For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் 10 பொய்களும்... கோவை முப்பெரும் விழாவில் பட்டியலிட்ட மு.க.ஸ்டாலின்

Google Oneindia Tamil News

சென்னை: மிகை மின்சார மாநிலம் என்பது உள்ளிட்ட விவகாரங்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பத்து பொய்கள் என்ற தலைப்பில் மிக நீண்ட விமர்சனத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வைத்திருக்கிறார்.

கோவையில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் வீடியோ கான்பரன்ஸ் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

நிர்வாக வசதிக்காகவும், கழகத்தின் வளர்ச்சிக்காகவும் கோவை மாவட்டக் கழகமானது அண்மையில் தான் ஐந்தாக பிரிக்கப்பட்டது. மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக நா. கார்த்திக் எம்.எல்.ஏ. அவர்களும், மாநகர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளராக பையா என்ற கிருஷ்ணன் அவர்களும், கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக மருதமலை சேனாதிபதி அவர்களும், வடக்கு மாவட்டப் பொறுப்பாளராக சி.ஆர்.ராமச்சந்திரன் அவர்களும், தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக தென்றல் செல்வராஜ் அவர்களும், பொறுப்பேற்றுள்ளார்கள். புதிதாகப் இப்பொறுப்புக்கு வந்துள்ள அனைவரையும் தலைமைக் கழகத்தின் சார்பில் வாழ்த்துகிறேன்; பாராட்டுகிறேன்! நிர்வாக வசதிக்காக ஒருங்கிணைந்த கோவை மாவட்டமானது ஐந்து மாவட்டக் கழகங்களாக பிரித்திருந்தாலும் ஒன்று பட்ட சிந்தனையோடு இந்த முப்பெரும் விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள். இதற்காகவே உங்கள் அனைவரையும் பாராட்டுகிறேன். 'வீடுகள் வேண்டுமானால் தனித்தனியாக இருக்கட்டும்; இதயங்கள் ஒன்றாகவே இருக்கட்டும்' - என்பது புகழ்பெற்ற கவிதை வரிகளில் ஒன்று. அதேபோல் மாவட்டங்கள் தனித்தனியாக இருந்தாலும் இதயங்களால் நாங்கள் ஒன்றாகத்தான் இருக்கிறோம் என்பதை கொங்கு மண்டலம் இன்றைய தினம் நிரூபித்துக்காட்டி இருக்கிறது. இன்று நாம் முப்பெரும் விழாவைக் கொண்டாடுவதற்காகக் கூடி இருக்கிறோம். 'பகுத்தறிவுப் பகலவன்' தந்தை பெரியார் பிறந்தநாள்! 'தென்னாட்டு காந்தி' பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்! 'தமிழர்களின் ஒளிவிளக்காம்' திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிய நாள்! இம்மூன்றையும் இணைத்து முப்பெரும்விழாவாகக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.

MK Stalin listed CM Edappadi Palanisami and his lies

இந்த மூன்று விழாக்களையும் கொண்டாடுவதற்கான முழு உரிமையும் பெருமையும் கொண்ட மண்டலம் இந்த கோவை மண்டலம்! இந்த கொங்கு மண்டலம்! தந்தை பெரியார் அவர்கள் பிறந்த ஈரோடு, இதே ஒன்றுபட்ட கோவை மாவட்டத்தில்தான் தொடக்க காலத்தில் இருந்தது. சுயமரியாதை இயக்கத்தை தொடங்கி - பல்வேறு சமூகசீர்திருத்தப் போராட்டங்களைத் தந்தை பெரியார் அவர்கள் முன்னெடுதார். 'இன்றைய ஆட்சிமுறை ஏன் ஒழிய வேண்டும்?' என்று தலையங்கம் தீட்டியதற்காக தந்தை பெரியாரும் அவரது சகோதரி கண்ணம்மாளும் கைது செய்யப்பட்டு முதன்முதலாக அடைக்கப்பட்டது இதே கோவை சிறையில் தான். 1938-ஆம் ஆண்டு இந்திப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்ட தந்தை பெரியார் அவர்கள் அடைக்கப்பட்டதும் கோவைச் சிறையில்தான். எனவே தந்தை பெரியார் வரலாற்றில் மறக்க முடியாத ஊர் இந்த கோவை. தந்தை பெரியார் அவர்களும் பேரறிஞர் அண்ணா அவர்களும் 1932 ஆம் ஆண்டு -அன்றைய தினம் ஒன்றுபட்ட கோவை மாவட்டத்தில் இருந்த திருப்பூரில்தான் முதன்முதலாகச் சந்தித்தார்கள்.

படிப்பை முடித்துவிட்டேன் என்று சொன்ன அண்ணாவை, ''சரி... என்னோடு வந்து விடு" என்று கூறி தந்தை பெரியார் அழைத்துச் சென்ற ஊர் கோவை மாவட்டத்தின் ஒரு பகுதியாக அப்போது இருந்த திருப்பூர். எனவே பேரறிஞர் அண்ணா அவர்களுக்கும் இது முக்கியமான பகுதி. திராவிட முன்னேற்றக் கழகமானது 1949-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் நாள் சென்னையில் ராயபுரம் ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையில் தொடங்கப்பட்டது என்ற வரலாறு உங்கள் அனைவருக்கும் தெரியும். அந்தக் கூட்டத்துக்குத் தலைமை வகித்தவர் பெத்தாம்பாளையம் பழனிசாமி அவர்கள். ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தின் முதல் மாவட்டச் செயலாளர்தான் பெத்தாம்பாளையம் பழனிசாமி அவர்கள். எனவேதான் இந்த முப்பெரும் விழாவைக் கொண்டாடுவதற்கான முழுப்பெருமையும் கொண்ட மாவட்டம் கோவை மாவட்டம் என்று சொன்னேன். இன்னும் சொன்னால் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் வாழ்ந்த ஊர் கோவை. தலைவர் கலைஞர் அவர்களும் நாவலர் அவர்களும் முதன்முதலாகச் சந்தித்துக் கொண்ட ஊர் கோவை. இங்கிருந்தபடியேதான் திராவிடர் கழகத்தின் பேச்சாளர்களாக தமிழ்நாட்டை வலம் வந்தார்கள்.

தலைவர் கலைஞர் அவர்களின் திரையுலகப் பயணத்தில் கோவைக்கு முக்கியப் பங்குண்டு. தலைவர் கலைஞர் அவர்களும் எம்.ஜி.ஆர். அவர்களும் முதன்முதலாகச் சந்தித்துக் கொண்ட ஊரும் கோவை தான். இப்படி தலைவர் கலைஞர் அவர்களது வாழ்க்கை வரலாற்றோடு பின்னிப்பிணைந்த ஊர் இந்த கோவை. இந்தியாவின் முதல் வேளாண்மைப் பல்கலைக் கழகத்தை கோவையில் 1971-ஆம் ஆண்டு அமைத்தவர் முதலமைச்சர் கலைஞர். 1971-ஆம் ஆண்டு கோவை -அவிநாசி சாலையில் பாலம் அமைத்தவர் முதலமைச்சர் கலைஞர். 1975-ஆம் ஆண்டு கோவையின் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க சிறுவாணிக் கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வந்ததும் முதலமைச்சர் கலைஞர் அவர்கள்தான். 1973-ஆம் ஆண்டு பொள்ளாச்சி - தாராபுரம் சாலையில் பாலம்· உடுமலைபேட்டை குமாரலிங்கம் சாலை பாலம்· அமராவதி ஆற்றுப்பாலம்· 1989-ஆம் ஆண்டு கிராங்கட் சாலை மேம்பாலம்

MK Stalin listed CM Edappadi Palanisami and his lies

1989-ஆம் ஆண்டு பில்லூர் அணையை ஆதாரமாகக் கொண்டு கோவை மாநகருக்கான கூட்டுக்குடிநீர் திட்டம்· 1999-ஆம் ஆண்டு கோவை சத்தியமங்கலம் காமராஜர் சாலை பாலம்· கோவை சிறுவாணி ஆற்றுப்பாலம்· நொய்யல் ஆற்றின் குறுக்கே பாலம்· 1999-ஆம் ஆண்டு 105 கோடி ரூபாய் செலவில் கோவை புறவழிச்சாலை இவை அனைத்துமே தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருக்கும் போது கொண்டுவரப்பட்டவைதான்.

2006-ஆம் ஆண்டு 128 கோடி ரூபாய் செலவில் பில்லூர் அணை இரண்டாம் கட்டக் குடிநீர் திட்டத்தை நானே வந்து தொடக்கி வைத்தேன். வடவள்ளி - கவுண்டம்பாளையம் கூட்டுக் குடிநீர் திட்டமாக இருந்தாலும், குறிச்சி குனியமுத்தூர் கூட்டுக் குடிநீர் திட்டமாக இருந்தாலும் அவை எல்லாமே கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்டவைதான்! 370 கோடி ரூபாயில் கோவையில் டைட்டல் பார்க் உருவாக்கப்பட்டது முதலமைச்சர் கலைஞர் ஆட்சியில். கோவை பல்லடத்தில் 1500 கோடி ரூபாய் மதிப்பிலான ஹேன்சன் டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தை நானே தொடக்கி வைத்தேன். 2006-ஆம் ஆண்டு கழக ஆட்சிக் காலத்தில் கோவை மாவட்டத்தில் மட்டும் 248 கோடி ரூபாய் செலவில் 18 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டன.

மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தி 2008-ஆம் ஆண்டு கோவையில் பாஸ்போர்ட் அலுவலகம் கொண்டுவரக் காரணமாக இருந்ததும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியே! கொங்கு வட்டாரத்தில் வாழும் கவுண்டர் இன மக்களின் கோரிக்கையை ஏற்று அவர்களைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்ததும் · அருந்ததியர் இன மக்களுக்கு 3 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கியதும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியே என்பதை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். தலைவர் கலைஞர் அவர்கள் கோவை மீது எவ்வளவு பாசம் வைத்திருந்தார் என்பதற்கு உதாரணம், செம்மொழி மாநாட்டை அவர் கோவையில் நடத்தியதாகும்.

தமிழுக்கு செம்மொழித் தகுதியைப் பெற்றுத்தந்தவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். 100 ஆண்டுகளாக எத்தனையோ தமிழறிஞர்கள் கண்ட கனவு அது. அதனை மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசின் மூலமாக அறிவிக்கச் செய்தார் முதலமைச்சர் கலைஞர். சங்க காலத்தில் சேரர்களும், வேளிரும் ஆட்சி செய்த பகுதி இந்தப் பகுதி. புலவர் கபிலர் பிறந்த வட்டாரம் இந்த கொங்குச் சீமை. நூற்றுக்கணக்கான பழங்காலச் சின்னங்கள் உள்ள பகுதி. இப்படி ஏராளமான பழம்பெருமைகள் கொண்ட பகுதி என்பதால் தலைவர் கோவையைத் தேர்வு செய்தார். அந்த மாநாட்டையொட்டி கோவை மாநகரத்தின் வளர்ச்சிக்காக 300 கோடி ரூபாயை ஒதுக்கி பல்வேறு திட்டங்களைச் செய்து கொடுத்தார் முதலமைச்சர் கலைஞர். 'ஒரு பக்கம் தமிழும் வளருட்டும்; இன்னொரு பக்கம் தமிழர்களும் வாழட்டும்' என்ற அடிப்படையில்தான் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் எல்லாத் திட்டமும் இருக்கும். ஓடாத திருவாரூர் தேரை ஓட்டியவர் முதலமைச்சர் கலைஞர் அவர்கள். அவர், திருவாரூர் தேரை மட்டும் புதுப்பிக்கவில்லை. அந்த தேர் ஓடும் நகரின் பாதையையும் போட்டுக் கொடுத்தார். 'தேர் ஓடுவது சில நாட்கள் தான்,

MK Stalin listed CM Edappadi Palanisami and his lies

ஆனால் மக்கள் எல்லா நாளும் பயன்படுத்துவார்கள்' என்ற பரந்துபட்ட சிந்தனையடு செயல்பட்டவர் முதலமைச்சர் கலைஞர் அவர்கள். அதனால்தான் அவரை நாம் மட்டுமல்ல, இன்றைக்கு தமிழகமே நினைவு தலைவர் கலைஞர் அவர்களை நினைவு கூர்கிறது. உலகமே மறக்காமல் இருக்கிறது. ஆனால் இன்றைக்கு ஆட்சியில் இருப்பவர்களுக்கு மக்களைப் பற்றிய எந்த அக்கறையும் கிடையாது. அவர்கள் போடும் திட்டங்கள் எல்லாம் அரசாங்க கஜானாவை எடுத்து தங்கள் வீட்டு கஜானாவுக்கு கொண்டு போகும் திட்டங்களாகவே போடுகிறார்கள். அதனால்தான் அ.தி.மு.க. ஆட்சியில் தொழில் வளர்ச்சியும் இல்லை; தொழிலாளர் மலர்ச்சியும் இல்லை. சிறு - குறு தொழில்கள் அனைத்தும் நசிந்துவிட்டன. எனக்கு முன்னால் பேசிய மருத்துவர் எழிலன் அவர்கள், தி.மு.க. ஆட்சியில் தொழில்துறை எத்தகைய வளர்ச்சி பெற்றிருந்தது, அ.தி.மு.க. ஆட்சியில் எத்தகைய தளர்ச்சி அடைந்துள்ளது என்பதைப் பட்டியலிட்டார். தொழில் வளர்ச்சி எப்போது ஏற்படும் என்றால், அந்த மாநில அரசு முதலில் வலிமையானதாக இருக்க வேண்டும். குழப்பம் இல்லாததாக இருக்க வேண்டும். தொலைநோக்குப் பார்வை கொண்டதாக இருக்க வேண்டும்.

இவை எல்லாவற்றையும்விட முதலமைச்சராக இருப்பவர் மக்களின் நம்பிக்கையைப் பெற்றவராக இருக்க வேண்டும். ஒரு தலைமைக்கு கட்டுப்பட்டதாக இருக்க வேண்டும். இந்த எந்த இலக்கணமும் இல்லாத ஆட்சிதான் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி. கடந்த நான்காண்டு காலமாக உட்கட்சிக் குழப்பத்தில் இருக்கிற ஒரு ஆட்சியை நம்பி யாரும் முதலீடு செய்ய வரமாட்டார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் இரண்டு முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தினார்கள். இரண்டு மாநாடுகளின் மூலமாக எவ்வளவு முதலீடுகள் வந்தது என்று கேட்டேன். இதுவரை தகவல் இல்லை. அவர்களால் தகவல் தர முடியாது. முதலீடுகள் வந்தால் தானே சொல்வார்கள்! முதலமைச்சர் வெளிநாடுகளுக்கு போனார். துணை முதலமைச்சர் வெளிநாட்டுக்குப் போனார். அமைச்சர்கள் வெளிநாடுகளுக்குப் போனார்கள். எங்கிருந்து, எவ்வளவு முதலீட்டைக் கொண்டு வந்தார்கள்? எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. கமிஷன், கலெக்ஷன், கரெப்ஷன் ஆகிய முப்பெரும் கொள்கையை வைத்திருக்கும் அ.தி.மு.க. ஆட்சியை நம்பி யாரும் முதலீடு செய்ய மாட்டார்கள். அதுதான் உண்மை. பெரிய முதலீடுகளைத் தான் ஈர்க்க முடியவில்லை. இருக்கின்ற சிறு - குறு தொழில்களையாவது காப்பாற்றுவதற்கு பழனிசாமி ஆட்சியால் முடிந்ததா என்றால் அதுவும் இல்லை.

MK Stalin listed CM Edappadi Palanisami and his lies

தமிழ்நாட்டிலேயே சிறு - குறு நடுத்தர நிறுவனங்கள் அதிகம் இருக்கும் மாவட்டம் இந்த கோவை மாவட்டம். நெசவு ஆலைகளும் அதிகம். நெசவுத் தொழிலாளர்களும் அதிகம். நெசவு கூட்டுறவு சங்கங்களும் அதிகம். பின்னலாடைத் தொழில், மோட்டார் உதிரி பாகங்கள் தயாரிப்பு என பல்வேறு தொழில்கள் கொண்ட மாவட்டம் இது. இந்த தொழில்கள் சிறப்பாக நடக்கின்றன என்று சொல்ல முடியுமா? இந்தத் தொழில் செய்யும் தொழிலாளர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? கோவை மாவட்டத்தில் இருந்த ஒன்றரை லட்சம் சிறு - குறு நிறுவனங்களில் 15 ஆயிரம் நிறுவனங்கள் மொத்தமாக முடங்கிவிட்டன என்று அது தொடர்பான சங்கத்தினரே சொல்கிறார்கள். பம்ப் மோட்டார் தயாரிக்கும் தொழில் முடங்கிவிட்டது. மொத்தமாக பாதிக்கப்பட்டு இருக்கும் இந்த சிறு - குறு தொழில் நிறுவனங்களை அழைத்து இந்த அரசாங்கம் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறதா? இச்சங்கத்தினரை அழைத்து கருத்துக் கேட்டதா அரசு? உங்களது தேவைகள் என்ன என்று பேச்சுக்காகவாது சந்திப்பு நடத்தியதா? நாட்டில் ஒரு பக்கம் பொருளாதார நெருக்கடி, இன்னொரு பக்கம் கொரோனா தாக்குதல். இந்த இரண்டுக்கும் மத்தியில் பெரிய தொழில் நிறுவனங்கள் முதல் சிறு - குறு தொழில்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பாதிப்புகள். நிறுவனங்களுக்கு வருமானம் இல்லை. தொழிலாளர்களுக்கு வேலை இல்லை. பலருக்கும் வேலை பறிபோய்விட்டது. புதிய வேலைவாய்ப்புகள் எப்போது உருவாகும் என்றே தெரியவில்லை. இந்த சூழலில் பொதுமுடக்கம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுக்குமாறு நான் சொல்லி வந்தேன். அதனை இந்த அரசாங்கம் காதுகொடுத்துக் கேட்கவில்லை. அதைக் கொடுப்பதற்கு மனமில்லை. இப்படிப்பட்ட மக்கள் விரோதிகள் கையில்தான் தமிழ்நாடு சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கிறது. அ.தி.மு.க. என்ற கொள்ளைக்கார ஆட்சிக்கு தலைமை தாங்குவதற்கு யார் தகுதியானவர் என்ற சண்டை சமீபத்தில் அக்கட்சியில் நடந்தது. கொள்ளையர்களின் அரசர் எடப்பாடி பழனிசாமி தான் என்று அமைச்சர்கள் எல்லாம் சேர்ந்து முடிவெடுத்து விட்டார்கள். ஏனென்றால் இன்னும் ஆறு மாதம் இருக்கிறது. அதற்குள் தமிழ்நாட்டை மொட்டையடித்திட வேண்டும் என்று அவர்கள் முடிவெடுத்துள்ளார்கள். இதன்பிறகு ஏதோ சாதித்துவிட்டதைப் போல, பன்னீர்செல்வத்தை வீழ்த்திவிட்டதைப் போல மகிழ்ச்சி அடைந்து பழனிசாமி ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார். 'அ.தி.மு.க. என்ற கட்சியே தோற்கப் போகிறது, தோற்கப் போகும் கட்சிக்கு யார் முதலமைச்சர் வேட்பாளராக இருந்தால் என்ன' என்று பன்னீர்செல்வம், தன்னை மாட்டிவிட்டதே தெரியாமல் பழனிசாமி மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டு இருக்கிறார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அத்தனையும் பொய்கள். பொய்களின் கூடாரமாக பழனிசாமி மாறிவிட்டார் என்பதற்கு உதாரணம் அந்த அறிக்கை. v மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையைக் கொண்டு வந்ததாக பழனிசாமி சொல்கிறார். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பெயர்ப் பலகை மட்டும்தான் வைத்துள்ளார்கள். பணமே ஒதுக்கவில்லை. மோடி ஆட்சியில் எய்ம்ஸ் மருத்துவமனை வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக இதுவரை தெரியவில்லை. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக்காக வந்த பிரதமர் மோடி, கண்துடைப்புக்காக ஒரு கல்வெட்டைத் திறந்து வைத்துவிட்டுப் போனார். அதன்பிறகு எதுவும் நடக்கவில்லை. 2015-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிவித்தது முதல் கடந்த ஐந்தாண்டு காலமாக எய்ம்ஸ் நாடகங்கள் தான் நடந்துள்ளதே தவிர, எய்ம்ஸ் மருத்துவமனை வந்தபாடில்லை! எய்ம்ஸ் மருத்துவமனையைக் கொண்டு வந்துவிட்டதாகச் சொல்வது எடப்பாடியின் முதல் பொய்! v இரண்டாம் தொழில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி 3 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை தமிழ் மண்ணுக்கு கொண்டு வந்து சேர்த்துவிட்டேன் என்று பழனிசாமி அந்த அறிக்கையில் சொல்கிறார். அம்மையார் ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது ஒரு உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தினார்.

அதில் இரண்டரை லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீட்டை ஈர்த்ததாகச் சொன்னார். அது வரவே இல்லை. பழனிசாமி ஒரு உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தினார். அதில் 3 இலட்சம் கோடி ரூபாய்க்கான முதலீட்டை ஈர்த்ததாகச் சொன்னார். அதிலும் எதுவும் வரவில்லை. இந்த மாநாடு நடந்தது முதல், இதன் மூலமாக வந்த முதலீடுகள் என்ன? இதனால் வேலைவாய்ப்பு பெற்றவர்கள் எத்தனை பேர்? என்ற புள்ளிவிவரத்தை நான் கேட்டு வருகிறேன். தருவதற்கு பழனிசாமி தயாரா? அண்மையில்கூட, இது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள் என்று வலியுறுத்தி நான் அறிக்கை வெளியிட்டேன். இதுவரையில் முதலமைச்சர் பழனிசாமி வெள்ளை அறிக்கை வெளியிட்டாரா? இல்லை! 3 லட்சம் கோடி ரூபாய்க்கான முதலீடுகளை ஈர்த்துவிட்டதாக எடப்பாடி சொல்வது இரண்டாவது பொய்! v காவிரி உரிமையை மீட்டுவிட்டேன் என்கிறார் பழனிசாமி. எங்கே மீட்டார்? தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கர்நாடக மாநிலத்தில் இருந்து அவர் பெற்றுத்தரவில்லை. அதற்காக அவர் மத்திய அரசிடமோ, கர்நாடக அரசிடமோ போராடவில்லை. வாதாட வில்லை. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கு வரவேண்டிய தண்ணீர் முழுமையாகத் தடுக்கப்படும். ஆனால், மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுவதோடு தனது கடமை முடிந்துவிடுவதாக முதலமைச்சர் பழனிசாமி நினைக்கிறார்.

மேகதாது அணை கட்ட உடனடியாக அனுமதி வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் பிரதமரைச் சந்திக்கிறார். அதனை எதிர்த்து பழனிசாமி அவர்களால் குரல் எழுப்ப முடியவில்லை. கழக எம்.பி.க்கள்தான் துணிச்சலுடன் பிரதமரைச் சந்தித்து எதிர்ப்புத் தெரிவித்தார்கள். அதனால், காவிரி உரிமையை மீட்டுவிட்டதாக எடப்பாடி சொல்வது மூன்றாவது பொய்! v டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துவிட்டேன் என்கிறார் பழனிசாமி. போராடும் மக்களைத் திசை திருப்புவதற்காக இப்படி ஒரு அறிவிப்பை பழனிசாமி வெளியிட்டாரே தவிர, டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அவர் ஆக்கவில்லை. இதுவரை செயல்பாட்டுக்கு வந்த ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். இது மக்களை ஏமாற்றும் தந்திரங்களில் ஒன்று. இப்போது இருக்கும் திட்டங்களுக்கு எதிராகத்தான் மக்கள் போராடினார்கள். அது அப்படியே இருக்கும் என்றால், அது எப்படிப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக ஆகும்? அதைவிட இன்னொரு முக்கியமான துரோகத்தை பழனிசாமி செய்துள்ளார். இது சம்பந்தமான வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் - 5 ஆம் தேதி வந்தது. அப்போது, 'வேளாண் மண்டலம் சம்பந்தமாக நாங்கள் இதுவரை எந்த விதிமுறைகளையும் வகுக்க வில்லை' என்று நீதிமன்றத்தில் தமிழக அரசு சொல்லி இருக்கிறது.

அப்படியானால், வேளாண் மண்டலம் என்பது வெற்று அறிவிப்பு என்பது இதன் மூலம் தெரிகிறது. எனவே, வேளாண் மண்டலம் என்பது எடப்பாடியின் நான்காவது பொய். v அத்திக்கடவு - அவிநாசித் திட்டத்தைத் தொடங்கி நூற்றாண்டுக் கனவுக்கு உயிர் கொடுத்து விட்டதாக பழனிசாமி சொல்கிறார். 1972-ஆம் ஆண்டு முதலமைச்சர் கலைஞர் அவர்களால் கொள்கை ரீதியாக ஏற்கப்பட்ட திட்டம் தான் அத்திக்கடவு அவிநாசி திட்டம். அடுத்து வந்த அ.தி.மு.க. ஆட்சி அதற்காக எதுவும் செய்யவில்லை. 1990-ஆம் ஆண்டு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அதனை செயல்படுத்தும் முயற்சி எடுத்தபோது, ஆட்சி கலைக்கப்பட்டது. அடுத்து வந்த அ.தி.மு.க. ஆட்சியும் அத்திக்கடவு - அவிநாசித் திட்டத்திற்காக எதுவுமே செய்யவில்லை. 1996-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த தலைவர் கலைஞர் அவர்கள் இத்திட்டத்தின் முதல்கட்டமாக கோவைக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார்கள். அதன்பிறகு ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு அடுத்தகட்டப்பணிகளைச் செய்யவில்லை. 2006-ஆம் ஆண்டு அத்திக்கடவு பேஸ் 2 திட்டத்தை முதலமைச்சர் கலைஞர் அவர்கள் செயல்படுத்தினார். சரவணம்பட்டி அருகில் பிரதான சென்ட்ரல் வாட்டர் டேங்க் கட்டப்பட்டது. கோவை முழுவதும் குழாய்கள் பதிக்கப்பட்டது. மத்திய அரசின் ஒப்புதலுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. உலக வங்கி, நபார்டு வங்கி, ஜப்பான் வங்கி ஆகியவை கடன் தர முன்வந்தன. ஆட்சி மாறியது.

MK Stalin listed CM Edappadi Palanisami and his lies

அடுத்து வந்த அ.தி.மு.க. ஆட்சி எதுவும் செய்யவில்லை. அத்திக்கடவு குடிநீர் விநியோகத்தையே முடக்கிவிட்டார்கள். 2012-ஆம் ஆண்டு மத்திய அரசிடம் இருந்து கடிதம் வந்தது. ஆனாலும் அ.தி.மு.க. அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை. திட்டத்திற்கான நிலத்தை கையகப்படுத்த எந்த முயற்சியும் செய்யவில்லை. 2015-ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு போடப்பட்டது. நீதிபதிகள் அ.தி.மு.க. ஆட்சிக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. சட்டமன்றத்தில் நான் ஒத்தி வைப்பு தீர்மானம் கொடுத்தேன். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அத்திக்கடவு திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும் என்றேன். இவ்வளவும் நடந்தபிறகு வேறு வழியில்லாமல் இந்த ஆட்சி அறிவித்தது. எனவே, அத்திக்கடவு கனவை தான் நிறைவேற்றியாதாக எடப்பாடி பழனிசாமி சொல்வது ஐந்தாவது பொய். v காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றி விட்டதாக எடப்பாடி சொல்லி இருக்கிறார். இந்தத் திட்டத்தை ஜனவரி மாதம் தொடங்கி வைக்கப் போவதாக அறிவித்துள்ளாரே தவிர, நிறைவேற்றிவிடவில்லை. கல்யாணம் ஆவதற்கு முன்னால் குழந்தைக்கு பெயர் வைத்துப் பெருமைப்பட்டுக் கொள்கிறார் பழனிசாமி.

ஜூன் மாதம் அடிக்கல் நாட்டப் போகிறேன் என்றார் பழனிசாமி. ஜூன் மாதம் போய்விட்டது. அக்டோபர் மாதம் அடிக்கல் நாட்டப் போகிறேன் என்றார் பழனிசாமி. அக்டோபர் மாதமும் போகப் போகிறது. இப்போது ஜனவரி என்கிறார். இது 14 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம். அதற்கான எந்த முழுமையான திட்டமிடுதலும், காலக்கெடுவும் இல்லை. சும்மா வெற்று அறிவிப்பை மட்டும் பழனிசாமி வெளியிட்டிருக்கிறார். எனவே, காவிரி - வைகை - குண்டாறு திட்டதை நிறைவேற்றிவிட்டதாகச் சொல்வது பழனிசாமியின் ஆறாவது பொய். v நீர் நிலைகளை மீட்டெடுக்க குடிமராமத்துத் திட்டங்களை செயல்படுத்தி வருவதாக பழனிசாமி சொல்கிறார். ஆளும்கட்சியினர் கொள்ளை அடிப்பதற்கான திட்டமாகத்தான் குடிமராமத்துத் திட்டம் உள்ளது. ஏரிகள், கண்மாய்கள், குளம், குட்டைகளைத் தூர்வாருதல், ஆழப்படுத்துதல், அகலப்படுத்துதல், கரையை பலப்படுத்துதல்தான் இந்தத் திட்டம். இந்தப் பணிகளை எல்லாம் விவசாய சங்கங்கள், ஆயக்கட்டுதாரர்கள், பயன்பாட்டாளர் சங்கங்கள் மூலமாகத்தான் செய்ய வேண்டும். ஆனால் ஆளும் கட்சிக்காரர்கள் அதிகாரிகளைக் கையில் போட்டுக் கொண்டு பணிகள் நடந்துள்ளதாகக் காட்டி பணம் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. பல்வேறு மாவட்டங்களில் விவசாய சங்கங்களே மாவட்ட ஆட்சியர் அலுவகலம் முன்பாக போராட்டங்களை நடத்தி உள்ளார்கள்.

எனவே குடிமராமத்து திட்டம் என்பது அ.தி.மு.க.காரர்களுக்கு பணத்தைப் பிரித்துத் தரக்கூடிய திட்டமாகவே நடந்து கொண்டுள்ளது. பகல்கொள்ளைக்கு வழிவகுக்கக் கூடிய அந்தத் திட்டத்தை, நீர்நிலைகளைக் காக்கும் திட்டம் என்று சொல்வது எடப்பாடி பழனிசாமியின் ஏழாவது பொய். v மின்மிகை மாநிலமாக தமிழகத்தை உயர்த்திவிட்டேன் என்கிறார் பழனிசாமி. மின்மிகை மாநிலம் என்றால் என்ன அர்த்தம் என்பது முதலமைச்சர் பழனிசாமிக்கும் தெரியவில்லை. மின்சாரத்துறை அமைச்சருக்கும் புரியவில்லை. தமிழ்நாடு அரசு தனது தேவைக்கான மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்வதோடு, தனியாருக்கோ அல்லது வேறு மாநிலத்துக்கோ மின்சாரத்தை விற்பனை செய்தாலோதான் அந்த மாநிலத்துக்கு மின்மிகை மாநிலம் என்று அர்த்தம். அப்போதுதான் அதை மின்மிகை மாநிலம் என்று சொல்ல முடியும். ஆனால் 19.7.2020-ஆம் நாள் கணக்குப்படி தனியாரிடம் இருந்து 3580 மெகாவாட் மின்சாரத்தை கடன் வாங்கி இருக்கிறது தமிழக அரசு. இதில் நடைபெற்றுள்ள ஊழல் முறைகேடுகள் தனியாக பேச வேண்டிய பிரச்சினைகள். இப்படி மின்சாரத்தை கடன் வாங்கும் அரசு தன்னை எப்படி மின்மிகை மாநில அரசு என்று சொல்லிக்கொள்ள முடியும்? இது பழனிசாமியின் எட்டாவது பொய்.

MK Stalin listed CM Edappadi Palanisami and his lies

'உழவன் வீட்டில் உதித்த ஒருவன்' என்று தனது அறிக்கையில் பழனிசாமி தன்னைப் பற்றிச் சொல்லிக் கொள்கிறார். இந்த 'உழவன் வீட்டில் உதித்த ஒருவர்', ஆட்சிக்கு வந்தபிறகு செய்தது எல்லாமே உழவர்களுக்குத் துரோகங்கள் தான். மத்திய அரசாங்கம் கொண்டு வரும் மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்ததை விட அவர் விவசாயிகளுக்கு வேறு துரோகம் செய்ய வேண்டியதே இல்லை. விவசாயிகள் எதிர்பார்ப்பது குறைந்தபட்ச ஆதார விலை. அது பற்றி இந்த மூன்று சட்டங்களிலும் இல்லை. பிறகு எதற்காக இந்த சட்டத்தை ஆதரிக்க வேண்டும். பச்சைத் துண்டு போட்டுக் கொண்டு எடப்பாடி செய்யும் பச்சைத் துரோகம் இது. எனவே அவர் தன்னை விவசாயி என்று சொல்லிக் கொள்வது ஒன்பதாவது பொய்! v 'நான் பழிபாவங்களுக்கு அஞ்சுபவன்' என்று அந்த அறிக்கையில் தன்னைப் பற்றிச் சொல்கிறார் பழனிசாமி.
அவரது அரசியலே பழி, பாவங்கள் நிறைந்தது தான். சசிகலாவின் காலடியில் ஊர்ந்து போய் முதலமைச்சர் ஆனவர் அவர்.

3500 கோடி ரூபாய் ஒப்பந்தங்களை தனது பினாமிகள், சொந்தங்களுக்கு கொடுத்ததாக பதிவான வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றமே உத்தரவிட்டது. அதற்கு உச்சநீதிமன்றம்வரை போய் அவர் தடை வாங்கியதால் மட்டுமே இதுவரையில் பதவியில் நீடித்துக் கொண்டிருக்கிறார். இல்லாவிட்டால் எப்போதோ பதவி பறிக்கப்பட்டு இருக்கும். ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்களில் பழனிசாமி மீதே நேரடியாக குற்றம் சாட்டப்பட்டது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா செய்யப்பட்டதில் குற்றம் சாட்டப்பட்டவர் பழனிசாமி. தூத்துக்குடியில் அமைதியாக ஊர்வலம் சென்றவர்கள் மீது, ஈவிரக்கமின்றித் துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரைச் சுட்டுக் கொன்ற ஆட்சி அ.தி.மு.க. ஆட்சி. நீட் தேர்வில் இருந்து விலக்குக் கேட்டு இரண்டு முறை சட்டமன்றத் தீர்மானம் போட்டு அனுப்பிய பிறகும், மத்திய அரசிடம் இருந்து விலக்குப் பெற முடியாத காரணத்தால் 13-க்கும் மேற்பட்ட அப்பாவி மாணவ மாணவியர் தற்கொலை செய்து மாண்ட கொடூரத்துக்கு இந்த ஆட்சி தானே காரணம்?இப்படிப்பட்ட பழனிசாமி, 'நான் பழிபாவங்களுக்கு அஞ்சுபவன்' என்று சொல்வது பத்தாவது பொய். கடைந்தெடுத்த பச்சைப் பொய்.

ஒரே ஒரு அறிக்கையிலேயே பத்துப் பொய்கள் என்றால், அவர் நித்தமும் சொல்லும் பொய்களைக் கூட்டினால் நூற்றுக்கணக்கானதாக இருக்கும். அவற்றைப் பட்டியலிட்டால் சொல்லிக் கொண்டே போகலாம். இந்த பொய்யாட்சிக்கு, பொல்லாத ஆட்சிக்கு, மக்கள் விரோத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழ்நாட்டு மக்கள் தயாராகி விட்டார்கள். அடுத்து அமைய இருப்பது தி.மு.க. ஆட்சி. அது பேரறிஞர் அண்ணாவின் ஆட்சி. முத்தமிழறிஞர் கலைஞரின் ஆட்சி. சாதாரண, சாமானிய, ஏழை, நடுத்தர வர்க்கத்தினரின் கண்ணீர் துடைக்கும் ஆட்சியாக அமையும் என்பதை தேர்தல் சூளுரையாகச் சொல்லி விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்!

English summary
DMK President MK Stalin has MK Stalin listed CM Edappadi Palanisami and his lies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X