தயிர் vs மோர்.. கோடை காலத்தில் எது நமக்கு பெஸ்ட்? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க எது உதவும்
சென்னை: கோடைக் காலம் வந்துவிட்ட நிலையில், தயிர் அல்லது மோர் இரண்டில் எது சிறந்தது என்ற சந்தேகம் அனைவருக்கும் எழவே செய்யும். இந்த இரண்டில் எது பெஸ்ட் நமது உடலுக்கு எது அதிக நன்மை தரும் என்பதைப் பார்க்கலாம்.
கோடைக் காலம் வந்துவிட்டது. ஒவ்வொரு நாளும் வெப்பம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் பொதுமக்கள் இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான வெப்பத்தை எதிர்கொண்டு வருகிறார்கள்.

இந்தாண்டு கோடைக் காலம் தொடங்குவதற்கு முன்னரே வெப்பம் அதிகமாகவே இருந்தது. இந்தாண்டு கோடை வெயில் கடந்த காலங்களை விட அதிகமாகவே இருக்கும் என்று வல்லுநர்களும் எச்சரித்துள்ளனர்.
வெயில்: சென்னை, கோவை, ஈரோடு, கரூர் எனப் பல இடங்களில் வெப்பம் மிக ஈஸியாக சதமடித்து வருகிறது. அதிலும் குறிப்பாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் வெப்பம் தமிழகத்தில் வெப்பம் 107 டிகிரி பாரன்ஹீட் வரையிலும் கூட சென்றது இப்படி வெப்பம் அதிகரிப்பது நமது உடலிலும் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இது சில நேரங்களில் நமது உடலில் சூட்டைக் கிளப்பிவிட்டுவிடுகிறது. உடலைக் குளிர்ச்சியாக வைக்க அதற்குத் தேவையான பழங்களைப் பலரும் எடுத்துக் கொண்டு வருகின்றனர்.

வறண்ட மற்றும் அதிக வெப்பத்தை ஏற்படுத்தும் கோடைக் காலம் நமது சருமத்திலும் உடலிலும் சில பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. கோடைக் காலத்தில் உடலை ஆரோக்கியமாகவும், நீரேற்றமாகவும் வைத்திருக்க, மக்கள் குளிர்ச்சியான உணவுப் பொருட்களைச் சாப்பிடுவார்கள். பழச்சாறுகள், பழங்கள், மோர், தயிர், தர்பூசணி, இளநீர் ஆகியவற்றை பொதுமக்கள் அதிகம் எடுத்துக் கொள்வார்கள்.
தயிரும் மோரும்: கோடைக் காலத்தில் அதிகம் உட்கொள்ளப்படும் உணவுப் பொருட்களில் தயிரும் மோரும் நிச்சயம் இருக்கும். மோர் மற்றும் தயிர் இரண்டும் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று அனைவருக்கும் தெரியும் என்றாலும், இந்த இரண்டு குறித்தும் வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது பற்றி பெரும்பாலான மக்கள் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அது குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம்.
தயிர் மோர் என இரண்டையும் பொதுமக்கள் வெயில் காலத்தில் எடுத்துக் கொண்டாலும் கூட கோடையில் தயிர் சாப்பிடுவதை விட மோர் சாப்பிடுவது சிறந்தது. இது குறித்து வல்லுநர்கள் மேலும் கூறுகையில், "கோடைக் காலம் வந்துவிட்டது.. நீங்கள் உங்கள் உணவில் தயிரைச் சேர்க்க ஆரம்பித்து இருப்பீர்கள். ஆனால் இதனால் உங்களுக்குச் செரிமான பிரச்சனைகளை அல்லது உங்களுக்குச் சளி பிடிக்கும் வாய்ப்புகள் ரொம்பவே அதிகம்.

ஜீரணிப்பது கடினம்: தயிர் ஜீரணிக்கக் கடினமான ஒன்றாகும். மேலும், சிலருக்கு அது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும் செரிமான முறையில் பாதிப்பை ஏற்படுத்தும். பொதுவாக மக்கள் தயிர் சாப்பிடுவது உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும் என நினைப்பார்கள். ஆனால், உண்மையில் அது உடலுக்குச் சூட்டையே தரும். இதனால் உங்களுக்குப் பாதிப்புகள் ஏற்பட்டால் தயிர் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளனர்.
தயிரைப் பொறுத்தவரை அது ஜீரணிக்கக் கடினமானது மட்டுமின்றி நமது உடலின் எடை அதிகரிக்கவும் இது ஒரு காரணமாக அமைகிறது. சிலருக்கு அது உடல் சூட்டையும் கிளப்பிவிடும். அதேநேரம் மோரை பொறுத்தவரை அதை நம்மால் எளிதாக ஜீரணிக்க முடியும். மேலும், எடை குறையவும் குறிப்பிட்ட அளவுக்கு உதவும். மேலும், உடலை இது மிகவும் குளிர்ச்சியாக வைத்திருக்கவும் உதவுகிறது.
எது பெஸ்ட்: மேலும், இரவு நேரங்களில் தயிர் சாப்பிடுவதை நாம் நிச்சயம் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், நமது உடலின் செரிமான அமைப்பு மதிய நேரத்தில் தான் ஆக்டிவாக இருக்கும். அப்போது தயிரைச் சாப்பிட்டால் செரிமான அடையச் சரியாக இருக்கும்.. ஆனால், இரவில் தயிரைச் சாப்பிட்டால் அது செரிமான அமைப்பில் சில சிக்கல்களை ஏற்படுத்தும். மறுபுறம் மோரை நாம் எப்போது வேண்டுமானாலும் விரும்பிய நேரத்தில் எடுத்துக் கொள்ளலாம்.
செரிமானத்திற்கு நன்மை, எடை குறைப்பு என்று மோர் நமக்கு பல விதங்களில் உதவுகிறது. குறிப்பாக, மோர் உங்கள் செரிமான அமைப்பைத் தூண்டுகிறது.. உடலை உட்புறமாகச் சுத்தப்படுத்த மோர் நமக்கு பெரியளவில் உதவுகிறது. கூடுதலாக, மோரில் உள்ள மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் நமக்கு இதர நன்மைகளையும் ஏற்படுத்தும். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது, கோடைக் காலத்தில் தயிரை விட மோரே சிறந்ததது ஆகும்.












Click it and Unblock the Notifications