இந்தியா இப்படி.. சீனா அப்படி...
பெய்ஜிங்:
தனது நாட்டைச் சேர்ந்த பெண் தொழிலதிபரை அமெரிக்க அதிகாரிகள் தவறாக நடத்தியதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மற்ற நாடுகளிடம் அமெரிக்கா அராஜகம் செய்ய ஆரம்பித்துள்ளதாகக் கூறியுள்ள சீன அரசு, இது குறித்து விசாரணை நடத்தி அமெரிக்க அதிகாரிகளைக் கண்டிக்க வேண்டும் என்றும் அந் நாட்டு வெளியுறவு அமைச்சர் காலின் பாவலிடம் அதிகாரப்பூர்வமாகக் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்திய பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது அமெரிக்கா சென்ற ஜார்ஜ் பெர்னாண்டஸை டல்லஸ் விமான நிலையச்சில் கையை மேலே தூக்கச் சொல்லியும், ஷூக்களை கழற்றச் சொல்லியும், உடைகளைக் களைந்தும் கேவலப்படுத்தினர் அமெரிக்க அதிகாரிகள்.
அந்த விவகாரத்தை அப்போதைய பா.ஜ.க. அரசு வெளியில் மூச்சு காட்டவில்லை. அப்படியே மூடி மறைத்தது. இப்போது ஆட்சிக்கு வந்துள்ள காங்கிரஸ் அரசும் அது தொடர்பாக அமெரிக்காவுக்கு கண்டனம் ஏதும் தெரிவிக்கவில்லை.
ஆனால், தனது நாட்டைச் சேர்ந்த 37 வயது தொழிலதிபரான ஸோ யான் என்ற பெண்ணை கனடா நாட்டு எல்லையில் வைத்துத் தாக்கிய அமெரிக்க அதிகாரிகள் மீது சீனா கடுமையாக பாய்ச்சல் காட்டியுள்ளது.
நயாகரா நீர் வீழ்ச்சி அருகே அந்த சீனப் பெண் நின்று கொண்டிருந்தபோது, அவரிடம் போதைப் பொருள் சோதனை நடத்துவதாகக் கூறி அமெரிக்க கஸ்டம்ஸ் அதிகாரிகள் அத்துமீறியுள்ளனர்.
இது குறித்து அறிந்தவுடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காலின் பாவலை தொடர்பு கொண்ட சீன வெளியுறவு அமைச்சர் லீ ஸாஸிங், அந்த அதிகாரிகள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும் சீன அரசு பத்திரிக்கையும் இச் சம்பவம் குறித்து எழுதியுள்ள தலையங்கத்தில் அமெரிக்காவை வறுத்து எடுத்துள்ளது. வளர்ந்து வரும் அமெரிக்க அராஜகத்தின் ஒரு பகுதிதான் இது என்று கூறியுள்ள, சீன அரசு, மனித உரிமைகளைப் பாதுகாக்க வந்த தேவ தூதனாக இனியும் அமெரிக்கா தன்னைத் தானே கூறிக் கொள்ளக் கூடாது என்றும் கூறியுள்ளது.
மற்ற நாட்டினரின் உயிரை விட தங்களது உயிரும் மரியாதையும் மட்டுமே மிக உயர்வானது என அமெரிக்கா நினைக்கிறது. கற்பனையான காரணங்களுக்காக யாரை வேண்டுமானாலும் கொல்வார்கள், ஒரு பெண்ணைக் கூட அடித்து துன்புறுத்துவார்கள்.
தங்களது தவறான செயல்பாடுகளால், அமெரிக்க அதிகாரிகள், தங்கள் நாடு குறித்து கேவலமான கருத்தை உலகம் முழுவதும் உருவாக்கி வருகிறார்கள் என்று வாட்டி எடுத்துள்ளது..
இந்த விவகாரத்தை இந்தியா போல மெளமாக இல்லாமல், பூதகரமான பிரச்சனையாக்க சீனா முயல்வதால், தவறாக நடந்து கொண்ட கஸ்டம்ஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக சீனாவிடம் உறுதியளித்துள்ளார் காலின் பாவல்.


