For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டு முதல் சட்டசபை தேர்தல் பிரசாரம்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டு முதல் சட்டசபை தேர்தல் பிரசாரம் மேர்கொள்ள இருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

கோட்டையில் கழகத்தின் ஆட்சி நடைபெற்று 10 ஆண்டுகள் ஆகப் போகிறது. ஆனால், மக்களின் மனக்கோட்டையில், என்றென்றும் ஆண்டு கொண்டிருப்பது தி.மு.கழகம்தான். தமிழக மக்களுக்கும், கழகத்திற்குமான உறவு என்பது மலைக்கோட்டைகளை விட வலிமையானது. அதனால்தான், கொரோனா பேரிடர் நேரத்திலும், கழகத்தினர் ஓய்வின்றிக் களப்பணியாற்றி, 'ஒன்றிணைவோம் வா' எனும் செயல்திட்டத்தின் அடிப்படையில், பசித்தோருக்கும் - பரிதவித்தோருக்கும் தேவையான உதவிகளைச் செய்தனர்.

காப்பியத்தில் வரும் மணிமேகலையும் - சமய சீர்திருத்தவாதியான கருணைமிகு வள்ளலாரும் - பசித்த வயிற்றுக்கு உணவு வழங்குவதன் மகத்துவத்தை உணர்த்தியவர்கள். அடையா நெடுங்கதவுடன், வந்தோருக்கெல்லாம் உணவளித்துப் பசியாற்றிய மன்னர்களும் புரவலர்களும் வாழ்ந்த மண், இந்தத் தமிழகம். தமிழ்ப் பண்பாட்டின் அரசியல் அடையாளமான திராவிட முன்னேற்றக் கழகம், கொரோனா காலத்தில் பல லட்சக்கணக்கானோரின் பசியாற்றியது.

'ஒன்றிணைவோம் வா' எனும் ஆக்கபூர்வமான செயல்பாடு, எப்படி அமைந்திருக்கிறது என்பதை ஒவ்வொரு நாளும் காணொலி வாயிலாக, கழக நிர்வாகிகளிடம் மாவட்டவாரியாகவும், பின்னர் ஒன்றியம் - நகரம் - பேரூர் கழகங்களின் நிர்வாகிகள் வாயிலாகவும் கேட்டறிந்தேன். கட்சி பேதமின்றி, பல தரப்பட்ட மக்களும் கழகத்திடம் உரிமையுடன் கோரிக்கை வைத்து, உதவிகளைப் பெற்று வந்ததை அறிந்தபோது, இது மக்களின் இயக்கம் - மக்களுக்கான இயக்கம் - மக்களால் உருவான மகத்தான இயக்கம் என்கிற பெருமிதம் ஏற்பட்டது.

MK Stalin to start Election Campaign from Pongal

அந்த மக்களின் நலனுக்காக, நாம் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், தொடர்ந்து பாடுபடுவதும், அதற்கேற்ப கழகத்தின் கட்டமைப்பை வலிமைப்படுத்துவதும், இடையீடின்றி நடந்து கொண்டே இருக்கிறது. மக்களின் குறைகளுக்குத் தீர்வு காண, மகளிரணி சார்பில் போராட்டம், மாணவரணி சார்பில் போராட்டம், இளைஞரணி சார்பில் போராட்டம், விவசாயிகள் அணி சார்பில் போராட்டம், தோழமைக் கட்சிகளுடன் இணைந்து போராட்டம் எனத் தொடர்ச்சியாகக் களம் கண்டு, மக்களுடனேயே இருந்து இயங்கி வருகிறது தி.மு.கழகம். அனைத்திலும் தனிமனித இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு எச்சரிக்கை முறைகளைக் கடைப்பிடித்தோம்.

நாம் எடுத்து வைக்கின்ற அடிதான், ஆட்சியாளர்கள் மீதான சம்மட்டி அடியாக விழுகிறது. அதன்பிறகே, அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் துயில் கலைந்து மெல்ல அசைகிறார்கள் என்பதற்கு, மருத்துவக்கல்லூரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% முன்னுரிமை இடஒதுக்கீடு தொடர்பாக, ஆளுநர் மாளிகை முன்பு, கழகம் நடத்திய மாபெரும் கண்டனப் பேரணியே சாட்சியாகும். ஆழ்ந்த தூக்கத்தில் கிடந்த கோப்பு, திடீரென விழித்ததற்குக் காரணம், தி.மு.க.வின் முரசொலித்த போர்க்குரல்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கியதால், அவர்களின் பெற்றோர் படும்பாட்டை உணர்ந்து, அத்தகைய மாணவர்களின் கல்விக்கட்டணத்தை தி.மு.கழகமே ஏற்கும் என உங்களில் ஒருவனான நான் அறிவிப்பு வெளியிட்டு, அது ஊடகங்களில் வெளியாகி, மக்களின் மனதில் பதிவாகி, வரவேற்பைப் பெற்ற பிறகே, கட்டணத்தை அரசு ஏற்கும் என ஆட்சியாளர்களிடமிருந்து திடீர் அறிவிப்பு வருகிறது. அதனால்தான் சொல்கிறேன், கோட்டையில் அ.தி.மு.க. இன்னும் சில மாதங்கள் இருக்கலாம். மக்களின் மனதில் குடிகொண்டிருப்பதும், அவர்களின் குறை தீர்ப்பதும், தி.மு.கழகமே.

அதனால்தான், ஓய்வின்றிப் பணியாற்ற வேண்டிய இன்றியமையாக் கடமைக்கு, நம்மை நாமே ஈந்துள்ளோம். இந்திய அரசியல் வரலாற்றிலேயே பெருமை கொள்ளும் விதமாக, கழகத்தின் பொதுக்குழு, ஏறத்தாழ 3000 உறுப்பினர்களுடன் காணொலி வாயிலாகக் கச்சிதமாக நடத்தி முடிக்கப்பட்டதை, அரசியல் மாச்சரியமின்றி அனைத்துத் தரப்பினரும் பாராட்டினர். நாளும் வளரும் தொழில்நுட்பங்கள், கழகத்தின் கட்டமைப்பை வலுவாக்கி, மக்களுக்குத் தேவைப்படும் அளவுக்கு பணியாற்றிடத் துணை நிற்க வேண்டும் என்பதுதான் நமது பகுத்தறிவு-அறிவியல் பார்வையாகும்.

கழகத்தின் முப்பெரும் விழா என்பது நம்மை ஆளாக்கிய தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரால் கட்டிக்காக்கப்பட்ட இந்த இயக்கம், ஆகியவற்றின் அரிய பெருமைகளை எடுத்துரைத்து, நமது பயணப் பாதைக்கு வழிவகுக்கும் விழாவாகும். அப்படித்தான் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் முப்பெரும் விழாவைச் சீரோடும் சிறப்போடும் நடத்தினார். அவர் வழியில் நாமும் முந்தையை ஆண்டுகளில் முப்பெரும் விழாவைக் கொண்டாடினோம். இம்முறை, கொரோனா நெருக்கடியினால் காணொலி வாயிலாகவே அண்ணா அறிவாலயத்தில் முப்பெரும் விழா நடைபெற்றது. கழகத்தின் மூத்தோருக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டன. கழகம் வளர்த்த முன்னோடிகளுக்குப் பொற்கிழிகள் வழங்கிச் சிறப்பு செய்யப்பட்டன.

அந்த விழா தந்த ஊக்கத்தின் காரணமாக, கரூரில் தொடங்கி காஞ்சிபுரம் வரை, செப்டம்பர் மாதத்தில் ஆரம்பித்து அக்டோபர் 30-ஆம் தேதி நிறைவடைந்த முப்பெரும் விழா காணொலி நிகழ்வுகள் கழக வரலாற்றில் புதிய மைல்கல். பொதுவாக முப்பெரும் விழா என்றால், ஏதேனும் ஒரு முக்கிய நகரத்தில் நடைபெறும் ஒரு விழாவில் மட்டும் நான் பங்கேற்கக் கூடியதாகத்தான் அமைந்திருக்கும். ஆனால், இந்த முறை காணொலி வாயிலாக ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற்ற முப்பெரும் விழாவினால், அலைஅலையாக ஆங்காங்கே திரண்டிருந்த அனைத்து மாவட்ட உடன்பிறப்புகளிடமும் உரையாற்றி உற்சாகம் கொள்கின்ற பெரும் வாய்ப்பு அமைந்தது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் கழகத்தின் வேராக - நீராக இருந்த மூத்த முன்னோடிகளுக்கு, பொற்கிழி வழங்கி பெருமைப்படுத்துகிற வாய்ப்பும் உங்களில் ஒருவனான எனக்கு அமைந்தது. இத்தகைய முப்பெரும் விழாக்களைப் போட்டி போட்டுக்கொண்டு சிறப்பாகச் செயல்படுத்திய மாவட்டக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளின் ஆற்றல் வியக்க வைத்தது.

அந்த வியப்பு நீங்குவதற்குள்ளாகவே, நவம்பர் 1 முதல் 'தமிழகம் மீட்போம்' எனும் தலைப்பில் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் காணொலி வாயிலாகத் தொடர்ந்து நடைபெறத் தொடங்கின. பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டில் முதல் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. நேற்று (நவம்பர் 21) அன்று எஃகுக் கோட்டையான சேலத்தில் நடந்த காணொலி பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்றேன்.

ஒவ்வொரு மாவட்டத்தில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்திலும், முந்தைய கழக ஆட்சியின் சாதனைகள், அ.தி.மு.க ஆட்சியின் வேதனைகள், ஆட்சியாளர்கள் அளித்த பொய் வாக்குறுதிகள், நிறைவேற்றப்படாத திட்டங்கள், மக்களின் தேவைகள், இவற்றைக் கண்டுகொள்ளாமல் அன்றாடம் அமைச்சர்கள் அடுக்கடுக்காகச் செய்யும் ஊழல்கள் அனைத்தையும் பட்டியலிட்ட பரப்புரைக் கூட்டங்கள், பொதுமக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.

பொதுக்கூட்டம் என்றால் ஆயிரக்கணக்கில் திரண்டு வரும் உடன்பிறப்புகள், காணொலிக் கூட்டம் என்கிற தொழில்நுட்ப வசதியினால், அவரவர் கழகப் பணியாற்றும் பகுதிகளிலேயே உள்ள அரங்குகளில் காணொலி வாயிலாகக் காணும் வாய்ப்பைப் பெற்றதால் மகிழ்ச்சியுடன் திரண்டனர். ஒரே மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான இடங்களுடன் காணொலித் தொடர்பு உருவான காரணத்தால், ஒவ்வொரு மாவட்டத்திலும் இலட்சக்கணக்கான உடன்பிறப்புகளிடம் உரையாற்ற முடிந்தது. அவர்களின் உள்ளக்கிடக்கையை உணர முடிந்தது. கட்சிக்கு அப்பாற்பட்ட பொதுமக்கள், பெண்கள், இளைஞர்கள் என ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கின்ற அனைத்துத் தரப்பினரும் ஆர்வத்துடன் இவற்றில் பங்கேற்றனர்.

காணொலிப் பொதுக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கருத்துகளைத் தங்கள் மனதில் பதியவைத்துக்கொண்டு, 'தமிழகம் மீட்போம்' என்கிற சூளுரையைப் பொதுமக்கள் மேற்கொள்ளும் அளவுக்கு இவற்றை வெற்றிகரமாக நடத்திய கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒருவருக்கொருவர் சளைக்காமல் ஆரோக்கியமாக போட்டி போட்டது, தலைவர் கலைஞர் கட்டிக்காத்த இந்த இயக்கத்திற்குக் கூடுதல் வலிமை சேர்க்கும் வகையில் அமைந்தது. தொடர்ச்சியாக இதனை நடத்தவிருக்கும் மற்ற மாவட்டக் கழகத்தினருக்கும் என் வாழ்த்துகள்பெருகிவரும் வலிமையுடன் கழகம் தனது பயணத்தை மேற்கொண்டிருக்கும் சூழலில், கழகத்தின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அவர்கள், மற்றொரு பிரம்மாண்டமான பரப்புரைப் பயணத் திட்டத்தை அறிவித்துள்ளார். 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' எனும் தலைப்பில், தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் சென்று சேர்ந்து எதிரொலித்திடும் வகையில், எதிர்வரும் 75 நாட்களில், 15 கழக முன்னணியினர் பங்கேற்று, 234 தொகுதிகளையும் உள்ளடக்கிய 15 ஆயிரம் கிலோமீட்டர் பயணத்துடன் 1500 கூட்டங்கள், 500-க்கும் அதிகமான உள்ளூர் நிகழ்வுகள், 10 லட்சம் நேரடிக் கலந்துரையாடல்கள் எனும் மகத்தான பயணத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கழகத் துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, முனைவர். க.பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ், மகளிரணிச் செயலாளரும் மக்களவை தி.மு.க. குழுத் துணைத் தலைவருமான கவிஞர் கனிமொழி எம்.பி., கொள்கை பரப்புச் செயலாளரும் நாடாளுமன்ற மாநிலங்களவைக் குழுத் தலைவருமான திருச்சி சிவா எம்.பி., இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தேர்தல் பணிக்குழு இணைத் தலைவர் ராஜகண்ணப்பன், கொள்கை பரப்புச் செயலாளர் முனைவர். சபாபதி மோகன், விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ். விஜயன், முனைவர். தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., எஸ்.செந்தில்குமார் எம்.பி., எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., கொள்கை பரப்புச் செயலாளர் திண்டுக்கல் ஐ.லியோனி, கார்த்திகேய சிவசேனாபதி ஆகியோர் மூன்று கட்டமாக நடைபெறும் இந்தப் பயணத்தில் பங்கேற்கிறார்கள்.

கழக முதன்மைச் செயலாளர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த 15 பேர் மட்டுமின்றி, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன், தேர்தல் பணிக்குழுச் செயலாளரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களான கம்பம் செல்வேந்திரன், சிறுபான்மை நல உரிமைப்பிரிவு செயலாளர் டாக்டர் மஸ்தான், விவசாய அணிச் செயலாளர் கரூர் சின்னசாமி, மகளிர் அணித் துணைத்தலைவர் பவானி ராஜேந்திரன் ஆகிய 5 பேரும் இந்தப் பயணத்தில் இணைய இருக்கிறார்கள்.

முதற்கட்டமாக, நம் உயிர் நிகர் தலைவர் கலைஞர் அவர்கள் பிறந்த திருக்குவளையிலிருந்து இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, நவம்பர் 20 அன்று தனது பரப்புரையைத் தொடங்கிய நிலையில், பெருமளவில் திரண்ட மக்களும், அனைத்து சமூகத்தினரும் அவருக்கு அளித்த வரவேற்பும் ஆள்வோரின் கண்களை உறுத்தியதால், உடனடியாக அவரைக் கைது செய்து அற்பத்தனமான அதிகார பலத்தைக் காட்ட முயற்சித்தது.

மக்களின் ஆதரவின்றி, மக்களுக்குத் தொடர்பே இன்றி, தத்தித் தவழ்ந்து முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்த எடப்பாடி பழனிசாமி, இத்தனை ஆண்டுகளாக மக்களின் மீது எவ்வித அக்கறையுமின்றி செயல்பட்ட நிலையில், தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், ஆய்வுக் கூட்டம் என்ற பெயரில் அதிகாரிகளைச் சந்திப்பதும், வரவேற்பு என்ற பெயரில் சொந்தக் கட்சிக்காரர்களைத் திரட்டி வருவதும், மக்கள் வரிப்பணத்தில் அரசு விழாக்களை நடத்தி, அதில் அரசியல் செய்து தேர்தல் பிரச்சாரம் நடத்திக் கொண்டிருப்பதையும் மக்கள் அனைவரும் உணர்ந்தே இருக்கிறார்கள். மாவட்ட வாரியாக அவர் மேற்கொள்ளும் பயணங்களுக்காக, திரட்டப்படும் கூட்டங்களையும், அதில் கொரோனா பேரிடர் காலத்திற்குரிய எவ்வித பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாததையும், பொதுமக்களும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி, தனது ஆட்சியின் அவலத்தை மறைத்துவிடலாம் எனத் தப்புக்கணக்குப் போடும் எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பளித்து, அவரது கட்சியினர் நடத்தும் நிகழ்வுகளுக்கு அனுமதி தருகிற காவல்துறை, தி.மு.கழகத்தின் பரப்புரை பயணத்திற்கு அனுமதி மறுக்கிறது. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி தனது பயணத்தைத் தொடங்கிய வேகத்தில் கைது செய்கிறது.

தி.மு.கழகம் இந்தக் கொரோனா பேரிடர் கால விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு, காணொலி வாயிலாக, மகத்தான அளவில் நிகழ்வுகளை நடத்தி, மக்களை ஒருங்கிணைத்தபோது, "தி.மு.க ஏன் வெளியே வரவில்லை?" என்று கேட்ட அதே முதலமைச்சரின் ஆட்சி நிர்வாகம்தான், தி.மு.கவினர் உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் பரப்புரைப் பயணத்தை மேற்கொண்டவுடனேயே, கைது நடவடிக்கையை மேற்கொள்கிறது.

ஒரு உதயநிதிக்கே இந்த ஆட்சி பயந்துவிட்டதா? கழகக் குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் உதயநிதி போன்ற உடன்பிறப்புகள் இருக்கிறார்கள். அவர்கள் ஆயிரமாயிரமாய், லட்சோப லட்சமாய், இலட்சியக் கொடியேந்தி களத்தில் அடுத்தடுத்து அணிதிரளும்போது என்ன செய்யப் போகிறீர்கள்?

கழக முன்னணியினர் 20 பேர் மேற்கொள்ளவிருக்கும் பரப்புரைப் பயணம், 10 ஆண்டுக்கால அ.தி.மு.க ஆட்சியால் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை - வேலையிழப்பை - நிர்வாகச் சீர்கேடுகளை எடுத்துரைத்தும், தி.மு.க ஆட்சி அமையும்போது மக்கள் எதிர்பார்ப்பது என்ன என்பதைக் கலந்துரையாடியும் அறிந்துகொண்டு, கழக அரசு மேற்கொள்ளவிருக்கும் திட்டங்களை விளக்கியும் நடைபெறவிருக்கிறது. கழக முன்னணியினருக்கு உங்களில் ஒருவனான நான் வழங்கியுள்ள ஆலோசனைகளை, முன்வைத்துள்ள திட்டங்களை, மக்களின் தேவைகளைப் பரப்புரைப் பயணத்தில் அவர்கள் எடுத்துரைப்பார்கள். அதற்கேற்ற வகையில், மாவட்டக் கழக நிர்வாகிகளும் மற்ற நிர்வாகிகளும் நிகழ்ச்சிகளைச் சிறப்பான முறையிலும், கொரோனா பேரிடர் கால விதிமுறைகளைத் தவறாமல் கடைப்பிடித்தும் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கழகத்தின் வெற்றி மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்து உறுதி செய்யப்பட்டிருப்பதை, நம்மைவிட அதிகமாக ஆள்வோர்கள் அறிந்துவைத்திருக்கிறார்கள். அதனால்தான், நம் மீது அவதூறுகளைப் பரப்ப நினைக்கிறார்கள். திசை திருப்பும் வேலைகளை மேற்கொள்கிறார்கள். அந்த மாய வலைகளை அறுத்தெறிவோம். பாடுபட்டு விளைவித்த பயிரை, பக்குவமாக அறுவடை செய்து, பசித்த ஏழைகளின் வயிறு நிறைக்கும் பணியினைச் செய்வோம். அதற்கு இடையூறு செய்ய நினைப்போர், தாங்களாகவே அம்பலப்படுகிறார்கள்.

நாளொரு ஊழலும், பொழுதொரு கொள்ளையுமாக அதிலும் தங்கள் குடும்பத்தினரை-உறவினர்களை-பினாமிகளைக் கொண்டு அரசு கசனாவைச் சுரண்டிக் கொழுத்து, நான்காண்டுகள் ஆட்சி செய்த இரட்டையர்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு டெல்லி சாணக்கியர்கள், மேடையில் பேசும்போது, எதிர்க்கட்சிகள் மேல் ஊழல் குற்றச்சாட்டும் - வாரிசு அரசியல் விமர்சனமும் வைப்பது, கண்ணாடி முன் நின்று கரடிபொம்மையின் விலை கேட்ட நகைச்சுவை போல இருக்கிறது.

அவர்கள் எத்தனை செப்படி வித்தைகள் செய்தாலும் மக்கள் தெளிவாகவே இருக்கிறார்கள். நாட்டை நாசப்படுத்தி - தமிழகத்தை வஞ்சித்து வரும் சக்திகளுக்கு, 2019 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் தமிழக மக்கள் எத்தகைய அடி கொடுத்தார்களோ, அதைவிட பலமான அடியை 2021-ல் சட்டப் பேரவைக்கான தேர்தலில் வழங்குவார்கள். அந்த நம்பிக்கையுடன் நாம் கவனமாகக் களப்பணியாற்றுவோம்; நாள்தோறும் நம் மக்களைச் சந்திப்போம். அவர்களின் மனங்களை வெல்வோம்.

நம் உயிர் நிகர் தலைவர் கட்டிக்காத்த இயக்கத்தை ஆட்சியில் அமரவைத்து, அதனைக் கலைஞரின் ஓய்விடத்தில் காணிக்கையாக்கும் வரை, நமக்கு ஓய்வில்லை. காணொலி வாயிலாக மக்களைச் சந்தித்து உரையாடிவரும் உங்களில் ஒருவனான நானும், தைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் பொழுதில் நேரடியாகப் பரப்புரையை மேற்கொள்ளவிருக்கிறேன். மாநிலத்தில் ஆள்வோரும், அவர்களையும் அவர்களது ஊழல்களையும் தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கும் மத்திய ஆட்சியாளர்களும், நமது வெற்றிப் பயணத்தைத் தடுக்க நினைக்கும் சூழ்ச்சிகளை முறியடித்து முன்னேறுவோம்! இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

English summary
DMK President MK Stalin will start his Campaign from the Pongal for the Tamilnadu Assembly Elecion 2021.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X