For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை கடற்படை மீண்டும் வெறியாட்டம்:4 மீனவர்கள் பரிதாப சாவு-மீனவர்கள் கொந்தளிப்பு

By Staff
Google Oneindia Tamil News

திருநெல்வேலி:ராமேஸ்வரம் மீனவர்களைக் கொன்று குவித்து ஓய்ந்துள்ள இலங்கை கடற்படை, தற்போது கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை குறி வைத்துள்ளது. இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேரும், கடற்படைக்குப் பயந்து கடலில் குதித்து இருவரும் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள் பல ஆண்டுகளாக இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர். கடந்த சில மாதங்களில் மட்டும் பலர் உயிரிழந்துள்ளனர். இதனால் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து ராமேஸ்வரம் பக்கம் தனது வாலை சுருட்டிக் கொண்ட இலங்கை கடற்படை தற்போது நாகர்கோவில் பக்கம் அதை நீட்ட ஆரம்பித்துள்ளது.

கடந்த 16ம் தேதி இரவிபுத்தன் துறையைச் சேர்ந்த மீனவர்களை நடுக் கடலில் மறித்து தாக்கி அனுப்பியது இலங்கை கடற்படை. இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மீனவர்கள் புகார் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் நான்கு மீனவர்களின் உயிரை கடற்படை பறித்துள்ள அநியாய சம்பவம் நடந்துள்ளது.

குமரி மாவட்டம் தூத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் மார்ச் 23ம் தேதி கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். ரெக்ஸன் என்று பெயரிடப்பட்ட அந்தப் படகு சதீஷ் (26) என்பவருக்குச் சொந்தமானது. படகில், 9 பேர் இருந்தனர்.

புத்தளம் அருகே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு இலங்கை கடற்படை வந்தது. கடற்படையைப் பார்த்ததும் பயந்து போன சதீஷும் அவரது தம்பி ஜஸ்டினும் (24) கடலில் குதித்து விட்டனர்.

லைனஸ் (52) மற்றும் மரிய ஜான் (50) ஆகிய இருவரும் கடலில் குதிக்க முடியாமல் படகிலேயே இருந்து விட்டனர். அவர்கள் மீது இலங்கை கடற்படை வீரர்கள் வெறி கொண்டு கண்மூடித்தனமாக சுட்டனர். இதில் இருவரும் படகிலேய பரிதாபமாக இறந்து போனார்கள். படகில் இருந்த ஜேசுதாஸ் படுகாயமடைந்தார்.

கடலில் மூழ்கிய ஜஸ்டின், சதீஷ் கதி என்ன ஆனது என்பது தெரியவில்லை. அவர்களும் இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அவர்கள் இருவரையும் இலங்கை வீரர்கள் தாறுமாறாக அடித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று காலை சுட்டுக் கொல்லப்பட்ட மரிய ஜான், லைனஸ் ஆகியோரின் உடல்கள் கரைக்குக் கொண்டு வரப்பட்டன. தூத்தூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் அங்கு திரளாக கூடி, கண்ணீரும், கதறலுமாக உடல்களை கரை இறக்கினர்.

இலங்கை கடற்படையின் வெறித் தாக்குதலுக்கு 4 மீனவர்கள் பலியான சம்பவம் குமரி மாவட்ட மீனவர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மீனவர்கள் யாரும் கடலுக்குப் போகவில்லை. கிராமங்களில் போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

கருணாநிதி விலக வேண்டும்

இந்த சம்பவம் குறித்து தேசிய மீனவர் சம்மேளனத் தலைவர் ஆண்டன் கோமஸ் கூறுகையில், மீனவர்களைக் காக்க தவறி விட்டார் தமிழக முதல்வர் கருணாநிதி. அவரால் எங்களைக் காப்பாற்ற முடியாவிட்டால் உடனடியாக பதவியிலிருந்து விலகி விட வேண்டும். இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இப்படி இலங்கை கடற்படையிடம் சிக்கி தமிழக மீனவர்கள் உயிரை விடுவார்கள் என்று ஆவேசமாக கூறினார்.

மத்திய அரசும், மாநில அரசும் மீனவர்களின் உயிரை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை, அவர்கள் குறித்து அக்கறையோ, கவலையோ படவில்லை. வரிசையாக மீனவர்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றனர், ஆனால் தமிழக அரசும், மத்திய அரசும் வாய் பொத்தி மெளனம் காத்துக் கொண்டிருப்பது மிகவும் மோசமானது என்றும் கோமஸ் கூறினார்.

ஈழத் தமிழர்களுக்காக இங்குள்ள அரசியல்வாதிகள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள், கொந்தளிக்கிறார்கள், கோபப்படுகிறார்கள், போராட்டமும் நடத்துகிறார்கள்.

ஆனால் உள்ளூர்த் தமிழர்களின் உயிரை இலங்கை கடற்படை தனது இஷ்டத்துக்குப் பறித்துச் செல்வது குறித்து ஒரு அரசியல்வாதியும் உருப்படியாக நடவடிக்கை எடுக்காதது வேதனைக்குரியது. மீனவர் சமுதாயம் வெடித்துப் பொங்கிக் கிளம்புவதற்குள் தமிழக அரசும், மத்திய அரசும் விரைவான நடவடிக்கையில் இறங்குவது நல்லது.

மேலும் ஒரு குமரி மீனவர் சாவு

இதற்கிடையே, இலங்கை கடற்படையினரால் சுடப்பட்டுக் காயமடைந்த மேலும் ஒரு மீனவர் இறந்ததால் குமரி மாவட்ட மீனவர்களிடையே சோகம் அதிகரித்துள்ளது.

காயமடைந்த ஜேசுதாஸ் என்ற மீனவர் வயிற்றில் பாய்ந்த குண்டுடன், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.

காயமடைந்த ஈஸ்டர் பாபு என்ற மீனவர் தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ஜெரின், மரிய ஜான் லூயிஸ், அருள்தாஸ் ஆகிய மீனவர்கள் இன்னும் அதிர்ச்சியிலிருந்த மீளாத நிலையில் பிரமை பிடித்துப் போய்க் காணப்படுகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X