For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாவீரர்கள் வாழ்ந்த கொங்கு சீமை.. தமிழக மானத்தை மீட்டெடுக்க வேண்டும்.. ஸ்டாலின் அழைப்பு

Google Oneindia Tamil News

சென்னை: "தமிழகம் இழந்த மானத்தை மீட்க - நம்முடைய பழம் பெருமையை மீட்க; கல்வியிலும் தொழிலிலும் சிறப்புற்று விளங்கிய பேரறிஞர் அண்ணா - கருணாநிதி ஆட்சி அமைய 'பொன்னர் - சங்கராக' தேர்தல் யுத்தத்தில் பணியாற்றுவோம்!" என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று (24-10-2020), திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், நாமக்கல் மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டக் கழகங்களின் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் காணொலி வாயிலாக பங்கேற்று உரையாற்றினார்.

பொற்கிழி வழங்கி ஸ்டாலின் பேசியது: நாமக்கல் கிழக்கு, மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த மூத்த முன்னோடிகள் 100 பேருக்கு இன்றைய தினம் பொற்கிழி வழங்கப்படுகிறது. ஒரு மரம் இருக்கிறது என்றால் அதன் கிளைகள், காய்கள், பூக்கள், பழங்கள் வெளியே தெரியும். ஆனால் வேர்கள் வெளியே தெரியாது. ஆனால் கிளைகள், காய்கள், பூக்கள், பழங்கள் ஆகிய அனைத்துக் காரணமானவை வேர்கள் தான். அத்தகைய வேர்களுக்குத் தான் பொற்கிழிகள் வழங்கப்பட்டுள்ளன.

தொண்டு செய்பவர்கள் தொண்டர்கள்; அந்த தொண்டை பிரதிபலன் பாராமல் செய்பவர்கள் தியாகிகள். அப்படிப்பட்ட தியாகிகளுக்கு இன்றைக்கு பொற்கிழி வழங்கப்படுகிறது. அவர்களுக்கு தலைமைக் கழகத்தின் சார்பில் என்னுடைய வாழ்த்துகளையும் பாராட்டுகளையும்; அதேநேரத்தில் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று காலை ஆளுநர் மாளிகைக்கு முன்னால் ஒரு மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம். இப்போது மாலையில் நாமக்கல் மாவட்டத்தின் முப்பெரும் விழாவில் நான் கலந்து கொள்கிறேன். நீட் தேர்வால் சாதாரண, சாமானிய ஏழை மாணவர்களின் கல்விக் கனவு சிதைந்து போய்விட்டது. அப்படிப்பட்ட அவர்களுக்கு ஓரளவுக்காவது இடம் கிடைப்பதற்காக 7.5 சதவிகித இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்தார்கள். அதற்கு 40 நாட்களாகியும் தமிழ்நாட்டு ஆளுநர் இதுவரையில் அனுமதி கொடுக்கவில்லை. அனுமதி கொடுக்காத ஆளுநரை முதலமைச்சரும் தட்டிக் கேட்கவில்லை. எனவே இரண்டு பேரும் சேர்ந்து ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் இரண்டு பேரின் முகத்திரையைக் கிழிப்பதற்காக இந்த ஆர்ப்பாட்டத்தை இன்று நாம் நடத்தினோம். அவர்கள் நாடகம் ஆடுவதை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியுமா?

Kongu area should safeguard Tamilnadu, says DMK cheif MK Stalin

ஒரு வாரத்திற்குள் ஆளுநர் அனுமதி தரவில்லையென்றால் இந்த ஆண்டு மொத்தம், அரசுப் பள்ளி மாணவர்கள் 8 பேர் தான் மருத்துவக் கல்லூரியில் நுழைய முடியவில்லை என்பதே எவ்வளவு கொடுமையானது. எல்லோரும் படிக்க வேண்டும் - எல்லோரும் வேலைக்குப் போக வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம். இடஒதுக்கீடு கொடுத்தால் தான் சாமானியர், சாதாரண மக்கள் பள்ளி - கல்லூரிகளில் நுழைய முடியும். அதனால் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குத் தனியாக இட ஒதுக்கீடு கொடுத்தவர் நம்முடைய தலைவர் கருணாநிதி. அதேபோல் கவுண்டர் சமுதாயத்தைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்தார் நம்முடைய தலைவர் கலைஞர். அருந்ததியர் சமுதாய மக்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுத்தார் நம்முடைய தலைவர்.

அருந்ததியர் சமுதாயத்தினருக்கான உள் ஒதுக்கீடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்ததே அடியேன் நான் தான். தலைவர் கலைஞர் சார்பில் அன்று நான் தாக்கல் செய்தேன். இப்படி ஒவ்வொரு சமூகத்திற்கும் பார்த்துப் பார்த்து சலுகை கொடுத்தோம் என்றால் என்ன காரணம் - எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பது தான். அதைத் தடுக்க நினைக்கின்றன மத்திய - மாநில அரசுகள். ஆனால் எந்தத் தடைகள் வந்தாலும் அதை உடைத்து சமூகநீதியை நாம் நிலைநாட்டுவோம். இன்று பொற்கிழி பெற்றவர்கள் அனைவரும் கழகத் தொண்டர்கள் மட்டுமல்ல; அவர்கள் இந்த இயக்கத்தின் தியாகிகள்.

1967-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சி அமைத்தார்கள். முதலமைச்சர் அண்ணா அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். அப்போது சட்டசபைக்கு வெளியில் கதவு ஓரத்தில் இருந்து பலத்த சத்தம் கேட்கிறது. இது பேரறிஞர் அண்ணா அவர்களின் பேச்சுக்கு இடையூறாக இருக்கிறது. என்ன சப்தம் அது என்று அண்ணா அவர்கள் கேட்கிறார்கள். "ஏராளமான தொண்டர்கள் ஏதோ வெளியூரில் இருந்து வந்துள்ளார்கள், உங்களை வாழ்த்துவதற்காக வந்துள்ளார்களாம், உள்ளே வர வேண்டும் என்கிறார்கள். அவர்களை காவலர்கள் அமைதிப்படுத்தி வருகிறார்கள்" என்று அதிகாரிகள் முதலமைச்சர் அண்ணாவிடம் சொல்கிறார்கள்.

உடனே அண்ணா அவர்கள் தனது பேச்சை முழுமையாக நிறுத்திவிட்டு, பேரவைத் தலைவரிடம் எனக்கு வெளியில் சென்று வர ஐந்து நிமிடம் அனுமதி தேவை என்று சொல்கிறார்கள். பேரவைத் தலைவரும் அனுமதிக்கிறார். வாசலுக்கு வந்த அண்ணா அவர்கள், வெளியூரில் இருந்து வந்த தொண்டர்களைச் சந்தித்தார். அவர்கள் அணிவித்த மாலையைப் பெற்றுக் கொண்டார். அவர்களிடம் ஐந்து நிமிடம் பேசினார். அதன்பிறகு அவைக்குள் வந்தார்.

அவைக்குள் வந்த முதலமைச்சர் அண்ணா அவர்கள் சொன்னார்கள், ''என்னை இந்த அவைக்குள் அனுப்பியவர்கள் அந்தத் தொண்டர்கள் தான். அவர்கள் வெளியில் காத்திருக்கக் கூடாது. அதனால் தான் அவர்களை ஊருக்கு அனுப்பி வைத்துவிட்டு நான் உள்ளே வந்தேன்" என்று சொன்னார்.

அப்படித் தொண்டர்களை மதிப்பதன் அடையாளமாகத் தான் அனைத்து மாவட்டங்களிலும் நடந்த கழகத்தின் முப்பெரும் விழாக்களில் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கப்படுகிறது. கழக முன்னோடிகளே! உங்களுக்கு நன்றி தெரிவிக்கும் அதேவேளையில் உங்களது தொண்டு தொடரட்டும், உங்கள் ஆலோசனைகள் எந்நாளும் எங்களுக்குத் தேவை என்பதையும் என்னுடைய அன்பு வேண்டுகோளாக வைக்கிறேன்.

நாமக்கல் என்றாலே நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அவர்களது நினைவு தான் அனைவருக்கும் வரும். 'தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவற்கோர் குணமுண்டு' என்று பாடிய தமிழினக் கவிஞர் அவர். 'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது' என்று பாடிய காந்தியக் கவிஞர் அவர்.
காங்கிரஸ் ஆட்சியில் மேலவை உறுப்பினராகவும் அரசவைக் கவிஞராகவும் அவர் இருந்தார். நாமக்கல் கவிஞருக்கும் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களுக்கும் நல்ல நட்பு இருந்தது. மலைக்கள்ளன் படத்துக்கு தலைவர் கலைஞர் அவர்கள் திரைக்கதை - வசனம் எழுதியது உங்களுக்குத் தெரியும். அந்த மலைக்கள்ளன் கதை, நாமக்கல் கவிஞர் எழுதிய கதையாகும். எம்.ஜி.ஆர். அவர்கள் கதாநாயகனாக நடித்தார்கள். தமிழ் சினிமாவின் பெரும் புரட்சியை ஏற்படுத்திய படமாக அது அந்தக் காலத்தில் அமைந்தது.

தலைவர் கலைஞர் அவர்கள் முதல்முறையாக முதலமைச்சர் ஆனபோது நாமக்கல் கவிஞருக்கு மாதம் தோறும் அரசு நிதியை வழங்குவது என்று முடிவெடுத்து அறிவித்தார்கள். அப்போது முதலமைச்சர் கலைஞருக்கு நாமக்கல் கவிஞர் அவர்கள் ஒரு கடிதம் அனுப்பினார்கள். அதில், ''நீங்கள் பெயரளவில் மட்டுமல்ல செயலிலும் கருணையின் நிதியே. தாங்கள் முதலமைச்சரானது முதல் கருணைமிக்க காரியங்களையே செய்திருக்கிறீர்கள்" என்று குறிப்பிட்டார்.

சென்னை கோட்டைக்குள் நீங்கள் வந்து பார்த்தால் பத்து மாடிக் கட்டடம் கம்பீரமாக இருக்கும். அந்தக் கட்டடத்தை 1974-ஆம் ஆண்டு கட்டியதும் முதலமைச்சர் கலைஞர் தான். அதற்கு நாமக்கல் கவிஞர் மாளிகை என்று 1989-ஆம் ஆண்டு பெயர் சூட்டியவரும் முதலமைச்சர் கலைஞர் தான். எனவே நாமக்கல்லில் நீங்கள் இருந்தாலும், சென்னை கோட்டைக்குள் நாமக்கல்லும் இருக்கிறது. அத்தகைய பெருமை வாய்ந்த மாவட்டத்தில் நடக்கும் முப்பெரும் விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த நாமக்கல் வட்டாரமானது பெருந்தொழில்களும் சிறு குறு தொழில்களும் இயங்கி வரும் பகுதி. போக்குவரத்து லாரிகளுக்கான பாடி கட்டுதல், கோழி வளர்ப்பு, முட்டை உற்பத்தி, சவ்வரிசி ஆலைகள் உள்ள அதிகம் உள்ள பகுதி. அதேபோல் நெல், வாழை, வெற்றிலை, மரவள்ளிக்கிழங்கு, எள், சோளம், கரும்பு, பருத்தி ஆகியவை அதிகளவு உற்பத்தி செய்யப்படும் பகுதி.

பொதுவாகவே மத்தியில் பா.ஜ.க. ஆட்சி வந்தது முதல் பெருந்தொழில்களாக இருந்தாலும், சிறு குறு தொழில்களாக இருந்தாலும் சரி, அவை அனைத்துமே பின்னடைவை சந்தித்தன. இதில் கொரோனா நோய்ப்பரவலும் அதிகம் ஆனதால் இத்தகைய தொழில்கள் மிகமிக மோசமான பின்னடைவைச் சந்தித்து விட்டன.
பின்னலாடைத் தொழில், நெசவுத்தொழில், துணிகள் தயாரிப்பு, மோட்டார் உதிரி பாகம் தயாரிப்பு, மஞ்சள் தயாரிப்பு, பட்டாசுகள் உற்பத்தி - இப்படி எல்லாமே பெரும் பின்னடைவை சந்தித்துவிட்டன. இதில் மிகப்பெரிய பின்னடைவுக்கு உள்ளாக இருப்பது வேளாண்மை தான்.
மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்தச் சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்தப் பயனும் இல்லை. அது மட்டுமல்ல, இந்த சட்டங்களால் வேளாண்மைத் துறையே மொத்தமாக சிதைந்து போகும்.

  • விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை என்று எதையும் இந்தச் சட்டங்கள் சொல்லவே இல்லை!
  • தரகர்களை ஒழிக்கிறோம் என்று சொல்லி; பெரிய வியாபாரிகள், பெரிய கிடங்குகள் வைத்திருக்கும் நிறுவனங்கள், பன்னாட்டு ஏற்றுமதியாளர்களுக்கு விவசாயிகளை அடிமைகளாக ஆக்குகிறது!
  • உணவுப் பாதுகாப்பும், நியாய விலைக் கடைகளின் மூலம் அத்தியாவசிய உணவுப் பொருள் விநியோகமும், கேள்விக்குறியாகும்.
  • உழவர் சந்தைகளை இனி அனுமதிக்க மாட்டார்கள்!
  • குளிர்பதனக் கிடங்கு வைத்திருப்பவர் கையில் விவசாயம் போய்விடும்!
  • கரும்பு ஆலைகளுக்கு கரும்பைக் கொடுத்துவிட்டு, ஆண்டுக்கணக்கில் பணம் வாங்க முடியாமல் தவிக்கும் பல ஆயிரக்கணக்கான கரும்பு விவசாயிகளைப் போல, அனைத்து விவசாயிகளையும் தவிப்புக்கு ஆளாக்க நினைக்கிறார்கள்!

எனவே தான் இந்தச் சட்டங்களை நாடாளுமன்றத்தின் மக்களவையிலும் தி.மு.க. எதிர்த்தது. மாநிலங்களவையிலும் எதிர்த்தது. உச்சநீதிமன்றத்திலும் எதிர்த்து வழக்கு தாக்கல் செய்துள்ளோம். மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து போராட்டம் நடத்தினோம். ''நான் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன்'' என்ற பிரதமர் மோடி; இருக்கும் வருமானத்தை மட்டுமல்ல, விவசாயிகளின் வாழ்வாதாரமான நிலத்தையும் பறிக்கத் திட்டம் போடுகிறார்.

இதனை எடப்பாடி பழனிசாமி எதிர்த்திருக்க வேண்டும். துணிச்சல் இருக்கிறதா? இல்லை. நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்தது அ.தி.மு.க. தனது நாற்காலியைக் காக்க விவசாயிகளை அடமானம் வைத்துவிட்டார் பழனிசாமி. இந்த பச்சைத் துரோகத்தை மறைக்கவே பச்சைத் துண்டு போட்டு நடிக்கிறார் பழனிசாமி! நானும் ஒரு விவசாயி என்று சொல்லிக் கொள்ளும் எடப்பாடி பழனிசாமி விவசாயச் சட்டங்களை எதிர்த்திருக்க வேண்டாமா? அவர் விவசாயி அல்ல; விவசாயியைப் போல வேஷம் போடுபவர் என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகிவிட்டது.

இந்தப் போலி விவசாயி ஆட்சியில் தான் தமிழ்நாட்டில் டன் கணக்கில் நெல்மணிகள் வீணாகி வருகின்றன. நெல் கொள்முதல் நிலையங்களில் தமிழக அரசின் முறையான திட்டமிடல் இல்லாததாலும் முன்னேற்பாடுகள் செய்யப்படாததாலும் ஆண்டொன்றுக்கு ஒரு லட்சம் டன் வரை நெல் மணிகள் வீணாகி வருவதாக விவசாயிகள் மற்றும் தொழிற்சங்கத்தினர் குற்றஞ்சாட்டி உள்ளனர். இதைப் பார்த்து இந்த போலி விவசாயிக்கு கண்ணீர் வந்ததா? கவலைப்பட்டாரா?

அரசு அறிவித்துள்ளபடி நெல் கொள்முதல் செய்யப்படாததால், நெல்மணிகள் மழையில் நனைந்து முளைத்து வீணாகி வருவதாக தஞ்சை மாவட்ட விவசாயிகள் கடந்த ஒரு வார காலமாக வேதனை தெரிவித்து வருவது முதலமைச்சருக்கு தெரியுமா? நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தினசரி ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும் என்று தமிழக அரசு சொன்னது. ஆனால் செய்ததா? என்றால் இல்லை!

தஞ்சையை அடுத்துள்ள குருவாடிப்பட்டி நெல் கொள்முதல் நிலையத்தில் தஞ்சை மாவட்ட ஆட்சியருடன் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த விவசாயிகள், நாள் ஒன்றுக்கு 400 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாக அமைச்சரிடம் தெரிவித்தனர். அவர்களுக்கு அமைச்சர் முறையான பதிலைச் சொல்லவில்லை. இதனால், நெல்மணிகள் மழையில் நனைந்து முளைத்து வீணாகி விட்டது. இதுவாவது முதலமைச்சருக்கு தெரியுமா?

தஞ்சை மாவட்டத்தில் பெய்த கனமழையால், நெல்கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த சுமார் 50 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதமடைந்தன என்ற செய்தியை ஊடகங்கள் ஒளிபரப்பியது. இதுவாவது முதலமைச்சருக்கு தெரியுமா? தஞ்சாவூர் மாவட்டம் வண்ணாரப்பேட்டை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொட்டி வைக்கப்பட்டிருந்த நெல் மணிகள் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டது. நெல் மணிகளை மழைநீர் அடித்து சென்றதால் ஏக்கருக்கு 5 முதல் 8 மூட்டைகள் வரை தங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளும் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் மூட்டைகளுக்கு மேல் நெல் சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் கூறியிருக்கிறார்கள். கம்ப்யூட்டர் சரியில்லை, சாக்கு மூட்டைகள் இல்லை, அதிகாரிகள் வரவில்லை என்ற பொய்களைச் சொல்லி ஒரு பக்கம் நெல் கொள்முதல் செய்யாமல் விவசாயிகளிடம் இருந்தவை அழிகிறது. கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை பாதுகாப்பாக வைக்க இடமில்லாமல் அவையும் அழிகிறது. இதுதான் பழனிசாமி ஆளும் போது நாட்டின் நிலைமை என்றால் இதனை விவசாயி ஆட்சி என்று எப்படிச் சொல்ல முடியும்?

குறுவை அறுவடை துவங்கி ஒரு மாதம் ஆகிறது. இன்னமும் கொள்முதல் செய்வதில் இவ்வளவு குழப்பம் இருக்கலாமா? நெல்லை சேமித்து வைப்பதற்கு இடவசதி இல்லை என்று சொல்லி கொள்முதல் செய்யாமல் இருந்தால் விவசாயிகள் எங்கே சேமித்து வைப்பார்கள்? இவ்வளவு பிரச்னைகளும் அரசின் செயல்பாட்டால் இருக்கும் போது, நெல்லில் ஈரப்பதம் அதிகமாக இருக்கிறது என்று சொல்லி இனி வாங்க மறுப்பார்கள். இதற்கெல்லாம் முதலமைச்சர் என்ன தீர்வு சொல்லப் போகிறார்?

இவை அனைத்தையும் விட இன்னும் மோசமாக, நெல்லை கொள்முதல் செய்வதற்காக விவசாயிகளிடம் அதிகாரிகள் பணத்தை லஞ்சமாக வாங்கும் கொடுமையும் இந்த அ.தி.மு.க. ஆட்சியில் நடந்துள்ளது. எங்களுக்கு கமிஷன் கொடுத்தால் தான் நெல்லை வாங்குவோம் என்று விவசாயிகளை சில அதிகாரிகள் மிரட்டி உள்ளார்கள். இது பற்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒருவர் வழக்கே தாக்கல் செய்துவிட்டார்.

"விளை பொருளை விற்க முடியாமல் விவசாயி தவிக்கும் நிலையில் அரசு அதிகாரிகள் இலஞ்சம் கேட்பது வேதனைக்குரியது. இது பிச்சை எடுப்பதற்கு சமம்" என்று நீதியரசர்கள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய பெஞ்சு கூறியுள்ளது. இது பழனிசாமிக்கு தெரியுமா? இதுதான் விவசாயியான பழனிசாமியின் ஆட்சியில் லட்சணம்.

'விவசாயி, விவசாயி' என்று சொல்லிக் கொண்டால் போதாது. விவசாயியைப் போல நடக்கவேண்டும், விவசாயிகளுக்காக கவலைப்பட வேண்டும். விவசாயிகளுக்காக திட்டம் போட வேண்டும். அப்போதுதான் விவசாயி என்று சொல்லிக் கொள்ள முடியும். அது இல்லாமல் மக்களிடம் நாளுக்கு ஒரு வேடம் போட்டு நடிக்கக் கூடாது.

இந்த அரசாங்கம் தமிழகம் மின்மிகை மாநிலமாக ஆகிவிட்டது என்று ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறது. மின்மிகை மாநிலம் என்றால் அரசாங்கமே மின்சாரத்தை தயாரிக்க வேண்டும். தமிழக மக்களின் தேவைக்கு போக மீதியை தனியார் நிறுவனங்களுக்கோ அல்லது வெளிமாநிலத்துக்கோ விற்கவேண்டும். அப்படி விற்றால் தான் இதனை மின்மிகை மாநிலம் என்று சொல்ல முடியும். அ.தி.மு.க. அரசு தமிழகத்தில் இருக்கும் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து வாங்கிக் கொண்டு மின் மிகை மாநிலம் என்று போலியாகப் பெருமை பாராட்டிக் கொள்கிறது.

தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்கக் கூடாது என்று நான் சொல்லவில்லை. ஆனால் அப்படிச் செய்வது தமிழக அரசின் சாதனையா என்று கேட்கிறேன். இவர்கள் தனியார் நிறுவனங்களிடம் இருந்து எவ்வளவு தொகைக்கு வாங்குகிறார்கள் என்ற தொகையைச் சொன்னால் அதிர்ச்சி அடைவீர்கள். 2014-ஆம் ஆண்டு தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்கிய மொத்த தொகை 29,278 கோடி ரூபாய். 2016-ஆம் ஆண்டு தனியாரிடம் இருந்து வாங்கியதால் ஏற்பட்ட செலவு 35,692 கோடி ரூபாய். 2019-ஆம் ஆண்டு தனியாரிடம் இருந்து வாங்கியதால் தமிழக அரசுக்கு ஏற்பட்ட செலவு 39,058 கோடி ரூபாய். இத்தனை ஆயிரம் கோடி கொடுத்து மின்சாரம் வாங்குவதால் அமைச்சர் அடைந்த பலன் எவ்வளவு என்பது அவருக்குத்தான் தெரியும்.

இப்படி தனியாரிடம் வாங்குவதில் காட்டிய ஆர்வத்தை மின்சாரம் தயாரிப்பதில் இந்த அ.தி.மு.க. அரசு காட்டியதா என்பதுதான் என்னுடைய கேள்வி. 2011-ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி அமைந்தது முதல் அரசு மூலமாக எவ்வளவு மின்சாரத்தை தயாரித்தார்கள்? அதை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்.

தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட உடன்குடி மின் திட்டத்தை பத்து ஆண்டுகள் கழித்தும் இன்னமும் முடிக்காதது ஏன்?

2018-ஆம் ஆண்டு உற்பத்தி துவக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கப் பணிகள் இன்று வரை முடிக்கப்படாதது ஏன்?

அ.தி.மு.க. ஆட்சி அமைந்த 2011-ஆம் ஆண்டு 6200 மெகாவாட் தயாரிப்போம் என்று சொல்லி அறிவிக்கப்பட்ட ஆறு திட்டங்களின் இன்றைய நிலைமை என்ன?

அரசாங்கம் மின்சாரம் தயாரித்தால், தனியாரிடம் வாங்க முடியாது. தனியாரிடம் வாங்கினால் தான் தனக்கு பணம் கிடைக்கும் என்பது ஒன்று தான் இவர்களது நோக்கம்.

இப்படி எல்லாவற்றிலும் தனக்கு என்ன லாபம் என்று பார்த்து முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் அமைச்சர்களும் செயல்படுவதால் தான் தமிழகம் அனைத்துத் துறைகளிலும் அதலபாதாளத்துக்கு போனது. கொங்கு சீமையானது அண்ணன்மார் சாமி எனப்படும் பொன்னர் சங்கர் ஆகிய இரு மாவீரர்கள் வாழ்ந்த ஊர். இவர்களது வாழ்க்கையை 'பொன்னர் - சங்கர் ' என்ற மாபெரும் வரலாற்று நாவலாக கலைஞர் தீட்டினார்கள்.

செல்லாத்தாக் கவுண்டர், மலைக்கொழுத்தாக் கவுண்டர், தாமரை, குப்பாயி, பவளாயி, நெல்லியக்கோடன், மாந்தியப்பன், பொன்னர், சங்கர், அருக்காணித்தங்கம், சோழன் தோட்டியின் மகன் வீரமலை, தலையூர்க்காளி, தளபதி ராக்கியண்ணன் ஆகிய பாத்திரங்களின் மூலமாக கொங்கு வட்டாரத்தின் வீரத்தையும் தீரத்தையும் ஈரத்தையும் தலைவர் கலைஞர் வர்ணித்திருப்பார்கள்.

தலையூர்க்காளி எய்த அம்பு, சங்கரின் நெற்றியில் விழும். ஆனால் இது தனது வீரத்துக்கு அவமானம் எனக்கருதிய சங்கர், தனது வாளை மேல் நோக்கி எறிந்து, அது கீழே வரும் போது தனது மார்பைக் காட்டி அதனை ஏற்று மடிவதாக கலைஞர் அவர்கள் அந்த மாவீரனின் வரலாற்றைப் படைத்திருப்பார்கள். அத்தகைய மாவீரர்கள் வாழ்ந்த மண்ணான கொங்கு சீமை, வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டின் வீரம் செறிந்த வரலாற்றை மீட்டெடுக்கப் பாடுபட வேண்டும். தமிழகம் இழந்த மானத்தை நாம் மீட்டாக வேண்டும். நம்முடைய பழம் பெருமையை மீட்டாக வேண்டும். கல்வியில் தொழிலில் சிறப்புற்று விளங்கிய தலைவர் கலைஞர் ஆட்சிக்கு, பேரறிஞர் அண்ணாவின் ஆட்சிக்கு நாம் மீண்டும் திரும்பியாக வேண்டும். எனவே அனைவரும் பொன்னர் சங்கராக எழுந்து இந்தத் தேர்தல் யுத்தத்தில் பணியாற்றுவோம் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

English summary
Kongu area should safeguard Tamilnadu, says DMK cheif MK Stalin in video conference while adressing Namakkal cadres.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X