For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

""தீர்ப்புங்கிறது வேற, தண்டனைங்கிறது வேற"" என்று சொல்லப்படுவது சரிதானா? இங்கே நான் சொல்லப்போவதை ஆராய்ந்து நீங்கதான் முடிவுசொல்லனும்.

""ரெக்கை"" என்கிறது ஒரு பெயர் இல்லை. பட்டப்பெயர். அவனை ""லேய் ரெக்க"" என்றுதான் கூப்பிடுறது. நம் முன்னே வந்து அடக்கமாகஎன்ன அய்யா என்று கை கட்டாத குறையா நிற்பான். என்ன காரணமோ அவனுடைய கைகள் உடம்பை ஒட்டாமல், கோடை வெக்கையைத்தாங்காத கோழி, ரெக்கைகளை உடம்போடு வைத்துக் கொள்ளாமல் சற்று விரித்து வைத்துக் கொண்டிருப்பதைப்போலவே இவனும் கைகளை வைத்துக்கொண்டிருப்பான்.

"ரொம்ப ""மருவாதி""யான பையன்" நல்லவருக்கு நல்லவன். வெள்ளாடுகள் மேய்க்கிறதுதான் இப்போதையத் தொழில். இவனோட அப்பாவுக்குசாராயம் காய்ச்சிக் குடிக்கிறதும் தேடிவந்து கேட்கிறவகளுக்கு மட்டும் விற்பது அவரோட தொழில்.

தன்னை யோக்கியம் என்று நினைத்துக் கொண்டிருக்கிற இந்த சமூகத்துக்கு இந்த ரெண்டு தொழில்களைப் பற்றியும் நல்ல எண்ணம் கிடையாதுஎன்கிறதை இவர்களும் அறிவார்கள்.

அந்த ஊரின் சம்சாரிகளுக்கு இந்தச் சாராயம் காய்ச்சிக் குடிக்கிற அப்பனைப்பற்றி ரொம்பக்கவலை இல்லை. வெள்ளாடுகளை வைத்துக் கொண்டும்மேய்த்துக் கொண்டிருக்கிற ""ரெக்கை""யைப் பற்றித்தான் தீராத கவலை.

ஊர்க் கூட்டத்தைக் கூட்டும் போதெல்லாம் இந்தப் பிரச்சினையைப் பற்றி ஏதாவது ஒரு சம்சாரி கிளப்புவார். இது ஒரு அவிழ்க்க முடியாத பிரம்மமுடிச்சுப்போல ஆகி விடும். கார

செம்மறி ஆடுகளை மட்டும் வைத்துக் கொள்ளலாம் என்பது கிராமத்தில் எழுதாத சட்டம். வெள்ளாடுகளை நினைத்தாலே சம்சாரிகளுக்குத் தூக்கம்போய்விடும்.

வெள்ளாடு பற்றிக் கடுமையான விமர்சனங்கள் உண்டு. ""வெள்ளாடு போன இடம் வெட்டவெளி"" என்பது அதில் ஒரு சொலவடை. போன இடம்என்றால், அவை இருந்த இடம் என்று பொருள்.

வெள்ளாடு, வைத்திருப்பவனுக்கே (சொந்தக்காரனுக்கு மட்டுமே) லாபம்; மற்றவர்களுக்கு - சம்சாரிகளுக்கு - (விளைச்சல் நிலம்வைத்திருப்பவர்களுக்கு) நட்டமோ நட்டம்.

""துட்டுக்கு எட்டுத்துட்டு

வட்டிக்கு விட்டாலும் - வெள்ளாட்டங்

குட்டிக்கு இணையாகுமா?""

என்று கேட்கிறது இன்னொரு சொலவடை.

ஆடு மேய்க்கிறவர்களுக்கு ஊருக்குள் ""நித்தக் குத்தவாளி"" என்கிற அவப்பெயர் உண்டு. அவர்கள் குற்றம் செய்யாத நாளே இல்லையாம். அதிலும்வெள்ளாடுகளை வைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல பெயர் எங்கே கிடைக்கும். ஊரிலுள்ள பெரிய சம்சாரிகளெல்லாம் ரெக்கையைப் பார்க்கும்போதெல்லாம் நல்லதனமாகச் சண்டை பிடிப்பார்கள்.

""டே ரெக்கெ, இந்த வெள்ளாடுகள வித்துட்டு செம்மறி ஆடுகளை வாங்கி மேய்டா. எதுக்குடா ஒனக்கு இந்த அவப்பேரு? என்பார்கள். அந்தவினாடி மட்டும் அவனுக்கு அது சரி என்று தோன்றும். அவர்கள் தலை மறைந்ததும் "நா நல்லா இருக்கிறது இவனுகளுக்குப் பிடிக்கல,பொறாம-ஒரே பொறாமெ" என்று தனக்குள் சொல்லிக் கொள்வான்.

வளர்ச்சியில் வெள்ளாடுகளுக்கு இணையாக வேற எதையும் சொல்ல முடியாது. அது தூங்காத நேரமெல்லாம் மேய்ந்து கொண்டே இருக்கும்.தூங்கும்போதுகூட அரைக் கண்ணைத் திறந்து வைத்துக் கொண்டு அசைபோட்டுக்கொண்டே இருக்கும்! இந்த உலகத்திலுள்ள பச்சையை தின்று முடிந்தாலும் பசிஅடங்காது. அப்படி ஒரு அரக்கப் பசி அதுக்கு.

பால்ச்சாரமுள்ள சாதி வெள்ளாடுகள் குறைந்தது ரெண்டு குட்டிகள் முதல் நாலுகுட்டிகள் கூட ஈனும். இப்படி வருடத்துக்கு ரெண்டு ஈத்து ஈனும். பத்துஆடுகள் இருந்தால் சிறிய மேய்ப்பாளிகளுக்கும் ஒரே ஆண்டில் மூன்று மடங்கு ஆடுகளாகிவிடும். கிடைக் காவல்காரர்களுக்கு வெள்ளாடு என்றால்பெரும் மண்டையடி என்பார்கள். பெரும்பாலும் திருட்டு மேய்ச்சல் ஆடுகளாகவே இருக்கும். ராத்திரி வேளைகளில் ""கண்ணுல வெளக்கெண்ணையஊத்திக்கிட்டுத்தாம் கவனிச்சிட்டிருக்கணும்"" என்பார்கள். ராக் கிடைக்காவல்காரர்கள் தூங்கும் ""முக்காலித் தூக்கம்"" இந்த வெள்ளாடுகளிடம்செல்லாது.

முக்காலித்தூக்கம் என்பது தூங்காமல் தூங்குவது. அந்த வித்தை ராக் காவல்காரர்களுக்குத்தான் தெரியும். தூரத்திலிருந்து பாக்கிறவர்களுக்கு,காவல்காரன் கம்பை முன்பக்கம் ஊன்றிக்கொண்டு அதன் உச்சியில் நாடியை வைத்து ஓய்வாக நின்று கொண்டிருக்கிறான் போலிருக்கு என்று தோன்றும்!

காதுகள் எப்போதும் திறந்தே இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இமைகள் தரப்படவில்லை. தந்த இமைகளையும்கூட பாதி மூடியும்மூடாமலும் வைத்துக்கொண்டு அசந்து தூங்குகிற - கீழே சாயாமல் நின்றுகொண்டு தூங்குகிற - அந்த ""முக்காலித் தூக்கம்"" தூங்க ஒரு பயிற்சிஇல்லாமல் முடியாது.

""பயல் தூங்கிவிட்டான். அசந்து தூங்குறான்"" என்பதை திருட்டு வெள்ளாடுகள் கண்டுபிடித்து விடும். ""பொன்னம் போல"" எழுந்துபோய் கள்ளமேய்ச்சல் மேய்ந்து விட்டு வந்து, காவலாளியைப் போலவே அரைக்கண் பார்வை வைத்துக்கொணடு அவனுக்கு ""வலிப்பு"" காட்டுவது போலதூங்கிக்கிட்டே அசைபோடத் தொடங்கும். காலையில் பார்க்கும்போது அந்த வெள்ளாமையில் வெள்ளாடுதான் மேய்ந்திருக்கிறது என்பதற்கு என்னஅத்தாட்சி என்று கேட்க முடியாமல், மேய்ந்த ஆடுகளே அத்தாட்சியும் வைத்துவிட்டு வந்திருக்கும். ஒன்றுக்கு இரண்டு அத்தாட்சிகள். ஒன்று -காலடித்தடங்கள்; மற்றது - போட்ட புழுக்கைகள்.

புஞ்சைக்காரன் வந்து காவல்காரனை பிடிபிடி என்று பிடித்துக்கொள்வான்; தப்ப முடியாது. இப்போது தெண்டம் கொடுக்க வேண்டியது ஆட்டுக்குசொந்தக்காரனில்லை. காவல்காரன்தான்.

இதனால் ரெக்கையின் ஆடுகளை கிடையில் வைத்துக் கொள்ள முடியவில்லை. ""எப்பா, ஒஞ் சங்காத்தமே வேணாம்"" என்று சொல்லிவிட்டார்கள்.

இதனால் ரெக்கையின் ஆடுகளை கிடையில் வைத்துக் கொள்ள முடியவில்லை. ""எப்பா, ஒஞ் சங்காத்தமே வேணாம்"" என்று சொல்லிவிட்டார்கள்.

இதன் பிறகு ஊர்க்கூட்டத்துக்கு வேற வழி இல்லை. இவனை ஊரவிட்டுத் "" தள்ளிவைக்கிறது"" ஒன்னுதான் வழி. கடைசி ""பிரம்மாஸ்திரம்""அதுதான்.

    ஊர்கூடி முடிவு செய்து விட்டது.

    ரெக்கையும் அவனுடைய தகப்பனாரும் ஊர் காலில் விழுந்தார்கள்.

விழுந்தவர்கள் அப்படியே கிடந்தார்கள். யாரும் எந்திரி என்று சொல்லவில்லை.

அம்பலக்காரர் சொன்னார் - ""ஒண்ணு, வெள்ளாடுகளையெல்லாம் வித்துட்டு, செம்மறி ஆடுகளா வாங்கி வெச்சிக்கோ. இல்லெ; ஊரெ விட்டுஓடிப்போயிரு. இனிமேலும் ஊரு ஓங் கொடுமையைத் தாங்கிக்கிட முடியாதப்பா"".

ஊர்ப் பெரியவர்களில் ஒருவரான ராசையா சொன்னார் - "" ஊரை விட்டுப் போறது அடுத்தபடி. அதெ நாமெ சொல்ல வேணாம். இப்போதைக்குஇவனையும் இவங் குடும்பத்தையும் தள்ளி வச்சிருக்கொம்"".

தள்ளி வைக்கிறதுலயும் ரெண்டு வகை உண்டு. ஊர் கிணத்துல தண்ணி எடுக்கக்கூடாது. ஊர்க்கடைகளில் சாமான்கள் தரக்கூடாது. ஏகாலி, குடிமகன்இவர்கள் யாரும் இவர்களுக்கு வேலை செய்யக்கூடாது. யாரும் இவர்களை வேலைக்குக் கூப்பிடக்கூடாது. யாருமே இவர்களோடு பேசக்கூடாது. ஊருக்குஇவர்களோடு இனி - இந்த வினாடியிலிருந்து - எந்த நல்லது, பொல்லதும் கிடையாது.

இன்னொரு வகை - கடுமை நீங்கியது. யாரும் பேச வேண்டாம். இனிமேல் இவர்களோடு எந்த நல்லதும் பொல்லதும் கிடையாது. அவர்கள் வீட்டுக்குயாரும் போகக்கூடாது; அவர்களும் வரக்கூடாது.

பெரியவர் ராசையா, ரெண்டாவது மட்டும் இருக்கட்டும் என்றார்.

ஊர்க்கூட்டத்தில் அவர் சொல்லிவிட்டால் சரி.

இளவட்டங்களுக்கு ராசையாவின் சொல் பிடிக்கவில்லை. முணுமுணுத்துக்கொண்டே போனார்கள். இதெல்லாம் சரிப்பட்டு வருமா என்றார்கள். ஒரேவாரத்தில் சரிப்பட்டு வந்ததுதான் ஆச்சர்யம்!. ஒரு மவுனத்துக்கு இவ்வளவு வல்லமை உண்டா என்று நினைக்க வேண்டியதிருக்கிறது. முதல் நாள் காலையில் வீட்டை விட்டு வெளியே போன ரெக்கையின் குழந்தைகள் அழுது கொண்டே திரும்பி வந்தன. அப்பதான் ரெக்கை சாப்பிடஉட்கார்ந்திருந்தான். ரெக்கை எதை வேண்டுமானாலும் பொறுத்துக்கொள்வான். தன் குழந்தைகளின் கண்ணீரைக் கண்டால் அவனால் தாங்கிக்கொள்ளமுடியாது.

தங்களுடைய சேக்காளிகள் யாருமே அவர்களோடு பேசமாட்டோம் என்று சொல்லி விட்டார்கள். தெருவில் விளையாட்டுத் துணை யாருமில்லை . பக்கத்துவீடு, எதிர் வீட்டுப் பெரியவர்கள்கூட பார்த்ததும் முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்கள்.

எங்கே போவார்கள் பாவம். அழுதுகொண்டே வந்து விட்டார்கள். சுவரில் சாய்ந்து சரிந்து கொண்டே உட்கார்ந்து அந்தக் குழந்தைகள் கேவிஅழுகிறதை ரெக்கையால் பார்க்க முடியவில்லை.

கைப்பெட்டியில் பருத்தி கொண்டுபோய் கொடுத்து கடையில் பலசரக்கு வாங்கப்போன பொன்னம்மா (ரெக்கையின் தங்கச்சி) விடம் கடைக்காரன் என்னவேணுமென்று கேட்கவில்லை. இவள் தான் இன்னது வேணும் என்று சொன்னாள்; அவன் தந்தான். பக்கத்தில் நின்று சாமான் வாங்க வந்தவர்கள்பகையாளிகள் போல முகத்தை திருப்பி வைத்துக் கொண்டார்கள். எதுவும் பேசவில்லை.

நல்ல தண்ணிக் கிணற்றில் குடிநீர் சேந்தப்போன ரெக்கையின் சம்சாரத்துக்கும் இதே அனுபவம் ஏற்பட்டு கூனிக் குறுகித் திரும்பினாள்.

ரெக்கையின் வயசாளிப் பாட்டிக்கு கை பார்த்து மருந்து தரும் வைத்தியம் அன்று வர வேண்டியது, வரவில்லை.

பகல் வெளிச்சத்திலும் அந்த வீட்டில் இருள் குடி கொள்ள ஆரம்பித்துவிட்டது.

ஒரு நாள் கழிவது ஒரு யுகம் கழிவது போல் ஆகியது. மூணாவது நாள் பாட்டியின் உடல் நிலை மோசமாகியது.

தாத்தா ரெக்கையைக் கூப்பிட்டு வைத்து நல்லதனமாகச் சொன்னார். புத்தி கெட்ட பயலே, ஊரோட ஒத்துப் போகணும்டா - ஊரைப் பகைச்சவன்வேரோட அழிஞ்சு போயிருவாம்டா என்று ஆரம்பித்து, போன தலைமுறையில இதே ஊர்ல நடந்த ஒரு நடப்பைச் சொன்னார்.

இப்படித்தான் சங்கிலியானையும் ஊர் தள்ளி வச்சிட்டது. பேர் போக வாழ்ந்த அவனோட பாட்டன் செத்துப் போனாம். சாவுக் கொட்டு வாசிக்க யாரும்வரமாட்டேனுட்டாம். பிரேதத்தை குளுப்பாட்ட குடிமக மாத்து கொண்டு வரமாட்டேனுட்டா. இடுகாட்டுல குழி தோண்ட வெட்டியான்வரமாட்டேனுட்டாம்.

ரெண்டு நாளைக்கும் மேல ஆயிட்டது. வாடை வர ஆரம்பிச்சட்டது.

சாவு வீட்டுக்கு வந்த வெளியூர் ஆட்கள்தாம், சங்கிலியானை ஊர்க்காரருக்கு முன்னால் கொண்டு போயி நிறுத்தி கால்ல, கையில விழ வைச்சி செஞ்சகுத்தத்துக்கு பரிகாரம் பண்ணி பிறகுதாம் சவ அடக்கமே பண்ண முடிஞ்சது என்றார்.

சந்தைநாள் வரை காத்திருக்கவில்லை. ஒரே ஓட்டம் கோவில்பட்டிக்கு ஓடி பசையுள்ள ஆட்டுத்தரகனையும் வியாபாரிகளையும் கூட்டிக் கொண்டு வந்துமூணாம் பேருக்குத் தெரியாமல் வெள்ளாடுகள் பூராத்தையும் விலை பேசி விற்று விட்டார்கள்.

ஊர்க்கூட்டம் கூடியது.

ரெக்கையும் தகப்பனாரும் ரெண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி கும்பிட்டார்கள்.(ஊர்க் கால்களில் நெடுஞ்சாண்கிடையாக அவர்கள் விழவில்லை!)

மன்னித்தது ஊர் அவர்களை.

வருகிற, அம்மன் கோவில் கொடைச் செலவை ரெக்கையின் குடும்பம் சந்தோசத்தோடு ஏற்றுக்கொண்டது.

பாட்டி பிழைத்து எழுந்து உட்கார்ந்தாள். இப்போது கிடையில் பாதி ரெக்கையின் செம்மறி ஆடுகள்தான். ரெக்கையின் தகப்பனார் சாராயம் காய்ச்சிக்குடிப்பதை யாராலும் நிறுத்த முடியவில்லை. அது அவரோட விசயம் என்று விட்டு விட்டார்கள்.

இப்போது சொல்லுங்கள், ரெக்கைக்கு ஊர் தந்தது தீர்ப்பா, தண்டனையா?

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X