For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இளம் வீரர்களுக்கு சேப்பல், ஜெகதலே ஆதரவு

By Staff
Google Oneindia Tamil News

மும்பைஇந்திய அணியில் அதிக அளவில் இளம் வீரர்களை சேர்க்க வேண்டும். அதுவே அணியின் எதிர்கால வெற்றிகளுக்கு சிறந்தது என்று பதவி விலகியுள்ள இந்திய அணியின் பயிற்சியாளர் கிரேக் சேப்பல், அணி மேலாளர் சஞ்சய் ஜெகதலே ஆகியோர் தாக்கல் செய்துள்ள அறிக்கைககளில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

மும்பையில் இன்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் தெடாங்கியது. 2 நாள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா அடைந்த தோல்விக்கான காரணம், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்படுகிறது.

வாரியத் தலைவர் சரத்பவார், செயலாளர் நிரஞ்சன் ஷா, கேப்டன் டிராவிட், தேர்வுக் குழுத் தலைவர் வெங்சர்க்கார் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

சேப்பலும் கூட்டத்திற்கு வந்தருந்தார். ஆனால் உலகக் கோப்பைப் போட்டி குறித்த தனது அறிக்கையை வாரிய நிர்வாகிகளிடம் வழங்கி விட்டு உடனடியாக அங்கிருந்து அவர் வெளியேறி விட்டார்.

இதையடுத்து பவார் தலைமையில் கூடிய கூட்டத்தில் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. டிராவிட், அணி மேலாளர் சஞ்சய் ஜக்தலேவும் தனது அறிக்கையை வழங்கினர்.

இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ள துணை கேப்டன் சச்சின் டெண்டுல்கர் அழைக்கப்படவில்லை.

இக்கூட்டம் குறித்து கிரிக்கெட் வாரியம் பின்னர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது

பயிற்சியாளர் கிரேக் சேப்பல் இந்திய அணியை மிகவும் திறம்பட நடத்தினார். அவருக்கு வாரியம் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து அவர் விலகி விட்டாலும் கூட இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு அவர் ஆலோசனை கூற முடியும். வாரியத்தின் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற அவர் உதவ முடியும்.

சேப்பல் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், தனது 22 மாத கால அனுபவங்களை, மேற்கொண்ட முயற்சிகளை விளக்கியுள்ளார். இந்திய அணியில் இளம் வீரர்கள் அதிக அளவில் சேர்க்கப்பட வேண்டும். ரன் எடுக்கும் முயற்சிகளில் இந்திய வீரர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும், பீல்டிங், பந்துவீச்சில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என ஆலோசனை கூறியுள்ளார்.

பயிற்சியாளர் என்ற முறையில், இந்திய அணியின் உலகக் கோப்பைத் தோல்விக்கு தான் பாதியளவு பொறுப்பேற்பதாக சேப்பல் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் வீரர்கள் குறித்து தனிப்பட்ட எந்தக் கருத்தையும் சேப்பல் தெரிவிக்கவில்லை.

ஜெகதலே தாக்கல் செய்துள்ள அறிக்கையில், இளம் வீரர்கள் அதிக அளவில் சேர்க்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார். உலகக் கோப்பையில் ஒட்டுமொத்த இந்திய அணியும் தோல்வி அடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

கேப்டன் டிராவிடின் அறிக்கையில், இந்திய அணியின் தோல்விக்கு தான் பொறுப்பேற்பதாக கூறியுள்ளார். மேலும் அணியின் முன்னேற்றத்திற்கு பல யோசனைகளையும் அவர் தெரிவித்துள்ளார்.

அணித் தேர்வுக் குழுத் தலைவர் வெங்சர்க்கார் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், 25 முதல் 30 வீரர்களைத் தேர்வு செய்து வைத்துக் கொண்டு அவர்களிலிருந்து அணியைத் தேர்வு செய்ய வேண்டும் என யோசனை தெரிவித்துள்ளார்.

இதுதவிர முன்னாள் கேப்டன்கள் ஸ்ரீகாந்த், கவாஸ்கர், கபில்தேவ், மன்சூர் அலிகான் பட்டோடி, வெங்கட்ராகவன், ரவி சாஸ்த்ரி, சந்து போர்டே ஆகியோருடனும் ஆலோசனை நடத்தப்பட்டது.

இவர்களிடமிருந்து பெறப்படும் ஆலோசனைகள் நாளைய செயற்குழுக் கூட்டத்தில் வைக்கப்பட்டு விவாதிக்கப்படும் என்று வாரிய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X