For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீனவர்களைக் கடத்தியது புலிகள்தான்: கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:குமரி மாவட்ட மீனவர்கள் ஐந்து பேரைக் கொன்றதும், 12 மீனவர்களைக் கடத்தியதும் விடுதலைப் புலிகள்தான் என்று முதல்வர் கருணாநிதி திட்டவட்டமாக கூறியுள்ளார். கடத்தப்பட்ட மீனவர்களை மீட்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சட்டசபையில் இன்று கடத்தப்பட்ட 12 மீனவர்கள் குறித்து பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களும் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்களைக் கொண்டு வந்தனர்.

அவற்றுக்கு முதல்வர் பதிலளிக்கையில், காவல்துறை உளவுப் பிரிவு மூலம் கிடைத்த தகவல்களின்படி, தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கம் தான் 12 மீனவர்களை (10 பேர் குமரி மாவட்டம், ஒருவர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர். 12வது மீனவர் கேரளாவைச் சேர்ந்தவர்) கடத்திச் சென்றுள்ளது உறுதியாக தெரிய வந்துள்ளது.

அதேபோல 5 மீனவர்களைக் கொன்றதும் விடுதலைப் புலிகள்தான். நான் அவர்களை விடுதலைப் புலிகள் இல்லை என்று கூற முனையவில்லை. எனக்குக் கிடைத்த தகவலை சட்டசபையில் உறுப்பினர்களோடு நான் பகிர்ந்து கொண்டுள்ளேன். இதுதான் நிலைமை.

கடத்தப்பட்ட 12 மீனவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியில் அரசு பின்வாங்காது. விடுதலைப் புலிகளின் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். மே 2ம் தேதி நான் அனுப்பிய அக்கடிதத்தில், மாநில காவல்துறை நடத்திய விசாரணைப்படி காணாமல் போன 12 மீனவர்களும், விடுதலைப் புலிகளில் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

ஏப்ரல் 11ம் தேதி இந்திய கடலோரக் காவல் படை ஆறு இலங்கைத் தமிழர்களைக் கைது செய்தது. அவர்களுடன் அவர்கள் வந்த மரியா என்ற பெயர் கொண்ட படகும் சிக்கியது.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் விடுதலைப் புலிகளின் கடல் புலிகள் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் வந்த மரியா படகில் வந்த கடல் புலிகள் பிரிவினர்தான் மார்ச் 29ம் தேதி குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்களைக் கொன்றவர்கள் என்பது தெரிய வந்தது.

மேலும் கடத்தப்பட்ட 12 மீனவர்களும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில், அவர்களது முகாமில் இருப்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து ஏப்ரல் 28ம் தேதி தமிழக சட்டசபையில், விரிவாக விவாதிக்கப்பட்டது. உறுப்பினர்கள் இச்செயலுக்கு ஆழ்ந்த கவலை தெரிவித்தனர்.

எனவே தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு கடத்தப்பட்டுள்ள 12 மீனவர்களையும் மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோருகிறேன். கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தை முடுக்கி விடுமாறும் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

தொடர்ந்து கருணாநிதி பேசுகையில், விடுதலைப் புலிகள் மீது நான் வீண் பழி சுமத்துவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இந்தப் பிரச்சினையில் நானும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் ஒரே கருத்தையேக் கொண்டுள்ளோம்.

நேற்று முன்னாள் முதல்வர் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் நடந்த வெடிபொருள் கடத்தல், இரும்பு உருளைகள் கடத்தல் போன்றவற்றில் தொடர்புடையவர்கள் இலங்கைத் தமிழர்கள் என நான் கூறியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். அவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள்தான் என்றும் கூறியிருந்தார்.

முன்னதாக காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் பேசுகையில், விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இன்னும் வைகோ ஆதரவாக உள்ளார். பேசி வருகிறார். அவரைக் கைது செய்ய வேண்டும். மதிமுகவைத் தடை செய்ய வேண்டும்.

கூட்டணிக் கட்சியான மதிமுக இப்படி ஒரு நிலையை எடுத்திருப்பதை அதிமுக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. மேலும், இந்தப் பிரச்சினைய திசை திருப்பவும் முயற்சிக்கிறது.

இப்போது புலிகள்தான் மீனவர்களை கடத்தி வைத்துள்ளனர் என்பது உறுதியாக தெரிந்துள்ள நிலையில், அவர்களை விட்டு விடுமாறு புலிகளுக்கு ரகசிய கோரிக்கை விடுத்து வருகிறார் வைகோ என்றார்.

அப்போது குறுக்கிட்ட மதிமுக தலைவர் கண்ணப்பன், எந்த அடிப்படையில் ஞானசேகரன் இந்தக் குற்றச்சாட்டை சுமத்துகிறார் என்று தெரியவில்லை.

மீனவர்கள் நலனில் எங்களுக்கும் அக்கறை உள்ளது. அவர்களுக்கு எதிரான எந்த நடவடிக்கையையும் மதிமுக எடுக்காது. இந்திய மீனவர்களுக்கு மதிமுக துரோகம் செய்யாது என்றார்.

விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினர் ரவிக்குமார் பேசுகையில், கச்சத்தீவை நாம் திரும்பப் பெற வேண்டும். அதுதான் இப்பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் சிவபுண்ணியம் பேசுகையில், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் புலிகளா, கருணா குழுவினரா, இலங்கை கடற்படையா என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X