• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தெ.ஆப்பிரிக்காவை நொங்கெடுத்த வங்கதேசம்

By Staff
|

ஜார்ஜ்டவுன்:லீக் சுற்றில் இந்தியாவை புரட்டி எடுத்த வங்கேதசம், நேற்று நடந்த சூப்பர் எட்டு சுற்றுப் போட்டியில் உலகின் நம்பர் ஒன் அணியான தென் ஆப்பிரிக்கா 67 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர்ச்சி வைத்தியம் அளித்து அபார வெற்றி பெற்றது.

சப்பை அணிகள் என சொல்லப்படும் சில அணிகள் சில நேரங்களில் வலிமை வாய்ந்த அணிகளுக்கு அல்வா கொடுப்பது கிரிக்கெட்டில் சகஜம். சொத்தை அணியாக பல காலமாக கருதப்பட்ட இலங்கை திடீரென விஸ்வரூபம் எடுத்து உலகக் கோப்பையை வென்று கிரிக்கெட் உலகுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்ததை யாரும் மறந்திருக்க முடியாது.

அந்த டிரெண்ட் இன்றும் தொடர்கிறது. குட்டி அணியான வங்கதேசம் சமீப காலமாக வலுவான அணிகளை எல்லாம் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஒரு கை பார்க்க ஆரம்பித்துள்ளது.

முன்பு ஆஸ்திரேலியாவை அட்டாக் செய்தது. உலகக் கோப்பை லீக் சுற்றில் இந்தியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. இந்த நிலையில் நேற்று நடந்த சூப்பர் 8 போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில், தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியுள்ளது.

ஜார்ஜ்டவுனில் நேற்று நடந்த இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றால்தான் அரை இறுதிக்கான அதன் வாய்ப்புகள் பிரகாசமாகும் என்ற நிலை இருந்தது.

எதிர்த்து மோதுவது வங்கேதசம் என்பதால் தென் ஆப்பிரிக்க வீரர்கள் நம்பிக்கையோடு இருந்தனர். இதற்கு முன்பு மோதிய 3 போட்டிகளிலும் தோற்றிருந்ததால் நிசசயம் இப்போட்டியில் வெல்ல வேண்டும் என வங்கதேசமும் உத்வேகத்துடன் களம் இறங்கியது.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் ஸ்மித், வங்கதேசத்தை முதலில் பேட் செய்யப் பணித்தார். ஆரம்பத்திலிருந்தே நிதானமாகவும், அதேசமயம் ரன் சேர்ப்பதுமாக சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டியது வங்கதேசம்.

குறிப்பாக முகம்மது அஷ்ரபுலின் ஆட்டம் அணல் பறந்தது. படு நேர்த்தியாக ஆடிய அஷ்ரபுல், தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்ளுக்கு பெரும்கிலியைக் கொடுத்தார். 83 பந்துகளை மட்டுமே சந்தித்த அஷ்ரபுல், 87 ரன்களைக் குவித்து அசத்தினார்.

அப்தாப் அகமது தன் பங்குக்கு 35, தமீம் இக்பால் 38, முர்தஸா 25 ரன்களும் சேர்த்தனர். அனுபவம் வாய்ந்த ஒரு அணியைப் போல படு அழகாக விளையாடிய வங்தேசமம் 50 ஓவர்களில் எட்டு விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 251 ரன்களை எடுத்தது.

வங்கதேச அணி இந்த அளவுக்கு ஸ்கோர் எடுத்ததே அந்த அணியின் வெற்றிக்கு அச்சாரம் இட்டதாக ரசிகர்களுக்குத் தோன்றியது. இதைத் தொடர்ந்து களம் இறங்கிய தென் ஆப்பிரிக்கா படு மோசமாக ஆடி 48.4 ஓவர்களில் மண்ணைக் கவ்வி 184 ரன்களை மட்டுமே சேர்த்து அதிர்ச்சித் தோல்வியுற்றது.

கிப்ஸ் மட்டும் சிறப்பாக ஆடி 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கல்லிஸ் 32 ரன்களைச் சேர்த்தார். வங்கதேச அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள்தான் தென் ஆப்பிரிக்க சரிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்கள்.

அப்துல் ரஸ்ஸாக் 3, சையத் ரஸ்ஸல், சகீபுல் ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் வங்கதேசம் 2 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இருப்பினும் அரை இறுதிக்கான வாய்ப்பு அந்த அணிக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம், இந்தத் தோல்வியின் மூலம் உலகின் நம்பர் ஒன் அணி என்ற இடத்தை தென் ஆப்பிரிக்கா இழந்துள்ளது. மேலும், அரை இறுதிக்கு முனனேற இனி அது கடுமையாகப் போராட வேண்டும்.

இன்று நடைபெறும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையிலான போட்டியில் இங்கிலாந்து ஜெயித்தால், தென் ஆப்பிரிக்காவுக்கு சிக்கல் மேலும் அதிகரிக்கும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X