For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ.வின் திடீர் பத்திரிக்கை பாசம்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:பத்திரிக்கைகள், பத்திரிக்கையாளர்கள் என்றாலே பச்சை நாவியாக பாவிக்கும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு திடீரென பத்திரிக்கைகள் மீது திடீர் பாசம் பிறந்திருப்பது, ஜெயலலிதாவின் அரசியல் அறிந்தவர்களுக்கு ஆச்சரியத்தையும், குழப்பத்தையும் அளித்துள்ளது.

நேற்று அதிமுக தலைமைக் கழக அலுவலகத்திற்கு வந்த ஜெயலலிதா பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார். அப்போது ஜெயா டிவியை முடக்க திமுக அரசு முயற்சிப்பதாக சரமாரியாக குற்றம் சாட்டினார் ஜெயலலிதா.

ஜெயா டிவியின் பெரும்பான்மையான பங்குகளை தன் வசம் வைத்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வைகுண்டராஜனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்து, ஜெயா டிவியை முடக்க திமுக அரசு முயற்சிப்பதாக கூறியுள்ளார் ஜெயலலிதா.

யார் இந்த வைகுண்டராஜன்?:

வைகுண்டராஜன் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். வி.வி. மினரல்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் கடலோரத்தில் கிடைக்கும் தாதுக்கள் அடங்கிய மணலை எடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிலை நடத்தி வருகிறார்.

இதற்கான உரிமம் கடந்த திமுக ஆட்சியில்தான் இவருக்கு வழங்கப்பட்டது. இருப்பினும் அதிமுக விசுவாசியான வைகுண்டராஜன், கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்காக தீவிரமாக பணியாற்றினார்.

ஜெயா டிவியின் கணிசமான பங்குகளை வைகுண்டராஜன் வைத்துள்ளார். இருப்பினும் நேரடிப் பங்குகளாக இல்லாமல் வேறு ஒரு நிறுவனத்தின் பெயரில் பங்குகளை வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

தற்போது வைகுண்டராஜனின் நிறுவனத்திற்கு அரசு சீல் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அனுமதி அளிக்கப்பட்ட அளவையும் மீறி அதிக அளவிலான மணலை ஏற்றுமதி செய்ததால்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதை ஜெயா டிவியை முடக்கும் சதி என்று ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

ஜெயா டிவியின் பங்குதாரர்கள் யார் யார்?:

மாரீஷ் சாட்காம் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் கீழ் ஜெயா டிவி இயங்கி வருகிறது. கடந்த 1998ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதிதான் இது பிரைவேட் லிமிட்டெட் நிறுவனமாக மாற்றப்பட்டது.

2000மாவது ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி இந்த நிறுவனத்தை பப்ளிக் லிமிட்டெட் நிறுவனமாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி 2001ம் ஆண்டு ஏப்ரல் 10ம் ேததி இது பப்ளிக் லிமிட்டெட் நிறுவனமாக மாறியது.

இந்த நிறுவனத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட பங்கு முதலீடு ரூ. 20.95 கோடியாகும். செலுத்தப்பட்ட பங்கு முதலீடு ரூ. 19 கோடியே 82 லட்சத்து 80 ஆயிரம் ஆகும்.

இந்த நிறுவனம் ரூ. 22 லட்சம் மூலதனத்தில் ஆரம்பிக்கப்பட்டதாகும். இன்று ரூ. 20 கோடி அளவிலான பங்கு முதலீட்டுடன் உள்ளது. ரூ. 19.52 கோடி பங்கு மூலதனத்தில் நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது.

ஜெயா டிவியின் பங்குதாரர்கள் விவரம்:

ஜிதேந்திரா ஜெயின், இந்திராதேவி தாக், அஜீத் குமார் அடுகியா, லலித் குமார் ஜோஷி, மது ஜெயின், மகாவீர் காந்த் சுரானா, கமலேஷ் பட்வா. இவர்கள் தவிர மேலும் சிலரும் உள்ளனர்.

வைகுண்டராஜன் வசம் உள்ள ஜெயா டிவியின் பங்குகளை மிரட்டி வாங்க திமுக அரசு முயற்சிப்பதாகவும், பத்திரிக்கைகளை மிரட்டுவதாகவும், பத்திரிக்கை சுதந்திரத்தை பறிக்க திமுக அரசு முயல்வதாகவும் ஜெயலலிதா கூறியுள்ளதுதான் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

கடந்த கால அதிமுக ஆட்சிகளில் பத்திரிக்கைகளும், பத்திரிக்கையாளர்களும் பட்ட பாட்டை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது.

இதற்கு சரியான உதாரணமாக தராசு பத்திரிக்கை பட்ட பாட்டைக் கூறலாம். தராசு பத்திரிக்கை அலுவலகத்திற்குள் புகுந்து அதிமுகவினர் நடத்திய அதிரடித் தாக்குதல், 3 பேர் கொலை செய்யப்பட்டது ஆகியவை பத்திரிக்கையாளர்கள் மனதிலிருந்து என்றும் மாறாத சோக நினைவுகள்.

இதுதவிர நக்கீரன் ஆசிரியர் கோபால் அலைக்கழிக்கப்பட்டதும் இன்னொரு சிறந்த உதாரணம்.

திமுக நடத்திய பேரணியில் தாதா வீரமணியை விட்டு நடத்திய தாக்குதல், அதைப் படம் பிடித்த பத்திரிக்கையாளர்களை அடித்து, உதைத்தது, பெண் பத்திரிக்கையாளரை ரோட்டில் வைத்து அடித்து உதைத்தது ஆகியவை மறக்கவே முடியாதவை.

மேலும், நான் கொடுக்கும் அறிக்கைககைள, பேட்டிகளை வெளியிடக் கூடாது என முதல்வர் கருணாநிதி தடுக்கிறார் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். ஆனால் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, நடந்தை நினைத்துப் பார்க்க வேண்டும்.

அவரது கார் நிற்குமிடத்தில் மணிக்கணக்கில் காக்க வைக்கப்பட்டு, கயிறு கட்டி, போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டு, தொலைதூரத்தில் நின்றபடிதான் பேட்டியே தருவார். இப்படிப்பட்ட ஜெயலலிதா தற்போது பத்திரிக்கை சுதந்திரம் பற்றி பேசுவது ஆச்சரியமாக உள்ளது.

உண்மையிலேயே அவர் பத்திரிக்கை சுதந்திரத்துக்காக குரல் கொடுப்பவாராக இருந்தால் இனிமேலாவது பத்திரிக்கையாளர்களை முறையாக நடத்த வேண்டும் என்பது தான் எல்லா பத்திரிக்கையாளர்களின் கோரிக்கையும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X