• search
keyboard_backspace

திராவிடம் 2.0 என திமுக ஆதரவு பெயரால் விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்துவதா? கொளத்தூர் மணி கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திராவிடம் 2.0, கலைஞரிஸ்ட் என திமுக ஆதரவு பெயரால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனையும் கொச்சைப்படுத்துவதற்கு திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி கடும் கன்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கொளத்தூர் மணி வெளியிட்ட அறிக்கை:

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியும் திமுக ஆதரவாளர்கள் எனும் பெயரில் சமூக வலைத்தளங்களில் திட்டமிட்டு பரப்புரை செய்து வரும் திராவிடம் 2.0. (தற்போது அரக்கர் கூட்டம்) எனும் கூட்டம் குறித்து சில செய்திகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறோம். இந்திய ஒன்றிய அரசும், அவர்களின் உளவுத்துறையும், ஆதிக்க சக்திகளும் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பற்றியும்,தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் இழிவுபடுத்தி பரப்பி வரும் அதே பாணியில், அதே மொழியில் திமுக ஆதரவாளர்கள் எனும் பெயரில் ஒளிந்துகொண்டு பரப்புரை செய்பவர்களின் நோக்கத்தை அடையாளம் காண வேண்டிய அவசியம் இருக்கிறது என்று கருதுகிறோம்.

Kolathur Mani issues statement on Dravidam 2.0 against LTTE

உண்மையில் இவர்கள் திமுக ஆதரவாளர்களா ? திமுக ஆதரவாளர்களாக தங்களைக் காட்டிக்கொண்டு கலைஞரிஸ்ட் என்ற புது சொல்லால் தங்களைத் தாங்களே அழைத்துக்கொண்டு திமுகவினுடைய கொள்கை முடிவுகளுக்கு எதிராகவும், திமுகவிற்கு ஆதரவான தளத்தில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் பெரியார் இயக்கங்கள்,பெரியார் இயக்கத் தலைவர்களை இழிவுபடுத்தியும் பேசிவரும் திராவிடம் 2.0 (தற்போது அரக்கர் கூட்டம்) எனும் கூட்டத்தினரின் உள்நோக்கம் இந்துத்துவவாதிகளின் நோக்கம் போலவே இருக்கின்றன என்றுதான் தோன்றுகிறது. திமுகவின் கொள்கை நிலைப்பாடுகளான அணுஉலை திட்ட எதிர்ப்பு, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான நிலைப்பாடு ஆகியவற்றிற்கு எதிராக அணுஉலையை ஆதரிப்பது, ஸ்டெர்லைட் ஆலையை வரவேற்பது போன்ற நிலைகளை திமுகவிற்கு எதிராகவே இந்த திராவிடம் 2.0. குழுவினர் செய்து வருகிறார்கள். ஆனால் இவர்கள் திமுக ஆதரவாளர்கள் என்று சொல்லி ஏமாற்றி வருகிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.

இந்துத்துவவாதிகள் கடைபிடிக்கும் தனிமனித தாக்குதல்கள், இழிவான சொற்கள் இவற்றைப் பயன்படுத்தி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பேராசிரியர் சுப.வீரபாண்டியன், பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன், ஆழி செந்தில்நாதன் உடன் நான் என திமுக ஆதரவு கருத்தாளர்களைத் திட்டமிட்டே கொச்சைப்படுத்தியும் வருகிறார்கள். அண்ணாயிஸ்ட், கலைஞரிஸ்ட் என்றெல்லாம் திமுகவினரை கூறுபோடும் இவர்களில் ஒருவர்கூட களப்பணியாளர்கள் அல்ல. திமுகவிற்கு ஒற்றை வாக்குகூட பெற உழைத்தவர்களும் அல்லர். ஆனாலும் முகநூலில் மட்டும் திமுகவிற்கு ஆதரவானவர்களை இழிவு படுத்தும் வேலையை மிகச் சரியாக செய்பவர்கள். சந்தேகம் வராமல் இருப்பதற்காக அவ்வப்போது கலைஞரை மட்டும் முகஸ்துதி செய்து எழுதுவது இவர்கள் வழக்கம்.

கிளிமூக்கு அரக்கன் எனும் பெயரில் முகநூலில், திமுகவின் மீது வஞ்சம் கொண்டு எந்நேரமும் விஷம் கக்கும் நபர், சுப்பிரமணியன் சாமியை குரு என குறிப்பிடுகிறார்கள், விடுதலைப்புலிகள் இயக்கம் பாசிச இயக்கம் என எழுதி அதனைப் பரப்புமாறு சுப்ரமணியன் சாமியிடம் கோரிக்கை வைக்கிறார்கள் என்றால் உண்மையில் இவர்கள் யார் என்ற கேள்வி எழுகிறது. இக்குழுவினர் இழிவு செய்துவரும் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களையும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் கலைஞர் அவர்கள் ஆதரித்தே வந்திருக்கிறார்கள். அதேபோல் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களும் கலைஞரை ஒருபோதும் விமர்சித்ததும் இல்லை. இந்திய அரசியலில் எவ்வித தலையீடும் செய்ததும் இல்லை.

Kolathur Mani issues statement on Dravidam 2.0 against LTTE

உண்மை நிலை இவ்வாறு இருக்க கலைஞர் ஆதரவாளர்கள் எனும் பெயரில் கலைஞருக்கு எதிராக தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களை நிறுத்த முயல்வதும், திமுகவிற்கு எதிராக விடுதலைப்புலிகள் இருந்தது போல் வலிந்து ஒரு தோற்றத்தை உருவாக்கி திமுகவிற்கு ஆதரவாக இயங்கக்கூடிய திராவிடர் இயக்கத்தவர்களை கொச்சையாக இழிவுபடுத்தி பேசி சினமூட்டி திமுகவிற்கு எதிராக திருப்பிவிட முடியாதா எனும் சூழ்ச்சியான வேலையைத்தான் இவர்கள் செய்கிறார்கள் என்பது எளிமையாக விளங்குகிறது. இது திமுகவிற்கு எதிராக செய்யப்படும் சூழ்ச்சியான வேலையே ஆகும். இவர்களின் பின்புலத்தில் இருந்து இயக்குபவர்கள் யார் என்பது ஒரு கேள்விக்குறியாகவே இருக்கிறது. விடுதலைப்புலிகளுக்கு எதிராக திமுக ஆதரவாளர்களை போல செயல்பட்டுக் கொண்டே பேசுபவர்களைக் கண்டித்து திமுகவின் தலைமை நிலைய பொறுப்பாளர் ஆர் எஸ் பாரதி, ஏற்கனவே ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்கள். ஆனால் இப்போதோ ஆர். எஸ். பாரதி அவர்களின் மகன் சாய் லட்சுமி காந்த் என்பவரும் இந்த குழுவில் இருப்பதாகக் கூறுகிறார்கள். திமுகவில் IT wing ல் முக்கிய பொறுப்பில் இருக்கும் புதுக்கோட்டை M.M.அப்துல்லாவும் இக்குழுவில் இடம்பெற்று இருக்கிறார்.

இப்படித்தான் சீமானும் விடுதலைப் புலிகளுக்காக, தமிழீழ விடுதலைக்காக ஒரு சிறுதுரும்பளவு பணியும் செய்யாமல் தொடக்கத்தில் புலிகள் ஆதரவு எனும் போர்வையில் திராவிடர் இயக்க மேடைகளில் பேசத் துவங்கி 2009 ஈழத்தில் நடந்த இன அழிப்பிற்கு முழு காரணம் திமுக மட்டுமே எனும் பேச்சில் முடித்தார். ஈழ இன அழிப்பிற்கு முழு முதற்காரணமான சிங்கள பெளத்த பேரினவாத வெறியர்களையும் அவர்களோடு கரம் கோர்த்த இந்திய ஆதிக்க சக்திகள் குறித்தும் கவனமாக ஒரு வார்த்தை கூட வாய்திறவாமல், அவர்களுக்கு எதிரான போக்கு வளராமல் காப்பாற்றிக் கொண்டு, இன்னும் ஒரு படி மேலே போய் பாசிஸ்டுகளுடன் நட்பு பேணி வெறும் கலைஞர் எதிர்ப்பை மட்டுமே தன் முழு நேர பேச்சாக மாற்றி, திசை திருப்பி ஈழவிடுதலைக்கு எதிராக கலைஞர் மட்டுமே காரணம் என்ற தோற்றத்தை உருவாக்க முயன்றார். பின் கலைஞர் எதிர்ப்பை திராவிடர் இயக்க எதிர்ப்பாக மாற்றினார். அடுத்து பெரியார் எதிர்ப்பில் வந்து நின்றார். புலிகள் குறித்து கட்டுக் கதைகளை மேடைகளில் பேசி தற்சமயம் புலிகளையும் இழிவு செய்யும் வேலையை ஆரம்பித்து இருக்கிறார்.

தற்போது இந்திய ஒன்றியத்தால் ஒடுக்கப்படும் மாநிலங்களுக்கிடையே இனவெறி பகைமூட்டி தமிழர் எதிர் தெலுங்கர், கன்னடர் என கட்டமைக்க முயல்கிறார். இவை முழுக்க முழுக்க இந்திய பாசிச சக்திகளின் திட்டங்களே ஆகும். உண்மையான எதிரிகளைக் காப்பாற்றும், திசைதிருப்பும் சூழ்ச்சித் திட்டங்கள் ஆகும். இவற்றின் ஆரம்பம் கலைஞர் Vs புலிகள் என்பதே. அது போலவே திமுகவின் வெற்றிக்கு துரும்பளவும் பணி செய்யாமல் வெறும் முகநூலில் கலைஞர் ஆதரவு எனும் போர்வையில் பேச துவங்கி பின் திமுகவிற்கு எதிரானவர்கள் புலிகள் மட்டுமே என பேச ஆரம்பித்தனர்.

சீமானோ, நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்தவர்களோ திராவிட முன்னேற்றக் கழகத்தையும் அதன் தலைவர்களையும் இழித்துப் பழித்துப் பேசினால் அவர்களுக்கு கோபம் வர வேண்டியது நாம் தமிழர் கூட்டத்தினர் மீதாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் இந்த திராவிடம் 2.0. கூட்டத்தாரின் மனநிலை - தலைவர் பிரபாகரன் ஏதோ நாம் தமிழருக்கு மட்டுமே சொந்தமானவர் என்பதைப் போல எண்ணிக் கொண்டிருக்கும் நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் போலவே நம்பிக்கொண்டு , எனவே நாம் தமிழருக்கு பதில் சொல்வது என்பது பிரபாகரனைத் திட்டுவதில் தான் அடங்கி இருக்கிறது என்றும் இருப்பதாகத்தான் தோன்றுகிறது. அது போலவே இவர்கள் கலைஞர் ஆதரவு எனும் பெயரில் திமுக ஆதரவு சக்திகளை திமுகவிற்கு எதிராக மாற்றி திமுகவை வலுவிழக்கச் செய்யும் முயற்சி என்பது பாசிச சக்திகளின் பல ஆண்டுகால திட்டமேதான்.

எனவே திமுகவிற்கு எதிராகவும், தமிழர்களின் வாழ்வாதாரங்களுக்கு அச்சமூட்டும் அணுவுலை ஸ்டெர்லைட் போன்ற நாசகார திட்டங்களுக்கு ஆதரவாகவும்,சுற்றுச்சூழல் மற்றும் அறிவியலுக்கு எதிராகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த திராவிடம் 2.0 எனும் கூட்டம் குறித்து திராவிடர் இயக்கத் தோழர்களும்,பெரியார், அண்ணா, கலைஞர் மீது பற்றுக்கொண்ட திமுகவினரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதும் நம்முடைய வேண்டுகோள் ஆகும். இந்த மனநோய்க் கூட்டத்தின் பதிவுகளை திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர்களில் சிலரும், ஏதோ இது திராவிட முன்னேற்றக் கழக ஆதரவு நடவடிக்கை என்பதான மாயையில் சிக்கிக் கொண்டு அவர்களின் பதிவுகளைப் பகிர்வதும், அவற்றுக்கு ஆதரவான பின்னூட்டங்களை இடுவதுமாக உள்ளனர். திராவிடர் விடுதலைக் கழகத்தைப் பொருத்தவரை ஈழத் தமிழர் நல்வாழ்வுக்கான தீர்வு தனி ஈழத்தில் தான் பொதிந்து உள்ளது என்பதையும், அதற்காக சமரசமற்ற விடுதலைப்போரில் ஈடுபட்டவர்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமே முதன்மையானவர்கள், சரியானவர்கள் என்பதிலும் உறுதியான கருத்துக் கொண்ட அமைப்பு ஆகும்.

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர்கள் எவரும் இந்த கூட்டத்தாரின் எண்ண ஓட்டத்திற்கு இணங்கி செயல்பட வேண்டாம் என்பதையும், பிறரிடமும் இவர்களைக் குறித்து எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதையும் அன்போடு கேட்டுக்கொள்கிறோம். இதில் மாறுபட்டு செயல்படுபவர்களை இயக்கத்திற்கு விரோதமானவர்கள் என்றே கருதப்படும் என்பதையும் தோழமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார்.

English summary
Dravidar Viduthalai Kazhagam Chief Kolathur Mani has warned on Dravidam 2.0 group's stand against LTTE.
Related News
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Just In