For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News
-வெ,இறையன்பு ஐஅகு

நான் போகிறேன்

நீ இரு

இரண்டு இலையுதிர் காலங்கள்?


-BUSON


காலங்களைக் கூட தரம் பிரிக்கிறோம்-பிரிப்பது நமது வசதியை வைத்துத்தான்-

இலையுதிர்காலமென்பது நமக்கு சோகமானது-

அதனால் மரத்துக்கும் சோகமாகத் தானிருக்க வேண்டுமென நினைக்கிறோம் -


இலையுதிர் காலத்தில் நமக்கு

காய் கிடைக்காது-

கனி கிடைக்காது-

இலைகளில்லாத காரணத்தால்-

நிழல் கிடைக்காது

மலர்களில்லாத காரணத்தால்

மணம் கிடைக்காது

எதுவுமில்லாத காரணத்தால்

பாடும் பறவைகளிருக்காது-

இசைக்கும் வண்டுகள் வராது-


எனவே எதுவுமே கிடைக்காததால்

இலையுதிர் என்பது வருத்தத்தின் வரவு-

சோகத்தின் சொரூபம்-


வருத்தத்தைக் காட்சிப்படுத்த எண்ணுகிறபோதெல்லாம்

இலையுதிர் காலம்

நமக்குக் குறியீடு ஆனது.


மரத்தின் உடலில் காதுகளை வைத்து

அவை தங்கள் அமைதியினூடே

என்ன பேசிக்கொண்டிருக்கின்றன

என்பதை நாம் பரிசோதித்திருக்கிறோமா?


இலையுதிர் காலம் என்பது மெளனம்-

இலையுதிர் என்பது விரதம்-

இலையுதிர் என்பது கர்ப்பம்-

இலையுதிர் என்பது தியானம்-

இலையுதிர் என்பது தவம்-


ஒவ்வொரு மரமும் இலையுதிரை எதிர்பார்த்து

காத்திருக்கிறது - நேசிப்புடன்,


எல்லா பாரங்களையும் உதிர்த்து வெறுமையாவதற்கு-

எல்லா சருகுகளையும் உதிர்த்து கனமிழப்பதற்கு-

கொஞ்ச காலமேனும்

அவற்றின் தனிமையில் யாரும் கல்லெறியாமலிருக்கும்

அந்த இனிமையான சுகானுபாவத்துக்கு-


மேலே அமர்ந்து எச்சமிடும் பறவைகளினால்

உடல் நனையும் உபாதையிலிருந்தும்-

நிழலில் அமர்ந்து சகலநேரமும்

வீண்கதை பேசுபவர்கள் இறக்கி வைக்கும்

சோகங்களை சுமக்காமலிருப்பதும்-

கனிகளுக்காகக் கல்லடிபடுவதிலிருந்தும்

சிறிது நாட்களேனும்

தனக்காக மட்டுமே வாழும்

உன்னதம் இலையுதிர் காலத்தில் மட்டுமே கிடைக்கிறது.


மரம் மரத்தன்மையை இழந்து

மரத்துப் போக விரும்புமா?


இலையுதிர் பட்டுப் போகிற அடையாளமில்லை-

அது ஊமையற்ற மெளனம்-

எண்ணமற்ற அமைதி

பசியற்ற விரதம்;

ஆசையற்ற பக்குவம்-


இலையுதிர் காலத்தில் மரம் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது-

எத்தனை நாள் பழைய இலைகள்-

புதிய துளிர்களும்

புதிய மொட்டுக்களும்

புதிய மகரந்தமும்

உயிர்த்தெழுவதற்கு

இலையுதிர் என்னும் இந்த வைராக்கியம் தேவை


மரத்துக்கும் புதிய ஆடை உடுத்தும்

எண்ணம் தோன்றாதா?


இலையுதிர் என்னும் கர்ப்பத்தில்

மரம் தன்னையே பிரசவிக்கிறது.


கவிதையும்

கவிஞனும் ஒரே நேரத்தில் பிரசவம் ஆவதுபோல்-


தாயும், சேயும்

ஒரே நேரத்தில் பிறப்பதுபோல்


வசந்தம் வரும்போது மட்டுமே தன்னுடைய

வாசலுக்கு வந்த மனிதர்களில்

எத்தனை பேர்

இலையுதிரில் தன்னை நாடு வருகிறார்கள்

என்று மரம் கணக்குப் போட்டுப் பார்க்கிறது-

அப்போது உண்மையான மனிதர்களை

அதன் ஆத்மா அடையாளம் காணுகிறது.


மரத்துக்கு மட்டுமல்ல-

மனிதனுக்கும் இலையுதிர் உண்டு-


துறவு இலையுதிர்-

ஆசைகளை உதிர்ப்பதால்-

உறவுகளை உதிர்ப்பதால்-

எண்ணங்களை உதிர்ப்பதால்-

கனவுகளை உதிர்ப்பதால்-


"உதிர்க்கிறோம் என்ற உணர்வையும், பெருமிதத்தையும்

உதிர்க்கும்போது துறவு முற்றுப் பெறுகிறது.


துறவு இனிப்பதற்குக் காரணம்

அது பாரமற்று இருப்பதால்-

கனமிழந்து இருப்பதால்.


இலையுதிர் காலத்து மனிதனும்-

துறவு பூண்ட மரமும்

ஒரே தன்மையுடன்-


அவனுக்கும் சில ஆர்வங்கள்-

தனக்குள் புதிய துளிர்கள்-

புதிய வெளிச்சம்

புதிய ஞானம்

துளிர்க்கவேண்டும் என்று.

தன்னை முற்றிலுமாக அழித்துக்கொண்டு

யாருமற்றதாக ஆகிவிட வேண்டுமென்று.


இலையுதிர் காலத்து மரத்துக்கு அடையாளமேதுமில்லை

மலரில்லை, காயில்லை, கனியில்லையெனில்

மரத்துக்கு எதற்குப் பெயர்?

துறவிக்கும் பெயரில்லை-


"நான் போகிறேன்-

நான் போகும்போதுதான்-

துறவு ஆரம்பமாகிறது-


நான் போவதற்கு அனைத்தும்

உதிர்ந்தாகவேண்டும்-


BUSON சொல்கிறார்-


"நானும் ஓர் இலையுதிர் காலம்-

நீயும் ஓர் இலையுதிர் காலம்-

ஒரே இடத்தில் இரண்டு இலையுதிர் காலங்களெதற்கு?

அதனால் நான் போகிறேன்""-


சரி-ஏன் போகவேண்டும்-

""உன்னோடு நான் இருந்தால்

நான் உதிர்த்தவற்றை நீ

நினைவுபடுத்திக் கொண்டேயிருப்பாய்-

அதனால் உதிர்ந்த "நான்

என்னோடு ஒட்டிக்கொண்டாலும்

ஒட்டிக் கொள்ளும்-


நரமே! நீ உதிர்த்தவை ஒருபோதும் ஒட்டிக்கொள்ளாது.

நான் உதிர்த்தவை

ஒட்டிக் கொள்ளாதவையாகவே நீடிக்க

நான் போகிறேன் - என்

"நான் முற்றிலுமாகப் போகும்வரை

எனக்குள் ஞானம் புதிதாகப் பூக்கும் வரை-


ஆம்!

"உதிர்ந்துவிட்டோம் என்கிற எண்ணத்தையும்

உதிர்ப்பதே சிறந்த இலையுதிர்!


(தூறல் வரும்)

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X