For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமைதிப் பேச்சு நடக்குமா?-தமிழ்ச்செல்வன்

By Staff
Google Oneindia Tamil News

கிளிநொச்சி:தமிழக மீனவர்கள் 12 பேரையும் மீட்கும் முயற்சியில் தமிழக அரசுக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என்று புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச் செல்வன் கூறியுள்ளார்.

ஜூனியர் விகடன் இதழுக்கு தமிழ்ச் செல்வன் அளித்துள்ள பேட்டியில்,

கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 5 பேரை புலிகளுக்கு சொந்தமான மரியா என்ற படகில் வந்து சுட்டுக் கொன்றதோடு மட்டுமல்லாமல், தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை கடத்திச் சென்று தங்கள் முகாமில் அடைத்து வைத்திருக்கிறார்கள் விடுதலைப் புலிகள் என்று தமிழக டிஜிபி முகர்ஜி கூறியுள்ள குற்றச்சாட்டை நாங்கள் முழுமையாக மறுக்கிறோம்.

5 மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திலும், 12 மீனவர்கள் கடத்தப்பட்ட சம்பவத்திலும் இலங்கை கடற்படைதான் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பது தான் எங்களுக்கு கிடைத்த தகவல். புலிகள் மீது பழி சுமத்துவதற்காகவே இலங்கை கடற்படை இப்படியொரு செயலை செய்துள்ளது.

இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது, நடந்தது என விரைவில் எல்லோருக்கும் தெரியவரும். அப்போது புலிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையல்ல என்பது புரியவரும்.

இலங்கை கடற்படையின் மோசமான எண்ணத்துக்கு ஈடுகொடுப்பது போல தமிழக காவல்துறையும் ஏன் இப்படியெல்லாம் அவதூறு சொல்கிறது என்பதுதான் எங்களுக்கு புரியவில்லை.

தமிழக மக்கள் மீதும், மீனவர்கள் மீதும் பாசம் கொண்டவர்கள் எங்கள் போராளிகள். இலங்கை கடற்படையினர் மீனவர்களுக்கு எதிராக நடத்தும் பல்வேறு கொடுமைகளில் இருந்து தமிழக மீனவர்களை நாங்கள் காப்பாற்றி இருக்கிறோம். அப்படி இருக்கும்போது டிஜிபி முகர்ஜி சொல்லியிருக்கும் குற்றச்சாட்டு ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழக அரசு உங்களுடன் மூன்று நாட்கள் ரகசிய பேச்சு வார்த்தை நடத்தியதாகவும், இறுதி வரை நீங்கள் அவர்களை விடுவிக்க ஒப்புக் கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறதே?

இது முற்றிலும் தவறான தகவல். இலங்கை கடற்படையாலும் அதனோடு சேர்ந்து இயங்கும் கூலிப்படையாலும் மிகவும் தெளிவாக திட்டமிட்டு நடத்தப்படுகின்ற நாடகமாகவேத் தான் நாங்கள் இதனை பார்க்கிறோம். இதில் எங்களுக்கு இன்னொரு சந்தேகமும் எழுந்துள்ளது.

தமிழக காவல்துறையோடும், உளவுத்துறையோடும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் அவர்கள், புலிகளின் பெயரால் இப்படியான உரையாடல்கள் நடத்துகிறார்களோ என்று சந்தேகம் வலுக்கிறது.

ஏனென்றால் இதுநாள் வரை எங்கள் அமைப்பின் உறுப்பினர்களோ, தளபதிகளோ தமிழக காவல்துறையோடு அதிகாரப்பூர்வமாக நேரடி தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டதில்லை.

அப்படியிருக்க தமிழக அரசு எங்களோடு ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள் என்றால் எப்படி? குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், மீனவர்கள் நாங்கள் கடத்தி வைத்திருக்கவில்லை என்கிறபோது, அவர்கள் ஏன் எங்களோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்? அப்படி பேசினால் அது அபத்தமாக இருக்காதா?

தமிழக மக்களுக்கும் புலிகள் இயக்கத்துக்குமான அன்பை, பாசத்தை, உறவை கெடுக்கும் விதமாகவே இதெல்லாம் நடக்கிறது.

இதுவரை மரியா படகில் பிடிபட்டது கடற்புலிகள் என்று எங்கள் தரப்பிலிருந்து யாராவது ஒப்புக்கொண்டார்களா? அப்படி இருக்க அவர்கள் வாக்குமூலம் கொடுத்தார்கள் என்று சொல்லி, எதையாவது தமிழக காவல்துறை சொல்லிக் கொண்டிருக்குமானால் அதற்கு நாங்கள் பெறுப்பாக முடியுமா?

அப்படி அவர்களிடம் வாக்குமூலம் பெற்றதாகச் சொன்னாலும், அந்த வாக்குமூலத்தின் உண்மைத் தன்மையை யார் சோதித்தறிவது? எமது அமைப்புக்கு எதிரானவர்கள் மூலமாக திட்டமிட்டு ஏன் இப்படியொரு நாடகம் நடத்தப்படக் கூடாது?

பாதிக்கப்பட்டிருப்பது தமிழக மீனவர்கள், அவர்களுக்காக நாங்கள் உதவுவோம். மீனவர்கள் கடத்தல் நாடகத்திலும், மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திலும் என்ன நடந்தது என்பதை உலக்குக்கு சொல்ல நாங்கள் ஆர்வத்தோடு காத்திருக்கிறோம்.

மீனவர்களை மீட்பதற்கும் அவர்களின் பாதுகாப்பு நிலைமைகளை உறுதிப்படுத்துவதற்கும் தமிழக அரசு எடுத்து வருகிற அனைத்து முயற்சிகளுக்கும் நாங்கள் உறுதுணையாக இருப்போம்.

சிங்கள கடற்படையாலோ, கூலிப்படையாலோ நிகழ்த்தப்பட்ட இந்தச் செயலை முடிவுக்கு கொண்டு வந்து, தமிழக மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் மீட்கப்பட வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம்.

இதுதொடர்பாக எத்தனை முறை வேண்டுமானலும் தமிழக அரசோடு நாங்கள் முழு மனதோடு ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறோம். சம்பந்தப்படாதவர்கள் மீது வீணாகப் பழி சுமத்தி தப்பித்துப் போக வாய்ப்பளித்து விடக்கூடாது.

ஈழப் போராட்டத்தை பொறுத்தவரையில் தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான தமிழர்கள் புலிகள் ஆதரவு நிலைப்பாட்டில் தான் இருந்து வந்திருக்கிறார்கள். சமீபத்திய நிகழ்வுகளுக்குப் பிறகு இந்த நிலைப்பாட்டில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருப்பதை உணருகிறீர்களா?

நடப்பது என்னவென்று தமிழக மக்களுக்கு மிகத் தெளிவாகத் தெரிந்திருக்கும் சூழ்நிலையில் அவர்கள் எங்கள் மீது கொண்டிருக்கும் பரிவும், பாசமும் எப்படி குறையும்? அதற்கு வாய்ப்பே இல்லை.

இப்படி தமிழக மக்கள் மனங்களில் இருந்து எங்களை பிரித்தெடுக்க இலங்கை அரசு போடும் நரித் திட்டங்கள் பலிக்காது. எங்களுக்கு எதிராக இந்திய அரசையும் திருப்பிவிடும் முயற்சிகளையும் இலங்கை அரசு செய்து வருகிறது.

எங்களைப் பொறுத்த வரை பொய்கள் வேகமாகத்தான் பரவும். ஆனால் இறுதியில் அதை பரப்புகிறவர்கள் மீதே அசிங்கத்தைப் பூசும். உண்மைக்கு சோதனை வந்தால் அதனை பொறுமையாக எதிர்கொள்வது தான் சரியான அணுகுமுறை. அதைதான் புலிகள் இப்போது செய்து கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் மூன்றாவது முறையாக நீங்கள் கொழும்பில் வான்வழித் தாக்குதல் நடத்தினீர்கள். அதில் இந்தியாவுக்குச் சொந்தமான எண்ணெய் கிடங்குகள் பலவும் பாதிக்கப்பட்டதாகச் செய்திகள் வருகிறதே?

சமாதான காலத்தில் நாங்கள் யுத்த தர்மப்படி எவ்வித தாக்குதலிலும் ஈடுபடாமல் இருந்தபோது, தொடர்ந்து தமிழ் மக்கள் மீது விமானத் தாக்குதல் நடத்தியது இலங்கை விமானப்படை. பலமுறை எச்சரித்தோம். உரியவர்களிடம் முறையிட்டோம். ஆனால் இலங்கை ராணுவம் வான்வழித் தாக்குதலை நிறுத்தவில்லை.

அதன் பிறகுதான் புலிகள் தரப்பில் வான்வழித் தாக்குதலுக்கு ஆயத்தமானோம். சிங்கள ராணுவத்துக்குத் தேவையான எரிபொருளைக் கொடுக்கும் கட்டுமானங்களை அழிப்பதுதான் எங்கள் விமானப் படையின் நோக்கம்.

வான் வழியாக நாங்கள் வீசுகிற ஒவ்வொரு குண்டும் இலங்கை ராணுவத்தின் விமானக் கட்டுமானங்களுக்கு எதிரானது தானே தவிர, சிங்கள அப்பாவி மக்கள் மீது அல்ல. அப்படி இருக்கும் போது, நாங்கள் நல்லுறவைப் பேண விரும்பும் இந்திய அரசுக்கு எதிராக எங்கள் விமானப்படையை ஒருபோதும் பயன்படுத்த மாட்டோம்.

கிட்டத்தட்ட இலங்கை அரசு-புலிகள் என இரண்டு தரப்பும் முழுமையான போரில் குதித்துவிட்ட இந்த சூழ்நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பிருக்கிறதா?

இலங்கை அரசைப் பொறுத்தவரையில் இன அழிப்புப் போரை தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள். பல லட்சம் மக்களை அகதிகளாக்கி ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்து தொடர்ந்து போரை முன்னெடுத்து வருகிறார்கள்.

மீண்டும் ஒரு சமாதானச் சூழலைக் கொண்டு வர நார்வே, பிரிட்டன் போன்ற நாடுகள் முயன்று வருகின்றன. என்றாலும் இலங்கை ராணுவத்தின் ஆக்கிரமிப்பு போர் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அமைதி பேச்சுக்காக நார்வே மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த அமைதித் தூதுவர்கள் எம்மைச் சந்திக்க எடுத்த முயற்சிகளையும் இலங்கை அரசுதான் தடுத்துவிட்டது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் அமைதிப் பேச்சுவார்தையெல்லாம் நடக்குமா என்பது தெரியவில்லை. அப்படி இருக்கும் போது எங்கள் மக்களை காக்க நாங்களும் ஆயுதப் போர் நடத்தத்தானே வேண்டும் என்றார் தமிழ்ச் செல்வன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X