சங்கராச்சாரியாரின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் தாக்கல் செய்த இரண்டாவது ஜாமீன் மனுவையும் இன்று சென்னை உயர் நீதிமன்றம்தள்ளுபடி செய்துவிட்டது.
இந்தக் கொலையில் ஜெயேந்திரருக்கு தொடர்பு இருப்பதற்கான அடிப்படை ஆதாரங்களை போலீசார் சமர்ப்பித்ததால் இந்தஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.
சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெயேந்திரர் தாக்கல் செய்த ஜாமீன் மனு ஏற்கனேவே உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. இதையடுத்து இரண்டாவது முறையாக அவர் ஜாமீன் கோரி மனு தாக்கல்செய்தார்.
இந்த மனு மீது விசாரணை நடந்தபோது ஜெயேந்திரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஐ.சுப்பிரமணியம்,
இந்திய தண்டனைச் சட்டம் 437(1) (1)-வது பிரிவில் கீழ் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கும்படியானகுற்றத்தில் ஈடுபட்டுக் கைதானவர்களுக்கு மட்டுமே ஜாமீன் அளிக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 439வதுபிரிவின்படி வழக்குகளில் ஜாமீன் வழங்க நீதிமன்றங்களுக்கு சிறப்பு அதிகாரங்களை வழங்கப்பட்டுள்ளது என்றனர்.
இதை எதிர்த்து வாதிட்ட போலீஸ் தரப்பு வழக்கறிஞர் கே.டி.எஸ். துல்சி, இந்த இரு பிரிவுகளையும் தனித்தனியே பிரித்துப்பார்க்க முடியாது. இரு பிரிவுகளையும் ஒன்றாக வைத்துத் தான் நீதிமன்றம் தீர்ப்பளிக்க முடியும். இந்த வழக்கில் தனது குற்றத்தைசங்கராச்சாரியாரே ஒத்துக் கொண்டுவிட்டார். இதற்கான ஆதாரம் உள்ளது. எனவே ஜாமீன் தரக் கூடாது என்றார்.
இதையடுத்து இந்த மனு மீதான தீர்ப்பை நவம்பர் 30ம் தேதியன்று தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.
இந் நிலையில் டிசம்பர் 2ம் தேதி ஜெயேந்திரரின் சார்பில் மீண்டும் நீதிமன்றத்தை அணுகிய வழக்கறிஞர் ஐ.சுப்பிரமணியம், 437,439வது பிரிவுகள் குறித்து சில சந்தேகங்களைக் கிளப்பினர். இந்த மனு மீது மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்றனர்.
அப்போது பேசிய அரசு வழக்கறிஞர், இதற்கான விளக்கத்தை துல்சி அளிப்பார். அவர் உச்ச நீதிமன்ற வழக்குகளில் பிஸியாகஇருப்பதால் அவர் ஆஜராக கால அவகாம் வேண்டும் என்றார்.
இதையடுத்து மீண்டும் கடந்த 6ம் தேதி இந்த வழக்கில் ஆஜரான துல்சி, சட்டரீதியில் தனது வாதங்களை அடுக்கினார். 437(1)(1)வது பிரிவையும் 439வது பிரிவையும் ஏன் பிரித்துப் பார்க்கக் கூடாது என்பதற்கான காரணங்களை பல்வேறு வழக்குகளைமுன்னுதாரணம் காட்டி விளக்கினார் துல்சி.
இதை அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்க்க, விவாதம் நீண்டு கொண்டே போனது. மேலும் விவாதத்தில் காரசார மோதலும்நடந்தது. இறுதியில் தீர்ப்பை மீண்டும் தேதி குறிப்பிடாமல் நீதிபதி பாலசுப்பிரமணியம் ஒத்திவைத்தார்.
இந் நிலையில் இன்று இந்த மனு மீது தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது சங்கராச்சாரியாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தநீதிபதி பாலசுப்பிரமணியம் கூறியதாவது:
439வது பிரிவின் கீழ் ஜாமீன் வழங்க முடியும் என்றாலும் அதற்கான சாத்தியத்தை 437(1) (1) தடுக்கிறது. மேலும் இந்த வழக்கில்அரசுத் தரப்பு தாக்கல் செய்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது இந்தக் கொலையில் ஜெயேந்திரருக்கு தொடர்புஇருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை.
இப்போது விசாரிக்கப்படுவது ஜாமீன் மனு தான். இதனால் அடிப்படை ஆதாரம் உள்ளதா என்பதை மட்டுமே இந்த நீதிமன்றம்பார்க்க முடியுமே தவிர, மேலும் சாட்சியங்களை கேட்க முடியாது.
சங்கரராமனை எப்படியாவது ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற முடிவுக்கு சங்கராச்சாரியார் வந்ததாக போலீஸ் தரப்பு கூறுகிறது.இதற்கு சாட்சியாக போலீசார் ஒப்படைத்துள்ள சங்கரராமனின் கடிதங்களில் சங்கராச்சாரியாருக்கு எதிரான பல வாதங்கள்உள்ளன.
மேலும் கொலையாளிகளுக்கும் மடத்துக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல், கொலையாளிகளிடம் இருந்துகைப்பற்றப்பட்ட பணம் ஆகியவையும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான சாட்சிகளாக உள்ளன. மேலும்இந்தக் கொலையாளிகளை 4 பேர் அடையாள அணிவகுப்பின் போது சரியாக அடையாளம் காட்டியுள்ளனர்.
இதைத் தவிர ஜெயேந்திரரின் காவலை நீடித்து காஞ்சிபுரம் நீதிமன்றம் பிறப்பித்த ரிமாண்ட் உத்தரவின் மை காயும் முன்னரேஇந்த ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவையெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் இந்த வழக்கில் சதித் திட்டம் தீட்டியதாகத் தான் ஜெயேந்திரர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சதியை போலீசார் நிரூபிக்க நேரடி சாட்சிகள் அல்லது சந்தர்ப்ப சூழ்நிலை அடிப்படையிலான சாட்சிகள்தேவை என்று நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
அரசுத் தரப்பு வழக்கறிஞரான கே.டி.எஸ். துல்சியில் மிக நுணுக்கமான சட்ட பாயிண்டுகளால் தான் இம்முறை ஜெயேந்திரரின்ஜாமீன் வாய்ப்பு பறிபோயுள்ளது.
இந்த சங்கரராமன் கொலை வழக்கில் வரும் 10ம் தேதி வரை சங்கராச்சாரியாரை நீதிமன்றக் காவலில் வைக்க காஞ்சி நீதிமன்றம்உத்தரவிட்டது. நாளை மறுதினத்துடன் இந்தக் காவல் முடிகிறது. இதனால் வெள்ளிக்கிழமை அவர் காஞ்சி நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்படுவார்.
அப்போது அவரது மேலும் காவலை நீட்டிக்க ஜெயேந்திரரின் வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாதாட உள்ளனர்.
ஆடிட்டர் வழக்கு:
இதற்கிடையே, ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் சங்கராச்சாரியார் தாக்கல் செய்த மனு மீது வரும் 10ம் தேதிதான் சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.
சங்கராச்சாரியார் கடந்த மாதம் 11ம் தேதி கைது செய்யப்பட்டார். 27 நாட்களாக சிறையில் இருந்து வருகிறார்.












Click it and Unblock the Notifications