• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

6 மாதத்துக்குப் பின் ஓபிஎஸ், ஈபிஎஸ் எந்த திசைக்கு போனாலும் தலைமறைவானாலும் தண்டிப்பது உறுதி: ஸ்டாலின்

|

சென்னை: 6 மாதத்துக்குப் பின்னர் ஓபிஎஸ்-ம் ஈபிஎஸ்-ம் எந்த திசைக்கு போனாலும் எங்கே தலைமறைவானாலும் தண்டிக்கப்படுவது உறுதி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

தேனி மாவட்ட திமுகவின் முப்பெரும் விழாவில் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் பங்கேற்று ஸ்டாலின் பேசியதாவது:

கொரோனா காலம் என்பது மிக மோசமான காலம். யாருக்கு எப்போது எப்படி எதனால் இந்த வைரஸ் வருகிறது, தொற்று எங்கிருந்து ஏற்படுகிறது என்பதை இது வரை கணிக்க முடியாத காலம். தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. மருந்துகள் இல்லை. யாரையும் தொற்றலாம் என்பதுதான் சூழ்நிலை. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்களுக்கே கொரோனா தொற்றி விட்டது. அவரை விட பாதுகாப்பானவர்கள் யாராவது இருக்க முடியுமா? இத்தகைய சூழ்நிலையிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், பல்வேறு அணிகளைச் சார்ந்தவர்கள் ஆற்றிய பணி என்பது தி.மு.க வரலாற்றில் மட்டுமல்ல, தமிழக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத் தக்கது.

MK Stalin warns EPS and OPS for Corruption Charges

'ஒன்றிணைவோம் வா' என்ற திட்டத்தை நான் அறிவித்தேன். காய்கறிகள் கொடுத்தோம். மளிகைப் பொருள்கள் கொடுத்தோம். மருந்துப் பொருள்கள் கொடுத்தோம். உணவுப் பொருள்களை வழங்கினோம். அடிப்படைத் தேவைகளை வழங்கினோம். நாம் தருவது மட்டுமல்ல, இந்தத் திட்டத்தின் படி யார் என்ன பொருள் வேண்டும் என்று கேட்கிறார்களோ அந்தப் பொருள்களை வாங்கிக் கொடுத்தோம். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், ஆட்டோ டிரைவர்கள் போன்றவர்களுக்கு பல ஊர்களில் நிதி உதவி செய்தோம். வெளிநாடுகளுக்குப் போய் மாட்டிக் கொண்டவர்கள் தாயகம் திரும்ப ஏற்பாடுகள் செய்தோம். வெளிமாநிலத்தில் இருந்து திரும்ப முடியாதவர்களை திரும்பஅழைத்து வந்தோம். இத்தகைய பணிகள் செய்து வரும் போது இன்னொரு ஏக்கமான குரல் நமக்கு வந்தது. எங்களுக்கு வீடுவாசல் இல்லை, உணவுப்பொருள்களைக் கொடுத்தால் சமைக்க முடியாது, அதற்கு வழியில்லை, எனவே சமைத்த உணவுகளைத் தாருங்கள் என்றார்கள். அந்த அடிப்படையில் 73 சமையல் கூடங்களை அமைத்தோம். 239 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை இணைத்தோம். பல இலட்சம் பேரின் பசியைப் போக்கினோம்.

இப்படி எந்த இயக்கமும் செய்யவில்லை. தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே ஏதாவது ஒரு மாநிலத்தில் எந்த ஒரு அரசியல் கட்சியாவது இப்படிச் செய்திருக்குமா என்றால் இதுவரை தகவல் இல்லை. கொரோனா என்பது யாரையும் தொற்றும். ஆனால் அதைப் பற்றிக் கவலைப்படாமல் தி.மு.க. தொண்டர்கள் பணியாற்றினார்கள். இத்தகைய தியாகத் தொண்டர்களுக்கு தலைமை தாங்குகிறேன் என்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது. இறுமாப்புடன், தெம்புடன் அமர்ந்திருக்கிறேன். இந்த தேனி மாவட்ட முப்பெரும் விழா மூலமாக தமிழகம் முழுவதும் இருக்கிற திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அனைவரையும் நான் வணங்குகிறேன்! நன்றி தெரிவிக்கிறேன்! உங்கள் தியாகங்கள் வீண் போகாது. உங்கள் உழைப்பு வீண் போகாது. உங்கள் தொண்டு வீண் போகாது. அனைவரது உழைப்பையும் என் உள்ளத்தில் இருத்தி வைத்திருக்கிறேன்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நம்மை இப்படித் தான் வளர்த்தார்! பேரறிஞர் அண்ணா இப்படித்தான் நாம் செயல்பட வேண்டும் என்று விரும்பினார்! திராவிட முன்னேற்றக் கழகம் இதற்காகத் தான் உருவாக்கப்பட்டது! முதல் முறை ஆட்சிக்கு வந்த போது முதல்வர் கலைஞர் அவர்கள் சொன்னார்கள், ''நான் முதலமைச்சராக கோட்டையில் இருந்தாலும், அங்கிருந்தபடியே குடிசைகளைப் பற்றியே சிந்திப்பவன்" என்றார் முதல்வர் கலைஞர் அவர்கள். தன்னுடைய ஆட்சிக்கு மூன்று இலக்கணம் இருப்பதாக முதல்வர் கலைஞர் அவர்கள் சொன்னார்கள்.

1. சமுதாய சீர்திருத்தத் தொண்டு 2. வளர்ச்சிப்பணிகள் 3. சமதர்ம நோக்கு - இவை மூன்றும் தான் தன்னுடைய ஆட்சியின் இலக்கணமாக முதல்வர் கலைஞர் சொன்னார்கள். அந்த அடிப்படையில்தான் ஆட்சி செலுத்தினார்கள். இன்றைய ஆட்சிக்கு இப்படி எந்த இலக்கணமும் இல்லை. கலெக்சன், கமிஷன், கரெப்சன் ஆகிய மூன்றும்தான் இவர்களது இலக்கணம். அதனால்தான் அ.தி.மு.க. ஆட்சியானது எத்துணை அலங்கோல ஆட்சியாக இருக்கிறது என்பதை பேராசிரியர் அருணன் அவர்கள் சொன்னார்கள்.

MK Stalin warns EPS and OPS for Corruption Charges

ஒரு ஆட்சி எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் தி.மு.க. ஆட்சி. ஒரு ஆட்சி எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு உதாரணம் அ.தி.மு.க. ஆட்சி. தலைவர் கலைஞர் அவர்கள் ஒரு முறையல்ல, ஐந்து முறை இந்த நாட்டை ஆட்சி செலுத்தினார்கள். இந்த ஐந்து முறையும் அவர் செய்த சாதனைகளைப் பட்டியலிட்டால் பல மணிநேரம் ஆகும். சில துளிகளை மட்டும் நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன். * அன்னைத் தமிழ்மொழிக்கு செம்மொழித் தகுதி! * மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு உரிமை! * அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் சட்டம்! * மகளிருக்கும் சொத்தில் பங்குண்டு என்ற சட்டம்!

* பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின மக்களுக்கான சமூகநீதி உரிமைகள்! * விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்! * கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட 7 ஆயிரம் கோடிக் கடன் ரத்து! * சென்னை தரமணியில் டைடல் பார்க் ! * சென்னைக்கு மெட்ரோ ரயில் திட்டம்! * சிப்காட், சிட்கோ, தொழில் வளாகங்கள் உருவாக்கம்! * தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உருவாக்கியது! * நமக்கு நாமே திட்டம், அண்ணா மறுமலர்ச்சித் திட்டங்கள்! * அவசர ஆம்புலென்ஸ் 108 சேவை அறிமுகம்! * இலவச மருத்துவக் காப்பீடு திட்டம்! * மினி பஸ்களைக் கொண்டு வந்தது! * உழவர் சந்தைகள் அமைத்தல்! * ஏழைப் பெண்களுக்கு திருமண உதவி, கைம்பெண் மறுமண நிதி உதவி, கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவி ஆகிய திட்டங்கள்!

* பல்லாயிரம் கோவில்களுக்கு திருப்பணிகள்! * அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு! * உள்ளாட்சியில் பெண்களுக்காக 33 சதவிகிதம் இடஒதுக்கீடு! * இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய எரிவாயு அடுப்புகள் வழங்குதல்! * மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைத்தல் ! * அனைவரும் இணைந்து வாழ சமத்துவபுரங்கள்! * இஸ்லாமிய சமூகத்தினருக்கு 3.5% இட ஒதுக்கீடு வழங்கியது! * உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் இணைத்தது! * நுழைவுத் தேர்வு ரத்து! * மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் வழங்கியது! * சேலம் உருக்காலை, சேலம் புதிய ரயில்வே மண்டலம், நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், இராமநாதபுரம் கூட்டுக்குடிநீர்த்திட்டம், ஆசியாவிலேயே பெரிய அண்ணா நுற்றாண்டு நூலகம் ஆகியவை உருவாக்கம்! * மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோருக்கு மறுவாழ்வு வழங்குதல்!

* ஏராளமான பல்கலைக் கழகங்கள், மருத்துவக் கல்லூரிகள், கலை - அறிவியல் கல்லூரிகள் உருவாக்கியது! இப்படி நவீனத் தமிழகத்தை உருவாக்கிய சிற்பிதான் தலைவர் கலைஞர்! இப்படி அ.தி.மு.க. ஆட்சி தனது சாதனைகளை வரிசைப்படுத்த முடியுமா? * நீட் தேர்வு கொடுமை காரணமாக 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். * ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அமைதி ஊர்வலம் போன தூத்துக்குடி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரை சுட்டுக் கொன்ற ஆட்சி இந்த ஆட்சி. * சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை அடித்தே கொன்ற ஆட்சி இது. * ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சென்னைக் கடற்கரையில் இருந்து அடித்து விரட்டி, ஆட்டோக்களுக்கு தீ வைத்து கலவரத்தை உருவாக்கிய ஆட்சி இந்த ஆட்சி! * எட்டு வழி பசுமைச் சாலைகள் அமைப்பதால் தங்களது நிலங்கள் பறி போகும் என்ற கோரிக்கையுடன் போராடிய அப்பாவி மக்களைக் கைது செய்து சிறைக்கு அனுப்பிய ஆட்சி இந்த ஆட்சி. * மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களை எதிர்த்தார்கள் என்று சமூக செயற்பாட்டாளர்களை கைது செய்து சிறையில் அடைத்த ஆட்சி இந்த ஆட்சி!

* கொடநாடு பங்களாவில் கொலை செய்து கொள்ளை டித்ததில் அதிகாரத்தில் இருப்பவர்கள் பெயரே அடிபட்டது. * பொள்ளாச்சியில் இளம்பெண்களை மிரட்டி பாலியல் படம் எடுத்தவர்களை காப்பாற்றிய அரசு இந்த அரசு. * விவசாயிகள் பெற வேண்டிய கிசான் உதவித்தொகையை போலி விவசாயிகள் பெற வழிவகை ஏற்படுத்திக் கொடுத்த ஆட்சி இது. *குடிமராமத்து என்ற பெயரால் ஆளும்கட்சியினர் கொள்ளையடிக்க ஏற்பாடு செய்த ஆட்சி இது. * 2017, 2018, 2019 - ஆகிய மூன்று ஆண்டுகளில் அரசு புள்ளிவிபரப்படியே 4800 பேர் டெங்குவால் மரணம் அடையக் காரணமான ஆட்சி இது. * தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளையும் டெல்லிக்கு அடகு வைத்த ஆட்சி இது. * நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரண்டு முறை தீர்மானம் போட்டு அனுப்பிய பிறகும் அதை வைத்து விலக்கு பெற முடியாத ஆட்சி இது! * விவசாயத்தை வேர் அறுக்கும் மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்த ஆட்சி இது!

* சிறுபான்மையினர் விரோதக் குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்த ஆட்சி இது! * மாநிலத்துக்கு வரவேண்டிய நிதியையும் வாங்க முடியாமல், ஜி எஸ் டி தொகையையும் பெற முடியாத ஆட்சி இது. * முதலமைச்சர் மீதான ஊழல் புகார் சி.பி.ஐ. வசம் உள்ளது. * துணை முதலமைச்சர் மீதான ஊழல் புகார் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் உள்ளது. * முதல்வர் உள்ளிட்ட 8 அமைச்சர்கள் மீதான 89 கோடி ஆர் கே. நகர் தேர்தல் புகார் வருமான வரித்துறையிடமும் தேர்தல் ஆணையத்திடமும் உள்ளது. * அமைச்சர் வேலுமணி மீதான புகாரை யாரை வைத்து விசாரிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. * அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. * இந்த ஆட்சியில்தான் தலைமைச் செயலகத்திலேயே வருமானவரிச் சோதனை நடத்தியது. * இந்த ஆட்சியில்தான் டி.ஜி.பி.யே சி.பி.ஐ.யால் விசாரிக்கப்பட்டார். * முதல்வருக்கு நெருக்கமான செய்யாதுரை வீட்டில் கோடிக்கணக்கில் பணமும், தங்கக் கட்டிகளும் கைப்பற்றப்பட்டன.

* துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்துக்கு நெருக்கமான சேகர் ரெட்டி வீட்டில் கோடிக்கணக்கில் பணமும் தங்கக் கட்டிகளும் கைப்பற்றப்பட்டன. * அ.தி.மு.க. அரசால் போடப்பட்ட பல நூறு கோடி மதிப்பிலான டெண்டர்களை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. * ஆளும்கட்சி எம்.எல்.ஏ.வையே அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கொலை மிரட்டல் விடுத்ததாக அந்த எம்.எல்.ஏ.வே பேசியுள்ளார். * பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு அவரது துறையில் நடப்பதே தெரியவில்லை. * நீட் சட்டங்கள் நிராகரிக்கப்பட்டது சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கே தெரியவில்லை. * பழங்குடி சிறுவனை அழைத்து தனக்கு செருப்பு மாட்டிவிடச் சொல்கிறார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். * தன்னை விமர்சித்து எழுதிய பத்திரிக்கையாளர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கிறார் அமைச்சர் வேலுமணி. * முதலமைச்சரை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் எழுதுபவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். * பெரியார், அண்ணா சிலைகள் அவமரியாதை செய்யப்படுவது தமிழகத்தில் வழக்கமாக ஆகிவிட்டது. * பெரியார் சிலைக்கு அருகில் புகைப்படம் எடுத்தற்காக மூன்று காவலர்கள் இடமாற்றம் செய்யப்படுகிறார்கள்.

MK Stalin warns EPS and OPS for Corruption Charges

* அண்ணா பெயரால் கட்சி நடத்திக் கொண்டு அண்ணா பல்கலைக் கழகத்தையே ஒரே நாளில் சூரப்பாவுக்கு திருட்டுத்தனமாக விற்க திட்டம் போட்டார்கள். 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டும் 10 ஆயிரம் பேர் இறந்ததும் இந்த ஆட்சியில் நூற்றாண்டுக் கறைகள்! - இவை தான் எடப்பாடி பழனிசாமியின் சாதனைகள். மக்கள் மன்றத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நான் தாக்கல் செய்ய இருக்கும் குற்றப்பத்திரிக்கை இதுதான். இவை மக்களுக்கு தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் சண்டை போடுவதைப் போன்ற ஒரு நாடகத்தை நடத்தி மக்களை திசை திருப்பிக் கொண்டு இருக்கிறார்கள். பதவி இருக்கும் வரை இவர்கள் இருவரும் பிரிய மாட்டார்கள். அவர்களுக்குள் சண்டை என்பதெல்லாம் மக்கள் முன்னால் நடத்தப்படும் நாடகங்கள். 'எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது, எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்' என்று செய்தி வெளியிட்டார் ஓ.பன்னீர்செல்வம். அதற்கு பதில் சொல்லும் விதமாக வாட்ஸ்அப்பில் வந்த செய்தி என்ன தெரியுமா?'எது குனிந்ததோ அது நன்றாகவே குனியும். எது குனிகிறதோ அது நன்றாகவே குனிகிறது.

எது குனியவிருக்கிறதோ அது நன்றாகவே குனியவிருக்கிறது'. இப்படி செய்தி வெளியாகி உள்ளது. முந்தைய நாள் செய்தி வெளியிட்ட ஓ. பன்னீர்செல்வம் மறுநாள் எடப்பாடி பழனிசாமியிடம் சரண் அடைந்துவிட்டார். அதற்கு என்ன காரணம்? இதே பன்னீர்செல்வம் தான், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று சொல்லி தர்ம யுத்தம் தொடங்கினார். இன்று அவரே அந்த விசாரணைக்கு தடையாக அதர்ம யுத்தம் நடத்திக் கொண்டு இருக்கிறார். ஜெயலலிதா மரணம் அடைந்ததாகச் சொல்லப்பட்டது 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி. போயஸ் கார்டன் வீட்டில் இருந்து அப்பலோ மருத்துவமனைக்கு ஜெயலலிதா கொண்டு செல்லப்பட்டது செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி இரவு பத்து மணிக்கு. இடைப்பட்ட 73 நாட்கள் அவர் எப்படி இருந்தார் என்பது வெளியில் இருக்கும் நம் யாருக்கும் தெரியாது. தனக்கே தெரியாது என்று பன்னீர்செல்வம் சொன்னார். சசிகலா குடும்பத்துக்கும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மட்டும் தான் தெரியும் என்று சொன்னார்.

சமாதிக்கு போனார், தியானம் செய்தார், முகத்தைத் துடைத்துக் கொண்டார் -- இவை எல்லாம் உங்களுக்குத் தெரியும். திடீரென்று அ.தி.மு.க.வில் மீண்டும் பன்னீர்செல்வம் இணைந்தார். ஏன் இணைகிறீர்கள் என்று கேட்டபோது, ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை விசாரிக்க விசாரணைக் கமிஷன் அமைக்க ஒப்புக் கொண்டார்கள் என்று சொன்னார். அதனடிப்படையில்தான் ஆறுமுகச் சாமி ஆணையம் அமைக்கப்பட்டது. 25.9.2017 ஆம் நாள் ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது. மூன்று மாதத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டது. ஆனால் இன்று மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. இது வரை அறிக்கை தாக்கல் செய்யவில்லை. இந்த ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வமும் ஆஜராகவில்லை. அமைச்சர் விஜயபாஸ்கரும் ஆஜராகவில்லை. விஜயபாஸ்கர்தான் காரணம் என்று சொல்கிறார் பன்னீர்செல்வம். பன்னீர்செல்வம்தான் காரணம் என்று சொல்கிறார் விஜயபாஸ்கர். இவர்கள் சொல்வதைப் பார்த்தால் இவர்கள் இரண்டு பேருக்குமே ஏதோ பங்கு இருப்பது தெரிகிறது. இவர்கள் இருவரும் நேர்மையானவர்களாக இருந்தால் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி இருக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமிக்கோ, பன்னீர்செல்வத்துக்கோ ஜெயலலிதா மீது உண்மையான பற்று இருக்குமானால் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை உடைத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வாங்கித் தந்திருக்க வேண்டும்.

ஜெயலலிதா இல்லை என்றால் எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் இந்த நிலைமைக்கு வந்திருக்க முடியாது. இவ்வளவு பணம் சம்பாதித்திருக்க முடியாது. அந்த நன்றி உணர்ச்சி அவர்களுக்கு கொஞ்சமும் கிடையாது. தாங்கள் பதவிக்கு வரக் காரணமாக இருந்த, தாங்கள் பணம் சம்பாதிக்கக் காரணமாக இருந்த ஜெயலலிதாவுக்கே நன்றியில்லாதவர்களாக எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் எப்படி தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு மக்களைப் பற்றிய எந்தக் கவலையும் கிடையாது. ஆறுமாத காலம் கொள்ளைகள் தொடருவதற்காகத்தான் பழனிசாமியும் பன்னீர்செல்வமும் ஒன்றாக இருப்பதைப் போல நடிக்கிறார்கள். பதவி போனதும் இருவரும் ஆளுக்கொரு திசையில் போய்விடுவார்கள். அவர்கள் எந்தத் திசைக்கு போனாலும், எங்கே தலைமறைவு ஆனாலும் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மமாக இருந்தாலும், கொடநாடு கொலை கொள்ளை விவகாரமாக இருந்தாலும், லஞ்ச லாவண்ய வழக்குகளாக இருந்தாலும் - அவை சட்டபூர்வமாக நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்பதை நாட்டு மக்களுக்கு அளிக்கும் உறுதிமொழியாக இந்த தேனி முப்பெரும் விழா கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
MK Stalin has warned EPS and OPS for Corruption Charges.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X