For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சோனியா, ராகுல் மீது ஜெ. பாய்ச்சல்:அலகாபாத்தில் இந்தியில் பேசி அசத்தல்

By Staff
Google Oneindia Tamil News

அலகாபாத்:உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்தில் நடந்த சமாஜ்வாடிக் கட்சி தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இந்தியில் பேசி அசத்தினார். சோனியா காந்தி சந்தர்ப்பவாத அரசியல் நடத்தி வருவதாக அவர் கடுமையாக குற்றம் சாட்டினார்.

உ.பி. மாநிலத்தில் சமாஜ்வாடிக் கட்சிக்கு ஆதரவாக 2 நாட்கள் பிரசாரம் செய்ய முடிவு செய்திருந்தார் ஜெயலலிதா. பின்னர் கால் வலி காரணமாக அந்தப் பிரசாரத் திட்டம் ரத்தானது.

இதையடுத்து நேற்று அலகாபாத்தில் நடந்த பிரசாரத்தில் ஜெயலலிதா கலந்து கொண்டார். பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கூட்டத்தில் உ.பி. முதல்வர் முலாயம் சிங் யாதவ், ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் செளதாலா, முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர்சிங் ஆகியாரும் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் கால் மணி நேரம், இந்தியில் பேசி அசத்தி விட்டார் ஜெயலலிதா. எழுதி வைத்துக் கொண்டு வந்திருந்த உரையை அவர் வாசித்தார். எழுதி வைத்த உரைதான் என்றாலும் கூட படு சரளமாக அவர் இந்தியில் பேசியதை அலகாபாத் மக்கள் கரகோஷம் எழுப்பி வரவேற்றனர்.

சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார் ஜெயலலிதா. அவர் பேசுகையில், இத்தாலிய தொழிலதிபர் குவாத்ரோச்சி, சோனியா காந்தியின் குடும்ப நண்பர். இந்தியாவில் அவர் ஈட்டிய பெரும் பணத்தை எடுத்துக் கொண்டு நாட்டை விட்டே ஓடி விட்டார்.

முதலில் தனது பணத்தை லண்டனில் உள்ள வங்கியில் வைத்தார் குவாத்ரோச்சி. பின்னர் அந்தப் பணத்தையும் அவர் எடுத்துக் கொண்டு போய் விட்டார். இதை சோனியா காந்தி தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைமையின் கீழ் உள்ள மத்திய அரசு கண்டும், காணாமலும் இருந்து விட்டது.

குவாத்ரோச்சி இந்தியாவிலிருந்து வெளியேறியபோதும், பின்னர் அவர் லண்டனிலிருந்து பணத்தை எடுத்தபோதும் அதை மத்திய அரசு தடை விதிக்கவில்லை. ஆனால் அர்ஜென்டினா அரசு அவரைக் கைது செய்தது. இப்போதும் கூட அவரை இந்தியாவுக்குக் கொண்டு வர மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

சோனியா காந்தி குவாத்ரோச்சியிடம் கணக்கு கேட்பதில்லை. ஆனால் முலாயம் சிங்கிடம் கணக்கு கேட்கிறார். மத்திய அரசு கொடுத்த பணத்தை உ.பி. அரசு எப்படி செலவழித்தது என்று கேட்கிறார் சோனியா. அது என்ன பிச்சையாக கொடுத்த பணமா, அது மக்கள் பணம். அதில் எப்படி சோனியா காந்தி சொந்தம் கொண்டாட முடியும்.

மாநிலக் கட்சிகள் கூட்டு சேர்ந்தால் அது சந்தர்ப்பவாதம் என்று கூறுகிறது காங்கிரஸ் கட்சி. ஆனால் இப்போது அது என்ன செய்து கொண்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலையில் தொடர்பு உடையதாக குற்றம் சாட்டப்பட்ட திமுகவுடன் கை கோர்த்துக் கொண்டுள்ளது காங்கிரஸ்.

அதேபோல முன்பு ஐ.கே. குஜ்ரால் தலைமையிலான மத்திய அரசுக்கு தனது ஆதரவை வாபஸ் பெற்றது காங்கிரஸ் கட்சி. அதனால் பலன் அடைந்தது திமுகதான். இப்போதும் மன்மோகன் சிங் அரசில் திமுக இடம் பெற்றுள்ளது. இதைத்தான் பச்சை சந்தர்ப்பவாதம் என்று சொல்ல வேண்டும்.

ராகுல் காந்தியை இந்தியாவின் எதிர்காலம் என்கிறார்கள். அவருக்கு இந்தியாவின் கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம், என எதுவுமே தெரியவில்லை. இறந்தவர்களைப் பற்றி இகழ்ந்து பேச நமது கலாச்சாரத்தில் இடம் இல்லை. ஆனால், அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு மறைந்த பிரதமர் நரசிம்மராவ்தான் காரணம் என்று பேசுகிறார் ராகுல்.

இப்படிப் பேசியதன் மூலம் நரசிம்மராவை அவர் அவமானப்படுத்தி விட்டார். ராகுல் காந்தியையும் குறை கூற முடியாது. அவர் சமீப காலமாகத்தான் இந்தியாவில் வசித்து வருகிறார். பல காலமாக அவர் வெளிநாட்டில்தான் வசித்து வந்தார். அவருக்கு இந்திய கலாச்சாரம், பண்பாடு தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால், காங்கிரஸ் கட்சியில் உள்ள 90 சதவீதம் தலைவர்களுக்கு நரசிம்மராவைத் தெரியும். அவரது அமைச்சரைவயில் அமைச்சர் பதவியை வகித்துள்ளனர், பல வகைகளிலும் பலன் அடைந்துள்ளனர்.

அவர்களும் ராகுலைக் கண்டிக்காமல் அமைதி காத்து வருகின்றனர். நாடு முன்னேறினால் அதற்கு காந்தி-நேரு குடும்பம் காரணம், ஆனால் ஏதாவது குறைகள் இருந்தால் அதற்கு மற்ற தலைவர்கள் காரணம் என பல காலமாகவே காங்கிரஸ் கட்சி தம்பட்டம் அடித்து வருகிறது என்றார் ஜெயலலிதா.

தடுமாற்றம் இல்லாமல் இந்தியில் ஜெயலலிதா பேசியது உ.பி. வாக்காளர்களைக் கவர்ந்து விட்டது. பிரசாரக் கூட்டம் நடந்த இடம் முழுவதும் சமாஜ்வாடிக் கட்சிக் கொடிகளுடன், அதிமுக கொடியும் பட்டொளி வீசிப் பறந்தது. கூடவே, தெலுங்கு தேச கொடிகளும் பறக்க விடப்பட்டிருந்தன.

மேடைக்கு ஜெயலலிதா வந்தபோது, ஜெயலலிதா வாழ்க என சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் அமர்சிங் மைக்கில் கூற அதை கூடியிருந்த கூட்டத்தினர் திருப்பிக் கூறி ஜெயலலிதாவை வரவேற்றனர்.

முன்னதாக, ஜெயலலிதா அலகாபாத் வந்தபோது அவரை விமான தளம் வரை சென்று முலாயம் சிங் யாதவ் வரவேற்றார். பின்னர் அவர் ஹோட்டலுக்கு சென்றார். அங்கு முலாயம் சிங் யாதவ், அமர்சிங், சந்திரபாபு நாயுடு, செளதாலா உள்ளிட்ட தலைவர்களுடன் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், உ.பி. தேர்தல் முடிந்த பின்னர் மீண்டும் ஒருமுறை சந்தித்துப் பேசவுள்ளோம். மூன்றாவது அணி விரைவில் அமையும், வலுவாக அமையும் என்றார் ஜெயலலிதா.

ஜெயலலிதாவின் பேச்சின்போது மற்ற தலைவர்களுக்குக் கூட அவ்வளவு கைதத்தட்டல் கிடைத்திருக்காது. சோனியா காந்தி, ராகுல் காந்தி, குவாத்ரோச்சி குறித்து ஜெயலலிதா கூறியபோதெல்லாம் கைத்தட்டல் விண்ணைப் பிளந்தது.

பின்னர் ஜெயலலிதாவிடம் முதல் முறையாக இந்தியில் பேசியது எப்படி இருந்தது என்று செய்தியாளர்கள் கேட்டபோது, பள்ளியில் எனக்கு இந்தி 2வது மொழி. எனவே இந்தியில் பேசுவதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. சரளமாகவே என்னால் பேச முடியும்.

இதுவரை இந்தியில் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. எனவேதான் இந்தியில் பேசவில்லை. இனிமேல் அடிக்கடி பேசும் வாய்ப்பு அமையலாம் என்றார் ஜெயலலிதா.

ஜெயலலிதாவைப் போல சந்திரபாபு நாயுடுவும் இந்தியில் எழுதி வைத்துப் பேசினார். இருப்பினும் தடுமாறித்தான் அவர் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X