும்.

The real story about petrol price

இந்த சந்திப்பு நடந்த அடுத்த ஒரு வாரத்தில் செளதி தனது கச்சா எண்ணெய் உற்பத்தியை நாள் ஒன்றுக்கு 1 லட்சம் பேரல்கள் அதிகரித்து சர்வதேச சந்தையில் கொட்டிவிட்டது. அதே போல அமெரிக்காவுக்கான விலையையும் குறைத்துவிட்டது.

ஒரு பேரல் கச்சா எண்ணெய்யை 30 டாலருக்கு விற்றாலே செளதிக்கு லாபம் தான். ஆனால், இதையை 105 டாலருக்கு விற்றால் தான் ரஷ்யாவால் போட்ட காசை எடுக்க முடியும். செளதியின் அதிகமான கச்சா எண்ணெயால் ரஷ்ய தவிக்க ஆரம்பித்துள்ளது.

டிமாண்ட் அதிகரிக்காத நிலையிலும் சந்தையில் ஏராளமான கச்சா எண்ணெய் வந்து கொட்டியதால், விலையில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் தான் வாரத்துக்கு ஒரு முறை பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 ரூபா, டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபா குறைப்பு என நமது அரசும் அறிவித்துக் கொண்டிருக்கிறது. (நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல் விலை குறையுது பார்த்தீங்களா... இதை ஏன் மன்மோகன் சிங் செய்யலை என்று டீக் கடைகளில் விவரம் தெரியாதோரும், விவரம் தெரிந்தோர் அதை மறைத்துவிட்டு ட்விட்டரிலும் பேசுவதை பார்க்க முடிகிறது).

ரஷ்ய பொருளாதாரத்தை ஒடுக்க அமெரிக்கா சொன்னால் அதை ஏன் செளதி கேட்க வேண்டும்.. இதற்குக் காரணம் சிரியா, ஈரான் விவகாரங்கள். இந்த இரு நாடுகளிலும் ஷியா பிரிவு ஆட்சியினருக்கு ரஷ்யா தரும் ஆதரவு தான் செளதியை இந்த வேலையைச் செய்ய வைத்துள்ளன.

அமெரிக்காவின் இந்த வேலையை ரஷ்யா அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க முடியுமா?...

களத்தில் இறங்கிய ரஷ்ய அதிபர் புடின் சீனாவுடன் சமீபத்தில் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதன்படி ரஷ்யாவின் பனிப் பிரதேசமான சைபீரியாவில் இருந்து சீனாவுக்கு பைப் மூலம் இயற்கை எரிவாயு சப்ளை செய்யப்படவுள்ளது.

இதற்காக பல்லாயிரம் கி.மீ. தூரத்துக்கு பிரமாண்டமான பைப்புகள் கட்டமைப்பை உருவாக்கவுள்ளன ரஷ்யாவும் சீனாவும். இது நடந்தால், வரும் 2020ம் ஆண்டில் சீனாவுக்குத் தேவையான இயற்கை எரிவாயுவில் 25 சதவீதத்தை ரஷ்யா ஏற்றுமதி செய்யப் போகிறது. இது இப்போது ஐரோப்பாவுக்கு ரஷ்யா அனுப்பி வரும் இயற்கை எரிவாயுவைவிட மிக மிக அதிகம்.

ரஷ்யாவில் இருந்து வெறும் இயற்கை எரிவாயுவை வாங்கும் கஸ்டமாராக மட்டும் சீனாவால் இருக்க முடியுமா?. நாங்கள் உங்களிடம் இருந்து வாயுவை வாங்க வேண்டுமானால் பதிலுக்கு எங்களுக்கு உங்களது நாட்டின் இயற்கை எரிவாயு நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை விற்க வேண்டும் என்ற சீனாவின் நிபந்தனைக்கு ரஷ்யா ஒப்புக் கொண்டுவிட்டது.

இதன்படி ரஷ்யாவின் Rosneft எரிவாயு நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை சீனாவின் PetroChina நிறுவனத்துக்கு விற்கப் போகிறார் புடின்.

நல்லா சண்டை போடுங்க... நிறைய பேர் கார் வாங்கட்டும்!!

English summary
By 2020, China will source a quarter of its demand from Russia; the Russians, in turn, will by then sell more gas to China than they now send to Europe. The gas will arrive from Siberia by way of a not-yet-constructed pipeline. PetroChina will take a 10 percent share of a subsidiary of Rosneft, the Russian gas company. By 2020, China will source a quarter of its demand from Russia; the Russians, in turn, will by then sell more gas to China than they now send to Europe.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X