For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீரப்பனிடம் இருந்து கேசட் வந்தது: அமைச்சரை தூது அனுப்ப சொல்கிறான்

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

சந்தனக் கடத்தல் வீரப்பனிடம் இருந்து நேற்றிரவு இன்னொரு கேசட் வந்துள்ளது. அதில் தன்னுடன் பேச்சு நடத்த தூதுவராக கொளத்தூர்மணி அல்லது உணவுப் பதப்படுத்தல் துறை அமைச்சர் ராஜூ கெளடாவை அனுப்ப வேண்டும் என அவன் கோரிக்கை விடுத்துள்ளான்.

இந்தக் கோரிக்கையை ஏற்க கர்நாடக அரசு மறுத்துவிட்டது.

அதே நேரத்தில் இந்த கேசட்டே போலியானது என அமைச்சர் ராஜூ கெளடா கூறியுள்ளார். தன்னை சிக்கலில் மாட்ட வேண்டும்என்பதற்காக இந்த கேசட்டை சிலர் போலியாக உருவாக்கி அனுப்பியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவை அவன் கடத்திச் சென்று 70 நாட்கள் ஆகிவிட்டன. அவரை விடுவிக்க வேண்டுமானால்தன்னுடன் பேச்சு நடத்த வேண்டும் எனவும் அதற்கு கொளத்தூர் மணியை தூதுவராக அனுப்ப வேண்டும் எனவும் கடந்த கேசட்டுகளில்வீரப்பன் நிபந்தனை விதித்திருந்தான்.

மேலும் அதிரடிப்படையினரை வாபஸ் பெற வேண்டும் என்று கோரியிருந்தான். இதையடுத்து கர்நாடகம் தனது அதிரடிப்படையின்தீவிரத்தைக் குறைத்துக் கொண்டுவிட்டது. ஆனால், தமிழக அதிரடிப்படை தொடர்ந்து மும்முரமாக வீரப்பனைத் தேடி வருகிறது.

கொளத்தூர் மணி மீது கர்நாடகத்தில் பல வழக்குகள் இருப்பதால் அவர் சிறையில் இருந்து வருகிறார். சில வழக்குகளில் ஜாமீன்கிடைத்தாலும் கூட மேலும் சில வழக்குகளில் அவர் தொடர்ந்து சிறையிலேயே உள்ளார். இதனால் அவரை தூதுவராக அனுப்புவதில்சட்டச் சிக்கல் உள்ளது.

இதனால் தூதுவர் விஷயத்தில் கையைப் பிசைந்து வந்தது கர்நாடகம். இந் நிலையில் கொளத்தூர் மணி அல்லது அமைச்சர் ராஜூகெளடாவை அனுப்பலாம் என்று வீரப்பன் புதிய கேசட் மூலம் தகவல் அனுப்பியுள்ளான்.

ராஜூ கெளடாவும் நாகப்பாவும் அரசியல் எதிரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் ஹொன்சூர் தொகுதியைச் சேர்ந்தவர்கள். கடந்ததேர்தலில் நாகப்பாவைத் தோற்கடித்துத் தான் ராஜூ கெளடா அமைச்சரானார்.

இருவரும் ஒருவரை ஒருவரை மிகக் கடுமையாக விமர்சிப்பது வழக்கம். ராஜூ கெளடாவுக்கும் வீரப்பனுக்கும் தொடர்பு இருப்பதாகநாகப்பா பலமுறை குற்றம் சாட்டி வந்துள்ளார்.

அந் நிலையில் தான் நாகப்பாவைக் கடத்தினான் வீரப்பன்.

இப்போது நாகப்பாவின் அரசியல் எதிரியும் அமைச்சருமான ராஜூ கெளடாவை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளான் வீரப்பன்.

அமைச்சரை அனுப்ப மாட்டோம்:

அமைச்சரைப் பிடித்து வைத்துக் கொண்டு வீரப்பன் தகராறு செய்தால் நிலைமை மிகவும் மோசமாகிவிடும் என்பதால் இந்த யோசனையைஏற்க கர்நாடக அரசு மறுத்துவிட்டது. அமைச்சரையோ அல்லது எம்.எல்.ஏவையோ தூதுவராக அனுப்ப மாட்டோம் என கர்நாடக உள்துறைஅமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே இன்று தெரிவித்துவிட்டார்.

மணியை அனுப்புவதில் எங்களுக்குப் பிரச்சனையில்லை. ஆனால், அவர் ஜாமீன் வாங்கி வெளியே வந்தால் தான் அதைச் செய்ய முடியும்என்றார்.

இது போலி...

அதே நேரத்தில் தனக்கும் வீரப்பனுக்கும் தொடர்பு இருப்பதாக புரளி கிளப்பி வரும் நபர்கள் தான் இந்த கேசட்டை உருவாக்கிஅனுப்பியுள்ளதாகவும் தன்னை அரசியல்ரீதியில் ஒழித்துக் கட்ட முயற்சி நடப்பதாகவும் ராஜூ கெளடா கூறியுள்ளார். அவர் கூறுகையில்,நான் தூதுவராக வர வேண்டும் என்றால் கேசட்டை எனக்கோ அரசுக்கோ தான் வீரப்பன் அனுப்பி இருப்பான். ஆனால், இப்போது என்னைமாட்டிவிட முயற்சி நடக்கிறது.

இந்த சதி குறித்து முதல்வருக்கு ஒரு வாரத்துக்கு முன்பே கடிதம் எழுதிவிட்டேன் என்றார்.

நேற்று இரவு இந்த புதிய கேசட் நாகப்பாவின் வீட்டுக்கு வந்து சேர்ந்தது. காமகரேயில் உள்ள நாகப்பாவின் வீட்டின் முன் இந்த கேசட்கிடந்தது. அதை எடுத்துக் கொண்டு நாகப்பாவின் மகனும் மருமகனும் பெங்களூர் விரைந்து வந்து அமைச்சர் கார்கேயிடம் ஒப்படைத்தனர்.

இந்தக் கேசட்டில் நாகப்பாவும் சில நிமிடங்கள் பேசியுள்ளார். கடும் மழையால் தனது உடல் நிலை மிகவும் மோசமாகிவிட்டதாகவும்தன்னைக் காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாகப்பா அதில் கோரிக்கை விடுத்துள்ளார்.

விலங்குகள், பூச்சிகளின் பெரும் இரைச்சலுக்கு மத்தியில் அவரது நடுக்கமான குரல் கேசட்டில் கேட்கிறது.

ஐக்கிய ஜனதா தளத் தலைவர்களில் ஒருவரான மகாதேவசாமியை தூதராக அனுப்ப வேண்டாம் என வீரப்பன் அதில் கூறியுளளான்.மகாதேவ சாமியை அனுப்புவதாக இருந்தால் கொளத்தூர் மணியுடன் தான் அனுப்ப வேண்டும் என்று வீரப்பன் கூறியுள்ளார். மணியைஅனுப்ப முடியாவிட்டால் ராஜூ கெளடாவை அனுப்பலாம் என்று கூறியுள்ளான். வீரப்பன் முழுக்க முழுக்க தமிழில் தான் பேசியுள்ளான்.

இந்த கேசட் உண்மையானது தானா என்று ஆராய போலீசாருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

நாகப்பா கடத்தப்பட்டபோது வீரப்பனுடன் சென்று பேச்சு நடத்தத் தயார் என்று தானாகவே அறிவித்தவர் ராஜூ கெளடா. ஆனால்,இப்போது தனக்கு வீரப்பனையே தெரியாது என்றரீதியில் பேச ஆரம்பித்துள்ளார்.

இது வீரப்பனிடம் இருந்து வந்த 4வது கேசட் என அரசு கூறுகிறது.

நேற்று தான் வீரப்பனைச் சந்தித்துவிட்டு வந்த ஆதிவாசி ஒருவனும் கர்நாடக அதிரடிப்படையினரிடம் சிக்கினான்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X