தமிழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.. இலவச இணையதளத்தை துவக்கி வைத்தார் முதல்வர்
சென்னை: தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம்' 'Tamil Nadu Private Job portal' (https://www.tnprivatejobs.tn.gov.in) என்ற பெயரில் புதிய இணையதளத்தை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார்.
தமிழகத்தில் படித்து முடித்து விட்டு வேலை தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறையில் நிறைய வேலைகள் உள்ளன. இந்நிலையில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் முயற்சியாக இந்த இணையம் துவங்கி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தனியார் துறையில் ஏராளமான வேலைகள் கொட்டிக்கிடக்கிறது. சரியான தொழில் பயிற்சியும், திறமை உள்ளவர்களுக்கு பல்வேறு தொழில் நகரங்கள் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கின்றன. எனவே படித்து முடித்தவர்கள் இதை பயன்படுத்தலாம்.
லாக்டவுனால் 4 மாநிலங்களில் 22% பேருக்கு வேலை பறிபோனது.. ஆண்களுக்கே அதிக இழப்பு.. ஆய்வில் தகவல்

பல்வேறு நகரங்களில் வேலைகள்
சென்னை, திருப்பூர், கோவை, ஈரோடு, நாமக்கல், ஓசூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட பல்வேறு தொழில் நகரங்களில் நிறைய பணிகளுக்கு ஆட்கள் தேவை உள்ளது. திறமையான நபர்களை நிறுவனங்கள் தேடுகின்றன. இந்த சூழலில் தான் தமிழகத்தில் இயங்கி வரும் தனியார் தொழில் நிறுவனங்கள் மற்றும் வேலை தேடும் இளைஞர்களை ஒருங்கிணைத்து புதிய வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

பணி அனுபவம்
தனியார் துறையில் பணியாற்ற விருப்பம் உள்ள இளைஞர்கள், இந்த https://www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். தங்களின் கல்வித் தகுதி, முன் அனுபவங்களுக்கு ஏற்ற வேலைகளை இதில் பெறலாம். தமிழகத்தில் உள்ள தனியார் துறை சார்ந்த அனைத்து சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரு நிறுவனங்களும் அதிகாரப்பூர்வமாக தங்கள் நிறுவனத்தின் காலிப்பணியிடங்களை இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்கின்றன. ஆனால் அரசு வேலைகள் இதில் இடம் பெறாது.

மொபைல் அப்ளிகேசன்
இந்த இணையதளத்தில் தொழில் மற்றும் துறைவாரியாக காலி பணியிடங்களை பார்க்க முடியும். உதாரணமாக உங்களுக்கு சிஎன்சி மெஷின் துறையில், ஆட்டோ மொபைல் துறையில், லாஜிஸ்டிக், எலக்ட்ராக்ஸ் அன்டு ஹார்டுவேர், சில்லறை விற்பனை கடைகள், உணவு தொழில், ஐடி துறை, டெக்ஸ்டைல் துறை உள்பட எந்த துறையில் உங்களுக்கு வேலை தேவை என்றாலும் பட்டியலில் பார்க்க முடியும். இதேபோல் எந்த ஊரில் வேலை காலியாக உள்ளது என்பதும் தெரிவிக்கப்பட்டிருக்கும். The Tamil Nadu Private Job Portal மொபைல் அப்ளிகேஷனும் உள்ளது.

ஆன்லைன் நேர்காணல்
அரசின் இந்தச் சேவைகள், கட்டணமின்றி இலவசமாகவே வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஆன்லைன் விண்ணப்பங்கள், ஆன்லைன் நேர்காணல் மற்றும் ஆன்லைன் வழியாகவே பணி நியமனம் ஆகிய வசதிகளைப் இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும் ;மேலும் தனியார் துறைகளும் தங்களின் பணி வாய்ப்புக்களுக்கு தகுதியுள்ளவர்களுக்கு உடனடியாக வழங்க முடியும் என்று அரசு தெரிவித்துள்ளது.