For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய அரசியலில் முக்கிய தூண் கருணாநிதி-பிரதமர்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:இந்திய அரசியலில் முக்கியத் தூணாக விளங்குகிறார் முதல்வர் கருணாநிதி என்று பிரதமர் மன்மோகன் சிங் புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னை தீவுத் திடலில் முதல்வர் கருணாநிதிக்கு நடந்த பாராட்டு விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது

இது சரித்திர புகழ் வாய்ந்த விழா ஆகும். சென்னைக்கு வந்திருப்பதற்காக நான் பெருமைப்படுகிறேன். சட்டமன்றப் பணியில் கலைஞர் கருணாநிதியின் பொன்விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

இந்திய அரசியலில் பெரும் தூணாக விளங்குகிறார் கருணாநிதி. நாட்டுப் பற்றுக் கொண்டவரும், இந்த நாட்டைக் கட்டிக் காத்தவர்களில் ஒருவருமாக கருணாநிதி விளங்குகிறார்.

இன்னும் பல பல ஆண்டுகள் அவர் நல்ல உடல் நலத்தோடும், நன்மை பயக்கும் வாழ்க்கை வாழ வேண்டும் என நான் வாழ்த்துகிறேன்.

கலைஞர் சட்டசபை உறுப்பினராகி 50 ஆண்டுகள் ஆகியிருக்கலாம். ஆனால் பொது வாழ்க்கையில் நுழைந்து 70 ஆண்டுகள் ஆகி விட்டன. இது பெரும் சாதனை.

14 வயதில் மற்ற சிறுவர்கள் விளையாட்டுக்களில் கவனம் செலுத்திக் கொண்டிருந்த நேரத்தில் கருணாநிதி மட்டும் தமிழ் மாணவர் மன்றத்தை அமைத்து அரசியலில் நுழைந்தார். 1946ம் ஆண்டு பெரியாருடன் இணைந்து திராவிடர் கழக கொடியை வடிவமைத்தார். இன்று வரை பெருமை மிக்க இந்தியர் என்ற முறையில் தமிழ்நாட்டுக் கொடியை உயர்த்திப் பிடித்துள்ளார்.

தமிழக வரலாற்றிலும், நம் நாட்டு வரலாற்றிலும் கருணாநிதியின் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும். கடந்த 60 ஆண்டுகளில் நமது நாட்டில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை நாம் நோக்கினால், மிகவும் வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக இருக்கும்.

ராஜாஜி, காமராஜர், அண்ணா மற்றும் கருணாநிதி ஆகிய பெரிய தலைவரக்ளால் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மாபெரும் அரசியல் நிபுணரான கருணாநிதி, வான் மண்டலத்தில் மிகச் சிறந்த முறையில் ஒளிரும் நட்சத்திரம் என்பதை சரித்திரம் பதிவு செய்யும்.

அறிவு சார்ந்த வளர்ச்சி மற்றும் அதனுடன் இணைந்த பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு, இந்தியாவுக்கே முன் மாதிரியாகத் திகழ்கிறது. தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் மட்டும் கருணாநிதி அக்கறை காட்டவில்லை. கல்வி மற்றும் சமூக வளர்ச்சிக்காகவும் அண்ணா, காமராஜர் வழியில், செயல்பட்டு வருகிறார்.

பெண்கள் முன்னேற்றம், விவசாயிகள் நலம் ஆகியவற்றிலும் சிறந்த சேவை செய்துள்ளார். கலை, இலக்கியம், அரசியல், ஆகிய உலகில் ஒரே நேரத்தில் கருணாநிதி வாழ்ந்து வருகிறார். மகத்தான எழுத்தாளர், மிகச் சிறந்த கவிஞர், முரசொலியின் நிறுவன ஆசிரியர் என்ற வகையில் தனது வாசகர்களை அன்பால் பிணைத்துள்ளார்.

கருணாநிதி இங்கு பேசும்போது, நதி நீர்ப் பங்கீடு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு, பாராளுமன்றம், சட்டசபைகளில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு ஆகியவற்றைப் பற்றி கோரிக்கை விடுத்தார்.

கருணாநிதியின் ஒத்துழைப்புடனும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் ஒத்துழைப்புடனும், இந்தப் பிரச்சினைக்கு ஒரு சாத்தியமான முறையில் தீர்வு காண்போம்.

தமிழ்நாட்டின் உன்னதமான மகனாக கருணாநிதி திகழ்கிறார். மீண்டும் ஒரு முறை அவர் வாழ்த்துகிறேன். தமிழத்திற்கு நீங்கள் தேவை, இந்தியாவிற்கு நீங்கள் தேவை நாங்கள் முன்னேறி செல்ல, நடை போட, எங்களுக்கு வழி காட்ட எங்களுக்கு நீங்கள் தேவை என்றார் மன்மோகன் சிங்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X