
ஒவ்வொரு நொடியும் புதிய தொடக்கமே!
வாழ்க்கையில் நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் புதிய தொடக்கமே.. ஒவ்வொரு நொடியையும் ஆழ்ந்து அனுபவித்து வாழப் பழகிக் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு நாளும் ஒரு புது ஆரம்பம் தான். நாளின் தொடக்கத்திலேயே நம் மனதை மயக்கும் பாடல்களைக் காலையில் கேட்டால் அந்த நாள் முழுக்க மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.மனதுக்கு இதமான பாடலோடு காப்பி அருந்துவது உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி தரும். மனம் அமைதியாக இருந்தாலே எல்லா செயல்களையும் நாம் சிறப்பாகவே செய்திடலாம்.

பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கேற்ப நேற்று நடந்த கசப்பான அனுபவங்களை தூக்கத்திலேயே மறந்துவிட்டு விடியலின் போது இன்றைய நாளை நான் சிறப்பானதாக்குவேன் என்ற உத்வேகத்துடன் செயலாற்ற வேண்டும். அப்பொழுது தான் நம்மால் நம்முடைய வாழ்க்கையை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்ல முடியும். புத்துணர்ச்சியோடு ஒரு செயலைச் செய்யும் போது அந்த செயலில் நம்மால் எளிதில் வெற்றி பெற முடியும்.
நாளின் தொடக்கத்திலேயே இறைவனை வணங்கி இனிமையான இசையுடன் தொடங்குங்கள். உடற்பயிற்சிக்குப் பின் அன்றைய வேலைகளைத் தொடங்கும் போது உடலும் மனதும் புத்துணர்ச்சி பெற்றிருக்கும். நாள் முழுவதும் புன்சிரிப்போடு வீட்டையும் அலுவலகத்தையும் வலம் வாருங்கள். உங்களால் உங்களைச் சுற்றி இருப்பவர்களும் ஆக்டிவ்வாக இருப்பார்கள்.
ஒவ்வொரு நொடியும் ஒரு புது சாதனைக்கான நொடி தான். எந்த நொடியிலும் எந்த செயலையும் செய்யத் தொடங்கலாம். நாம் ஒரு விஷயத்தை ஆராய்ந்து திட்டமிட்டுச் செய்ய தொடங்கினால் அதை தாமதிக்காமல் உடனே செய்திட வேண்டும். எல்லா நாளும் இனிய நாளே எல்லா நேரமும் நல்ல நேரமே எல்லா நிமிடங்களும் வெற்றியை எதிர்நோக்கும் நிமிடங்கள் தான் எல்லா நொடிகளும் சிறந்த தொடக்கத்தின் நொடிகள் தான்.