பிறந்த வீட்டில் பர்வேஸ்
டெல்லி:
டெல்லியில் உள்ள தான் பிறந்த வீட்டை தனது மனைவியுடன் சென்று பார்த்தார் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ்முஷாரப்.
டெல்லி தர்யாகஞ்ச் பகுதியில் உள்ள நெகர் ஹவேலி என்ற அந்த வீடு முஷாரபின் தாத்தாவுக்குச் சொந்தமானது.
இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்தபோது இந்த வீட்டையும் நாட்டையும் விட்டுவிட்டு பர்வேஸின் தாத்தாபாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்தார். உடன் அவரது மகன்கள், மகள்களும் பாகிஸ்தான் சென்றனர்.
அப்போது பர்வேஸ் முஷாரபுக்கு வயது 4.
இந்தியா வரும்போது தான் பிறந்து வளர்ந்த அந்த வீட்டைப் பார்க்க விரும்புவதாக பிரதமர் வாஜ்பாயிடம் ஆர்வம்தெரிவித்திருந்தார் பர்வேஸ். உடனடியாக அதற்கான ஏற்பாடுகளை செய்ய பிரதமர் டெல்லி அரசுக்குஆணையிட்டார்.
இதையடுத்து அந்தப் பகுதியும் வீடும் புதுப்பிக்கப்பட்டது. அந்தப் பகுதி சுத்தப்படுத்தப்பட்டது. உடைந்துபோனபகுதிகள் இடிக்கப்பட்டன. பிற அழுக்கடைந்த பகுதிகள் அட்டைகள் மற்றும் அலங்காரங்கள் மூலம்நவீனப்படுத்தப்பட்டன.
ஞாயிற்றுக்கிழமை காலை இந்தியா வந்திறங்கிய பர்வேஸ் பிற்பகலில் இந்த வீட்டுக்குச் சென்றார். அவருடன்அவரது மனைவி ஷெபாவும் சென்றார்.
இந்தப் பகுதிக்கு வந்த பர்வேஸை தொகுதி எம்.எல்.ஏ. இக்பால் மற்றும் அப் பகுதி மக்கள் வரவேற்றனர்.பர்வேஸை சிறுவனாக இருந்தபோது பார்த்த 75 வயது முதிய பெண்மணியான அனாரு என்பவர் முஷாரபை கட்டித்தழுவி வரவேற்றார்.
அந்த அம்மையாருடன் நீண்ட நேரம் பர்வேஸ் பேசினார். சிறுவனாக இருந்தபோது அதிக சேட்டைகள் செய்யும்பிள்ளையாக பர்வேஸ் இருந்ததாக அனாரு சுட்டிக் காட்ட பர்வேஸ் ரசித்து சிரித்தார்.
பின்னர் கடந்த 50 ஆண்டுகளில் இடிக்கப்பட்டது போக மீதமுள்ள அந்த வீட்டின் பகுதிகளை பர்வேஸ் சுற்றிப்பார்த்தார். மிகுந்த உணர்ச்சிப்பூர்வமாக இருந்த பர்வேஸ், மகிழ்ச்சியுடன் வீட்டை சுற்றிப் பார்த்தார்.
தன் பழைய நினைவுகளில் மூழ்கிய பர்வேஸ், தனது மனைவியிடமும் வீடு குறித்து விளக்கினார்.
பர்வேஸ் வருகையையொட்டி அந்தப் பகுதி குறித்த ஒரு புகைப்படக் கண்காட்சிக்கும் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு புகைப்படத்தையும் பார்த்து விளக்கங்கள் கேட்டவாறு இருந்தார்.
அந்தப் பகுதி குறித்து எழுதப்பட்ட புததகங்களும் அவருக்கு வழங்கப்பட்டன.
கிட்டத்தட்ட 20000 சதுர அடி அளவுள்ள இந்த வீடு மற்றும் சுற்றுப் புற பகுதிகள் முழுவதும் மிக பலத்த பாதுகாப்புப்போடப்பட்டிருந்தது. பல பகுதிகள் கொண்ட இந்த கட்டடத்தில் வசித்து வரும் 15 குடும்பங்களும் பாதுகாப்பு என்றபெயரில் கிட்டத்தட்ட வீடுகளிலேயே சிறை வைக்கப்பட்டிருந்தன.
தனது அதிபர் உடை, பாவனையை விட்டுவிட்டு மிக காஷுவலாக ஊதா நிற சட்டையும் காட்டன் பேண்ட்ஸ்சும்அணிந்து தனது வீட்டை சுற்றிப் பார்த்தார் பர்வேஸ்.