For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2009-பிப். 27-ல் அருந்ததியர் 3% உள்ஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்த கருணாநிதியின் உருக்கமான கடிதம்

Google Oneindia Tamil News

சென்னை: அருந்ததியினருக்கு 3% உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தமிழக அரசின் சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் தீர்ப்பளித்திருக்கிறது. தமிழகத்தில் சமூக நீதி ஆர்வலர்களால் இந்தத் தீர்ப்பு கொண்டாடப்படுகிறது.

தமிழக சட்டசபையில் 2009-ம் ஆண்டு உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் அருந்ததியருக்கான 3% சட்ட மசோதாவை தாக்கல் செய்தார். அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, அறுவை சிகிச்சை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதாவை தம்மால் கொண்டுவர இயலாத சூழ்நிலையை ஒரு கடிதம் மூலம் ஸ்டாலினுக்கு அனுப்பி அதை சட்டசபையில் வாசிக்க சொல்லியிருந்தார் கருணாநிதி.

சட்டசபையில் அருந்ததியினருக்கான 3% உள் ஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

Flash back story on 3% Reservation for Arunthathiyar

தமிழக சட்டசபையில் 2009-ம் ஆண்டு ஏப்ரல் 29-ல் அருந்ததியினருக்கு 3% இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதாவை தாக்கல் செய்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தமிழகத்தில் அருந்ததியருக்கான உள் ஒதுக்கீடு மசோதா நிறைவேறியுள்ளது. இதன்மூலம் ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 18 சதவீத ஒதுக்கீட்டில் 3 சதவீதம் அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு செய்யப்படும்.

அருந்ததியர் உள் ஒதுக்கீடு சட்டத்தின் முன்வடிவை நேற்று சட்டசபையில் கொண்டு வந்த தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,

சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனம் தலைமையில் அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரை செய்ய ஒரு நபர் குழு கடந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி அமைக்கப்பட்டது.

இது குறித்து விரிவாக ஆய்வு செய்த குழுத் தலைவர், அருந்ததியர், சக்கிலியர், மாதாரி, ஆதிஆந்திரர், பகடை, மடிகா, தோட்டி ஆகிய பிரிவினரை உள்ளடக்கிய அருந்ததியர்களுக்கு அவர்களின் மக்கள் தொகை அடிப்படையில் ஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்தார்.

2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் தொகை 1 கோடியே 18 லட்சத்து 57 ஆயிரத்து 504. அதில் அருந்ததியர்களின் எண்ணிக்கை 18 லட்சத்து 61 ஆயிரத்து 457. அதாவது மொத்த தாழ்த்தப்பட்ட மக்கள் தொகையில் 15.7 சதவீதமாகும்.

இதனால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் 18 சதவீத ஒதுக்கீட்டுக்குள் அருந்ததியினருக்கு 3 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கலாம் என ஜனார்த்தனம் குழு பரிந்துரைத்தது.

இந்தப் பரிந்துரை கடந்த ஆண்டு நவம்பர் 27ம் தேதி நடந்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதத்துக்கு கொண்டு வந்து ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 338 (9) பிரிவின் கீழ் தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்துடன் ஆலோசிக்கப்பட்டது.

இப்படி சட்டரீதியான நடவடிக்கைகள் அனைத்தையும் படிப்படியாக நிறைவேற்றிய பிறகுதான் இந்த சட்டமுன்வடிவு பேரவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்புஅருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அருந்ததியர்கள் மாற்றுத் தொழிலில் ஈடுபட உதவுவதற்காக ரூ. 22 கோடியில் மறுவாழ்வு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பட்ஜெட்டில் அறிவித்தபடி துப்புரவுப் பணியாளர்கள் கழிவுநீர் குழாய்களில் இறங்குவதைத் தவிர்க்க சென்னை மாநகராட்சி மற்றும் 9 நகராட்சிகளில் ரூ. 6.3 கோடி செலவில் அடைப்புகளை அகற்றும் இயந்திரங்கள் வாங்கப்படும்.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான ஒதுக்கீட்டை 16லிருந்து 18 சதவீதமாகவும், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 25லிருந்து 31 சதவீதமாகவும் உயர்த்தியவர்கள் நாங்கள்.

அருந்ததியர்களை உயர்த்துவதில் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம் என்பதை உணர்த்தும் வகையில் இந்த சட்ட முன்வடிவை ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும்.

இந்த மசோதாவை முதல்வர் தானே வந்து முன்மொழிவதாக இருந்தார். ஆனால் டாக்டர்களின் அறிவுரை காரணமாக அவர் வரமுடியாமல் போய்விட்டது. அதனால் தனது உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தி ஒரு கடிதமாக அனுப்பியுள்ளார். அதில்,

அருந்ததியினருக்கு 3%உள் ஒதுக்கீடு மசோதா- சட்டசபையில் வாசிக்கப்பட்ட கருணாநிதி கடிதம்

இன்று என் வாழ்வில் ஒரு முக்கியமான நாள். ஆம், அருந்ததியர் சமுதாய மக்களுக்கு இட ஒதுக்கீடு மசோதா சட்டமன்றத்திலே நிறைவேறுகின்ற நாள்.

இந்த நாளில் சட்டசபை வந்து இந்த மசோதாவை நானே முன்மொழிந்து நிறைவேற்றித் தரவேண்டும் என எண்ணியிருந்தேன். சட்டசபைக்கு வருவதாக இருந்தது. ஆனால், டெல்லி டாக்டரும், சென்னை டாக்டர் நண்பர்கள் குழுவும் அளித்த அறிவுரையாலும் அச்சுறுத்தலாலும் வர இயலவில்லை. மன்னிக்க வேண்டுகிறேன்.

எனினும் இன்று காலையில் நானே அருந்ததியர் மசோதாவினை அவையிலே முன்மொழிவதற்கான உரையை என் கைப்பட எழுதி அவையிலே அதனை படிக்குமாறு உள்ளாட்சித்துறை அமைச்சருக்கு அனுப்பி வைத்து எனக்கு பதிலாக இந்த மசோதாவினை அவரை முன்மொழியுமாறு கேட்டுக்கொண்டேன்.

கருத்து மாறுபாடுகளுக்கிடையிலேயும் நீங்கள் காட்டும் கனிவு. இன்று நம்மை மீண்டும் இணைக்கிறது. தமிழ்த்தாயின் கரம் நம்மை ஒரு சேர அணைக்கிறது. அறிவியக்கம், ஆன்மிகம், நாத்தீகம் மற்றும் ஆத்திகம் இந்த வேறுபாடுகள் மாறுபாடுகள் கடந்த நன்றியுணர்வையும் நன் மனித நேயமும் வளர்த்திடுவோம்.

அருந்ததியினருக்கான இந்த இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமென்ற எனது உள்ளத்தின் அடித்தளத்தில் நீண்ட பல ஆண்டுகளாக இருந்து அதனை சட்டமாக நிறைவேற்றுகின்ற நேரம் இப்போதுதான் வந்துள்ளது.

இந்த சட்டத்தின் காரணமாக சமுதாயத்தின் அடித்தளத்திலே இருக்கின்ற அந்த அருந்ததிய மக்கள் நாளை, நாளை மறுநாள் அவர்களும் வாழ்க்கையிலே வளம் பெறுவார்களேயானால், அன்று தான் என்னுடைய உள்ள வேட்கை முழுவதுமாக நிறைவேறிய திருப்தி எனக்கு ஏற்படும். இதனை சட்டமாக கொண்டு வருவதற்குள் நான் பட்ட பாட்டினை நான்தான் அறிவேன்.

இதற்காக நீதியரசர் எம்.எஸ்.ஜனார்த்தனம் தலைமையிலே ஒரு குழுவினை அமைத்து, அல்லும், பகலும் பாடுபட்டு இது சம்பந்தமான பல சட்டப் பிரிவுகளையும் படித்தாய்ந்து இதற்கான அறிக்கையினை அரசுக்கு அளித்தார்கள்.

அதன்பிறகு இதனை சட்டமாக கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு, அரசு உயர் அதிகாரிகள் சிலரிடம் இது குறித்து நான் பேசிக் கொண்டிருந்த போது, அவர்கள் இந்த சட்டத்தினை கொண்டு வருவதற்கு மேலும் சில கால நீடிப்பு தேவை என்று கூறினார்கள். அப்போது நான் அவர்களிடம் கூறினேன். இது என்னுடைய சொந்தப்பிரச்சினை.

இது எவ்வளவுக்கெவ்வளவு விரைவில் நிறைவேறுகிறதோ, அந்த அளவிற்கு நான் மகிழ்ச்சி அடைவேன். எனவே இந்த மசோதா இந்த கூட்டத்தொடரிலேயே நிறைவேற வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். அவ்வாறே இது நிறைவேறுகிறது.

நீதியரசர் ஜனார்த்தனம் இது குறித்த பரிந்துரைகளை அரசிடம் தாக்கல் செய்து, அந்த செய்தி ஏடுகளில் வெளிவந்த நேரத்தில்- இந்த அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த சுமார் 50 பேர் என்னை தலைமை செயலகத்தில் வந்து சந்தித்தார்கள்.

அப்போது அவர்களிடம் நான் பேசிக் கொண்டிருந்த போது, எங்கள் சமுதாயத்திற்காக இவ்வளவு உறுதியாக இதுவரை யாரும் செயல்பட்டதில்லை.

ஆனால் நீங்கள் இந்த அளவிற்கு எங்களுக்காக எடுத்துக்கொள்ளும் முயற்சிகளுக்காக நாங்கள் என்ன கைமாறு செய்யப் போகிறோமோ? எது எப்படியிருந்தாலும் இந்த பரிந்துரைகளை ஏற்று இடஒதுக்கீடு செய்து அது சட்டமாக வர நாங்கள் உங்களோடு துணை இருப்போம் என்று தெரிவித்தார்கள்.

அவர்களின் எண்ணப்படி இன்றையதினம் அருந்ததிய சமுதாயத்தினருக்காக 3 சதவீத உள்ஒதுக்கீடு நிறைவேறுகிறது. இந்த நாள் அவர்கள் வாழ்நாளில் எந்த அளவிற்கு முக்கியமான நாளாக விளங்குமோ, அது போலவே என்னுடைய வாழ்வில் இந்த சட்டத்தைக் கொண்டு வருவதற்கு காரணமானவன் நான் என்ற முறையில் எனக்கு மகிழ்ச்சியை தருகின்றது.

என் முதுகுதண்டில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு, காயம் பரிபூரணமாக குணம் ஆனதில் எந்த அளவிற்கு நான் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றேனோ, அதைவிட அதிக அளவிற்கு அருந்ததிய சமுதாயத்திற்காக நடைபெற்றுள்ள சமூகநீதி அறுவை சிகிச்சையில் இன்று முதல் அந்த சமுதாயமே பெரிதும் நலம் அடையப்போகின்றது என்ற எண்ணத்தோடு மகிழ்ச்சி அடைகின்றன.

அருந்ததியர்களுக்கான நல்வாழ்வை அளித்திடக் கூடிய இந்த மசோதாவை சட்டமாக ஆக்கிட உதவி செய்த அத்தனை சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், இந்த சட்டம் வெளிவர பெரிதும் எனக்கு துணையாக நின்ற நீதியரசர் எம்.எஸ்.ஜனார்த்தனம் அவர்களுக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

English summary
Here is a Flash back story on 3% Reservation for Arunthathiyar which was passed in TamilNadu Aseembly by DMK Govt in 2009.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X