• search
keyboard_backspace

10 முறை நீட்டிக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அவகாசம்- ஜெ. மறைவுக்கான காரணம் தெரியாதது ஏன்? ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் 10 முறை நீட்டிக்கப்பட்ட போதும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியாதது ஏன்? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை திருவொற்றியூரில் நடைபெற்ற மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

மறைந்த கே.பி.சாமி அவர்கள் பிறந்த திருவொற்றியூரில் மீனவர்களின் சமுதாயத்திற்காக, நம்முடைய கழகத்திற்காக, இந்த பகுதியில் இருக்கும் மக்களுக்கு அரும்பணி ஆற்றி சட்டமன்ற உறுப்பினராக அழுத்தந்திருத்தமாக தன்னுடைய பணிகளை நிறைவேற்றி, உடல் நலிவுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும், அவர் இல்லத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நேரத்திலும், அவரை நான் சந்தித்த நேரத்திலுடம் நிச்சயம் நலம் பெற்று வந்துவிடுவார் என்று ஆவலோடு நானும், நாமும் எதிர்பார்த்தோம்.

ஆனால் அது நமக்கு ஏமாற்றத்தை தந்து விட்டது. அவர் நம்மை விட்டு பிரிந்து விட்டார். பிரிந்தாலும் அவருடைய எண்ணம், உணர்வு, பணி, செயல்பாடு அனைத்தும் இந்தப் பகுதியில் இருக்கும் கழகத் தோழர்களுக்கு மட்டுமல்ல, எங்களைப்போன்ற தோழர்களுக்கும் அது உற்சாகத்தை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறது. அந்த உணர்வோடு தான் இந்த மேடையில் நான் நின்று கொண்டிருக்கிறேன்.

 MK Stalin questions on extension for Arumugasamy Commission

நம்முடைய தாய்மொழியாம் தமிழ்மொழியைக் காப்பதற்காக தங்களுடைய இன்னுயிரை அர்ப்பணித்த அவர்களுக்கு வீர வணக்கத்தை செலுத்தக்கூடிய கூட்டம் தான் இந்த பொதுக்கூட்டம்.

''வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்" என்ற கொள்கை முழக்கத்தோடு 1965 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடந்த தமிழ்ப் புரட்சியின் நினைவாக ஆண்டு தோறும் சனவரி 25 ஆம் நாள் கொண்டாடப்படுகின்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுவதில் நான் வீரம் கொள்கிறேன்!

"ஒடிவந்த இந்திப்பெண்ணே கேள்

நீவந்இதல்லசேர்ந்தடுந்தடுடு இதல்லவே"- என்று கால்சட்டைப் பருவத்தில் புலி வில் கயல் கொடி தாங்கி திருவாரூர் வீதிகளில் புறப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞரை ஐம்பது ஆண்டுகள் தலைவராகப் பெற்ற இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம். அந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றோடு இரண்டறக் கலந்து விட்ட மாவீரர்கள் தான் மொழிப்போர் தியாகிகள்!

'இருப்பது ஓர் உயிர், அது போகப் போவது ஒரு முறை, அது நல்ல காரியத்துக்காக நாட்டுக்காகப் போகட்டுமே' என்று வாழ்ந்து மறைந்தவர்கள் தான் மொழிப்போர் தியாகிகள்!

1938 ஆம் ஆண்டு மொழிப்போராட்டத்தில் கைதாகி சிறையில் மறைந்த தாளமுத்துவும் நடராசனும் -

1965 ஆம் ஆண்டு தங்களது தேக்குமர தேகத்தை தீயால் எரித்துக் கொண்ட சின்னச்சாமி, சிவலிங்கம், அரங்கநாதன், வீரப்பன், முத்து, சாரங்கபாணி போன்றோரும் -

அமுதம் அருந்துவது போல விஷம் அருந்தி மறைந்த தண்டாயுதபாணி, முத்து,சண்முகம் போன்றோரும் -

இன்றைக்கும் படங்களாக இருந்து நம்மை வழிநடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

'தன் பெண்டு, தன் பிள்ளை, சோறு, வீடு, சம்பாத்தியம் இவை உண்டு, தானுண்டு' என்று வாழக்கூடாது என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். அவரது கவிதை வரிக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள் தான் மொழிப்போர் தியாகிகள்!

இதில் திராவிட இயக்கத்துக்கு திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு என்ன பெருமை என்றால் இந்த தியாகிகள் அனைவரும் நம்முடைய இயக்கத்தைச் சார்ந்தவர்கள். நமது கொள்கை வீரர்கள்!

· மொழிப் போர்க்களத்தின் முதல் தியாகி, கீழப்பழுவூர் சின்னச்சாமி! இவர் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர். தனது மகளுக்கு 'திராவிடச் செல்வி' என்றுதான் பெயர் சூட்டி இருந்தார் சின்னச்சாமி!

· சென்னை கோடம்பாக்கத்தில் தீக்குளித்த சிவலிங்கம் என்ற 21 வயது இளைஞரும் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர். நுங்கம்பாக்கம் பகுதி பொருளாளர்!

· தீக்குளித்த விருகம்பாக்கம் அரங்கநாதன் மத்திய அரசின் தொலைபேசித் துறை ஊழியர். அவரும் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்.

· சத்தியமங்கலம் முத்து என்ற தி.மு.க. தொண்டர் தீக்குளித்தார். அவருக்கு 22 வயது!

· அய்யம்பாளையம் ஆசிரியர் வீரப்பன் தீக்குளித்தார். தி.மு.க.வைச் சார்ந்தவர் இவர்!

· 22 வயதானவர் விராலிமலை சண்முகம். தி.மு.க. தொண்டர்.

திருச்சி பாலக்கரையில் 16 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாலத்துக்கு கீழப்பழுவூர் சின்னச்சாமி, விராலிமலை சண்முகம் ஆகியோர் நினைவாக 'சின்னச்சாமி - சண்முகம்பாலம்' என பெயர் சூட்டினார் முதலமைச்சர் கலைஞர்.

சென்னையில் அரங்கநாதன், சிவலிங்கம் பேரால் சுரங்கப்பாதை, பாலம் அமைக்கப்பட்டது.

மொழிப்போர் தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைத்தவர் முதலமைச்சர் கலைஞர்.

எழும்பூரில் தாளமுத்து நடராசன் மாளிகை அமைத்தவர் முதலமைச்சர் கலைஞர்!

இந்த நாட்டில் நடந்த தமிழைக்காக்கும் மொழிப்போராட்டத்தில் உயிர் நீத்த தீரர்கள் அனைவரும் நம்முடைய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்! அத்தகைய தியாகத் திருவுருவங்களைக் கொண்ட இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம்!

1965 ஆம் ஆண்டு சனவரி 26 ஆம் நாள் இந்தி மொழி அரியணை ஏறும் நாள். அதைத் துக்க நாள் என்று அறிவித்தது தி.மு.க. இதனால் எழுச்சியும் உணர்ச்சியும் பெற்ற தமிழ்நாட்டு மாணவர்கள் அதற்கு முந்தைய நாள் - அதாவது சனவரி 25 ஆம் நாளே போராட்டம் தொடங்கிவிட்டார்கள்.

1965 ஆம் ஆண்டு போராட்டம் தொடங்குவதற்கான அடித்தளத்தை அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது தி.மு.க. 1963 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டின் அனைத்து ஊர்களிலும் மொழிப் போராட்டத்தில் பங்கெடுத்த தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டார்கள்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை எரிக்க முற்பட்டதாகவும், தேசிய சின்ன அவமதிப்பு சட்டத்தின்படியும், இந்திய குற்றவியல் சட்டத்தின் 120 பி-பிரிவின் படியும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார் பேரறிஞர் அண்ணா. அவருக்கு ஆறுமாதம் சிறைத் தண்டனை தரப்பட்டது.

மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்களில் கைதான தி.மு.க.வினர் ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றனர். காஞ்சி, குமரி, கோவை, சென்னை ஆகிய ஊர்களில் கைதானவர்கள் ஆறுமாத சிறைத் தண்டனை பெற்றனர். மற்ற மாவட்டங்களில் மூன்று மாதம் முதல் ஆறுவாரம் வரை சிறைத் தண்டனை பெற்றனர். தி.மு.க.வின் முன்னணிச் செயற்பாட்டாளர்கள் அனைவரும் சிறைப்பிடிக்கப்பட்டனர்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றில் 1963 -64-65 ஆகிய மூன்று ஆண்டுகளும் மிக மிக கொந்தளிப்பான ஆண்டுகள். கழகத்தின் செயல்வீரர்கள் பல மாதங்கள் தமிழகச் சிறைகளில் அடைக்கப்பட்டு இருந்தார்கள்.

இதுதான் 1965 ஆம் ஆண்டு மொழிப்போராட்ட உணர்வை தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ஏற்படுத்தியது. இரண்டு ஆண்டு காலம் தி.மு.கழகம் விதைத்த மொழி உணர்ச்சி தான் மாபெரும் மொழிப்போராட்டத்தை மாணவர்கள் நடத்துவதற்கு தூண்டுகோலாக அமைந்தது!

1965 ஆம் ஆண்டு மொழிப்போராட்டத்தை தூண்டியதாக தலைவர் கலைஞர் அவர்கள் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

1967 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்கு அதுதான் அடித்தளமாக அமைந்தது.

1965 ஆம் ஆண்டு இந்த மொழி போராட்டத்திற்கு ஒரு பெரிய விஸ்வரூபம் கிடைத்தது என்று சொன்னால் நம்முடைய தலைவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பின்பு அந்த போராட்டத்தை மாணவர்கள் கையில் எடுத்தார்கள்.

உதாரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் ஒன்று சேர்ந்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அப்படி போராட்டத்தை நடத்துகின்ற இடத்தில் ராஜேந்திரன் என்கின்ற ஒரு மாணவன், சிவகங்கை மண்ணைச் சேர்ந்த ஒரு போலீஸ்காரர் பெற்றெடுத்த ஒரு மகன், அந்த அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்க மாணவர்களை ஒன்று திரட்டி அந்த நகர வீதியில் ஒரு பெரிய ஊர்வலத்தை நடத்துகிறான்.

கோட்டையில் அமைந்திருக்கும் அன்றைய முதலமைச்சர் பக்தவச்சலம் அவர்கள், "இந்தி ஒழிக, தமிழ் வாழ்க என்று முழங்கி வந்தால், அவர்கள் யாராக இருந்தாலும் சுட்டுத் தள்ளுங்கள்" என்று ஆணை பிறப்பித்தார்கள். அந்த ஆணைக்கு கட்டுப்பட்டு காவல்துறையினர் மாணவர்களை நோக்கி சுட்டார்கள்.

அப்படிப்பட்ட நேரத்தில் குண்டடிக்கு ஆளாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்து வந்த ராஜேந்திரன், உயிர் பிரிய போகின்ற அந்த நேரத்திலும் ஒரு கரத்தில் கழகத்தின் இரு வண்ணக் கொடியைப் பிடித்துக் கொண்டு, இன்னொரு கரத்தில் "இந்தி ஒழிக, தமிழ் வாழ்க" என்ற முழக்கத்தை முழங்கியவாறு உயிர் நீத்து இருக்கிறான்.

இன்று காலையில் கோபாலபுரத்தில், தலைவர் கலைஞர் அவர்கள் வாழ்ந்த இல்லத்தில் நான் பத்திரிகை நிருபர்களைச் சந்தித்து சில அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறேன்.

10 ஆண்டுகாலமாக அ.தி.மு.க. ஆட்சியில் மக்கள் அனுபவித்த இன்னல்களுக்கு, துன்பங்களுக்கு, தொல்லைகளுக்கு, ஒரு முடிவு கட்ட வேண்டும். இன்னும் 4 மாதங்களில் ஆட்சிமாற்றம் வரப்போகின்றது. அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் ஆட்சி மாற்றத்தை உருவாக்குவதற்கு நாம் ஒரு நம்பிக்கை தர வேண்டும் என்று கூறினேன்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கொரோனா காலத்திலும் நாம் மக்களை சந்தித்தோம். வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக் கொண்டிருக்க கூடிய மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அவர்களை சந்தித்தோம். நாம் எதிர்க்கட்சி தான்.

ஆளுங்கட்சி செய்ய வேண்டிய பணிகளை நாம் செய்தோம். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவிலும் இந்த கொடிய தொற்று நோய் இருக்கும் காலகட்டத்தில் மக்களை தேடி நாடி உதவி செய்த கட்சி வேறு எதுவும் இல்லை, தி.மு.க.வைத் தவிர.

ஆனால் அந்த கொரோனாவைப் பயன்படுத்தி கொள்ளையடித்த ஆட்சி தான் இன்றைக்கு பழனிசாமி தலைமையில் இருக்கும் அ.தி.மு.க. ஆட்சி.

கொரோனா இருக்கிறதா என்று கண்டுபிடிப்பதற்கு ஒரு கருவி இருக்கிறது. அந்த கருவியை வாங்கியதில் கொள்ளை அடித்திருக்கிறது. மாஸ்க் வாங்கியதில் கொள்ளையடித்திருக்கிறது. பிளீச்சிங் பவுடர், துடைப்பம் வாங்கியதில் கொள்ளையடித்த ஆட்சி இது.

இன்னும் 4 மாதங்கள் தான் இருக்கின்றது. இருக்கின்ற வரையில் சுருட்டிக் கொண்டு, கொள்ளை அடித்துவிட்டு சென்று விடலாம் என்று திட்டமிட்டு செய்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் 4 மாதங்களில் உங்கள் அத்தனை பேரையும் கூண்டில் ஏற்றி தண்டனை வழங்கும் சூழல் நிச்சயமாக வரப்போகின்றது.

திராவிட முன்னேற்ற கழகத்தை பொறுத்தவரையில் ஆட்சியில் இல்லை என்றாலும் கடந்த 10 ஆண்டு காலமாக எதிர்க்கட்சியாக இருந்து, என்ன பிரச்சினையாக இருந்தாலும் முன்நின்று இன்றைக்கு என்னென்ன பணிகளை செய்து கொண்டு இருக்கிறது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.

அது மட்டும் இல்லாமல் வருகின்ற 27ஆம் தேதி மறைந்த அம்மையார் ஜெயலலிதா நினைவிடத்தை திறக்கப்போவதாக விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள். அதை விமர்சனம் செய்ய நான் தயாராக இல்லை.

ஆனால் எந்த முகத்தை வைத்துக்கொண்டு அதை திறக்க போகிறீர்கள்? இன்றைக்கு பழனிசாமியிலிருந்து கடைக்கோடி அமைச்சர்கள் வரை அனைவரின் பாக்கெட்டிலும் அம்மையார் ஜெயலலிதா புகைப்படத்தை வைத்திருக்கிறீர்கள். அரசு நிகழ்ச்சி என்றால் அம்மா படத்தை வைத்திருக்கிறீர்கள். அம்மா ஆட்சி என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.

அதை நான் தவறு என்று சொல்லவில்லை. ஆனால் அந்த அம்மையாரின் மரணத்திற்கு என்ன காரணம் என்பதை கண்டுபிடிக்க முடிந்ததா?

இதுவரையில் இல்லை. இன்றைக்கு மாலையில் ஆறுமுகசாமி கமிஷன் 10வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

விசாரணை கமிஷன் வேண்டும் என்று கேட்டது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள். அம்மையார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆனால் அவருக்கு என்ன சிகிச்சை கொடுக்கப்பட்டது? இதுவரையில் தெரியவில்லை. சாதாரணமாக ஒருவர் இறந்தாலே நாம் விசாரிக்கிறோம்.

ஆனால் இறந்தது முதலமைச்சர். நமக்கும் அவருக்கும் கொள்கை வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் இறந்தது முதலமைச்சர்.

1.1% வாக்குகள் வித்தியாசத்தில் முதலமைச்சராக வந்தார். அதனால் நாம் வெற்றி வாய்ப்பை இழந்து எதிர்க்கட்சியாக இருக்கிறோம். ஆனால் அவர் தான் நமக்கும் சேர்த்து முதலமைச்சர். ஆனால் அவர் எப்படி இறந்தார் என்று இதுவரையில் தெரியவில்லை.

அண்ணா முதலமைச்சராக இருந்தபோது தான் மறைந்தார். எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது தான் மறைந்தார்.

அண்ணா அவர்கள் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கே தான் மறைந்தார். அப்போது ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த சாதிக் பாஷா அவர்கள் உடல்நிலை பற்றி சொல்லுவார்.

எம்.ஜி.ஆர். முதலமைச்சராக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மறைந்தார். அப்போது ஹெச்.வி.ஹண்டே அவர்கள் மக்கள் நல்வாழ்வுத்துறை இருந்தார். அவரும் ஒவ்வொரு நாளும் சொன்னார்கள்.

ஆனால் ஜெயலலிதா அவர்கள் மருத்துவமனையில் இருந்தபோது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்தவர் விஜயபாஸ்கர் அவர்கள். ஆனால் அவர் எதுவும் சொல்லவில்லை.

ஜெயலலிதா அவர்கள் இறந்தபின்பு ஓ.பி.எஸ். அவர்கள் முதலமைச்சர் ஆனார். இரண்டு மாதம் பதவிலிருந்து ஆட்சி நடத்திக் கொண்டிருந்தார். திடீரென்று சசிகலா அவர்கள் அவர் பதவியை பறித்து விட்டார்கள்.

அதற்கு காரணம், சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் எதிர்க்கட்சியாக தலைவராக இருந்த ஸ்டாலினை பார்த்து சிரித்தார்கள். உண்மை அது தான்.

அடுத்து தானே முதலமைச்சராக வருவதாக சசிகலா அறிவித்தார்கள். அவர் இப்போது உடல் நலிவுற்று மருத்துவமனையில் இருக்கிறார். அவர் உடல் நலம் பிற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இந்த சூழலில் உச்ச நீதிமன்றத்தில் இருந்து சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வருகின்றது. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் 4 வருடம் சிறைத் தண்டனை, 100 கோடி ரூபாய் அபராதம்.

அந்த அம்மையார் இறந்து விட்ட காரணத்தினால் அவர் தண்டனை அனுபவிக்க வேண்டிய அவசியமில்லை. மற்ற 3 பேரும் அனுபவித்தார்கள். வருகிற 27ம் தேதி தான் அவர்கள் வருகிறார்கள்.

சசிகலா அவர்கள் சிறைக்கு சென்ற காரணத்தால் அப்போது யாரை முதலமைச்சர் ஆக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது அவர் காலில் ஏதோ ஊர்ந்து வந்துள்ளது.

ஊர்ந்து வந்தது என்று கூறினால் பழனிசாமி அவர்கள் தலைவர் கலைஞரை பற்றி கொச்சைப்படுத்தி பேசுவார்கள். அதனால் அவரைப் பற்றி நான் பேச விரும்பவில்லை. சிலர் பேசுகின்ற கொச்சை பேச்சை கேட்டு, அதற்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

அண்ணா அவர்கள் ஒரு கதை சொல்லி இருக்கிறார். ஒரு யானைப்பாகன் யானையை குளத்தில் குளிப்பாட்டி, சுத்தப்படுத்தி அழைத்துக் கொண்டு வருகின்றான். எதிரில் ஒரு பன்றி சேற்றில் புரண்டு வருகிறது. அதைப் பார்த்து யானை ஒதுங்கியது. அப்போது அந்த பன்றி யானை பயப்படுகிறது என்று சொல்லியதாம். அதுபோல சிலருக்கு பதில் சொல்ல முடியாது.

நேருக்கு நேர் வாருங்கள்? என்று கூப்பிடுகிறேன். கவர்னரிடத்தில் ஊழல் புகார் பட்டியலை ஆதாரத்தோடு கொடுத்து இருக்கிறோம். பழனிச்சாமியில் இருந்து கடைக்கோடி அமைச்சர் வரையில் புகார் கொடுத்திருக்கிறோம்.

உயர் நீதிமன்றத்தில் நமது வழக்கறிஞர் பாரதி அவர்கள் தொடுத்த வழக்கு - முதலமைச்சர் கிட்டத்தட்ட 4000 கோடி ரூபாய் ஒப்பந்தங்களை சம்பந்திக்கு, சம்பந்தியின் சம்பந்திக்கு கொடுக்கப்பட்டது தொடர்பான வழக்கு - நிலுவையில் உள்ளது.

அதனை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று உத்தரவு போட்டது. உனக்கு தைரியம் இருந்தால், உள்ளபடியே ஆண்மை இருப்பது உண்மை என்றால் அந்த வழக்கை சந்திக்க நான் தயார் என்று சொல்லி இருக்க வேண்டும். ஆனால் உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்கினீர்கள்..

ஓ.பி.எஸ். அவர்கள் பதவியை பறித்தபோது என்ன செய்தார்? கட்சியை இரண்டாக உடைத்தார். இதற்கிடையில் அம்மையார் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று 40 நிமிடம் தியானம் செய்தார். "உங்கள் மரணம் மர்ம மரணம். அதை நான் விடமாட்டேன். விசாரணை கமிஷன் வேண்டும்" என்று கேட்டு பத்திரிகைகளில் பேட்டி கொடுத்தார்.

அதற்குப் பிறகு அவரைச் சமாதானம் செய்து துணை முதலமைச்சர் பதவி கொடுத்தார்கள். ஊரை ஏமாற்ற ஒரு விசாரணை கமிஷன் அமைத்தார்கள். ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. அது அமைக்கப்பட்டு 3 வருடம் ஆகிவிட்டது. அந்த அம்மா இறந்து 4 வருடம் ஆகிவிட்டது.

விசாரணை கமிஷன் கேட்ட ஓ.பன்னீர்செல்வத்தை 8 முறை அவரை விசாரணைக்கு அழைத்துவிட்டார்கள். ஒருமுறை கூட அவர் செல்லவில்லை.

எனவே இந்த நிலையில் அந்த நினைவகத்தை திறக்க போகிறார்கள். இந்த நிலையில் தான் நாம் இன்றைக்கு இருந்து கொண்டிருக்கிறோம்.

அடுத்து நீட் பிரச்சினையை பார்த்தீர்கள் என்றால் அனிதாவில் தொடங்கி ஏறக்குறைய 14 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

அதற்கு நாம் 2 முறை சட்டமன்றத்தில் மசோதாவை நிறைவேற்றி ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். இதுவரையில் உரிய நடவடிக்கை இல்லை.

திராவிட முன்னேற்ற கழகம் தான் நீட்டை கொண்டு வந்தது என்று தவறான பிரச்சாரத்தை செய்து கொண்டிருக்கிறார்கள். தி.மு.க. அல்ல.

இன்னும் சொல்ல வேண்டும் என்றால் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்த வரையில், கலைஞர் முதலமைச்சராக இருந்த வரையில் தமிழ்நாட்டில் நீட் நுழையவே இல்லை. உச்ச நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கி வைத்திருந்தார்கள்.

இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் ஜெயலலிதா இருந்த வரையில் நீட் உள்ளே வரவில்லை.

இன்றைக்கு ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தில் இருக்கும் பிள்ளைகள் மருத்துவம் படிக்க முடியாத சூழ்நிலை உருவாகியிருக்கிறது. அதற்கு காரணம் அ.தி.மு.க. தான்.

4 மாதங்களில் நடைபெறும் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பை ஏற்கின்ற நேரத்தில் இந்த நீட் பிரச்சினையை விடாமல் தொடர்ந்து எப்படியாவது தமிழ்நாட்டில் இருந்து விலக்கு பெறும் சூழ்நிலையை உறுதியாக பெற்றே தீருவோம் என்ற நம்பிக்கையை சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

இன்றைக்கு பத்திரிகையாளர்களைச் சந்தித்து நான் பேட்டி தருகின்றபோது, சில கேள்விகளை பத்திரிகை நிருபர்கள் கேட்டார்கள். ஏற்கனவே குறைதீர்ப்பு மனுக்களை மக்கள் கலெக்டரிடம் தருகிறார்கள்.

இதற்கிடையில் நீங்கள் ஒன்று சொல்லி இருக்கிறீர்கள். அதற்கு நான் 'அதெல்லாம் இந்த 10 வருடங்களில் முடங்கியிருக்கிறது. நான் அறிவித்திருப்பது நேரடியாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று அந்த மாவட்டத்தில் இருக்கும் சட்டமன்ற தொகுதிகளுக்கு மக்களிடத்தில் நாங்களே படிவத்தை கொடுத்து, அந்த படிவத்தை நாங்கள் வாங்கி சீல் வைத்து அதற்கான ரசீதை உங்களிடம் கொடுக்கிறோம்.

அதை எல்லாம் ஒட்டுமொத்தமாக பெட்டியில் போட்டு சீல் வைத்து, 4 மாதங்களுக்கு பிறகு ஆட்சிக்கு வந்து பதவியேற்ற மறு நாள் என் முன்னால் அந்த சீல் உடைக்கப்படும். அதற்கென தனித் துறையை உருவாக்கி அந்த துறைக்கு அந்த குறைகளை இந்த ஸ்டாலின் நிச்சயமாக 100 நாட்களில் நிறைவேற்றித் தருவான் என்று உறுதியளிக்கிறேன்' என்று கூறினேன்.

அதற்கு இன்றைக்கு ஓர் அமைச்சர், 'கொளத்தூரில் வாங்கிய மனுக்களுக்கே இன்னும் தீர்வு கிடைக்கவில்லை' என்று சொல்கிறார். தைரியமிருந்தால் இராயபுரத்தில் போட்டி போடுங்கள். டெபாசிட் போய்விடும். வெற்றி பெற முடியுமா? என்று கேட்கிறார்.

ஸ்டாலின் அல்ல, சாதாரண தொண்டனை நிறுத்தி தோற்கடிப்பது தான் தி.மு.க. நாங்கள் அல்ல மக்கள் தயாராகி விட்டார்கள். நாங்க ரெடி, நீங்க ரெடியா? என்று கேட்கும் நிலை வந்துவிட்டது.

எனவே இந்த நிலை தான் இன்றைக்கு இருந்து கொண்டிருக்கிறது. எனவே நான் உங்களை எல்லாம் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

நம்முடைய இனத்திற்காக, மொழிக்காக, கலாச்சாரத்திற்காக, தமிழகத்திற்காக, தமிழ் மொழிக்காக உயிர் நீத்த அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம். அவர்களால் தான் திராவிட இயக்கம் கம்பீரமாக நின்றுகொண்டிருக்கிறது. மறைந்த அந்தத் தியாகச் செம்மல்களுக்கு வீர வணக்கத்தை தெரிவித்து விடைபெறுகிறேன். நன்றி... வணக்கம்...

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

English summary
DMK President MK Stalin has questioned on the 10th extension for Arumugasamy Commission.
Related News
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Just In