For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2வது கிரிக்கெட் டெஸ்ட்: ஜிம்பாப்வே அபார வெற்றி

By Staff
Google Oneindia Tamil News

ஹராரே (ஜிம்பாப்வே):

இந்தியாவுக்கு எதிரான 2வது கிரிக்கெட் டெஸ்டில் ஜிம்பாப்வே அபார வெற்றி பெற்று, தொடரை சமன் செய்துவிட்டது.

4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்ற ஜிம்பாப்வேக்கு இது ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவெற்றியாகும். இன்னும் ஒரு நாள் ஆட்டம் மீதம் இருக்கும் நிலையில், சரியாக 54வது ஓவரின் இறுதிப் பந்தில்,ஆன்டி பிளவர் அடித்த பவுண்டரி, ஜிம்பாப்வே அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தது.

முன்னதாக, 4 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் என்ற நிலையில், 4வது நாள் ஆட்டத்தைத் தொடங்கியது இந்தியஅணி. ஆனால், மடமடவென்று விக்கெட்டை இழந்ததுதான் மிச்சம். ஒருவரும் நிலைத்து நின்று ஆடவில்லை.

ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திரேயே, "முட்டை" ரன்னுக்கு ஆட்டமிழந்தார் கேப்டன் கங்குலி. துவக்கஆட்டக்காரராக களத்தில் நிலைத்து நின்று கொண்டிருந்த தாஸும், அடுத்த சில நிமிடங்களிலேயே, ஸ்ட்ரீக் வீசியபந்துக்கு கிளீன் போல்டு ஆகி, பெவிலியன் திரும்பினார்.

ஹேமங் பதானி மட்டும் நின்று நிதானமாக மட்டை போட்டு ஆடிக் கொண்டிருந்தார். ஆனால், அவருக்குத்துணையாக யாராவது நின்றால்தானே? ஏதோ பிக்னிக் வந்தவர்களைப் போல, பிட்ச் பக்கம் வந்து, சுற்றிப்பார்த்துவிட்டு, யார் கையிலாவது பந்தை கேட்ச் கொடுத்து விட்டு, பெவிலியன் நோக்கிப் படையெடுக்கஆரம்பித்தனர்.

பதானி ஆட்டமிழக்காமல், ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 50 பந்துகளில் 16 ரன்களை அடித்திருந்த நேரத்தில்,இந்தியா 234 ரன்களுக்கு 2வது இன்னிங்ஸை இழந்து நின்றது.

ஜிம்பாப்வேயின் பிளிக்நாட் 5 விக்கெட்டுகளையும், ஸ்ட்ரீக் 4 விக்கெட்டுகளையும், ப்ரெண்டு ஒருவிக்கெட்டையும் வீழ்த்தினர்.

157 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன், சுறுசுறுப்பாக விளையாட வந்த ஜிம்பாப்வே அணி,மிகவும் பொறுமையாக ஆடத் தொடங்கியது.

இன்னும் முழுதாக ஒன்றரை நாள் இருக்கிறதே; அதனால், எத்தனை பேர் அவுட் ஆனாலும் சரி, வெற்றி பெறாமல்விடமாட்டோம் என்ற துணிவுடன், கவலையில்லாமல் ஆடியது ஜிம்பாப்வே அணி.

இந்திய பந்து வீச்சாளர்களும் எப்படியாவது அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி விடுவது என்றஉத்வேகத்துடன் பந்துகளை வீசிப் பார்த்தார்கள். ஒன்றும் எடுபடவில்லை.

கடைசியில் அகர்கர் வீசிய ஓவரின் இறுதிப் பந்தை ஆன்டி பிளவர் பவுண்டரிக் கோட்டுக்கு அனுப்ப, 157ரன்களைப் பெற்று வெற்றி வாகை சூடியது ஜிம்பாப்வே அணி. அது மொத்தம் 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

ஜிம்பாப்வே பேட்ஸ்மேன் கார்லிஸ்லி 62 ரன்கள் எடுத்து, ஜிம்பாப்வே வெற்றிக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்ததோடு மட்டுமின்றி, இறுதி வரை ஆட்டமிழக்காமலும் இருந்தார்.

இந்தியாவின் ஸ்ரீநாத்தும் நெஹ்ராவும் தலா 2 விக்கெட்டுகளைச் சாய்த்தனர். அகர்கரும் ஹர்பஜன் சிங்கும்ஆளுக்கொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜிம்பாப்வேயின் பிளிக்நாட், ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2 டெஸ்ட்பந்தயங்களிலும் சிறப்பாக ஆடி, "தொடர் நாயகன்" ஆனார் இந்தியாவின் சிவ்சுந்தர் தாஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X