For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெருவெள்ளம்...பேரவலம் சுமக்கும் மக்கள்... இனியேனும் உரைக்குமா இந்த பாடம்?

By A K Khan
Google Oneindia Tamil News

-ஏ.கே.கான்

சுனாமியையே நேரடியாக எதிர்கொண்ட பகுதிகள் தான் சென்னையும் கடலூரும் நமது மாநிலமான தமிழகமும். ஆனால், திடீரென ஏற்பட்ட அந்த பாதிப்பால் ஏராளமான உயிர் சேதம். அரசு நிர்வாகம் உள்பட யாரும் எதிர்பாராத அந்த சீற்றத்தின் வடுக்கள் இன்னும் கூட நம் மனதை விட்டு அகலவில்லை.

ஆனால், இப்போதைய மழை வெள்ளம் அந்த சுனாமி பாதிப்பையே மிஞ்சி நிற்கிற கோரக் காட்சிகளைப் பார்க்கிறோம். தெருக்களில் வெள்ளம், வீட்டுக்குள் தண்ணீர், மாடிகளில் தஞ்சம்.

குடி நீர்- பால்- அடிப்படை உணவு - மருந்துகளுக்காக அலைபாயும் மக்கள்.

Will get lesson from the worst Chennai Flood

வீடுகளில் தங்கவும் முடியாமல், வெளியேறவும் முடியாமல் குடும்பத்தினரை எப்படி பாதுகாப்போம் என்ற திக் திக் பயம் ஒரு பக்கம், அம்மா பசிக்குது என குழந்தை கேட்டுவிடுமோ.. என்ன பதில் சொல்வது என்ற அச்சம் மறு பக்கம், பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு மருந்து மாத்திரைகள் கூட வாங்கித் தர முடியாத நிலையில் இருக்கிறோமே என்ற மனதை நொறுங்க வைக்கும் வேதனை இன்னொரு பக்கம்,

இத்தனை காலம் குருவி சேர்த்தது மாதிரி சேர்த்த பாத்திரம், பண்டம், டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், பைக், கார் என எல்லாமே கண் முன்னே தண்ணீரில் மூழ்கி வீணாகிப் போய்விட்டதை நினைத்து, இதையெல்லாம் மறுபடியும் சீர் செய்வதையும் முழுவதும் வீணானதை மீண்டும் எப்படி வாங்குவோம் என்ற பெரும் பீதியான நினைவுகளுடனும் வினாடிகளைக் கழிக்கும் சென்னை, கடலூர், திருவள்ளூரின் குடும்பத் தலைவர், குடும்பத் தலைவிகள், வீட்டை நிர்வகிக்கும் மகன்கள், மகள்கள்.

Will get lesson from the worst Chennai Flood

அன்று உழைத்தால் தான் சாப்பாடு என்ற நிலையில் இருக்கும் குடும்பங்கள், வேலைகளுக்குப் போக முடியாமல், வேலைகளே கிடைக்காமல் அடுத்த வேலை உணவுக்குக் கூட கந்து வட்டிக்கு வரிசையில் நின்று காசு வாங்கும் அவலம்.

ரேசன் கார்டுகள், படித்த படிப்பின் அடையாளங்களான சான்றிதழ்கள், காப்பீட்டு பாலிசிகள், வீட்டுப் பத்திரங்கள், வங்கி பரிவர்த்தனை சான்றுகள் என வாழ்க்கையை நடத்திச் செல்லும் அடையாளங்கள் தண்ணீரோடு போய்விட்ட நிலையில், இதையெல்லாம் எப்படி மீண்டும் பெறுவது என்ற தவிப்பு ஒரு பக்கம்.

மொட்டை மாடிகளில் நின்று கொண்டு வானத்திலிருந்து தண்ணீரையோ, பாலையோ, உணவுப் பொட்டலங்களையோ போட மாட்டார்களா என ஹெலிகாப்டர் சத்தத்துக்காகவும், தெரு வழியே படகோ, அல்லது யாராவதோ வர மாட்டார்களா என கண்களின் கண்ணீருடன் எட்டிப் பார்க்கும் அவலம்.

Will get lesson from the worst Chennai Flood

இப்படி அவரவரர் கண் முன்னே வாழ்க்கையை அப்படியே வாரி எடுத்துக் கொண்டு போய்விட்டது மழையும் வெள்ளமும்.

பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பல பாலங்கள் வெள்ளத்தை தாங்கி நிற்க, பாலாற்றில் சமீபத்தில் கட்டப்பட்ட பாலங்கள் வெள்ளத்தில் உடைந்து போய் அரசியல்வாதிகளின் கமிஷன், காண்ட்ராக்டர்களின் பேராசை அசிங்கத்தை நேரடியாக பார்த்து நொந்து கொள்ள வேண்டிய சூழல்.

டவுன் பிளானிங் ஆக்ட் போன்ற சட்டங்களை ஓட்டுக்காக திருத்தி, திருத்தி.. நீங்கள் முதலில் நிலத்தை ஆக்கிரமிக்கலாம், இத்தனை ஆண்டுகள் இங்கே இருந்தற்காக ஆதாரத்தைத் தந்தால் (அதாவது விஏஓவுக்கு லஞ்சம் தந்து சான்றிதழ் வாங்கி) பட்டா தந்துவிடுவோம் என்ற ஓட்டு அரசியல். இதனால் ஆக்கிரமிக்கப்பட்ட கண்மாய்கள், ஏரிகள், ஓடைகள், கால்வாய்கள். வெள்ளம் எங்கே போகும்?

Will get lesson from the worst Chennai Flood

எந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்க அதிகாரம் இல்லாத அமைச்சர்கள், அதிகாரிகள். டிவி கேமரா ஓட ஆரம்பித்து ஸ்டார்ட் சொன்னவுடன் வேட்டியை லேசாக மேலே தூக்கியபடி கரை வேட்டிகளுடன் லைனாக நடந்து வந்து போஸ் தரும் அமைச்சர்கள். பின்னால் முதல்வர் ஜெயலலிதா படத்தை தூக்கிப் பிடித்தபடி ஒருவர்.

கடும் வெள்ளத்தில் அமைச்சரின் ஒவ்வொரு நொடியும் முக்கியம் என்ற நிலையில், வாிக்கு வரி, மாண்புமிகு புரட்சித் தலைவி, இதய தெய்வம் அம்மா அவர்களின் உத்தரவுப்படி இந்தப் பகுதியில் மீட்பு நடவடிக்கை நடக்கிறது என்ற நீட்டி முழக்கும் அம்மா புராணம். அமைச்சர்கள் மட்டுமல்லாமல் அதிகாரிகளும் அம்மாவின் ஆணைப்படி இதைச் செய்கிறோம், அதை செய்கிறோம் என்று உளறும் நிலை. உங்களது ஒவ்வொரு வேலைக்கும் அம்மா உத்தரவு வர வேண்டுமா?

ஜெயலலிதா தான் வெள்ளப் பகுதிகளை பார்க்க வரவில்லை என்ற கேள்விக்கு, அதையெல்லாம் நீங்க கேட்கக் கூடாது என பதில் தரும் ஆளும்கட்சிப் பிரமுகர். ஓட்டு போட்டு ஆட்சியில் அமர்த்திய மக்கள் இதைத் கூட கேட்கக் கூடாதா?. உங்களை பாராட்டிக் கொண்டே இருக்க வேண்டுமா?.

Will get lesson from the worst Chennai Flood

புரட்சித் தலைவி இதய தெய்வம் அம்மா என்று நீட்டி முழக்கி நீங்கள், பதவிகளைப் பிடித்து சம்பாதித்துக் கொண்டு இருக்க, உங்களை இந்த மழை வெள்ளத்தில் கூட கேள்வி கேட்க மக்களுக்கு உரிமை இல்லையா?

தொடர் மழை என்பது தெரியும். பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை தந்து அங்கு பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைக்க வேண்டியது தானே.. அதை விட்டுவிட்டு தினந்தோறும் நாளை விடுமுறை, நாளை விடுமுறை என நீட்டித்துக் கொண்டு இருக்கிறது கல்வித்துறை. காரணம், அந்தத் துறைக்கான அமைச்சர்களிடம் எந்த முன் யோசனையும் இல்லை, அதை விட முக்கியம் அவர்களால் எந்த முடிவும் தானாக எடுக்க முடியாது என்பதும் தான்.

Will get lesson from the worst Chennai Flood

தலைமைச் செயலாளர் கூட முடிவு செய்வது மாதிரி தெரியவில்லை. அவருக்கு மேல் தான் அரசு ஆலோசகர்கள் இருக்கிறார்களே. ஒரு சாதாரண விஷயத்தைக் கூட மேலிடத்துக்குக் கொண்டு செல்ல இடையில் எத்தனை பூசாரிகள்...

இந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உயிர்கள் எத்தனையோ. நாம் காவல் துறை கணக்கை வைத்துக் கொண்டு முடிவுக்கு வர முடியாது.

Will get lesson from the worst Chennai Flood

அதே போல வெள்ளத்தோடு போன கார்கள், ஆட்டோக்கள், பைக்குகள் எத்தனையோ. பழுதாகி நிற்கும் இந்த வாகனங்களுக்கு மீண்டும் உயிர் தர ஆயிரக்கணக்கான மெக்கானிக்குகள் இரவு- பகலாக உழைத்தாலும் பல மாதங்கள் ஆகும்.

வீட்டுக்குள் வெள்ளம் வராத மக்கள் தப்பிவிட்டதாக அர்த்தம் இல்லை. அவர்கள் எதையும் வாங்க வெளியே செல்ல முடியாத நிலை. செப்டிக் டாங்குகள் எல்லாம் நிரம்பி, டாய்லெட்களில் இருந்து எல்லாமே ரிவர்சில் மேலே ஏறி வீடுகளுக்குள் கழிவும் வாசனையும்.

குழந்தைகள் மருத்துவமனைகள் உள்பட பல மருத்துவமனைகளுக்குள் நீர் புகுந்து பச்சிளம் பிஞ்சுகளையும், நோயாளிகளையும் கொட்டு மழையில் நனைய நனைய வெளியேற்றிய காட்சிகளை பார்த்தபோது நெஞ்சு வெடித்துவிட்டது. அந்த மருத்துவமனை ஊழியர்களையும், பெரும் வெள்ளத்தில் டாக்சிகள், ஆட்டோக்கள் வர முடியாத சூழலில், பஸ்களை இயக்கும் போக்குவரத்துக் கழக டிரைவர்கள், கண்டக்டர்கள், டெப்போ ஊழியர்களுக்கு ஒரு ராயல் சல்யூட் அடிக்கலாம்.

Will get lesson from the worst Chennai Flood

எங்க வீட்டுல 3 பேர் தங்கலாம், நான் ப்ரீயா ரீசார்ஜ் செய்றேன், என்கிட்ட எக்ஸ்ட்ரா கேஸ் சிலிண்டர் இருக்கு, என் வீட்டில் 30 பேருக்கு சாப்பாடு ரெடி.. என்னை தொடர்பு கொள்ளுங்கள் என அழைக்கும் உள்ளங்கள், தெருத் தெருவாய் உணவுப் பொட்டலம் ஏந்தியபடி சென்று மக்களுக்கு தரும் இதயங்கள், தனது உயிரை ஒரு கயிற்றிடம் ஒப்படைத்துவிட்டு மற்றவர்களை வலிந்து சென்று மீட்டு வரும் கடவுள்கள்... என சென்னையின் வெள்ளம் மனித நேயத்தையும் வெள்ளமாய் ஓட விட்டிருக்கிறது.

மக்களுக்காக திறக்கப்பட்ட திருமண மண்டபங்கள், திரையரங்குகள் ஒரு பக்கம் என்றால் மக்கள் வந்து தங்கலாம் என அறிவித்த கோவில் கூடங்கள், மசூதிகள் என எல்லா புறமும் மதம் வென்ற நிகழ்வுகள்.

ட்விட்டர், பேஸ்புக்கை ஒரு சமுதாயம் எப்படி உண்மையிலேயே உருப்படியாக உபயோகிக்கலாம் என செல்ஃபி புள்ளைகளுக்கு பாடம் கற்பித்துள்ளது இந்த மழை. அங்கே மாடியில் ஒரு கர்ப்பிணி சிக்கியுள்ளார், இதோ இங்கே ஒரு குழந்தைக்கு பால் தேவை.. தர முடியுமா?. என்னிடம் உள்ள இந்த உணவை யாராவது எடுத்துச் சென்று மற்றவர்களுக்குத் தர முடியுமா என்ற கோரிக்கைகள், ஏக்கங்களை ஏந்திச் சென்று வருகின்றன சமூக வலைத்தளங்கள்.

Will get lesson from the worst Chennai Flood

கண்மாய்களை அந்ததந்த கிராம மக்களே தூர் வாரி வந்த விதியை மாற்றி, இனி அதை அரசே செய்யும் என அறிவித்து, தூர் வாராமல், அப்படியே தூர் வாரினாலும் அதையும் அரைகுறையாக செய்து, அதில் 45 சதவீதம் கமிஷன் அடித்துத் தின்று, உடம்பை வளர்த்து, தங்கள் குடும்பப் பெண்களுக்கு நகை, சொத்துக்களை வாங்கிக் குவித்துக் கொண்ட ஒன்றியச் செயலாளர்கள், கவுன்சிலர்கள், ஊராட்சித் தலைவர்கள், கட்சியின் பிற பிரிவுகளின் கரைவேட்டிகள், கூடவே சேர்ந்து கொள்ளையடித்த காண்ட்ராக்டர்கள் ஆகியோரை சகித்துக் கொண்டதால் மக்களுக்கு இந்த தண்டனை.

தூர் வாரப்படாத கண்மாய்கள், ஏரிகள் அதிக நீரை தேக்கி வைக்க முடியாமல் அதை வெளியேற்ற, அந்த நீர் செல்லும் வழிகளான ஓடைகள், கால்வாய்களை கமிஷன் வாங்கிக் கொண்டு, பட்டா போட்டுத் தந்து வீடு கட்ட வைத்த அரசியல்வாதிகளால், ஒழுங்காக- நேர்மையாக வீடு கட்டியவர்களின் வீடுகளுக்குள் தண்ணீர்.

இவ்வளவு பிரச்சனையில் சென்னையில் ஒருவர் மட்டும் தான் மிக அதிகமாக பேசியிருக்க வேண்டும். அவர் பெயர் சைதை துரைசாமி. இவர் தான் இந்த மாநகரத் தந்தை எனப்படும் மேயர்.

ஆனால், அவர் கடைசியாக பேசிய வெள்ளத்துக்கு முன்பு தான். காரணம், அவரை அம்மா ஓரம் கட்டி வைத்திருக்கிறாராம். இது தெரியவந்ததால் அவரை அதிகாரிகள் முதல் அடிமட்டம் வரை யாரும் மதிக்காமல் போக, அவரும் உத்தரவு போடுவதை நிறுத்திவிட்டார்.

Will get lesson from the worst Chennai Flood

மேயர் ஏன் வெளியே வரவில்லை என எதிர்க்கட்சிகள் கூச்சல் போடும் என்பதால் மழை, வெள்ளப் பகுதிகளை அமைச்சர்கள் பார்வையிடும்போது (கேமரா.. ஆக்ஷன்) கூடவே ரெயின்கோட் அணிந்தபடி உலா வருகிறார். யாராவது கேள்வி கேட்டால் அவர் படும்பாடு, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களைவிட பரிதாபம்...

அமைச்சர்களின் வாயில் எப்போதும், இதய தெய்வம், புரட்சித் தலைவி அம்மாவின் ஆணைப்படி நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கின்றன என்ற ஓட்டை ரெக்கார்ட் பாட்டு.

வெள்ளம் பாதித்த பகுதியில் வேனில் இருந்தபடி வாக்காளப் பெருமக்களே என்று அழைத்தவர் தான் இவர்களது தலைவியான ஜெயலலிதா. அப்புறம் இவர்கள் மட்டும் எப்படி இருப்பார்கள்..?

இப்படி ஒரு பக்கம் மழை கொடுமை என்றால், இன்னொரு பக்கம் கேடுகெட்ட நிர்வாகத்தின் கொடுமை..

பாவம் வாக்காள பெருமக்கள்!

English summary
All we including the TN govt. should get more and more lessons from the Very worst
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X