For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்று முதல் சூப்பர் 8 சுற்று:மே.இ. தீவுகள்-ஆஸி. முதல் மோதல்

By Staff
Google Oneindia Tamil News

செயின்ட் ஜான்ஸ் (ஆண்டிகுவா):

உலகக் கோப்பைப் போட்டியின் 2 கட்ட திருவிழா இன்று முதல் தொடங்குகிறது. 2 குட்டி அணிகளும், 6 மகா அணிகளும் மோதப் போகும் சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் இன்று முதல் ஆரம்பமாகின்றன.

மேற்கு இந்தியத் தீவுகளில் நடந்து வரும் உலகக் கோப்பைப் போட்டியின் பரபரப்பு நிறைந்த முதல் சுற்றுப் போட்டிகள் முடிந்துள்ளது. அயர்லாந்து அணி, பாகிஸ்தானையும், வங்கதேசம் இந்தியாவையும் போட்டியிலிருந்து வெளியேற்றியது முதல் சுற்றுப் போட்டிகளின் பரபரப்பு அம்சம்.

நம்பர் ஒன் அணியான தென் ஆப்பிரிக்காவை ஆஸ்திரேலியா அதிரடியாக புரட்டி எடுத்தது இரண்டாவது பரபரப்பு. வங்கதேசமும், அயர்லாந்தும் முதல் முறையாக 2வது சுற்றுக்கு முன்னேறி அனைவருக்கும் ஆச்சரியத்தையும், இன்ப அதிர்ச்சியையும் கொடுத்துள்ளன.

இதில் அயர்லாந்து அணி இப்போதுதான் முதல் முறையாக உலகக் கோப்பைப் போட்டிக்கே ஆட வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வங்கதேசத்திற்கு இது 3வது உலகக் கோப்பைப் போட்டியாகும்.

மொத்தம் உள்ள நான்கு பிரிவிலிருந்து தலா 2 அணிகள் என மொத்தம் 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதில் ஆஸ்திரேலியா, இலங்கை, மேற்கு இந்தியத் தீவுகள், நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகளும் தலா 2 போனஸ் புள்ளிகளுடன் சூப்பர் 8க்கு வந்துள்ளன.

சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் இன்று தொடங்குகின்றன. முதல் ஆட்டத்தில் வலிமை வாய்ந்த ஆஸ்திரேலியாவும், மேற்கு இந்தியத் தீவுகளும் ஆண்டிகுவாவில் மோதுகின்றன. ஏப்ரல் 21ம் தேதி வரை சூப்பர் எட்டுப் போட்டிள் நடைபெறுகின்றன.

இதில் இடம் பெற்றுள்ள 8 அணிகளும் தலா 6 அணிகளுடன் மோத வேண்டும். போட்டிகளின் முடிவில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

போனஸ் புள்ளிகளுடன் இருப்பதால் ஆஸ்திரேலியா, இலங்கை, நியூசிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. இருப்பினும் மிகக் கடுமையான அணிகளுடன் ேமாத வேண்டும் என்பதால் அரை இறுதிக்குள் நுழைவது எந்த அணிக்கும் எளிதான காரியமாக இருக்காது.

வங்கதேசமும், அயர்லாந்தும் அரை இறுதிக்கு முன்னேறுவதற்கு வாய்ப்புகள் மிக மிக குறைவு என்றாலும் கூட வங்கதேசம் கடுமையாக முயற்சிக்கப் போவதாக தன்னம்பிக்கையுடன் கூறியுள்ளது.

மொத்தத்தில் இது வாழ்வா சாவா போராட்டம் போன்ற சுற்று ஆகும். இதில் ஒவ்வொரு அணியும், தான் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்றே ஆக வேண்டும். எனவே சூப்பர் எட்டு சுற்றில் அணல் பறக்கும் போட்டிகளும், அட்டகாச ஆட்டங்களும் ரசிகர்களுக்கு விருந்து படைக்கக் காத்திருக்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை.

போட்டிகள் விவரம்:

மார்ச் 27: மே.இ. தீவுகள்-ஆஸ்திரேலியா (ஆண்டிகுவா)
மார்ச் 28: தெ.ஆப்பிரிக்கா-இலங்கை (கயானா)
மார்ச் 29: மே.இ. தீவுகள்-நியூசிலாந்து (ஆண்டிகுவா)
மார்ச் 30: இங்கிலாந்து-அயர்லாந்து (கயானா)
மார்ச் 31: ஆஸ்திரேலியா-வங்கதேசம் (ஆண்டிகுவா)
ஏப்ரல் 1: மே.இ. தீவுகள்-இலங்கை (கயானா)
ஏப்ரல் 2: நியூசிலாந்து-வங்கதேசம் (ஆண்டிகுவா)
ஏப்ரல் 3: தெ.ஆப்பிரிக்கா-அயர்லாந்து (கயானா)
ஏப்ரல் 4: இங்கிலாந்து-இலங்கை (ஆண்டிகுவா)
ஏப்ரல் 7: தெ.ஆப்பிரிக்கா-வங்கதேசம் (கயானா)
ஏப்ரல் 8: ஆஸ்திரேலியா-இங்கிலாந்து (ஆண்டிகுவா)
ஏப்ரல் 9: நியூசிலாந்து-அயர்லாந்து (கயானா)
ஏப்ரல் 10: தெ.ஆப்பிரிக்கா-மே.இ. தீவுகள் (கிரெனடா)
ஏப்ரல் 11: இங்கிலாந்து - வங்கதேசம் (பார்படோஸ்)
ஏப்ரல் 12: இலங்கை - நியூசிலாந்து (கிரெனடா)
ஏப்ரல் 13: ஆஸ்திரேலியா - அயர்லாந்து (பார்படோஸ்)
ஏப்ரல் 14: தெ.ஆப்பிரிக்கா - நியூசிலாந்து (கிரெனடா)
ஏப்ரல் 15: வங்கதேசம்-அயர்லாந்து (பார்படோஸ்)
ஏப்ரல் 16: ஆஸ்திரேலியா-இலங்கை (கிரெனடா)
ஏப்ரல் 17: தெ.ஆப்பிரிக்கா - இங்கிலாந்து (பார்படோஸ்)
ஏப்ரல் 18: இலங்கை -அயர்லாந்து (கிரெனடா)
ஏப்ரல் 19: மே.இ. தீவுகள் - வங்கதேசம் (பார்படோஸ்)
ஏப்ரல் 20: ஆஸ்திரேலியா - நியூசிலாந்து (கிரெனடா)
ஏப்ரல் 21: மே.இ.தீவுகள் - இங்கிலாந்து (பார்படோஸ்)


வெல்லப் போவது யாரு?

இன்று ஆண்டிகுவாவில் நடைபெறப் போகும் முதல் போட்டி குறித்த ஒரு அலசல்.

விவியன் ரிச்சர்ட்ஸ் என்ற இமயத்தை கிரிக்கெட் உலகுக்குக் கொடுத்த மண் ஆண்டிகுவா. 20ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து வீரர்களில் ரிச்சர்ட்ஸும் ஒருவர்.

அவரது பெயர் சூட்டப்பட்ட புதிய மைதானத்தில்தான் இன்றைய போட்டி நடைபெறவுள்ளது. நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியாவும், ஏற்கனவே இருமுறை சாம்பியனான மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் மோதும் இந்தப் போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம் என்று ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். மேற்கு இந்தியத் தீவுகள் அணி அபாயகரமானது. எப்போது, எப்படி விளையாடுவார்கள் என்றே கணிக்க முடியாது. அதிலும் சொந்த மண்ணில் விளையாடும் கூடுதல் பலம் வேறு. எனவே நாங்கள் மிகுந்த கவனத்துடன் இந்தப் போட்டியை சந்திக்கவுள்ளோம் என்கிறார் பாண்டிங்.

ஆஸ்திரேலியாவின் பேட்டிங் வரிசையும், பந்துவீச்சும் படு பக்காவாக உள்ளன. ஹைடன், பாண்டிங், ஹூசே, ஜில்கிறைஸ்ட் என மாபெரும் மட்டையாளர்கள் ஒருபக்கம், மெக்கிராத் போன்ற பந்துவீச்சாளர்கள் மறுபக்கம் என ஆஸ்திரேலியா பயமுறுத்துகிறது.

அதேசமயம், மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் வலுவாகவே உள்ளது. முதல் சுற்றில் 3 ஆட்டங்களிலும் அந்த அணி அபாரமாக வென்றுள்ளது. கெய்ல், சந்தர்பால், சர்வாண், லாரா ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். டெய்லர், கெய்ல், பிரேவோ என பந்துவீச்சாளர்களும் சிறப்பான நிலையில் உள்ளதால் இன்றைய போட்டியில் அணல் பறக்கும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X