For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

EXCLUSIVE: சரண்யா டாக்டர் வந்துட்டாங்க.. வெளியே வராதீங்க, ஜூரம் வந்தால் பயப்படாதீங்க.. அசத்தல்!

கிராம மக்களுக்கு கொரோனா பீதியை போக்குகிறார் டாக்டர் சரண்யா

Google Oneindia Tamil News

சென்னை: "ஏம்மா... 21 நாள் வேலைக்கு போகாம இருந்தா எங்க வீட்ல அடுப்பு எப்படி எரியும்?"ன்னு கண்கலங்க கேட்பாங்க.. "நமக்கு அரசாங்கம் இருக்கு.. கவலைப்படாதீங்க."ன்னு தைரியம் சொல்லுவேன்.. உண்மையிலேயே கொரோனா பத்தி நமக்கு தேவை பயம் இல்லீங்க.. விழிப்புணர்வுதான்" என்கிறார் டாக்டர் சரண்யா!

Recommended Video

    EXCLUSIVE: வெளியே வராதீங்க, ஜூரம் வந்தால் பயப்படாதீங்க.. அசத்தல்!

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள சுற்றுவட்டார கிராம பகுதி மக்களிடம், பெண் டாக்டர் ஒருவர் கொரோனா வைரஸ் பற்றின பயத்தை போக்குவதாகவும், ஒவ்வொரு வீடுகளுக்கும் ஓடி ஓடி சென்று யாரும் வீட்டை விட்டு வெளியே வராதீங்க, சளி, ஜூரம் வந்தால் பயப்படாதீங்க" என்று தைரியம் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் கேள்விப்பட்டோம்.

    அதனால் அந்த டாக்டர் யார் என "ஒன் இந்தியா தமிழ்" சார்பாக அறிய முற்பட்டபோது அவரது பெயர் சரண்யா என தெரியவந்தது. டாக்டர்களுக்கு ஊசி, மருந்தையும் தாண்டி இப்படிகூட வைத்தியம் செய்யலாம் என்பதும், விழிப்புணர்வு குறைவாக உள்ளதாக கருதப்படும் கிராமபுற பகுதிகளில் எந்த மாதிரியான நம்பிக்கை வார்த்தைகளை இவர் ஏற்படுத்துகிறார்? அதற்கு கிராம மக்கள் எப்படி ஒத்துழைப்பு தருகிறார்கள்? 21 நாட்களை கிராம மக்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள்? என்ற கேள்விகள் அத்தனையையும் டாக்டர் சரண்யாவிடமே முன் வைத்தோம். அப்போது அவர் சொன்னதாவது:

    பேராவூரணி

    பேராவூரணி

    தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ளது காலகம் என்கிற கிராமம்.. இங்க இருக்கிற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தான் நான் டாக்டராக இருக்கிறேன்... இந்த காலகம் கிராமம் விவசாயிகள் நிறைந்த பகுதி... பெரும்பாலும் ஏழை ஜனங்கதான்.. பலர் வேலை தேடி நகரங்களில் வேலை பார்த்து வருகின்றனர்.. ஆனால் ஊரில் வயசானவங்க.. பெண்கள் யாருக்கு உடம்பு சரியில்லைன்னாலும் இந்த ஆஸ்பத்திரியை தேடிதான் வருவாங்க.

    சொந்த கிராமம்

    சொந்த கிராமம்

    திடீர்னு 144 தடை உத்தரவு போடவும் வெளியூர்களில் தங்கியிருந்தவர்கள் எல்லாருமே சொந்த கிராமத்துக்கு வந்துவிட்டனர்.. இப்படி வந்தவர்கள் எல்லாருக்குமே பயந்தபடியே இருந்தாங்க.. நமக்கும் கொரோனா இருக்குமோ.. அப்படின்னு நினைச்சிட்டு பீதியிலேயே என்கிட்ட வந்து சந்தேகம் கேட்டாங்க.. இப்படி தானாகவே முன்வந்தது நல்ல விஷயமாகவே இருந்தது.. அப்போ அவங்க கிட்ட நான் சொன்ன முதல் விஷயம் பயப்படாதீங்கன்றதுதான்.

    அசால்ட் கூடாது

    அசால்ட் கூடாது

    காய்ச்சல், இருமல், தும்மல் இப்படி எதுவேணாலும் நமக்கு வரும்.. எல்லா காய்ச்சலும், இருமலும் கொரோனா இல்லன்னு சொல்லி தைரியம் தருவேன். இருந்தாலும் சில பேர் அசால்ட்டா எடுத்துக்கிட்டு வெளியே வருவாங்க.. அவங்ககிட்டயும் போய், வீட்டிலேயே இருங்கன்னு சொல்லி, கொரோனா தாக்காமல் இருக்க என்னென்ன செய்யணுமோ அதை அத்தனையையும் சொன்னேன்.. அதுக்கப்பறம் இதை புரிஞ்சிக்கிட்டு உடனே வீட்டுக்கு போய்டுவாங்க.

    விழிப்புணர்வு

    விழிப்புணர்வு

    ஒருசிலர், "ஏம்மா... 21 நாள் வேலைக்கு போகாம போனா எங்க வீட்ல அடுப்பு எப்படிம்மா எரியும்?"ன்னு கண்கலங்க கேட்பாங்க.. "நமக்கு அரசாங்கம் இருக்கு.. கவலைப்படாதீங்க.. எல்லா சலுகையும் செய்து தருவாங்கன்னு சொல்லி அனுப்புவேன்.. இப்படி நான் சொல்ல ஆரம்பித்து, இன்னைக்கு எங்க கிராமப்புற பகுதியில எல்லாருமே ஊரடங்கை கடைப்பிடிக்கிறாங்க.. கொரோனா பத்தி நமக்கு உடனடியாக தேவை விழிப்புணர்வு தானே தவிர, பயம் இல்லை.

    விளக்கம்

    விளக்கம்

    எங்க கிராமத்துக்குள்ள, சமுதாய தொற்றுன்னா என்னன்னு ஆரம்பத்துல தெரியாமலே இருந்துச்சு.. அவங்க என்ன நினைச்சிட்டாங்கன்னா, வெளிநாடு போய்ட்டு வர்றங்களுக்கு மட்டும்தான் இந்த அறிகுறி, நமக்கு வராதுன்னு நினைச்சாங்க.. ஆனால் நான் இதை அவங்களுக்கு விளக்கி சொன்னேன்.. ஒருத்தருக்கு ஒருத்தர் தொடர்பே இல்லைன்னாகூட இந்த பாதிப்பு வரும், அதுபேர்தான் சமுதாய தொற்றுன்னு சொன்னப்புறம் புரிஞ்சிக்கிட்டாங்க.. 144 தடை உத்தரவையும் சரியா மதிக்க ஆரம்பிச்சிட்டாங்க.. அத்தியாவசிய தேவைக்காக வெளியே வர்றவங்க காலைல 11 மணிக்கெல்லாம் எல்லாத்தையும் வாங்கிட்டு வீடுகளுக்குள் போயிடறாங்க..

    தஞ்சாவூர்

    தஞ்சாவூர்

    கிராம மக்களுக்காக நான் தனிப்பட்ட முறையில் இப்படி விழிப்புணர்வு தந்தாலும், எங்க டாக்டர் டீம் இதுல மொத்தமா இந்த விழிப்புணர்வுல இறங்கி இருக்கோம்.. குறிப்பாக தஞ்சாவூர் துணை இயக்குனர் சுகாதார பணிகள் டாக்டர் ரவீந்திரன், பேராவூரணி வட்டார மருத்துவ அலுவலகர் டாக்டர் சவுந்தராஜன் இவங்களோட அறிவுறுத்தல், வழிகாட்டல்படிதான் நாங்க இந்த பணிகளில் இறங்கி இருக்கோம்.. குறிச்சி, காலகம், பின்னவாசல், செருவாவிடுதி இது நாலுமே எங்க பேராவூராணி பிளாக்கில் வரக்கூடிய இடங்கள்.

    கூட்டம்

    கூட்டம்

    இந்த 4 பகுதிகளிலயுமே நாங்க எல்லாருமே தினமும் ஸ்கிரீனிங் செய்ய போய் வர்றோம்.. வெளியூரில் வந்தவர்களையும் தனிமைப்படுத்தி கண்காணிச்சிட்டு இருக்கோம்.. பொது சிகிச்சையும் தந்துட்டு இருக்கோம். 144 போட்டப்போகூட, இதை எல்லாம் மக்கள் ஒரு பெரிய விஷயமாவே எடுத்துக்கல.. காய்கறி, மளிகை கடைங்க எல்லாமே திறந்து வெச்சி, கூட்டத்தை சேர்த்து வெச்சிருந்தாங்க.. அதை பார்த்ததுமே நாங்க போய் இப்படி திறந்து வெக்க கூடாது, கூட்டம் சேர்க்கூடாதுன்னு சொல்லவும் நிறைய மாறியிருக்காங்க.

    தன்னார்வலர்கள்

    தன்னார்வலர்கள்

    நாங்க இப்படி விழிப்புணர்வுடன் ஒவ்வொரு இடங்களிலும் சொல்றதை பார்த்ததும், நிறைய இளைஞர்கள் இதை கவனித்து தன்னார்வமாக முன்வந்து எங்களுடன் சேர்ந்து விழிப்புணர்வு செய்ய ஆரம்பிச்சிட்டாங்க.. இதை தவிர, எங்களுக்கு ஒரு பயணிகள் லிஸ்ட் தருவாங்க.. வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து வந்திருக்கிறவங்க யார்ன்ற லிஸ்ட் அது.. அந்த லிஸ்ட்டில் இருக்கிற ஒவ்வொருத்தரையும்தான் நாங்க போய் பார்த்துட்டு வர்றோம்.

    கலெக்டர்

    கலெக்டர்

    அவங்க வந்த நாளில் இருந்து 28 நாள் தாண்டிட்டாங்களான்னு பார்ப்போம், காய்ச்சல், ஜுரம் இருக்கான்றதையும் பார்த்துட்டு வர்றோம்.. இப்போ கலெக்டர் உத்தரவுப்படி, இவங்களுடைய ஃபேமிலி ஆட்களையும் கண்காணிச்சிட்டு வர்றோம்.. தினமும் இப்படி வீட்டுக்கு நாங்க போய் கண்காணிக்கிறது அவங்களுக்கு ஒருவித பதட்டத்தை தருது.. ஆனாலும் நாட்டுக்காகவும், நமக்காகவும்தான் இந்த 21 நாள் தனிமை அப்படின்னு சொல்லவும், அதை புரிஞ்சி ஏத்துக்கிட்டதே எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.. இதுக்கு வருவாய்த்துறை, காவல்துறையினரின் ஒத்துழைப்பு முழுசா எங்களுக்கு கிடைச்சிட்டு வருது.. இப்ப எங்க பேராவூரணி சுற்றுவட்டார கிராமப்புறத்துல யாருக்குமே கொரோனா அறிகுறியே இல்லை.

    கண் கலங்கிடுச்சு

    கண் கலங்கிடுச்சு

    நோய் தன்மை, அதன் பாதிப்பு, தீவிரத்தை புரிஞ்சிக்கிட்டாலே போதும், 21 நாட்களை ஈஸியா எதிர்கொள்ளலாம்.. மன அழுத்தம், டென்ஷன் இதெல்லாம் தேவையே இல்லை.. அப்படி உணர்ந்தவர்கள்தான் பேராவூரணி பகுதி மக்கள்.. சில சமயம் எங்க ஊர் பெரியவங்க வந்து, "எங்களுக்கு மருந்து இல்லாட்டியும் பரவாயில்லை..ம்மா, யாராவது ரொம்ப பாதிக்கப்பட்டவங்க வந்தால், அவங்களுக்கு சிசிச்சை கொடுங்கன்னு சொல்லும்போது, என்னையும் அறியாம கண்கலங்கிடும்.. அந்த அளவுக்கு விழிப்புணர்வு வந்துவிட்டது.. இதைவிட வேற என்ன வேணும் சொல்லுங்க!? என்றார் டாக்டர் சரண்யா!

    English summary
    covid19: tanjore gov doctor saranya helps the village peoples to come out of corona fear and tension
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X