ரமேஷ் தற்கொலைக்கும் அப்பு காரணம்?
சென்னை:
முன்னாள் சென்னை மேயர் ஸ்டாலினின் நண்பரான அண்ணா நகர் ரமேஷ் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டதற்கு அப்புவே காரணம் என போலீஸ் தரப்பு சந்தேகப்படுகிறது.
சங்கரராமன் கொலை வழக்கு ஒருபக்கம் படு சூடாக சென்று கொண்டிருக்கும் அதே சமயம், சென்னை அண்ணா நகர் ரமேஷ்குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட வழக்கையும் போலீஸார் தூசி தட்டி எடுத்துக் காண்டிருக்கிறார்கள்.
அண்ணா நகர் ரமேஷ் தற்கொலை வழக்கிலும் அப்புவுக்குத் தொடர்பு இருப்பதாக போலீஸ் தரப்பு பலமாக சந்தேகப்படுகிறது.ஸ்டாலினின் மிக நெருங்கிய நண்பராக இருந்தவர் ரமேஷ். அவருக்கு டிரைவர் போலவும் செயல்பட்டவர்.
திமுக ஆட்சியில் இருந்தபோது ரமேஷ் மிகப் பெரும் செல்வாக்குடன் திகழ்ந்தவர். இந் நிலையில் ஆட்சி மாறி அதிமுக பதவிக்குவந்தது. அப்போது காண்டிராக்டர் தெய்வசிகாமணி என்பவர் போலீஸில் ஒரு புகார் கொடுத்தார். அதில் திமுக முன்னாள் எம்.பி.பரசுராமன், அண்ணா நகர் ரமேஷ், ரவுடி பங்க் குமார் ஆகியோர் தன்னை மிரட்டி ரூ. 7 கோடி கேட்டதாக கூறியிருந்தார்.
இந்த வழக்கில் ரமேஷ் தலைமறைவானார். அவரது குடும்பத்தினரை போலீஸார் விசாரித்தனர். இந் நிலையில் தலைமறைவாகஇருந்த ரமேஷ் திடீரென்று தனது வீட்டில் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டார். அவரது 11 மாதமே ஆன குழந்தையும்விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டிருந்தது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த தற்கொலை வழக்கு காலப்போக்கில் அப்படியே விடப்பட்டது. இந் நிலையில் இந்த வழக்குதற்போது மீண்டும் உயிர் பெற்றுள்ளது. சங்கரராமனைத் தீர்த்துக் கட்டிய அப்புதான், ரமேஷ் தற்கொலைக்கும் முக்கியக் காரணம்என போலீஸார் பலமாக நம்புகின்றனர்.
அப்புவுக்கும் அப்போதைய திமுக அமைச்சர் ஒருவருக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு என்றும் அந்த அமைச்சரின் நிழல்போல இருந்தவர் அப்பு என்றும் போலீஸ் தரப்பு கூறுகிறது.
எனவே அந்த அமைச்சரின் உத்தரவின் பேரில் ரமேஷுக்கு நெருக்குதல் கொடுத்து அவரைத் தற்கொலை செய்ய அப்புதூண்டியிருக்கலாம் அல்லது விஷம் கொடுத்துக் கொன்றிருக்கலாம் என்று போலீஸ் தரப்பு சந்தேகிக்கிறது.
எனவே சங்கரராமன் மற்றும் ரமேஷ் தற்கொலை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள அப்புவைப் பிடிக்க போலீஸார் தீவிர வேட்டையில்இறங்கியுள்ளனர். அப்பு பிடிபட்டால் இரண்டு முக்கிய வழக்குகளின் முழுப் பின்னணியும் தெரிந்து விடும்.


