For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுகவுடன் மோதல்: பாமக கணக்கு என்ன?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:திமுக, பாமக இடையிலான மோதல் குறித்து தமிழக அரசியல் அரங்கில் பல குழப்பமான கேள்விகள் எழுந்துள்ளன. டாக்டர் ராமதாஸ் என்ன கணக்கில் திமுகவுடன் லடாயில் ஈடுபட்டுள்ளார் என்பது பெரும் கேள்விக்குறிகளை எழுப்பியுள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவோடு அதிரடியாக கூட்டணி வைத்தார் ராமதாஸ். அணி மாறுவது பாமகவுக்குப் புதிதல்ல என்றாலும் கூட தடாலென அதிமுகவுடன் அவர் கை கோர்த்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.

அந்தத் தேர்தலில் 20 தொகுதிகளில் வெற்றி பெற்றது பாமக. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் சில நாட்களிலேயே கூட்டணியிலிருந்து வெளியேறினார் ராமதாஸ். அப்படியே திமுகவுடன் கூட்டணி வைத்தார்.

எந்த வாயால் அன்புச் சகோதரி என்று ஜெயலலிதாவை அழைத்தாரோ அதே வாயால் சகட்டு மேனிக்கு அர்ச்சனையையும் ஆரம்பித்து அரசியல் களத்தில் அடுத்த கட்ட சூதாட்டத்தை தொடங்கினார்.

தொடர்ந்து வந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணியில் நீடித்தார் ராமதாஸ். கடந்த சட்டசபைத் தேர்தலிலும் பாமக, திமுக கூட்டணி தொடர்ந்தது. ஜெயலலிதா மீதான அதிருப்தி அலையால் திமுக அமோக வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும் என்று ஆரம்பத்தில் எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால் மதிமுகவின் தடாலடி தாவல் மற்றும் கடைசி நேரத்தில் ஜெயலலிதா மீது திரும்பிய லேசான அனுதாபம் காரணமாக மெஜாரிட்டி கை நழுவிப் போனது. கூட்டணி பலத்தால் திமுக கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் கிடைத்து ஆட்சியைப் பிடித்தது.

இந்த நேரத்தில்தான் புத்திசாலித்தனமான முடிவை எடுத்தார் ராமதாஸ். திமுக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு தருவோம், அமைச்சரவையில் பங்கு கேட்க மாட்டோம் என அறிவித்தார். மறுபக்கம் இன்னொரு கூட்டணிக் கட்சியான காங்கிரஸ்அமைச்சர் பதவி கேட்ட அணத்த ஆரம்பித்தது.

பாமக தரப்பில் அமைச்சர் பதவி கேட்க மாட்டோம் என கூறி விட்டதால் நிம்மதி அடைந்த திமுக, காங்கிரஸை மட்டும் சமாளித்துக் கொண்டு வருகிறது.

திமுக அரசுக்கு முழு ஆதரவு கொடுத்து வந்தாலும் கூட, சட்டசபைத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் ராமதாஸுக்கு இருந்து வந்தது. இதற்கு திமுகவின் ஒத்துழைப்பு சரியாக கிடைக்காததே காரணம் எனவும் ராமதாஸ் நினைத்தார்.

மேலும் கேட்ட சீட் கிடைக்காத ஏமாற்றமும் அவருக்குள் இருந்து வந்தது. இந்த நிலையில்தான் வந்து சேர்ந்தது உள்ளாட்சித் தேர்தல். இங்குதான் பிரச்சினை பெரிதாக வெடித்தது எனலாம்.

உள்ளாட்சித் தேர்தலில் சேலம் மாநகராட்சியைக் கேட்டது பாமக. ஆனால் கொடுக்க மறுத்தது திமுக. அதேசமயம், காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு மாநகராட்சிகளைத் தூக்கிக் கொடுத்தது. இதனால் அதிருப்தி அடைந்தார் ராமதாஸ்.

இப்படி அடுக்கடுக்கான ஏமாற்றங்களால் அதிருப்தி அலை கூடினாலும், வெளிக்காட்டாமல் தேர்தல் பணியில் இறங்கியது பாமக. தேர்தல் முடிந்து, உள்ளாட்சி அமைப்புகளுக்கான தலைவர் பதவிகளைப் பங்கிடும் நேரம் வந்தது.

இங்கு பாமகவுக்கு கணிசமான பதவிகள் தரப்பட்டன. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் போட்டி திமுகவினர் களத்தில் குதித்து பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட பல பதவிகளை கபளீகரம் செய்து விட்டனர். பாமக மட்டும் அல்லாமல், காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கும் இதே நிலைதான்.

இந்த முறை அமைதி காத்திராமல் கொந்தளித்து விட்டார் ராமதாஸ். பச்சைத் துரோகம் செய்து விட்டது திமுக என பகிரங்கமாகவே குற்றம் சாட்டினார். அதற்கு திமுக விளக்கம் அளித்தது, சிலரை கட்சியை விட்டு சஸ்பெண்ட் செய்து ராமதாஸை கூல் படுத்த முயன்றது. ஆனாலும் அதிலும் திருப்திப்பட்டு வரவில்லை ராமதாஸ்.

இப்படியாக ஆரம்பித்த திமுக, பாமக உரசல், சமீப நாட்களில் தீயாக பற்றி எரிய ஆரம்பித்ததது. மது விலக்கு உள்ளிட்ட பல பிரச்சினைகளில் திமுகவின் நடவடிக்கைகளை பகிரங்கமாக விமர்சிக்க ஆரம்பித்தார் ராமதாஸ். இதனால் திமுக தரப்பு அதிருப்தி அடைந்தது. இருந்தாலும் வெளிப்படையாக ராமதாஸுக்கு எதிர்ப்பு காட்ட முடியாது என்பதால் பொத்தாம் பொதுவாக ராமதாஸை சமாளித்து வந்தது.

ராமதாஸ் கூறும் புகார்களுக்கு மிகவும் நாசூக்காக முதல்வர் கருணாநிதி தனது பதிலையும், விளக்கத்தையும் அளித்து வந்தார். இந்த நிலையில்தான் வெற்றி கொண்டான் ரூபத்தில் பிரச்சினை பூகம்பமாக வெடித்தது.

ஒரு நடிகரால் விருத்தாசலத்தில் பாடம் கற்பிக்கப்பட்டும் இன்னும் திருந்தவில்லை ராமதாஸ், பிளாக் மெயில் தலைவர், அவரும் அவரது மகனும் சேர்ந்து கருணாநிதியின் இடத்தைப் பிடிக்கப் பார்க்கிறார்கள், பெரியார் மட்டும்தான் ஐயா, மற்ற யாரையும் ஐயா என்று கருணாநிதி கூப்பிடக் கூடாது என்றெல்லாம் சகட்டு மேனிக்கு வெற்றி கொண்டான் வார்த்தைகளைக் கொட்டினார்.

வெற்றி கொண்டானின் பேட்டி ராமதாஸையும், பாமகவினரையும் ஏகத்துக்கு உசுப்பேற்றி விட்டது. கருணாநிதி ஒப்புதலின் பேரில்தான், அறிவாலயத்தில் தயாரிக்கப்பட்ட அறிக்கையை பேட்டி என்ற பெயரில் கொடுத்துள்ளார் வெற்றி கொண்டான் என்று ராமதாஸ் பகிரங்கமாகவே குற்றம் சாட்டினார்.

இதற்கு திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அளித்த பதிலில், ராமதாஸ் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார் என குற்றம் சாட்டினார். இப்படி இரு தரப்பும் பகிரங்கமாகவே மோதலில் குதித்து உடைந்த கண்ணாடியாக வந்து நிற்கிறது திமுக, பாமக மோதல்.

இப்போதைக்கு கண்ணாடியை ஒட்ட வைத்துள்ளனர். ஆனாலும் விழுந்த விரிசல் மீண்டும் சரியாகும் என்பது சந்தேகம்தான் என்கிறது அரசியல் வட்டாரம்.

ராமதாஸின் கோபத்துக்கு என்ன காரணம் என்ற கேள்விதான் இப்போது அனைவரின் மனதிலும். ராமதாஸின் இந்தப் போக்கு குறித்து அரசியல் களத்தில் ஒரு பேச்சு நிலவுகிறது.

ராமதாஸ் எப்போதுமே வெற்றி பெறும் இடத்தில்தான் இருப்பார். அவரால் வெற்றி கிடைக்கிறதா, இல்லையா என்பதை விட யாருடன் இருந்தால் வெற்றி கிடைக்கும் என்பதைத்தான் அவர் முக்கியமாக பார்ப்பார். இதுவரை அப்படித்தான் நடந்து வந்திருக்கிறது.

கடந்த சட்டசபைத் தேர்தலில் பாமகவின் கோட்டையில் பெரும் ஓட்டை விழுந்துள்ளதை கண் கூடாக பார்க்க முடிந்தது. எங்கிருந்தோ வந்த விஜயகாந்த், சம்பந்தமே இல்லாத, பாமகவின் கோட்டையான விருத்தாச்சலத்தில் வெற்றிக் கொடி நாட்டினார்.

அதேபோல தர்மபுரி, கிருஷ்ணகிரி என பாமகவின் பல கோட்டைகளிலும் ஓட்டைகள் விழுந்தன. அதற்கும் விஜயகாந்த்தின் தேமுதிகதான் முக்கியக் காரணமாக இருந்தது.

இப்படி விஜயகாந்த்தால் பாமகவின் வாக்கு வங்கியில் அடி விழுந்ததால் திமுக தரப்பு பாமகவை அலட்சியப் படுத்த ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. இதனால்தான் உள்ளாட்சித் தேர்தலில் பாமக கேட்ட இடங்கள், பதவிகள் தரப்படவில்லை. இது பாமகவின் முதல் வருத்தம்.

தங்களை விட காங்கிரஸ் கட்சியையே திமுக முன்னிலைப்படுத்துவதாக, முக்கியத்துவம் தருவதாக ராமதாஸ் கருதுகிறார். இதுவும் திமுக மீத அதிருப்தி ஏற்பட இன்னொரு காரணம்.

உள்ளாட்சித் தேர்தலின்போது பாமகவின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து பல திமுகவினர் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர். ஆனால் அவர்களில் பெரும்பாலானவர்கள் தற்போது மீண்டும் திமுக கரை வேட்டியுடன் கட்சியில் கலக்க ஆரம்பித்துள்ளனர். இது இன்னொரு அதிருப்தி.

காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சர் பதவி கொடுத்து பாமகவை மொத்தமாக புறக்கணிக்க திமுக முடிவு செய்திருப்பதாக வெளியான செய்திகளும் பாமகவை கடும் அதிருப்தியில் தள்ளின.

இதை விட முக்கியமாக டாஸ்மாக் கடைகள், சில்லறை வணிகத்திற்கு மூடு விழா நடத்த வரும் வால்மார்ட், ரிலையன்ஸ் உள்ளிட்ட விவகாரங்களில் பாமகவின் கருத்தை ஏற்க முடியாது என திமுக மறைமுகமாக அதே சமயம், தடாலடியாக கூறி விட்டதால் அதுவும் ராமதாஸை கடும் அதிருப்தியில் தள்ளியது.

மேலும், கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழுவை அமைக்கவும் ராமதாஸ் வலியுறுத்தி வந்தார். ஆனால் அதை கருணாநிதி திட்டவட்டமாக நிராகரித்து விட்டார். இதுவும் ராமதாஸுக்கு எரிச்சலைக் கொடுத்த ஒன்று.

இப்படி திமுக தரப்பிலிருந்து தங்களுக்கு முக்கியத்துவம் குறைந்து வர ஆரம்பித்து விட்டதால்தான் திமுகவுடன் மோதல் போக்கில் இறங்கியுள்ளார் ராமதாஸ் என்று கூறப்படுகிறது.

திமுக அரசு 5 ஆண்டு காலம் பதவியில் நீடிக்கும், நாங்கள் முழுமையாக ஆதரவு தருவோம் என்று ராமதாஸ் கூறியுள்ளார். ஆனால் அடுத்த தேர்தலில் நிச்சயம் பாமக, திமுக கூட்டணியில் இருக்காது என்று இப்போதே ஆணித்தரமாக கூற ஆரம்பித்து விட்டனர் அரசியல் புரிந்தவர்கள்.

அப்படியால் பாமகவின் அடுத்த தோள் எது என்ற மில்லியன் டாலர் கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கான பதிலை ராமதாஸே தந்தால்தான் உண்டு.

அதேபோல இன்னொரு பேச்சும் அரசியல் களத்தை சூடாக்கி வருகிறது. அடுத்த கூட்டணிக்கு பாமக ஏற்கனவே அச்சாரம் போட்டு விட்டதாம். சில ரகசிய உடன்பாடுகள், பேச்சுக்கள், சமரசங்கள் நடந்து முடிந்து விட்டதாம்.

கூட்டணியில் நீடிக்க பாமக விரும்பவில்லை, அதேபோல, பாமகவை கூட்டணியிலிருந்து தானாக நீக்க திமுகவும் முயலவில்லை. தானாக கூட்டணி முறியட்டும் என இரு தரப்பும் விரும்புகிறதாம். அதற்காகத்தான் விட்டுக் கொடுக்காமல் இரு தரப்பும் தொடர்ந்து முரண்டு பிடித்து வருவதாக கூறப்படுகிறது.

சட்டசபைக் கூட்டத் தொடருக்குப் பின்னர் சத்த சபை அமர்க்களமாக களை கட்டும் என்று அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையில் அடுத்து என்ன நடக்கும்? என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், காரணம் இது அரசியல்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X