• search
keyboard_backspace

தேர்வெழுதும் மாணவராக திமுக: வினாக்கள் எப்படி? பா. கிருஷ்ணன்

Subscribe to Oneindia Tamil

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியின் சட்டப் பேரவைக் கூட்டம் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையோடு திங்கள்கிழமை (ஜூன் 21) தொடங்கிவிட்டது. இப்போது சட்டப் பேரவையைப் பார்க்கும்போது, திமுக அரசு தேர்வு எழுதும் மாணவரைப் போலவும் அவர்கள் எதிர்கொள்ளும் தேர்தல் வாக்குறுதிகள், பரப்புரையில் சொன்ன அறிவிப்புகள் எல்லாம் தேர்வு வினாத்தாள் போலவும் தோன்றுகின்றன.

ஆளுநர் உரையைப் பார்க்கும்போது, தேர்வு எழுதும் மாணவர் எளிதான வினாக்களுக்கு மட்டுமே விடைகள் அளிப்பதைப் போன்ற தோற்றம் ஏற்பட்டது.

ஆளுநர் உரை என்பது ஆண்டின் தொடக்கத்தில் நிகழ்த்தப்படும். ஆளுநர் உரை என்று கூறப்பட்டாலும் அது அரசின் கொள்கைகளை, அறிவிப்புகளை, திட்டங்களையே அவர் வாசிப்பார் அவ்வளவே. அந்த உரையை வாசிப்பது மட்டுமே ஆளுநரின் ஆகும்!

Journalist Paa Krishnan’s article analyses on Tamilnadu Governor’s speech

ஆளுநர் ஆட்சிக்கு நேர் எதிரான கொள்கையைக் கொண்டிரு்நதாலும், அரசின் கொள்கைகளையே படிப்பார். இந்த முறை ஆட்சியாளர்கள் கடைப்பிடிக்கும் சொற்களையும் அப்படியே ஆளுநர் படித்திருக்கிறார். திமுகவினர் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று குறிப்பிடுகிறார்கள். ஆளுநர் மத்திய அரசு (Central Government) என்பதற்குப் பதில் ஒன்றிய அரசு (Union Government) என்றுதான் படித்தார். இது தவிர தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் என்ற பெயர்கள் அப்படியே படிக்கப்பட்டன.

பத்தாண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இல்லாத திமுக இந்த முறை ஆட்சியைப் பிடிப்பதற்காகக் கடுமையாக உழைத்தது. அதற்குப் பலனும் கிடைத்துவிட்டது. ஆனால், அதோ நிற்கவில்லை. தேர்தலில் அளித்த வாக்குறுதிகள், தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற உறுதிமொழிகள்தான் அந்த வெற்றிக்கு பிரதான காரணங்கள் என்பதையும் திமுக புரிந்துகொண்டிருக்கிறது.

ஆனால், ஆளுநர் உரை என்பது மிகவும் முக்கியமானது. காரணம் அதில் இடம்பெறும் அறிவிப்புகள், கொள்கைகள்தான் அடுத்து தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கையில் விரிவாக அறிவிக்கப்படும். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் சடங்கு நடைபெறும் போது அந்த உரையின் அறிவிப்புகள் குறித்து உறுப்பினர்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிப்பர். விவாதிப்பர்.

புதிதாக திமுக அரசு பொறுப்பேற்றிருப்பதால், இந்த உரைக்குச் சற்று கூடுதல் முக்கியத்துவம் கிடைக்கிறது. காரணம், சில மாதங்களுக்கு முன்பு தேர்தல் களத்தில் திமுக அளித்திருந்த வாக்குறுதிகள் இந்த உரையில் என்ன மாதிரியாக வெளிப்படப் போகின்றன என்ற எதிர்பார்ப்புதான்! அந்த வகையில் தேர்தல் அறிக்கைகளை நினைவுக்கு வந்தன.

காரணம், தேர்தல் சமயத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தம் திமுக ஆட்சிக்கு இருக்கிறது.

தேர்வு எழுதும் மாணவர் சில கடினமான வினாக்களுக்குத் திருப்திகரமான விடைகளை எழுதிவிட்டால், நல்ல மதிப்பெண் கிடைக்கும் என்பது யதார்த்தம். இங்கே ஆட்சி என்ற நல்ல மதிப்பெண் கிடைத்துவிட்ட திமுக என்ற மாணவர் கடினமான சில வினாக்களை எப்படிச் சந்திக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், ஆளுநர் உரையில் அத்தகைய கடினமான வினாக்களில் சில இடம்பெற்றுள்ளன. சில இல்லை என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.

திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்கள். அக்கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஒரு பரப்புரையில், "நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் நீட் உடனே ரத்து செய்யப்படும். அது எப்படி என்று இப்போது சொல்ல மாட்டோம்" என்றார்.

ஆட்சிக்கு வந்த பிறகுதான் அதில் உள்ள சிக்கலும் சிரமமும் திமுகவுக்குப் புரிந்தது. அதனால்தான் முதல் கட்டமாக நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் ஒரு குழு அமைத்து, அதன் பாதிப்புகளை அறிந்து, நீட் தேர்விலிருந்து தமிழகத்திக்கு விலக்கு பெறுவதற்கான சட்ட முன்வடிவை இயற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்படும் என்று அறிவித்திருக்கிறது திமுக அரசு. இப்போதுதான் யதார்த்தத்தை உணர்ந்திருக்கிறார்கள். அதனால்தான் மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம், "இந்த நிமிடம் வரையில் நீட் நீக்கப்படாதால் மாணவர்கள் அத்தேர்வுக்குத் தயாராக இருக்க வேண்டும்" என்று அறிவுறுத்தியிருக்கிறார்.

ஏழு பேர் விடுதலை குறித்து ஆளுநர் ஒரு வரி கூட கூறவில்லை. எனவே, அதில் ஏராளமான சிக்கல் இருப்பதாக திமுக உணர்வதையே இது காட்டுகிறது. அதுபோல் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்குத் தடை விதிப்பது, சட்ட மேலவையை மீண்டும் கொண்டு வருவது ஆகியவை குறித்து தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருந்தன. ஆனால், ஆளுநர் அதையெல்லாம் தனது உரையில் குறிப்பிடவில்லை.

ஆனால், ஈழத் தமிழர்களுக் குடியுரிமை அளிக்க மத்திய அரசை வலியுறுத்துவது, மேகே தாட்டு அணையைக் கட்டுவதற்கு கர்நாடக அரசுக்குத் தடை விதிப்பது, கச்சத் தீவை மீட்க வலியுறுத்துவது, சேதுக்கால்வாய் திட்டத்தை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுப்பது ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆளுநர் உரையில் இடம்பெறாத திராவிட இயக்க தீரர்களுக்குக் கோட்டம், கலைஞர் சிறப்பு வீட்டுவசதித் திட்டம் போன்ற பல வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்பதில் சந்தேகமில்லை.

ஆளுநர் உரையில் விவாதப் பொருளாக மட்டுமின்றி, பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது மாநிலத்தின் நிதிநிலையை மேம்படுத்துவதற்காக சிறப்புப் பொருளாதார மேம்பாட்டுக் குழு அமைக்கப்படும் என்ற அறிவிப்புதான். இது காலத்தின் அத்தியாவசியம். குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் குறித்தும் நல்ல மரியாதை இருக்கிறது. எப்படிச் செய்யப் போகிறார்கள் என்ற ஆவல்தான் அதிகரித்து வருகிறது.

அதைப் போல் நிலத்தடி நீரை மேம்படுத்துவதும், வெள்ளநீர் கட்டுப்பாட்டுக்குத் தனியாக மேலாண்மைக் குழு அமைத்தர் போன்றவையும் வரவேற்கத் தக்கவை. நிறைவேற்றக் கூடியவை.

தேர்தல் என்ற தேர்வில் நல்ல மதிப்பெண்கள் (இடங்கள்) பெற்ற திமுக என்ற மாணவர் ஆட்சி நிர்வாகம் என்ற தேர்வை எப்படிச் செய்யப் போகிறார்? காத்திருப்போம்!

English summary
Senior Journalist Paa Krishnan’s this article analyses the Tamilnadu Governor’s speech, which does contain the possible promises made by the party during election, instead of sensitive issues. While the Governor’s speech expressed some unexpected announcement, there are significant missing which are found in DMK’s manifesto.
Related News
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Just In