தொடரும் குஜராத் வன்முறை: ஒருவர் குத்திக் கொலை
அகமதாபாத்:
குஜராத்தில் மீண்டும் தலைதூக்கிய வன்முறைக்கு கடந்த 2 நாள்களில் இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு கோத்ராவில் மீண்டும் வன்முறை வெடித்தது. இதையடுத்து வன்முறைக் கும்பலைக்கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில் அகமதாபாத்தின் கலுப்பூர் பகுதியில் நேற்றிரவு திடீர் வன்முறை ஏற்பட்டது.
மூன்று பேர் சேர்ந்து கொண்டு ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவரை கூர்மையான ஒரு ஆயுதத்தால்வயிற்றில் குத்தினர். இதில் அந்த நபர் சம்பவம் நடந்த இடத்திலேயே பிணமாகிச் சரிந்தார்.
இதையடுத்து அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. கடைகளும் வீடுகளும் வாகனங்களும்கொளுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதற்கிடையே நேற்று வன்முறை ஏற்பட்ட கோத்ராவில் காலவரையற்ற ஊரடங்கு தொடர்ந்து அமலில் உள்ளது.


