For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சேது: கிருஷ்ணய்யர், தயானந்த சரஸ்வதி எதிர்ப்பு

By Staff
Google Oneindia Tamil News

கொச்சி:சேது சமுத்திரத் திட்டத்திற்காக ராமர் பாலத்தை இடிக்கும் முயற்சிக்கு சுவாமி தயானந்த சரஸ்வதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதேசமயம், இத்திட்டத்தால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஊறு ஏற்படும் என முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கிருஷ்ணய்யர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கிருஷ்ணய்யர் பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், சேது சமுத்திரத் திட்டத்தால் நாட்டின் பாதுகாப்புக்கு ஊறு ஏற்படும் அல்லது புதிய ஆபத்துக்கள் உருவாகும்.

பல காலமாக இந்தத் திட்டம் சாத்தியமில்லாதது என கருதப்பட்டு வந்தது. நமது நாட்டுக்கு இந்தத் திட்டத்தால் எந்த பயனும் ஏற்படாது எனவும் ஆய்வுகள் மூலம் கூறப்பட்டுள்ளது.

சுனாமி உள்ளிட்ட பல்வேறு இயற்கை ஆபத்துக்களின் சாத்தியக் கூறுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்படாத நிலையில் இத்திட்டத்தை மேற்கொள்வது ஆபத்தாக முடியும்.

ராமர் பாலம்தான் இந்திய கடலோரப் பகுதிகளை சுனாமியிலிருந்து பெருமளவில் காத்தது என கூறப்படுகிறது. இந்தக் கருத்தைப் புறக்கணித்து விடக் கூடாது.

எதிர்காலத்தில் பெரிய அளவிலான சுனாமி வந்தால் தமிழக கடலோரப் பகுதிகள் மட்டுமல்லாது கேரள மாநிலத்திற்கும் பெரும் ஆபத்து ஏற்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.

மேலும் இந்தத் திட்டத்தால் ராமர் பாலம் பகுதியில் பெருமளவில் புதைந்து கிடக்கும் தோரியம் உள்ளிட்ட பல்வேறு தாதுப் பொருட்களும் அழியும் ஆபத்து உள்ளது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் இந்தியாவின் அணு சக்தித் திட்டங்கள் பெரும் பாதிப்படையும் என்று தனது கடிதத்தில் கூறியுள்ளார் கிருஷ்ணய்யர்.

இதேபோல இந்து தர்ம ஆச்சார்ய சபையின் தலைவரான சுவாமி தயானந்த சரஸ்வதியும் ராமர் பாலத்தை இடித்து விட்டு சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், சேது சமுத்திரத் திட்டப் பணிகளின் போது, ராமர் பாலத்திற்கு சேதம் ஏற்படாது என மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு உறுதியளித்திருந்தார். ஆனால் அது தற்போது காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது வருத்தம் தருகிறது.

சேது சமுத்திரத் திட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் ராமர் பாலத்தை இடிப்பதைத்தான் நாங்கள் ஆதரிக்கவில்லை. இந்த விவகாரம் குறித்து பல்வேறு ஆன்மீகத் தலைவர்கள் அடங்கிய குழு பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தது. அப்போது அமைச்சர் பாலுவை சந்திப்பதற்கு பிரதமர் ஏற்பாடு செய்தார்.

அந்தக் கூட்டத்தின்போது, ராமர் பாலம் சேதப்படுத்தப்பட மாட்டாது என பாலு உறுதியளித்தார். மேலும், சேது சமுத்திரத் திட்ட இடத்திற்கு சாதுக்கள் அடங்கிய குழுவினரையும், தொல்பொருள் துறையினரையும் அழைத்துச் செல்வதாகவும் கூறினார்.

ஆனால் அதுகுறித்து தற்போது பாலுவிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. சேது சமுத்திரத் திட்டம் அறிவிக்கப்பட்டபோது, ராமர் பாலம் சேதப்படுத்தப்படும் என நாங்கள் நினைக்கவில்லை. அதனால்தான் அப்போது நாங்கள் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. ஆனால் தற்போது நடைபெறும் பணிகளைப் பார்த்தால் ராமர் பாலத்தை முற்றிலும் சிதைக்கும் முயற்சிகள் நடப்பதாக அறிகிறோம்.

ராமர் பாலம் இருப்பது உண்மைதான். 15வது நூற்றாண்டு வரை அந்தப் பாலம் பயன்பாட்டில் இருந்துள்ளது. இது மனிதனால் உருவாக்கப்பட்ட பாலம்தான் என்பதை ஆய்வாளர்கள் ஆதாரத்துடன் விளக்கியுள்ளனர். இயற்கைச் சீற்றம் காரணமாக அந்தப் பாலம் கடலுக்குள் மூழ்கியிருக்கலாம்.

இப்போதும் கூட, கடலின் சில பகுதிகளில் மூன்று அடி ஆழத்தில் அப்பாலம் தெரிவதைக் காண முடியும். சில இடங்களில் 10 அடி ஆழத்தில் பாலத்தைக் காண முடியும்.

ராமர் பாலம் குறித்த இன்னும் தெளிவான ஆதாரம் வேண்டும் என்றால் 1803ம் ஆண்டு இங்கிலாந்து அரசு வெளியிட்ட சென்னை மாகாண அரசு கெஜட்டைக் காணலாம். அதில், உள்ள சொற்பொருள் அகராதியில் முதல் வார்த்தையே ஆதம் பாலம் என்றுதான் உள்ளது.

முகம்மதியர்கள் இந்தப் பாலத்தை ஆதம் பாலம் என அழைத்துள்ளனர். இந்தப் பாலம் வழியாகத்தான் அவர்கள் இலங்கைக்கு சென்றுள்ளனர். இப்பாலம் ராமர் கட்டியது என இந்துக்கள் நம்புகிறார்கள்.

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிலையமும், இப்பாலம் இருப்பதை தனது செயற்கைக்கோள் படம் மூலம் நிரூபித்துள்ளது என்றார் தயானந்த சரஸ்வதி.

ராமர் பாலம் மனிதன் அமைத்த பாலம் அல்ல: பாலு

இதற்கிடையில் பாக் ஜலசந்தியில் கடலில் உள்ள ராமர் பாலம் எனக் கூறப்படும் பாலம் போன்ற அமைப்பு, மனிதனால் உருவாக்கப்பட்டதல்ல என்று மத்திய கப்பல்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.

ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பாலு பேசுகையில், சில ஆண்டுகளுக்கு முன்பு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அடையாளம் கண்டு அறிவித்த இடத்தில்தான் தற்போது சேது சமுத்திரத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தத் திட்டத்தை அறிவிப்பதற்கு முன்பு ரூ. 30 கோடியில், பாக் ஜலசந்தியில் 2,424 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. மேலும் 2003ம் ஆண்டு மத்திய அமைச்சராக இருந்த பாஜகவின் உமாபாரதியின் உத்தரவின் பேரில், ராமர் பாலம் குறித்து தொல்பொருள்துறை ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஆய்வில் ராமர் பாலம் எனக் கூறப்படுவது மனிதனால் உருவாக்கப்பட்ட பாலம் என கண்டறியப்பட்டுள்ளது.

இந்தப் பாலம் தொடர்பாக நாசா நிறுவனத்திற்கு சேது சமுத்திரத் திட்ட அதிகாரிகளும், மத்திய அரசும் கடிதம் எழுதினர். ஆனால் இதுவரை நாசாவிடமிருந்து பதில் வரவில்லை.

சேது சமுத்திரத் திட்டம் திட்டமிட்டபடி நடைபெறும். 2008, நவம்பர் மாதத்தில் திட்டம் நிறைவு பெறும். கடலை ஆழப்படுத்தும் பணியில் 5 கப்பல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சில வெளிநாட்டு கப்பல்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

மூக்கையூர் (ரூ. 19.82 கோடி), தொண்டி (ரூ. 10.76 கோடி) ஆகிய இடங்களில் மீன் பிடி துறைமுகங்கள் அமைக்கப்படும். சேதுபாவா சத்திரம், முத்துப்பேட்டை ஆகிய இடங்களிலும் மீன் பிடி துறைமுகங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் பாலு.

முன்னதாக சேது சமுத்திரத் திட்டப் பணிகளையும், சர்ச்சைக்குரிய ராமர் பாலப் பகுதியையும் பாலு நேரில் பார்வையிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X