For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆட்சியில் பங்கு: காங். கோஷம் வலுக்கிறது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வருகிற சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு அமையும் ஆட்சியில் காங்கிரஸ் கட்சி கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் ஒருமித்த குரலில் உறுதிபட கூறியுள்ளனர்.

சுனாமி நிவாரணப் பணிகள் குறித்து விவாதிப்பதற்காக காங்கிரஸ் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் வியாழக்கிழமை கூட்டப்பட்டிருந்தது.

ஆனால் கூட்டத்தில் பேசிய அனைத்துத் தலைவர்களும், கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு பங்கு வழங்க வலியுறுத்தியே பேசினர்.

எதிரும் புதிருமாக உலவிக் கொண்டிருந்த ஜி.கே.வாசனும், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் மிக நெருக்கமாக அமர்ந்து, மிக சகஜமாக பேசிக் கொண்டிருந்தது தொண்டர்கள் மத்தியில் புதிய உணர்வுகளை ஏற்படுத்தியது.

தி.மு.க.வுக்கு கடுப்பேற்றும் வகையில் பேசி வரும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சுதர்சன நாச்சியப்பன் ஆகியோரது கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவித்து கூட்டத்தில் பல்வேறு தலைவர்களும் பேசினர்.

கூட்டத்தில் பேசியவர்களில் முக்கியமானவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம். அவர்தான் கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு உரிய பங்கு தரப்பட வேண்டும் என்று ஆணித்தரமாக பேசினாராம். வாசனின் நிழலாக கருதப்படுபவர் எஸ்.ஆர்.பி. அவரே இப்படி பேசும்போது, வாசனின் கருத்தும் அதுவாகத்தான் இருக்கும், ஆனால் வெளிப்படையாக பேச முடியாமல் அவர் தவிப்பதாக காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கருத்து நிலவுகிறது.

ஆனால் அத்தனை தலைவர்களும், கூட்டணி ஆட்சியில் பங்கு என்பதையே வலியுறுத்திப் பேசி வந்தபோது, அதை மறுக்கவோ, தடுக்கவோ வாசன் முயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முகத்தில் புன்னகையுடன் ஒவ்வொருவரும் பேசுவதை அவர் பார்த்துக் கொண்டிருந்ததாக ஒரு எம்.பி. கூறுகிறார்.

சிலர் பேசுகையில், ஆட்சியில்பங்கு தர தி.மு.க மறுத்தால் வேறு சில கட்சிகளுடன் சேர்ந்து மூன்றாவது அணியை அமைக்க காங்கிரஸ் முயற்சிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்களாம். சோனியா காந்திக்கு இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகத்தில் செல்வாக்கு கூடியுள்ளது.

நாம் சற்று கடுமையாக உழைத்தால், நிச்சயம் காங்கிரஸ் தலைமையிலான மூன்றாவது அணிக்கு வெற்றி உறுதி. அத்தோடு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரையும் பிரசாரத்தில் ஈடுபடுத்தினால் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது என்ற ரீதியிலும் அவர்கள் பேசியுள்ளனர்.

மத்திய அரசில் நமது கூட்டணி கட்சிகளுக்கு நிறைய இடம் கொடுத்துள்ளோம். அமைச்சரவையில் முக்கிய இலாகாக்களை நமது கூட்டணிக் கட்சிகளுக்கே கொடுத்துள்ளோம். தி.மு.க. 15 தொகுதிகளில் வெற்றி பெற்றது, அவர்களில் 7 பேர் மத்திய அமைச்சர்களாகியுள்ளனர்.

அத்தனை பேருக்கும் முக்கியமான துறைகளே கொடுக்கப்பட்டுள்ளன. அந்த நன்றியை அவர்கள் திருப்பிச் செலுத்த வேண்டிய நேரம் வந்துள்ளது. நாம் கொடுத்த அதே அளவிலான மரியாதையை அவர்கள் சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு செய்ய வேண்டும் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மத்தியில் நாம் ஆட்சி அமைக்க தி.மு.க.வின் ஆதரவு தேவையென்றால், மாநிலத்தில் தி.முக ஆட்சியமைக்க காங்கிரஸின் ஆதரவும் கண்டிப்பாக தேவை. காங்கிரஸ் கட்சியின் ஆதரவு இல்லாவிட்டால் தி.மு.க.வினால் ஜெயித்து ஆட்சியமைக்க முடியாது.

காமராஜர் ஆட்சி என்று பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. கூட்டணி ஆட்சியில் பங்கேற்றாவது அதை நாம் சாதித்துக் காட்ட வேண்டும் என்றுசில தலைவர்கள் ஆவேசமாக பேசியுள்ளனர்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில், நமது உழைப்பை, ஓட்டுக்களைப் பயன்படுத்தி யாரோ முதல்வராவார்கள், நாம் எந்த பலாபலனும் இல்லாமல் இருக்க வேண்டுமா? யாரோ முதல்வராக நாம் ஏன் உதவ வேண்டும்.?

காமராஜர் ஆட்சியை எப்பாடுபட்டாவது அமைக்க வேண்டும். அதுவே நமது முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும். அதற்கு முதல் படியாக கூட்டணி ஆட்சியில் பங்கு கேட்பதில் தவறே இல்லை என்று கூறியுள்ளார்.

தலைவர்கள் பேச்சுக்குப் பின்னர் தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை மீண்டும் ஏற்படுத்த தீவிரமாக பாடுபடுவோம் என்ற ஒற்றை வரித் தீர்மானத்தை நிறைவேற்றினர். கடைசி வரை எந்தத் தலைவரும் மறந்தும் கூட சுனாமி குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பதுதான் இங்கு முக்கியமானது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X