மத்திய அரசு ஊழியர்களின் பணி நேரம் நீட்டிப்பா? அதெல்லாம் வதந்தி.. நம்பாதீர்கள்.. மத்திய அரசு விளக்கம்
டெல்லி: மத்திய அரசின் கீழ் பணிபுரியும் ஊழியர்களின் பணி நேரத்தை 10 மணி நேரமாக நீட்டிப்பதாக ஒரு பொய்யான செய்தி உலா வருகிறது. அந்த செய்தியை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
7ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து ஏதேனும் நற்செய்திகள் வருகின்றனவா என அரசு ஊழியர்கள் ஆர்வத்துடன் தேடி வந்தனர். இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுகாதாரத் துறைக்கு நிதி தேவைப்படுகிறது என்பதால் அகவிலைப்படி நிறுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.

அதன்படி ஜனவரி 2020-ஆம் ஆண்டு முதல் ஜூலை 2021 ஆம் ஆண்டு வரை மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் மிச்சமாகும் 27 ஆயிரம் கோடி ரூபாய் கொரோனா பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என்றும் அறிவித்தனர்.
இந்த அறிவிப்புகள் வந்த நாள் முதல் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு வதந்திகள் உலா வருகின்றன. அதில் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது என்றும் அவர்களின் பணி நேரம் 10 மணி நேரமாக நீட்டிக்கப்படும் என்றும் உண்மைக்குப் புறம்பான செய்திகள் பரவி வந்தன.
இந்த நிலையில் அது பொய்யான செய்தி என மத்திய அரசு தெளிவுப்படுத்தியுள்ளது. இதுகுறித்து செய்தித் தொடர்பு துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் மத்திய அரசு ஊழியர்களின் பணி நேரம் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை மாற்றப்படுவதாக வெளியாகும் தகவல்கள் உண்மையில்லை. அது போன்ற ஒரு முடிவை மத்திய அரசு எடுக்கவில்லை. அப்படி ஒரு உத்தேச திட்டமே அரசிடம் இல்லை என தெரிவித்துள்ளது.